Skip to main content

நான் அருகதை அற்றவன்




நான் கனவுகள் விற்பவன்


கவிதையின் காதலன்


காதலின் கவிஞன்


சிலர் என்னை


கலைக்கிறுக்கன் என்கின்றனர் !



மோனைகளை முடுக்கி விட்டு


எதுகைகளை எடுத்தெறிந்து


வார்த்தைகளோடு விளையாடுவது


என் வியாபார வாடிக்கை !



நாயகனுக்கும் நாயகிக்கும்


ஊடல் என்றால்


நான்


கவலையோடு கூடல் கொள்கிறேன் !



அவர்கள் தழுவலுக்கு


நான் நெகிழ்கிறேன்


அவர்களின் கண்ணீருக்கு


நான் அழுகிறேன் !



சில நேரங்களில் நான் ,


மெட்டுக்குள்


முடங்கி விடுவதால் - என்னை


மொழியின் கொலைஞன்


என்போரும் உண்டு !



எனக்கும் ஒரு கூட்டம்


இருப்பதை நம்பவே முடியவில்லை


என்னை ரசிக்கும்


அவர்களின் ரசனைக்கு


நானும் ரசிகன் !



நான் கலைச் சேவகன் அல்ல .


மது குடித்த


மாலைப் பொழுதுகளில்


மல்லாந்து படுத்து


மதியைப் பார்த்தால் தான்


வரிகள் விளைந்து


கவிகள் கனிகின்றன !



சில நேரங்களில்


நான் திருட்டுக் கயவன் .


காவியங்களின்


காதல் ரசங்களைக்


களவாடிக் கவி செய்வதால்


" கற்பனையின் உச்சன் " என்று


போற்றப்படுபவன் !



என்னை


தமிழன்னையின்


தவப் புதல்வன் என்கின்றனர் .


அவளின் பாதங்களைத்


தொடக்கூட நான்


அருகதை அற்றவன் எனும்


அவலத்தை வெளியே தெரியாமல்


மறைத்துக்கொள்வதில் உள்ளது


என் வெற்றியின் ரகசியம் !!!

Comments