Thursday, December 26, 2013


மனிதன் என்பவன் .............ஒரு
மங்களகரமான
வெள்ளிக்கிழமை !

குளித்துவிட்டு
மடியாகக்
கோவிலுக்குக்
கிளம்பினேன் !

பக்கத்துவீட்டுக் குழந்தை
வீறிட்டழுதது !

இருசக்கர வாகனமொன்று
சேறிறைத்தது !

எதிரில் வந்தவன்
காறி உமிழ்ந்தான் !

கழிவுநீர் ஊர்தி
கடந்து போனது !

எவனோ
எவனையோ திட்டிய
கெட்டவார்த்தை
காற்றுவாக்கில்
காதில் வந்தது !

இனவிருத்தியில்
இரு நாய்கள் !

தள்ளுவண்டியில்
மாட்டிறைச்சி !
பக்கத்தில்
பன்றியிறைச்சி !

குடித்துவிட்டு
ஒருவன்
வாந்தியெடுத்தான் !

கோவிலில்
வாங்கிய பூ
வாடியிருந்தது !

ஒரு
கிழிந்த நோட்டு
கைக்கு வந்தது !
சில்லறை இல்லையாம் !

நுழையும்போதே
வலதுகால்
தடுக்கியது !

போடாத காசிற்குப்
பிச்சைக்காரி
சபித்து அனுப்பினாள் !

உள்ளே
கொடுங்கூட்டம் !

வாங்கிய விளக்கில்
திரியைக் காணவில்லை !

வரிசையில்
ஒருவன்
காலை மிதித்தான் !

கொடுத்த தேங்காய்
அழுகிவிட்டது !

தரிசனம் காணும்போது
தலைகள் மறைத்தன !

ஒற்றும்போது
கற்பூரம்
அணைந்தது !

அந்தக்கிழிந்த நோட்டை
அய்யர்
கூப்பிட்டுத்
திருப்பிக் கொடுத்தார் !

பாதி வரிசையில்
பிரசாதம் தீர்ந்தது !

வெளியே வந்தால்
செருப்பைக் காணவில்லை !

அணையாதிருந்த
துண்டுபீடி
காலைச்சுட்டது !

அறைக்கு வந்தால்
மின்சாரமில்லை !

இவையெல்லாம் நடந்து
ஆறுநாட்கள் கழித்து ....................

ஒரு
மங்களகரமான
வெள்ளிக்கிழமை !

குளித்துவிட்டு
மடியாகக்
கோவிலுக்குக்
கிளம்பினேன் !

காரணம்,
மனிதன் என்பவன்
பழக்கத்திற்கு
அடிமைப்பட்டவன் !
Wednesday, December 18, 2013


திருமணம் 2013 
 

' சொல்லியனுப்புகிறோம் '
என்ற சொல்லை
காலம் என்ற
விலை கொடுத்து
பெண் வீட்டார்
வாங்கி விட்டனர் !
--------------------------------------------

இன்ஜினியர் பெண்ணும்
இன்ஜினியர் ஆணும்
தம்பதியாவது
காலத்தின் கட்டாயம் !
டாக்டருக்கும் இது
டிட்டோ !
--------------------------------------------

திருமணம்
கல்லூரியில்
நிச்சயிக்கப்படுகிறது !
--------------------------------------------

மாப்பிள்ளையின்
சம்பளமும்
மறைமுக
வரதட்சணைதான் !
கொண்டுவாருங்கள்
இதற்கொரு
இ. பி. கோ !
--------------------------------------------

குவித்துத்தான்
வைக்கிறார்கள்
ஆண் ஜாதகத்தை !
பொறுக்கித்தான்
எடுக்கிறார்கள்
பெண் ஜாதகத்தை !
--------------------------------------------

ஒவொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு !
ஆணினமே
அனுபவி !
--------------------------------------------

காலஸ்த்ரி,
திருநாகேஸ்வரம்,
திருவிடந்தை,
திருமணஞ்சேரி .......................
அடுத்து என்ன
ஜோசியரே ?
--------------------------------------------

தந்தை மகற்காற்றும் உதவி திருமணத்திற்கு
சாதி பார்க்காச் செயல் !
--------------------------------------------

அஷ்டமச்சனியாம் !
முப்பது
முடிய வேண்டுமாம் !
ஜென்ம குருவாம்
ஒருவருடம்
போக வேண்டுமாம் !
அடுத்து வரும்
ராகு தசையோ
பதினெட்டு வருடமாம் !
அட ஆண்டவா !!!!!!!!!!
--------------------------------------------

படித்துக்
கொண்டிருக்கும் பெண்
வரனாய் வந்தால் ........
பெற்றோர்களே உஷார் !
--------------------------------------------

பஜ்ஜி சொஜ்ஜி
தின்று விட்டு
பாட்டு கேட்டு
வந்தது
அந்தக்காலம் !
நேர்முகத்தேர்வொன்றை
நடுவீட்டில் சந்தித்து
நாக்குத்தள்ளி
வந்தது
இந்தக்காலம் !
--------------------------------------------

திருமண அகராதியில்
நம்பிக்கை துரோகம்
என்பதன் பொருள்
புத்திசாலித்தனமான
தேர்ந்தெடுப்பு !
--------------------------------------------

இந்தியாவின்
மாப்பிள்ளைக் களஞ்சியங்கள்
எனப்படுவவை -----------------------

விடை : சாப்ட்வேர் நிறுவனங்கள் !
--------------------------------------------

கனவு காணாதே !
பெண் பார்த்து
நிச்சயிக்கப்பட்டு
தாலி கட்டி
திருமணம் முடிந்து
முதலிரவும்
முடிந்தால் தான்
அவள் உன்
மனைவி !
--------------------------------------------

பல்லைப் பிடித்துப்
பார்த்துத்தான்
மாப்பிள்ளை
வாங்கப்படுகிறது !
--------------------------------------------

முகநூலின்
காதலெல்லாம்
திருமணத்தில்
சேர்த்தியில்லை !
--------------------------------------------

திருமணத்திற்கு
முன்பான
ஒரு பழைய காதலில்
எல்லாம் இருந்ததாம்
எல்லை மட்டும்
தாண்டவில்லையாம் !
இதுதானய்யா
இந்தஊர்
கற்பு !
--------------------------------------------

பெண்பாவம்
பொசுக்கிவிடும் !
ஆண்பாவம்
இன்னொரு ஆணுக்கு
வாழ்க்கை தரும் !
--------------------------------------------

அப்போதும்
இப்போதும்
சுயம்வரம்
ஆணுக்கு நடந்ததாய்
சரித்திரமுண்டோ ?
--------------------------------------------

ஆண்
வயதுக்கு
வந்தாலும்
இனி
சடங்கு நடத்தலாம் !
--------------------------------------------

முப்பது கடந்து
முடி கொட்டி
தொப்பை வந்து
சுமார் மூஞ்சி
சுமார் சம்பள
ஆணாய் நீயிருந்தால் ..........
ஸாரி நண்பா !
better luck to next ஜென்மம் !!!
Thursday, December 12, 2013

ஒரு விடைபெறுதல் தேநீர்
ஆறிக்கொண்டிருக்கிறது !

மேஜையில்
எதிரெதிராக
நீ !
நான் !

தேநீருடன் கூடிய
நம் கடைசிச்சந்திப்பு !

தலைகுனிந்தபடி
நீ !
உன்னையே பார்த்தபடி
நான் !

ஒருவகையில்
நம்
முதல் சந்திப்பிலும்
இப்படித்தானிருந்தோம் !

வேடிக்கைதான் !

இருவீட்டார்
சம்மதத்துடன்
நாம்
பிரியப்போகிறோம் !

சுற்றிலும்
ஆங்காங்கே
தேநீர் அருந்தும்
காதலர்களின்
ஆசிர்வாதத்தோடு
நாம்
பிரியப்போகிறோம் !

என்
இரண்டுவார தாடி
உனக்குப்பிடிக்காதுதான் !

நினைவிருக்கிறதா
இந்த

 நீல நிறச்சட்டை
நீ
வாங்கித்தந்தது !

என்
கை நகங்களில்
அழுக்குப் படிந்துள்ளது !

சற்று முன்னர்தான்
சிகெரெட் பிடித்தேன் !

என்னில்
எல்லாமே
இயற்கையாக
இருக்கின்றன
என்
புன்னகையைத்தவிர !

எனக்குப்பிடித்த
மஞ்சள் சுடிதாரில்
நீ வரவில்லை !

பவுடர்
சற்று அதிகம் !

கூந்தலில்
ரோஜா இல்லை !

நான்
வாங்கித்தந்த
பிளாஸ்டிக் வளையல்களை
உன்கைகள்
அணிந்திருக்கவில்லை !

உதட்டுச்சாயத்தைக்
கொஞ்சம்
குறைத்திருக்கலாம் !

உன்னில்
எல்லாமே
செயற்கையாக
இருக்கின்றன !
உன்
கண்களைத்தவிர !

அந்தக்கண்களில்
கண்ணீர் வரவேண்டாம் !
வரக்கூடாது !

பின்னே,
உன்னைப் புறக்கணிப்பதாய்
நான் அரங்கேற்றிய
நாடகங்கள்
வீணாய்ப்போவதா ?

உன்
தந்தைக்கு
மகிழ்ச்சிதானே !

உன்தாய்
இப்போது
அழுவதில்லையே !

உனக்கும்
ஒருவகையில்
நிம்மதி !

அந்த
அமெரிக்க மாப்பிள்ளையைக்
கேட்டதாகச் சொல் !

நல்ல வேலையை
நான் இன்னும்
தேடிக்கொண்டிருக்கிறேன் !

தங்கையின்
திருமணத்திற்கு
லோன் போடவேண்டும் !

இதோ !

நாம்
எடுத்துக்கொண்ட
புகைப்படங்கள் !

இவற்றை
உன் வீட்டில்
என்ன செய்வார்கள் ?

எரிப்பார்களா ?
புதைப்பார்களா ?

கடைசியாக,
கண்கள் உதிர்த்த
கண்ணீர்த்துளிகளை
நீ
கவனிக்கவில்லையென்ற
நம்பிக்கையுடன்
நான்
எழுந்து கொள்கிறேன் ?
Wednesday, November 27, 2013ஈழம் உங்கள்
புத்தியில் இருந்தது !
ஈழம் எங்கள்
இதயத்தில் இருந்தது !

-------------------------------------------------

காத்திருந்தீர்கள்
நீங்கள் !
தவமிருந்தோம்
நாங்கள் !

-------------------------------------------------

நீங்கள்,
எங்கள் தூதுவர்களையும்
கொன்றீர்கள் !
நாங்கள்,
தொலைகிறது என்று
உங்கள் ஒற்றர்களையும்
மன்னித்தோம் !

-------------------------------------------------

உங்கள்
கண்ணீர்ச்சுரப்பியும்
வியர்வையைச்
சுரந்தது !
எங்கள்
வியர்வைச்சுரப்பியும்
கண்ணீரைச்
சுரந்தது !

-------------------------------------------------

உங்களுடையவர்கள்
படைவீரர்கள் !
எங்களுடையவர்கள்
உடன்பிறப்புக்கள் !

-------------------------------------------------

உங்கள் தலைவன்
இருக்கிறான் !
எங்கள் தலைவன்
வாழ்கிறான் !

-------------------------------------------------

ஓலமிட்டீர்கள்
நீங்கள் !
முழக்கமிட்டோம்
நாங்கள் !

-------------------------------------------------

தந்திரநரிகள்
நீங்கள் !
விடுதலைப்புலிகள்
நாங்கள் !

-------------------------------------------------

போர்க்குற்றவாளிகள்
நீங்கள் !
புரட்சியாளர்கள்
நாங்கள் !

-------------------------------------------------

உங்களுக்கது
களம் !
எங்களுக்கது
வாழிடம் !

-------------------------------------------------

உங்களுடையது
வெறி !
எங்களுடையது
தாகம் !

-------------------------------------------------

உங்களுடையது
சண்டை !
எங்களுடையது
போர் !

-------------------------------------------------

உங்கள்
துப்பாக்கியில்
குண்டுகள் !
எங்கள்
துப்பாக்கியில்
கொள்கைகள் !

-------------------------------------------------

சரித்திரத்தின்
கருப்புப்பக்கத்தில்
நீங்கள் !
சரித்திரத்தின்
சிவப்புப்பக்கத்தில்
நாங்கள் !

-------------------------------------------------

எங்கள்
உடல்கள் மட்டும்
இறந்துவிட்டன !
உங்கள்
உடல்கள் மட்டும்
நடமாடுகின்றன !

-------------------------------------------------

வெற்றியின்
மிதப்பில்
நீங்கள் !
தோல்வி என்ற
படிக்கட்டில்
நாங்கள் !

-------------------------------------------------

உங்களைப்
பொறுத்தவரை
நாங்கள்
புதைக்கப்பட்டோம் !
எங்களைப்
பொறுத்தவரை
நாங்கள்
விதைக்கப்பட்டோம் !
 

Sunday, November 24, 2013

குறிப்பு : இந்தக்கவிதையிலிருந்து நீங்கள் எதையாவது புரிந்து கொண்டால் எனக்கு எழுதியனுப்புங்கள்.

கடைக்காரன் அவன்,
கடைக்காரன் !
செம்மாந்த
நடைக்காரன் !
வெண்மைநிற
உடைக்காரன் !

அவன்,
ஐம்பது கடந்த
முதியவன் !
நான்
அந்த வீதிக்குப்
புதியவன் !

நான் ???

அதொன்றுமில்லை !

வந்தது
ஓலை !
அழைத்தது
ஆலை !
கிடைத்தது
வேலை !

வணங்கினேன்
அன்னையை !
வந்தடைந்தேன்
சென்னையை !

உடனடித்தேவையெல்லாம் ...........................

காலடிக்குத்
தடம் !
தங்குவதற்கோர்
இடம் !
நீர் பிடிக்கக்
குடம் !
பழனி முருகன்
படம் !

யாவருக்கும்
என்
முகம் தெரியாது !
நான்
அப்பாவியென்ற
என்
அகம் தெரியாது !

அவ்விடத்தே
எனக்கு
நண்பர்கள்
இல்லை !
ஊரோடு முடிந்தது
என் நட்பின்
எல்லை !
இங்கே நான்
கேட்க முடியாது
' மச்சி ' என்ற
சொல்லை !

அவ்விடத்திற்கே
ஆலையின்
வண்டி வரும் !
பத்துக்கல்
கடந்து போனால்
பக்கத்திலே
கிண்டி வரும் !

என்ன செய்வது ?
யாரைக் கேட்பது ?

தலையைச்
சொறிந்தேன் !
பார்வையை
எறிந்தேன் !

கடையொன்றைப்
பார்த்துவிட்டேன் !
உடனடியாக
மூக்கினில்
வேர்த்துவிட்டேன் !

கடைக்காரன்
காலாட்டிக்கொண்டிருந்தான் !
தன்னைத்தானே
தாலாட்டிக்கொண்டிருந்தான் !

ஆம் !
அதே கடைதான் !
அதே உடைதான் !
அவன்தான் !

' என்ன வேண்டும் '
என்றான் அவன் !

' ஐயா,
வீடு வேண்டும்
வாடகைக்கு !
மேலும் நான்
தனிதான் !
நான்கு பேரைச்
சேர்க்கவேண்டும்
இனிதான் ! '
- என்றேன் !

அவன் சட்டென்று
பேச்சிற்குத்
தடை போட்டான் !
பார்வையாலே
என்னை
எடை போட்டான் !

என்
அகத்தின் அழகு
அவன்
முகத்தில் தெரிந்தது !

புன்னகைத்தான் !

' இரண்டு பேர்
உள்ள அறையில்
மூன்றாவதாகத் தங்க
சம்மதமா ? ' என்றான் !

மூன்றாவது ........?
மூன்று ?

எனக்கு
ராசிதான்
மூன்று !
என்
பிறந்தநாளின்
கூட்டுத்தொகையே
அதற்கு நல்ல
சான்று !

சம்மதித்தேன் !
சேர்ந்துகொண்டேன் !

அவன்
சொல்லித்தான்
கிடைத்தது
அறை !
அதற்கவனுக்கு
காசு கொடுப்பதுதானே
முறை !

கொடுத்த பணத்தை
கடைக்காரன்
மறுக்கவில்லை !
அதற்காக
நான் அவனை
வெறுக்கவில்லை !

அதன் பிறகு
வாழ்க்கை
சேர்த்துக்கொண்டது
இணக்கத்தை !
பார்க்கும்போதெல்லாம்
வைத்தேன்
கடைக்காரனுக்கு
வணக்கத்தை !

போதாக்குறைக்கு
பக்கத்துவீட்டில்
ஒரு
சிட்டு !
அவ்வப்போது
சிரித்தது
பார்வையால்
என்னைத்
தொட்டு !

இப்படியே
வாழ்க்கை கொஞ்சம்
நடந்தது !
ஒருவருடம்
கடந்தது !

ஏதேனும் ஒரு
சம்பவத்தை
எதிர்பார்க்காதீர்கள் !

இத்துடன்
இக்கவிதை
முடியப்போகிறது !

ஒருநாள்
தெருவில்
நடந்து செல்கையில்
இருவர்
பேசிக் கொண்டிருந்தனர் !

ஒருவன்
அந்த வீதிக்குப்
புதியவன் !
ஒருவன்
ஐம்பது கடந்த
முதியவன் !

புதியவன்
புதியவன் தான் !

அந்த முதியவன் .............

ஆம் !

அவன்,
கடைக்காரன் !
செம்மாந்த
நடைக்காரன் !
வெண்மை நிற
உடைக்காரன் !குறிப்பு : இந்தக்கவிதையிலிருந்து நீங்கள் எதையாவது புரிந்து கொண்டால் எனக்கு எழுதியனுப்புங்கள்

Monday, November 11, 2013

திருடன்அவன் தொழில்
திருட்டு !
அவன் பிடிப்பது
சுருட்டு !
அவன் மனமெங்கும்
ஒரே
இருட்டு !

மாதக்கடைசியில்
அவனுக்கும் வரும்
பஞ்சம் !
முதல் தேதியென்றால்
மல்லிகைப்பூவிலிருக்கும்
மஞ்சம் !
காசில்லாத போது
காவல் நிலையம்தான்
அவனுக்குத்
தஞ்சம் !

அடர்த்தியானது
அவன்
புருவம் !
அழுக்கானது
அவன்
உருவம் !

அவன்,
மாலையானதும்
மதுவை உள்ளே
ஊற்றி விடுவான் !
வெளியில் வந்தால்
ஒரு நூறையாவது
தேற்றிவிடுவான் !
தன் இருப்பிடத்தை
அடிக்கடி அவன்
மாற்றிவிடுவான் !

அனாதைதான்
அவன்
ஆதியிலிருந்து !
ஒட்டிக்கொண்டது
இத்தொழில்
பாதியிலிருந்து !

அவனது
பரிதாபத்தோற்றம்
பிறர் உள்ளத்தை
வருடிவிடும் !
சுவடு தெரியாமல்
அவன் கை
திருடிவிடும் !

ஒருநாள்
அவனுக்கு ...........

மதுவருந்தாமல்
நாக்கு
கரித்தது !
காசில்லாமல்
கை
அரித்தது !

ஒரு
பொதுவிடத்தில்
மக்கள் சிலர்
கூடியிருந்தனர் !
திறக்காத
உதட்டால்
தம் உள்ளத்தை
மூடியிருந்தனர் !

அவ்விடத்தை
இவன்
அடைந்தான் !
பலரையும்
பார்வையால்
கடைந்தான் !

ஒரு
வயதானவன்
பையொன்றை
வைத்திருந்தான்
கக்கத்தில் !
போய்
நின்றுகொண்டான்
இவன்
அவன்
பக்கத்தில் !

கெட்டியாகப்
பிடித்திருந்தான்
கிழவன்
பணத்தை !
உணர்ந்து கொண்டான்
திருடன்
அதன்
மணத்தை !

காத்துக்கொண்டிருந்தான்
இவன் !
பேருந்தை
எதிர் பார்த்துக்கொண்டிருந்தான்
அவன் !

ஒரே ஒருநொடி,
கிழவன்
சற்று
அசந்தான் !
மறுநொடியே
பை ஆனது
திருடன்
வசந்தான் !

அதிர்ச்சியில் 
கிழவன்
தன்னிலை
மறந்து விட்டான் !
பறிகொடுத்த
தவிப்பில்
பாதி
இறந்து விட்டான் !
பிடுங்கியவனோ
பையோடு
பறந்து விட்டான் !

சூழல்
தீப்பற்றிக்கொண்டது
கபகபவென்று !
ஓடினர்
திருடன் பின்னால்
சிலர்
தபதபவென்று !

வெறிகொண்டு ஓடினான்
திருடன் !

அந்தப்பை
திருடன்
கையைச்
சுட்டது !
கிழவனின்
வறியதோற்றம்
ஏனோ மனதைத்
தொட்டது !
பிடித்திருந்த
ஆசைப்பேய்
உடனே அவனை
விட்டது !

யாருக்குத்தெரியும் !

மருந்தாகலாம்
அந்தப்பணம் !

புத்தகமாகலாம்
அந்தப்பணம் !

தாலியாகலாம்
அந்தப்பணம் !

கடன் அடைக்கலாம்
அந்தப்பணம் !

வீடு திருப்பலாம்
அந்தப்பணம் !

இருப்பவனை
விடக்கூடாது !
இல்லாதவனைத்
தொடக்கூடாது !

பாடிக்காட் முனீஸ்வரா..................
சுரண்டமாட்டேன்
இல்லாதவனின்
உப்பை !
செய்யமாட்டேன்
இனி
இந்தத்
தப்பை !

ஓடிய திருடன்
கீழே விழுந்தான்
இல்லாத கல்லொன்று
செயற்கையாகத்
தடுக்கி !
பையை
நழுவ விட்டான்
பின் வந்தவர்களைத்
தன்முதுகின் மீது
அடுக்கி !

ஒலித்தது
இடி !
விழுந்தது
அடி !

ஒப்படைத்தது
கூட்டம்.....................
கிழவனிடம்
பையை !
காவலனிடம்
திருடனின்
கையை !

வழிந்தது
திருடனின்
கண்ணில்
கண்ணீர் !
அது
அவன் மனதின்
ஆழத்திலிருந்த
கையளவு
தண்ணீர் !


நீர்
தெளிக்கப்போகிறதாம்
' வானிலை ' !
அறிவித்தது
வானிலை !

==========================
.
அந்தச்
சாலையைக் கடக்க
ஒரு கூட்டம்
காத்திருக்கிறது
ஒருவனின்
முதலடிக்காக !

==========================

யாரோ வரும்போது
மின்சாரம் வந்தால்
வெளிச்சமாக
அவர்கள்
வந்திருக்கிறார்கள் !
யாரோ வரும்போது
மின்சாரம் போனால்
வெளிச்சத்திற்கு பதிலாக
அவர்கள்
வந்திருக்கிறார்கள் !

==========================

பண்டிகை
விடுமுறையில்
ஊருக்குப்
போய்விட்டு வந்த
அந்த
தேநீர் ஆற்றுபவனை
ஆற்றிக்கொண்டிருக்கிறது
தேநீர் !

==========================

ஏதோ ஒருவிதத்தில்
அழகானவர்கள்
மட்டுமே
காதலிக்கிறார்கள் !
அப்படியானால்
காதல் என்பது
என்ன ?

==========================

இங்கே
காமம் என்ற
வார்த்தையை விட
கற்பு என்ற
வார்த்தை
இன்னும்
கவர்ச்சியானது !

==========================

வீடுகளில் .........
அது
அடுப்பைப்
பற்ற வைக்கிறது !
இது
அடிவயிற்றைப்
பற்றவைக்கிறது !
அது
தீப்பெட்டி !
இது
காதல் !
அவ்வளவுதான் !

==========================

பறித்தவனுக்கு
பறித்தது மட்டும்
சொந்தம் !
பார்த்து ரசிப்பவனுக்கு
பூந்தோட்டமே
சொந்தம் !

==========================

பேசத் தெரிந்தவனுக்கு
மேடை
கிடைப்பதில்லை !
எழுதத் தெரிந்தவனுக்கு
பேனா
கிடைப்பதில்லை !
'நடிக்கத் தெரிந்தவனுக்கு'
இரண்டுமே
கிடைக்கிறது !

==========================

கணவர்களே ..........
உங்கள்
மனைவியின்
டைரியில்
சில
கவிதைகளும்
இருக்கலாம் !

==========================

எதிரில் வரும்
அந்த
அழகற்றவளுக்காக
அந்த
அழகானவளைத்
தவிர்த்து விடு
நண்பா !

==========================

அந்த
அறைநண்பன்
வாங்கி வந்த
பார்சலில்
சுமந்து வருகிறான்
கொஞ்சம்
அம்மாவையும் !

==========================

பகலில் நம்மைத்
திட்டு விட்டுப்
போய் விடுகிறது
அப்பா என்கிற
சூரியன் !
இரவில் வந்து
சமாதானப்படுத்துகிறது
அம்மா என்கிற
நிலவு !
- குருச்சந்திரன்
Thursday, October 31, 2013

அன்பு நண்பரே,

                             
       இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் !


நாம் சிரித்தால் தீபாவளி

 
தீபாவளி என்றாலே,

கொண்டாட்ட நினைவு
உள்ளத்தினின்று
அரிப்பதுதான் !

கவலைத்தோலை
மனித நாகங்கள்
உரிப்பதுதான் !

பட்டாசுகளை
பரவசத்தோடு
எரிப்பதுதான் !

களிப்பு வியர்வை
உடம்பு முழுக்க
கரிப்பதுதான் !

மகிழ்ச்சி மதுவை
தொண்டைக்குழியில்
சரிப்பதுதான் !

உறவுகளோடு
உற்சாகமாய்
சிரிப்பதுதான் !

உண்டதையெல்லாம்
லேகியம் தின்று
செரிப்பதுதான் !

பட்ஜெட் துண்டால்
புருஷன் கழுத்தை
நெரிப்பதுதான் !

விருந்துண்டு
தாம்பூலம்
தரிப்பதுதான் !

விளக்கேற்ற
தாமரை நூலைத்
திரிப்பதுதான் !

வாங்கிய வெடிகளை
பங்குபோட்டுப்
பிரிப்பதுதான் !

ஏதோவொன்றை
எண்ணைச்சட்டியில்
பொரிப்பதுதான் !

நரகாசுரன்
நமக்குள்ளே
மரிப்பதுதான் !

ஒரு
சங்கல்பத்தை
நெஞ்சுக்குள்
வரிப்பதுதான் !

வண்ண வேடிக்கையை
வான் வெளியில்
விரிப்பதுதான் !

ஒன்றே ஒன்று
இறுதியாக !

தீபாவளிதான்
நாம் சிரித்தால் !
தீபாவளி அல்ல
நாம் மட்டும் சிரித்தால் !


Friday, October 25, 2013

விலை

அவளொரு
தாசி !
பாவ ஆற்றில்
இச்சை மீன்கள்
தின்னும்
பாசி !
ஆண்கள்
மட்டுந்தான்
அவளுக்கு
ராசி !

அவள் நடையில்
எப்போதுமிருக்கும் - ஒரு
பீடு !
இன்பம் தருவதில்
வானுலக ரம்பை
அவளுக்கு,
ஈடு !
ஒதுக்குப்புறமானது
அவள்,
வீடு !

அவள் மேனி,
ஒரு சிலையை
நிகர்க்கும் !
எப்படிப்பட்ட
பிரம்மச்சர்யத்தையும்
அவள் பார்வை
தகர்க்கும் !

எப்படிப்பார்த்தாலும்
அவள்,
அழகி !
போனால்
திரும்பிவரலாம்
இன்பத்தை
அவளிடம்
பழகி !

அவளிடம்,
துன்பம் நடுங்கும்
பருந்தைக்கண்ட
அரவு போல !
கவலை மறையும்
பகலவன் உதித்த
இரவு போல !
அவளிடம் சென்றால்,
அந்நாள் ஆகும்
நம்
இன்பக்கணக்கில் - ஒரு
வரவு போல !

அன்று.....................

அவள்,
குளித்து விட்டு
செயற்கையாக
வேர்த்திருந்தாள் !
மயக்கும் வித்தைகளை
மனதோடு
சேர்த்திருந்தாள் !
திறந்த வாசலில்
யாரையோ - எதிர்
பார்த்திருந்தாள் !

அவன்
வந்தான் !

அவன்,
தோற்றத்தில்
முப்பதை
முடித்திருந்தான் !
சொல்ல முடியாத
சோகத்தை
முகம் முழுக்க
வடித்திருந்தான் !

அவனைக்கண்டு
அவள்,
சிரித்தாள் !
பார்வையால்
அவனை
உரித்தாள் !
பெருமூச்சால்,
அந்த அறையையே
எரித்தாள் !

அவன்,
சட்டென எழுந்தான்
கட்டிலிலிருந்து !
எடுத்து விட்டான்
கவலைக் குழந்தையை
தன் மனமெனும்
தொட்டிலிலிருந்து !

அவனுக்கு,
இணையவில்லையாம்
இருமனம் !
ஆகவில்லையாம்
திருமணம் !

ஒவ்வொன்றாய்
முடித்தானாம்
கடமையை !
முடித்து விட்டு
உணர்ந்தானாம்
வாலிபம் தொலைத்த
மடமையை !

அவன்,
நாடி வரவில்லையாம்
அவளிடம்
சுகத்தை !
தடவ வேண்டுமாம்
அன்பு வார்த்தைகளால்
அவன்,
அகத்தை !
தொடக்கூட
மாட்டானாம்
அவன்,
அவள்,
நகத்தை !

அவள்,
அமைதியாக
அவனை
ஏறிட்டாள் !
பிறகு,
பின்வரும்
வார்த்தைகளால்
அவனை இரண்டாகக்
கூறிட்டாள் !

" ஐயா,.
ஒட்டிக்கொள்கிறேன்
உங்களிடம்
அட்டை போல !
அணியலாம்
நீங்கள் என்னை
சட்டை போல !
கிடக்கிறேன்
இரவெல்லாம் - மர
கட்டை போல !

உடம்புக்கு
மட்டுந்தான்
இங்கே,
விலை !
உங்கட்கு
உகந்தல்ல
என்,
நிலை !
இன்ப விருந்தென்றால்,
இதோ இருக்கிறது
இலை !

அனுதினமும்
உடம்பால்
மட்டுந்தான்
எனக்கு
சாவு !
மனதையும்
கொடுக்க மாட்டேன்
மற்றவனுக்குக்
காவு !
தர முடியாது,
உங்கள்
மனப்பசிக்கு
ஆறுதல்தோசை வார்க்க
மாவு !

கற்கவில்லை
நான் இன்னும்
மனதை விற்கும்
கலையை !
எதிர்பார்க்க வேண்டாம்
தெப்பக்குளத்தில்
கடல்,
அலையை !

மனது
மட்டுமாவது
என்னிடம்
எஞ்சட்டும் !
நரகத்தின் கதவுகள்,
இதற்காகவாவது
என்னைக்கண்டு - சற்று
அஞ்சட்டும் !

நீங்கள்
போகலாம்  !  "

இப்படியாக,
இறுதிவரை
அவள்,
அவனுக்கு
இணங்கவில்லை !
அதன் பிறகு
அவனை
அவள்,
வணங்கவில்லை !

அவனுக்கு
அந்தப்பணம்
திருப்பித்தரப்பட்டது !

அவனுக்கு
அந்தக்கதவு
சாத்தப்பட்டது !


Wednesday, October 23, 2013

சூழல் !


நான்,
நிறுத்தத்தில்
நின்று கொண்டிருந்தேன் !
எதையோ வாயில்
மென்று கொண்டிருந்தேன் !
போகும்
பெண்களையெல்லாம்
பார்வையால்
தின்று கொண்டிருந்தேன் !

திகைக்காதீர்கள் !
கேலியாய்
என்னைப் பற்றி
நகைக்காதீர்கள் !

அழகை ரசிப்பதில்
அப்படியொன்றும் இல்லை
பிழை !
பிறன்மனை நோக்கினும்,
புயலடித்தாவது பெய்யும்
மழை !

நான்,
வெந்ததைத் தின்று
விதிக்குக் காத்திருக்கும்
சாமானியன்தான் !
ரோமில் வாழ்ந்தால்
ரோமானியன்தான் !

ஆகவே,
அப்படித்தான் !

சங்கதி
அதுவல்ல !

அந்த
நாய்க்குட்டிகள் !

எங்கிருந்தோ அவை
ஓடிவந்தன !
நம்பிக்கையோடு
நிறுத்தத்தை,
நாடிவந்தன !
துள்ளல் இசையை
பிஞ்சுக் கால்களால்
பாடிவந்தன !

நாய் கண்டு
சிலர்,
புன்னகை
பூத்தார்கள் !
வேறு சிலர்,
பொறுமை
நீத்தார்கள் !
இன்னும் சிலர்,
அமைதி
காத்தார்கள் !

ஒரு நாயின் நிறம்
காவி !
ஓடியோடிக் குதித்தது - அது
தாவி !

இன்னொரு
நாய்க்கு,
கண்கள் மட்டும்
பச்சை !
கீழே உருண்டு
புரள்வதில்
அதற்கு அப்படியொரு
இச்சை !

மற்றொரு
நாய்க்கு,
ஆடிக்கொண்டேயிருந்தது
வால் !
நிற்கவில்லை
அதற்குத் தரையினில்
கால் !

இன்னுமொரு நாய்
நிற்போரின்
காலில் போய்
ஈசியது !
அவர்களோடு,
அது ஏதோ
பேசியது !

நான்,
அக்காட்சி விருந்தை
கண்களால்
புசிக்க ஆரம்பித்தேன் !
அந்தச் செய்கைகளை
மெய்மறந்து
ரசிக்க ஆரம்பித்தேன் !
அவற்றின்
உலகத்தில்,
கொஞ்ச நேரம்
வசிக்க ஆரம்பித்தேன் !

என்னை உணர்ந்தேன்
மனிதனாக !
ஆகிக் கொண்டிருந்தேன்
புனிதனாக !

அப்போது,
எங்கிருந்தோ
அவன் வந்தான் !
தன்,
அடிவயிற்றில் இருந்து
காறி ............
ஓங்கித் தரையினில்
துப்பி ..........
தன்
பிரம்மகடமையை
நிறைவேற்றினான் !

பொங்கிவந்த புனிதம்
பட்டெனக்
குறைந்தது !
ஒரு உலகம்
என்னிலிருந்து
மறைந்தது !
ஒரு பெரியகை
ஓங்கி என்னை
அறைந்தது !

இப்போது
அந்த நாய்க்குட்டிகளை
சிலர்,
சூ சூ  வென்று
விரட்டினர் !
கல்லெடுத்து
அடிக்கப் போவதாய்
மிரட்டினர் !
ஏதோ ஒரு
கோபத்தை
அவைகட்கெதிராய்த்
திரட்டினர் !

அதன் பிறகு
அவை
ஓடிவிட்டன !

இப்போது,
மீண்டும் நான் ............

நிறுத்தத்தில்
நின்று கொண்டிருந்தேன் !
எதையோ வாயில்
மென்று கொண்டிருந்தேன் !
போகும்
பெண்களையெல்லாம்
பார்வையால்
தின்று கொண்டிருந்தேன் !


சூழல் !

Saturday, October 19, 2013

பிச்சைக்காரன்

அவன்,
கந்தலான
கச்சைக்காரன் !
சோற்றின் மீது
இச்சைக்காரன் !
சுருங்கச் சொன்னால்
பிச்சைக்காரன் !

அவன்,
ஒவ்வொரு வேளையும்
உணவுக்காக
வெம்புகிறான் !
எப்படியும்
மகேசன்
படியளப்பானென்று
நம்புகிறான் !

அவனுக்கு,
வாழ்வென்பது
காற்றிலாடும்
ஊசல்தான் !
வயிற்றுக்கும்
அவனுக்கும்
அனுதினமும்
பூசல்தான் !
அவன்,
வசிப்பிடம்
ஒரு தேநீர்க்கடை
வாசல்தான் !

அவன்,
ஒரு நாளும்
குளித்ததில்லை !
சோறுண்ண
யாரும் அவனை
விளித்ததில்லை !
வயிறார
அவனும் உண்டு
களித்ததில்லை !.

உடம்பில்
இல்லை
முடம் !
இன்னும்
இருக்கிறது
திடம் !
ஆனாலும்,
உழைப்பு கூடாதென்று
அவனுக்கு ஒரு
அடம் !

தொடக்கத்தில்
அவனும்,
காண்போரிடமெல்லாம்
ஒரு வேலையை
இரந்து பார்த்தான் !
பரிதாபத்தை
பக்குவமாய்க்
கரந்து பார்த்தான் !
கண்ணீரை
கணக்கில்லாமல்
சுரந்து பார்த்தான் !

ஒன்றும்
நடக்கவில்லை !
அதிர்ஷ்ட தேவதை,
அவனைக்
கடக்கவில்லை !
பொங்கியெழுந்த
பிச்சை வேட்கையை
அவனும் பெரிதாய்
அடக்கவில்லை !

உடனே
ஏந்தினான்
கையை !
ஏதோ
நிரப்பினான்
பையை !
ஓரளவு
வளர்த்தான்
மெய்யை !.

எதற்குக்
கிளற வேண்டும்
அதையெல்லாம் !
தேவையில்லை
நடந்து முடிந்த
கதையெல்லாம் !

அது ஒரு
பகல் !
தகித்தது
சூரிய
அகல் !
ஒவ்வொருவரின்
காலடியிலும்
குட்டியாய்
இருளின்
நகல் !

ஓய்வாய்
சற்று அமர
நிழற்குடையொன்றை
நாடிப்போனான்
நமது கதாநாயகன் !

யாரும்
அவனுக்கு
சிவப்புக் கம்பளம்
விரிக்கவில்லை !
காசு கேட்டு
யாரையும் அவன்
அரிக்கவில்லை !
காரணம்
காலையில் உண்டது
கொஞ்சம்
செரிக்கவில்லை !

ஓரிடத்தில்
அமர்ந்தான் !

சுற்றிலும்
பார்த்தான் !

வாங்கித்தாராத
ஏதோ ஒன்றிற்காக
அழும்
ஒரு சிறுவன் !

எதற்கோ
காதலியிடம்
கெஞ்சும்
ஒரு காதலன் !

போகும்
பேருந்தையெல்லாம்
ஏக்கமாய்ப்
பார்க்கும்
படிக்காத
ஒரு கிழவி !

அங்கிருந்த
முதலாளிக்கு
இங்கிருந்தே
அடிபணியும்
ஒரு பணியாளன் !

வாங்கிய கடனுக்கு
சமாதானம் சொல்லும்
ஒரு நடுத்தரன் !

இந்த ரீதியில்
இன்னும் சிலர் ............

நம்மாள்
இப்போது
ஒரு
பீடியைப்
பற்ற வைத்தான் !

புகையை,
ஆழ இழுத்து
நிதானமாய் விட்டான் !

சுகமாகத்தான்
இருந்தது !!!

Thursday, October 17, 2013


இன்னும்
விடியவில்லை !
உறக்கம்
கலையவில்லை !
இன்னும் கொஞ்சம்
உறங்குவோம் !

விடிந்துவிட்டது !
உறக்கம்
கலையவில்லை !
இன்னும் கொஞ்சம்
உறங்குவோம் !

உறக்கம்,
கலைந்து விட்டது  !
யாராவது எழுப்பட்டும் !
இன்னும் கொஞ்சம்
உறங்குவோம் !

எழுப்பியும் விட்டார்கள் !
பக்கத்தில் இருப்பவன்
எழட்டுமே !
இன்னும் கொஞ்சம்
உறங்குவோம் !


=================================================

நாய் குரைத்தது !
நாய்கள் குரைத்தன !
மனிதன் குரைத்தான் !
மனிதர்கள்,
வேடிக்கை பார்த்தனர் !

================================================

நீ
சுதந்திரமானவன்  !
தேர்தெடுக்க
முழு உரிமை உள்ளவன் !
ஜனநாயகத்தின்
பிரதிநிதி !
சொல் !
தூக்கா ?
விஷமா ?
கழுமரமா ?
மலையுச்சியா  ?

=================================================

எல்லா
நிர்பந்தமும்
பழக்கமாகி விடுவதில்லை !
எல்லா
பழக்கமும்
நிர்பந்தத்தில் இருந்து
வருவதில்லை !

==================================================

பெஞ்சில்
தலைசாய்க்கிறான்
ஒரு மாணவன் !
வடியத்தொடங்குகிறது
உறக்கம் !

==================================================

மறுபடியும்  ஒரு
சந்தர்ப்பத்தில்
மறுபடியும்
அத்தவறைச் செய்து
மறுபடியும்  நாம்
சராசரிகளாகின்றோம் !

===================================================

                                                                          

Friday, October 11, 2013

அகில உலக காதலன்களுக்கு இக்கவிதை அர்ப்பணம்


அன்பே,

சாகசங்களால்
உன்னை வியக்க வைக்க
என்னால் முடியாது !

அபூர்வப் பரிசுதந்து
ஆச்சர்யப்படுத்த
என்னால் முடியாது !

சுண்டுவிரல் படாமல்
கண்ணியமாய்க்
காதலிக்க
என்னால் முடியாது !

பிற ஆண்களுடன் 
நீ பழகுவதை
பெருந்தன்மையோடு
ஏற்றுக்கொள்ள
என்னால் முடியாது !

உன்
விரல் நகங்களுக்கும்
கவிதை பாட
என்னால் முடியாது !

சொடக்குப் போட்டு
சொர்க்கத்தை வரவழைக்க
என்னால் முடியாது !

எப்போதும்
உன்னைச் சிரிக்க வைக்க
என்னால் முடியாது !

ஒரே பாடலில்
பணக்காரனாக
என்னால் முடியாது !

நுனி நாக்கில்
ஆங்கிலம் பேச
என்னால் முடியாது !

நீ வாசிக்கும்
புத்தகங்களின்
ரசிகனாக
என்னால் முடியாது !

ஆனால் ......

உன் தந்தைக்கு
ஒரு ஹாய் சொல்ல
என்னால் முடியும் !

என் அம்மாவை
உன் தோழியாக்க
என்னால் முடியும் !

நம் காதலின்
முக்கிய தினங்களில்
உனக்கொரு வாழ்த்துக்கூற
என்னால் முடியும் !

கொஞ்சம் கொஞ்சமாய்
 ராமனாய் மாற
என்னால் முடியும் !

சிறிது சிறிதாய்
மதுவை மறக்க
என்னால் முடியும் !

ஒரு நாளைக்கு
ஒரு சிகெரெட்
கண்டிப்பாய் முடியும் !

உன்
தாமத வருகைக்கு
புன்னகை புரிய
என்னால் முடியும் !

நம்
எல்லா சண்டைக்கும்
முதலில் சமாதானமாக
என்னால் முடியும் !

உன்
பரீட்சைக்கு
அலாரம் வைத்தெழ
என்னால் முடியும் !

உறக்கம் வராத
உன் இரவுகளில்
உன்னோடு கதை பேச
என்னால் முடியும் !

உன்
துன்பங்களுக்குப்
பிரார்த்தனை செய்ய
என்னால் முடியும் !

ஒரு சொட்டுக்
கண்ணீரளவு
உன்னை நெகிழவைக்க
என்னால் முடியும் !

ஒரு வாய் சோற்றையும்
உன்னோடு பகிர்ந்து கொள்ள
என்னால் முடியும் !

நீ பறப்பதற்கு
சிறகுகள் தரமுடியுமா
தெரியவில்லை !
உன்னோடு கைகோர்த்து
சாலையில் நடக்க
என்னால் முடியும் !

நீ
உறங்குவதற்கு
என் மடி தந்து
உன் தலை கோத
என்னால் முடியும் !

                                                                            - குருச்சந்திரன்

Wednesday, October 9, 2013

குப்பா ..............
குடித்து விட்டு
தெருவில் கிடக்கும்
குப்பா !
நினைவிருக்கிறதா
நீ
மூன்று பிள்ளைகளுக்கு
அப்பா !

அவிழ்ந்து
கிடக்கிறது உன்
வேட்டி !
இன்னுமா
எடுக்கிறாய்
உறக்கத்தைப்
பேட்டி ?

புலர்ந்து விட்டது
காலை !
நிரம்பி விட்டது
சாலை !
இன்னும் உனக்கு
புழுதியில்  என்ன
வேலை ?

குப்பா ..........
உன் தினப்படி
சங்கதியென்ன ?

உழைத்தே
உன் முதுகை நீ
ஓடிக்கிறாய் !
காசு கேட்கும்
மனைவியை
அடிக்கிறாய் !
மாலை வந்ததும்
குடிக்கிறாய் !
இப்படியே
ஒவ்வொரு நாளையும்
முடிக்கிறாய் !

குடி எனும்
கூர்வாளால்
உன் குடும்பத்தோரணம்
கிழிகிறது !
குடித்துக் குடித்தே
உன் உடம்பு கெட்டு
அழிகிறது !
உன் பொழுதெல்லாம்
இப்படியே நாளும்
கழிகிறது !

இன்னும் காயவில்லை
உன் வியர்வையின்
திவலை !
உனக்கென்ன
அப்படியொரு
கவலை ?
இடிக்கத்தான் வேண்டுமா
உரலில் இட்டு
அவலை ?

குப்பா ...........
நீ
கட்டியிருக்கிறாய்
ஒருத்திக்குத்
தாலி !
உன்
வாழ்வுப்பயிருக்கு
அதுதானே
வேலி !
இப்படியே குடித்தால்
வெகு விரைவில்
உன் ஆரோக்கியம்
காலி !
போதை தருவதில்
மனைவியைத் தவிர
மற்றதெல்லாம்
போலி !

குப்பா .........
உழைப்பைக்
காரணங்காட்டி
இங்கே நீ
குடித்தால் .....
ஓராயிரம்
காரணம் கூறி
உன் மனைவியும்
அங்கே குடிக்கலாம் !

குப்பா ....................
இனி உன் கால்கள்
தேர்ந்தெடுக்கட்டும்
வீடு செல்லும்
வீதியை !
இனி காட்டாதே
குடும்பத்திற்கு
பசி எனும்
பீதியை !
நாளும் கடைபிடி,
சம்பாதித்ததை
சம்சாரத்திடம் தரும்
நீதியை !
வாங்கிக் கொள்,,,
செலவழித்து
அவள் தரும்
மீதியை !
அப்புறம் அறிவாய்
வாழ்வில்
வசந்தம் வரும்
சேதியை !

குப்பா .........
ஆயிரம் பேர்
சொருகலாம்
அறிவுரை எனும்
கத்தியை !
நீ
நினைத்தாலொழிய
மாற்ற முடியாது
யாரும் உன்
புத்தியை !.

நீயாகத்தான்
திருந்த வேண்டும் !
தவறை நினைத்து
வருந்த வேண்டும் !

அதற்குள்
வந்து விடும்
முதுமை !
மலராது
உன் வாழ்வில்
புதுமை !

ஆனால் ...........

ஒரே
ஒரு வேண்டுகோள் !

தொடக்கக்கல்வி
வரையிலாவது
உன் பிள்ளைகள்
படிக்கட்டும் !

நாளை,
உன்னைப் போலவே
கூலி பெற்று
குடிக்கப் போகும்
உன் பிள்ளைகளில்
ஒருவனாவது
இதைப் படித்துத்
திருந்தட்டும் !!!!!

Monday, October 7, 2013

ஒரு பழைய புகைப்படம் !


அது ஒரு
பழைய புகைப்படம் !

ஒரு
விடுமுறை நாளில்
பீரோவைக் குடைந்த போது
தற்செயலாகக் கிடைத்தது !

புன்னகையுடன்
சிலர் !

மௌனமாக 
சிலர் !

ப்ளாஷ் விழும்போது
இமை மூடிவிட்ட
 சிலர் !

அழுகையோ சிரிப்போ 
அடக்கிக் கொண்ட
சிலர் !

தலைக்கு மேல்
ஆங்கில v
அவசரமாய்
முளைக்கப் பெற்ற
சிலர்.........................
......... !

சிலர்
கண்ணாடி
அணிந்திருக்கவில்லை !

சிலர்
ஒல்லியாக இருந்தனர் !

சிலர் தொப்பை
போட்டிருக்கவில்லை !

சிலருக்கு
தலை நிறைய
முடியிருந்தது !

எல்லா முகமும்
நினைவிருக்கிறது !
எந்தப் பெயரும்
மறக்கவில்லை !

ஒரு சிலர்
ஒரு சிலரோடு
சண்டை போட்டிருந்தனர் !

ஒரு சிலரை
ஒரு சிலர்
காதலித்திருந்தனர் !

இணை பிரியாத
நண்பர்களாக
சிலர் இருந்தனர் !

சிலரால்
வகுப்பே கலகலப்பாகும் !

சிலர்
யாருடனும் பேசாத
உம்மணாமூஞ்சி !

சிலர்
இப்போது
தொடர்பில் இல்லை !

சிலரது
தொடர்புகள்
கிடைக்கவேயில்லை !

சிலர்
முக நூலில்
முகம் காட்டுகிறார்கள் !

சிலர்
அவ்வப்போது
அலைபேசியில் !

பெரும்பாலோருக்கு
திருமணம்
முடிந்து விட்டது !
முடிந்திருக்கும் !

ஒரு
அலுமினி விழாவில்
சிலர்
குடும்பத்தோடு 
சந்தித்துக் கொண்டார்களாம் !

சிலர்
இன்னும் 
அப்படியேயிருப்பார்கள் !
சிலர்
கட்டாயம்
மாறியிருப்பார்கள் !

ஒரு
நன்னாள் தேர்ந்தெடுத்து,
அனைவரும் சந்தித்து,
அதே வகுப்பறையில்,
அதே ஆசிரியரின்,
ஒரு பழைய பாடத்தைத்
திரும்பவும் கேட்கவேண்டும் !

வகுப்பிற்குத்
தாமதமாக
வருபவர்கள்,
இப்போதும்
அப்படியே வந்து 
செயற்கையாகத் 
திட்டு வாங்கட்டும் !

சண்டை போட்டிருந்தவர்கள்
கைகுலுக்கிக் கொள்ளலாம் !

உம்மணாமூஞ்சிகளுக்கு
தண்டனை
பாட்டு பாடுவது !

காதலித்தவர்கள்
காதல்கடிதம் எழுதிவந்து
கூட்டத்தின் முன்
வாசித்துக் காட்ட
கலாச்சாரம் அனுமதிக்காதோ ?

அவரவர்
கொண்டு வந்த
மதிய உணவை
இலைக்கொரு
கைப்பிடி வைத்து
ஒன்றாக அமர்ந்து
சாப்பிடத் தொடங்கலாம் !

கூட்டத்தில் பகிர
ஒவ்வொருவருக்கும்
தலா
ஒரு மறக்க முடியாத நிகழ்வு !

அவகாசமிருந்தால்
அணிபிரித்து
குட்டியாய் ஒரு
பட்டிமன்றம் !

பிரிவதற்கு முன்,
கடைசியாக
அந்தப் பழைய புகைப்படத்தின்
அதே வரிசையில்
அனைவரும் நின்று
மீண்டுமொரு
க்ளிக் !!! 

Friday, October 4, 2013

கள்ளம்
கயமை  என்ற
எரிபொருளால்
உடல்
நனைந்து விட்டது !
காமத் தீ,
அங்கே எரிகிறது !
குளிர்காய்வதற்கு முன்,
கொஞ்சம் யோசிக்கலாமே !

நெறி கொண்டு
பயணித்தால்தான்
அது நதி !
நெறி பிறழ்ந்து
பயணித்தால்,
அது வெள்ளம் !

உறக்கம்
கண்ணில்
இருக்கும் வரை
இருட்டு
சுகமானதுதான் !

ஏதோ ஒரு மனதை
வெட்டிக்
கூறு போட்டுத்தான்,
மாமிசம்
உண்ண வேண்டுமா ?

பள்ளத்தில் விழும்
அனைவருக்கும்,
கிளைகள்
கிடைத்துவிடுவதில்லை !

காமம் என்பது
புண் !
மருந்திடலாமா ?
சொறியலாமா ?
முடிவு நம்மிடம் !

எந்த ஒரு
தப்புக்கும்
ஒருநொடி அவகாசம்,
குறைந்தபட்சம்
இருக்கிறது !

உள்ளத்தில்
பள்ளத்தைத் தோண்டி - அதில்
கள்ளத்தைப்
புதைத்து வைத்தாலும்,
எவனும், எவளும்
தப்ப முடியாது !
சூனியத்தின் வேர்கள்
என்றாவது
கழுத்தை
நெரிக்கத்தான் நெரிக்கும் !

மனதில் கள்ளத்தனம்
எட்டிப் பார்க்கும்
போதெல்லாம்,
சின்னச் சின்ன
தண்டனைகள்
உடனே
கிடைக்கப் பெறுபவர்கள்
பாக்கியசாலிகள் !

' ஒரே இணை ' என்ற
அமைப்பு தரும்
சலிப்பில் தான்
கள்ளத்தனம்
பிறக்கிறது
என்பவர்களுக்காக.................

வெறும்
பசியைத்
தணித்துக் கொள்வது
மட்டுமல்ல
தாம்பத்யம் !
அது,
ஒருவருக்காக
மற்றொருவர்
சுவாசிப்பது !
சுவாசம், 
சலிக்குமா என்ன ?

Wednesday, October 2, 2013

அபார்ட்மெண்ட் சிறுவனே ...................
அடே ! சிறுவா !

உன்னைத்தான் !

இங்கே பார் !

கணினி விளையாட்டை
கணநேரம் ஒத்திவை !

கேள் !

விரிந்திருகிறது
வீதி ! 
அதில்,
விளையாடுவது தானே
நீதி ?

கட்டம் கட்டு,
குறுக்கே கோடிடு !
ஆடலாம் சடுகுடு !

கைக்குட்டை எடு ,
கண்ணைக் கட்டு !
ஆடு கண்ணாமூச்சி !

ஓடித்தொடுதல்
ஆடியதுண்டா ?

ஒற்றைக் காலிலும்
ஓடித் தொடலாம் !
அதற்குப் பெயர்தான்
நொண்டி !
ஆரோக்கியக் காசுகள்
சேர்ப்பதில்,
அதுவொரு
அற்புத
உண்டி !

அப்புறம்
இன்னோர் விளையாட்டு !

ஒருகால் மடக்கிக்
குந்து !
தேவையில்லை
பந்து !
குச்சியால் குச்சியை
உந்து !
எம்பியெழுவதை,
' கில்லித்தட்டு '   -  என்றே நீ
சொல்லித்தட்டு !

 நிறம் கூறித்
துரத்தும் ஆட்டம்
பரிச்சையமுண்டா ?

திருடன் போலீஸ்
தெரியுமா ?

நூல் பிடித்தோடி
பட்டம் விட்டதில்லையா ?

உத்திரத்தில்
கயிறு கட்டி
தூரி.............?

என்னடா உனக்கு
எதுவுமே தெரியவில்லை !

மேற்கண்ட
விளையாட்டில்
வலிமையாகும் உன்
தசை !
வெறும்
கணினியைத் தட்டுவதில்
விரலுக்கு மட்டுமே
விசை !

யாருமில்லையா
வீட்டில் ?

ஓ !

இரவுப்பணி முடித்து
இன்னும் உறங்கும்
தந்தை !

அழகுநிலையம்
சென்று விட்ட
அம்மா !

அலைபேசியில்
மூழ்கிவிட்ட
அக்கா !

சிறப்பு !

கிடக்கிறது
கழுதை !
நான் நீக்குகிறேன்
உன் தனிமையெனும்
பழுதை !

வா வெளியே !
பிரபஞ்சம் பார் !
வெளியை உணர் !

இது,
இறைவனின்
தானம் !
இயற்கையின்
கானம் !
முடிவில்லாது .........
விரிந்திருக்கும்
வானம் !

வா ! வா !

அடடே !

என்ன  இது ?

படியிறங்கியதும்
வந்து விட்டதே
சாலை ?
இல்லையா
உன் வீட்டின் முன்
ஒரு
சோலை ?

விளையாட
இல்லை
திடல் !
தொலைவிலுள்ளது
கடல் !
என்னாவது உன்
உடல் ?

நெடியேறிச்
சிவக்கிறது
நாசி !
நுரையீரல்
துளைக்கிறது
தூசி !
உனக்கில்லை,
வீதியில்
விளையாடும்
ஆசி !

அடுக்கு மாடி,
அபார்ட்மெண்ட் சிறுவனே !

விரைந்தோடு
வீட்டுக்குள் !

விட்டதிலிருந்து
விளையாட்டைத் தொடர் !

கணினி காத்திருக்கிறது !!!


Monday, September 30, 2013

 குறிப்பு : இந்தக் கவிதை எழுதப்பட்டது 07.05.2013  ல்


மழை   

மழை இனி
பெய்யுமா ?
உலகம் இனி
உய்யுமா ?

இனி ,
மேகம் என்பது
வெறும்
பஞ்சுதானா ?
நிலத்தடி நீர்
என்றாலே - அது
நஞ்சுதானா ?

கயிறு போல
இளைத்து விட்டது
காவிரி !
வாய்க்காலானது
வைகை !
தரிசானது
தாமிரபரணி !

ஏட்டளவுதான்
எந்தச் சட்டமும் !
உயராது அதனால்
எந்த அணையின்
நீர்  மட்டமும் !

இனி,
அளந்தே குடிப்போம்
தண்ணீரை !
எதற்கும் கொஞ்சம்
சேமித்து வைப்போம்
கண்ணீரை !

இனி,
வடநாட்டில்
இருந்துதான்
தண்ணீரைக்
கொண்டு வரவேண்டும் !
அயல்நாடு போனாலும்
அங்கிருந்தும் கொஞ்சம்
மொண்டு வரவேண்டும் !

இனி,
குழாயடியில்
சண்டை வராது !

கைதுடைக்கும்
காகித வியாபாரிகள்
கோடீஸ்வரர்கள் !

கதிரியக்கக் குளியல்
அமலுக்கு
வரப் போகிறது !

அழுக்கு ஒட்டாத
ஆடைகள்
நடைமுறைக்கு வரலாம் !

கடல் நீரைக்
குடிநீராக்கும்
குட்டி இயந்திரம்
வீடுதோறும்
விநியோகிக்கப் படலாம் !

கோவில்களில்
அபிஷேகத்திற்கு
தடை வரும் !

வானிலை அதிகாரிகள்
வேலை இழப்பார்கள் !

குடிநீர் வங்கி
உருவாகும் !

மழை
எந்த நாட்டில்
பெய்தாலும்
அதை
அதிசய நிகழ்ச்சியாக
தொலைக்காட்சியில்
ஒளிபரப்புவார்கள் !

' வீட்டுக்கு
ஒரு லிட்டர்
குடிநீர் இலவசம் '
என்று சொல்லியே
அரசியல்வாதிகள்
ஆட்சியைப் பிடிப்பார்கள் !

' ஒருகாலத்தில்
மழை நீரில்
காகிதக் கப்பல்
செய்து விட்டார்கள் '
என்பது
அரிய செய்தியாக
முகநூலில்
பகிரப்படும் !

வானவில்
என்ற வார்த்தை
வழக்கொழிந்து போகும் !

பரிணாம வளர்ச்சியில்
இனி பிறக்கும்
குழந்தைகட்கு
வியர்வைச்சுரப்பியும்
கண்ணீர்ச் சுரப்பியும்
இருக்கப் போவதில்லை !

விவசாயிகள்
எல்லாம்
கண்ணீர்க் கலப்பை
கொண்டு  - தமது
கன்ன வயலில்
உழுதால்தான் உண்டு !


( கண்ணீர் கலப்பை , கன்னவயல் - நன்றி கவிஞர் வாலி )


Wednesday, September 25, 2013

சமூக முதிர்ச்சி

சேர்ந்தாற்போல
நான்கு இளைஞர்கள்
நடந்து போனால்
காட்டாயம் அவர்களிடம்
மதுவாசம் !

தகாத வார்த்தைகளால்
தந்தையைத் திட்டுகிறான்
ஒரு சிரிப்பு நடிகன் !
தியேட்டரில்
கைதட்டுகிறார்கள் !

பள்ளிச்சிறுமி ,
கையில் அலைபேசி ,
நமட்டுச் சிரிப்பு
அடிவயிற்றில் பகீர் !

ஆசிரியர்களை 
வேவு பார்க்க
மாணவர்களை
நியமிக்கும்
பள்ளி நிர்வாகம் !

ஜோதிடர்களின்
தயவால் தான்
இன்னும்
கூட்டமிருக்கிறது
கோவில்களில் !

காதல் பேசுவது
பெண்களுக்குப்
பொழுது போக்கு !
இளைஞர்களுக்கு
பிறவிப் பயன் !

முகநூலை
தடை செய்தால்
லட்சக்கணக்கில்
தீக்குளிப்பு கட்டாயம் !

அருந்தமிழ் நாட்டில்
அடுக்கு மொழியில்
ஆங்கிலம் பேசும்
ஐந்து வயதுக் குழந்தைக்கு
அம்மா என்ற வார்த்தை
தெரியவில்லை !
பலே !

பந்தி போடும்
வரை தான்,
கல்யாண வீடுகளில்
கூட்டமெல்லாம் !

வரிக்கு
விலக்கிருப்பதை
உறுதி செய்த பின்புதான்
வக்கற்றோரை நோக்கி
உதவிக் கரங்கள்
நீள்கின்றன !

கற்பு என்பது
கெட்ட வார்த்தை !

பாசம் என்பது
மூட நம்பிக்கை !

புனிதம் என்பது
பைத்தியகாரத்தனம் !

பற்றியெரியும்
குடிசையின் முன்
குளிர்காய்கிறார்கள் !
ஒளி கொடுக்கும்
தீபத்தை
ஊதி அணைக்கிறார்கள் !
மாற்று சிந்தனையாம் !

" பெண்களுக்கென்று
தனியாக
மதுபானக் கடைகள்
திறக்கப் படும் "
அடுத்த
தேர்தலுக்கு
ஒரு வாக்குறுதி
தயார் !

" எதற்கும் சற்று
வறுமைக் கோட்டை
இறக்கியே போடு ! "
ஐநா சபைக்கு
கணக்குக் காட்ட
உதவும் !

இனிவரும்
இன்குபேட்டர்களில்
கருமுட்டைகள்
குழந்தைகளாகும் !

' இதிலென்ன தப்பு ? ' என்று
இறைச்சிக் கடைகளில்
இறந்தவர்களின்
சடலங்கள்
தொங்கும் நாள்
இதோ வந்துகொண்டிருக்கிறது !

" சமூக முதிர்ச்சி "
என்பதன் பொருளே
மேற்சொன்ன
மாற்றங்களை
ஏகோபித்து
ஏற்றுக் கொள்வதுதானே !
வேறென்ன ???


Monday, September 23, 2013

அரண்டவன் கண்ணுக்கு .............


அது ஒரு
எதிர்பாராத தோல்வி !

முயற்சியில்
வெற்றி கிட்டவில்லை !
நொண்டிச் சமாதானங்கள்
மனதில் ஒட்டவில்லை !

வெற்றி மட்டும்
வாய்த்திருந்தால்.............

விதி
மாறியிருக்கும் !
வாழ்வானது
வசந்தத்தில்
ஏறியிருக்கும் !

ஆகிவிட்டதே நிலை
பரிதாபமாக !
ஏதாவது செய்வானா
இறைவன்
பரிகாரமாக ?

தொடங்க வேண்டும்
அனைத்தையும்
சுழியிலிருந்து !
உயர வேண்டும்
மீண்டும்
அதள பாதாளக்
குழியிலிருந்து !

என்ன செய்து
மனதை
மாற்றலாம் ?
என்னை நானே
எப்படித்
தேற்றலாம் ?

மது ...........
அது
புளித்துப் போன
பழைய போதை !

சூது ........
வேண்டாம் ! வேண்டாம் !
நான்
துரியோதனனுமில்லை !
எந்தச் சகுனியும்
கூடயில்லை !

மாது ..........
அட !
இதைக் கொஞ்சம்
யோசித்துத்தான் பார்ப்போமே !
மன்மதனைச் சற்று
வாசித்துத்தான் பார்ப்போமே !

எதிர்த்த வீட்டு
ஆண்ட்டி
எடுப்பாகத்தான் இருக்கிறாள் !

பச்சை சிக்னல்
காட்டுகிறது
பக்கத்து வீட்டு
பருவச் சிட்டொன்று !

எங்கேயோ
கிண்டியில்
ஒரு அழகு நிலையமாம் !

கொட்டுகிறதாம்
அங்கே
இன்பத்தின் அருவி !
கொண்டாடுகிறார்களாம்
உடம்பை
எண்ணைகொண்டு உருவி !

ஆம் !
கட்டாயமாக .....
ஆடவற்குப்
பெண்டிர் !
பெண்டிற்கு
ஆடவர் !

அப்புறம்
இந்த பீட்டர் ............

வகை வகையாய்
வைத்திருக்கிறான்
எண்களை !
தர வாரியாகப்
பிரித்திருக்கிறான்
பெண்களை !

பேச மட்டுமே
செய்வாளாம்
ஒரு மாது !
சூடேறி விடுமாம்
காமத்தில் காது !

இன்னொருத்தி ,

தொடமட்டும்
தருவாளாம்
அனுமதியை !
கொஞ்சம்
கூடக் கொடுக்கவேண்டுமாம்
வெகுமதியை !

மற்றொருத்தி ,

காட்டுவாளாம்
கண் முன்னே
சொர்க்கத்தையே !
நிற்க வைப்பாளாம்
வரிசையில்
ஆண் வர்க்கத்தையே !

இப்போதைக்கு
ஆரம்பிப்போம்
பேச்சிலிருந்து !
சூட்டை உணர்ந்தேன்
வெளியான என்
மூச்சிலிருந்து !

ஒரேயொரு
குறுஞ்செய்தி !

வந்து விட்டது
எண் !
காட்டி விடுமோ
கயமைத் தனத்தைக்
கண் ?

கைகள்
தன்னிச்சையாய்
நடுங்கின !
மனசாட்சி
மண்ணாங்கட்டியெல்லாம்
உள்ளத்துள் ஓரமாய்
ஒடுங்கின !

சட்டென்று நான்
அவளைப் பார்த்தேன் !

அவள் ...........
என் மனைவி !

இல்லை
அவள் கழுத்தில்
பொன்னகை !
ஆனாலும்
அவளுதட்டில்
புன்னகை !

கையில்
அலைபேசி !

ஆ .......!

என் சோகத்தில்
அவளுக்கும்
இருக்கிறதே 
பங்கு !
உள்ளத்தில்
விழுந்தது
சந்தேகம் எனும்
கங்கு !

சோகத்தை ஆற்ற
என்னைப் போலவே
அவளும் .............

எனக்கு ஒரு
பீட்டர் என்றால்
அவளுக்கு ஒரு
ரோசி ?????

ஐயகோ...............

அப்படியேதும்
இருக்கக் கூடாது
ஆண்டவா !
முடி செலுத்துகிறேன்
என்று நான்
வேண்டவா ?

மனம்
அலறியது
கல்லடி பட்ட
நாயாக !
தெரியத்தான்
தெரியும்
அரண்டவன் கண்ணுக்கு
இருண்டதெல்லாம்
பேயாக !

அடுத்த கணமே ..........

காமம் எனும்
மீசையை
ஒட்டு மொத்தமாய்
மழித்தேன் !
உடனடியாய்
அந்த எண்ணை
அலைபேசியினின்று
அழித்தேன் !

அமைதியானது
உள்ளம் !
காணாமல் போனது
கள்ளம் !

மனைவியைப் பார்த்து
அமைதியாகக் கேட்டேன் .........

" பவித்ரா
ஒரு கப் காபி கிடைக்குமா ? "


அறை

கற்றுக்கொள்ளாதபோது
சமைத்த
அந்த
முதல்சமையலின் ருசி,
கற்றுக் கொண்டபிறகு
சமைத்த உணவுகளில்
இதுவரை கிடைக்கவில்லை !

வெறும்
வெங்காயத்தை மட்டுமே
நறுக்கித்தரும்
சமைக்கத்தெரியாத ஒருவன்
எல்லா அறைகளிலும்
இருக்கிறான் !

அவன்
உண்பான் என
இவனும்
இவன்
உண்பான் என
அவனும்
இருந்ததில்
மீந்து போய்
வெளியில் கொட்டும்
கலாச்சாரம்
அறையினுடையது !

எப்போதெல்லாம்
அறையில் அசைவம்
சமைக்கப்படுகிறதோ
அப்போதெல்லாம்
அறையின்
அசைவம் சாப்பிடாதவன்
ஊருக்குப் போயிருப்பான் !

எல்லா
அறைகளிலும்
ஏதோ ஒருவன்
சதா காதலியிடம்
பேசிக் கொண்டேயிருக்கிறான் !

தொலைந்த
பொருளுக்கு
அறையில் இருப்பவர்களை
சந்தேகிப்பது கூடாது !

தண்ணீர்
வராதநாட்கள்
அறையின்
துக்கநாட்கள் !

அறையில்
மதுவருந்தும் போது
நண்பர்களின் சத்தம்
அக்கம் பக்கம்
கேட்டு விடக்கூடாதென்று
அவ்வப்போது அவர்களை
அமைதிப்படுத்திக்
கொண்டிருப்பவனின்
அவஸ்த்தை
அழகானது !

அறையில்
ஒருவன்
தொலைக்காட்சி
பார்க்கிறபோது
வருகின்றஉறக்கம்
யாருமில்லாத
'அறைத்தனிமையில்'
வருவதில்லை !

எப்போது
ஒரு அறையின்
வரவு செலவுக் கணக்கு
அதைப் போட்ட
நபர்
இல்லாத சமயத்தில்
சரிபார்க்கப்படுகின்றதோ
அப்போது
கெட ஆரம்பிக்கிறது
அந்த அறையின்
கற்பு !

மகிழ்ச்சியோ
துயரமோ
ஒருவன்
பகிர்ந்து கொள்வது
முதலில்
அறையில்
இருப்பவர்களோடுதான் !

வேலை தேடியோ
வேலை பெற்றோ
வருகின்ற
ஒருவனுக்கு
அடைக்கலம் தராத
ஒரு அறை
இந்த உலகத்தில்
இல்லவே இல்லை !

'சகோதரர்கள்
நான்கு பேர்
ஒரே வீட்டில்
வசிப்பதற்கும்
பணி நிமித்தம்
நான்கு பேர்
ஒரே அறையில்
வசிப்பதற்கும் .............
உண்மையைச் சொன்னால்
வித்தியாசம் இல்லை !


பார்வையற்றவன்

அவன் ஒரு
குருடன் !

அந்தப்
பேருந்து நிறுத்தத்திற்கு
எங்கிருந்தோ
அவன்
வந்து சேர்ந்தான் !

என்னைத் தவிர
இன்னும் சிலர்
அங்கே
நின்றிருந்தார்கள் !

நான்
பாக்கெட்டைத் தொட்டு
சில்லறை இருப்பதை
உறுதி செய்துகொண்டேன் !

யாரிடமும்
அவன்
காசு கேட்காதது
கொஞ்சம்
உறுத்தலாக  இருந்தது !

கையிலிருந்த
குச்சியால்
தட்டித் தட்டி
தனக்கான
இடத்தைத்
தேர்ந்தெடுத்து
நின்றுகொண்டான் அவன் !

என்னைப் போலவே
இன்னும் சிலர்
அவனைப்
பரிதாபமாகப்
பார்த்தனர் !

அவன்
எங்கு போகவேண்டும் ?

அவனுக்கான
பேருந்து எது ?

யாரும்
அவனிடம்
கேட்கவில்லை !

அவனும்
யாரிடமும்
கேட்கவில்லை !

நிச்சயம்
இந்தஇடத்திற்கு
அவன்
புதியவன் தான் !

எந்தநம்பிக்கையில்
இங்கே வந்து நிற்கிறான் ?

யாராவது
அவனுக்கு
உதவுங்களேன் !

இவனும்
வாயைத் திறந்து
கேட்கிறானா பார் !

எனக்கும்
அவனை அணுக
கொஞ்சம்
தயக்கமாகஇருந்தது !

எதற்கு
வீண் வம்பு ?

பவித்ராவுக்கு
இதெல்லாம்
சுத்தமாகப்
பிடிக்காது !

மறக்காமல்
தெருமுக்குக் கடையில்
குழந்தைக்கு
பேபி பவுடர்
வாங்கவேண்டும் !

எனக்கான
பேருந்து வந்ததும்
பெருமூச்சு விட்டேன் !

ஜன்னலோரத்தில்
அமர்ந்து
மீண்டும் அவனைப்
பார்த்தேன் !

தனக்கான
பேருந்திற்காக
அவன்
காத்திருந்தான் !

எப்படிக்
கண்டு பிடிப்பான் ?

நடத்துனர்
தெரிந்தவரோ ?

இவனுக்கு
வெளியில்
என்னவேலை ?

வாயைத் திறந்து
யாரிடமாவது
கேட்டால் தானே !

ஒருவேளை
அவன்
கூடவே
ஊமையாகவும்
செவிடாகவும்
இருந்தால் ...............

சுருக்
என்றது !

என்
பேருந்து
புறப்பட்டு விட்டது !

எட்டிப் பார்த்தேன் !

எவனோ
ஒரு இளைஞன்
அவனை
அணுகிக் கொண்டிருந்தான் !

மனசுக்குள்
ஒரு
அசட்டுத் திருப்தி !

Saturday, September 14, 2013

பயணம்

குறிப்பு : இந்தக் கவிதை பேருந்தைப் பற்றியதல்ல
ஊருக்குப் போவதில்
உறுதியாக இருந்தால்
ஒரு பேருந்தை விட்டாலும்
இன்னொரு பேருந்தைப்
பிடித்தாவது
நாம்
ஊருக்குப் போய்விடுவோம் !

பேருந்து
உரிய நேரத்திற்கு
வரவில்லை !
நம்மைப் போலவே
இன்னும் சிலர் காத்திருக்கிறார்கள்
எனும் போது
தாமதித்தாலும்
வரவேண்டிய பேருந்து
வந்தே தீரும் !

பேருந்து
கல்லறை நோக்கிப்
போகிறது எனில்
பயணம் சுகமாயிருந்து
யாதொரு பயனும் இல்லை !
பேருந்து,
பூந்தோட்டத்தை நோக்கிப்
போகிறது எனில்
பயணம் கடினமாயிருப்பதில்
பிழையொன்றும் இல்லை !

ஐம்பது பேர்
உடன் பயணித்தும்
பக்கத்து இருக்கைக்காரனுடன்
பேசாதவன்
தனியாகத் தான்
பயணிக்கிறான் !

எங்கும் நிற்காத
பாயிண்ட் டு பாயிண்ட்
பேருந்தில் ஏறினாலும்
அதுவும் ஏதாவது
ஒரு இடத்தில்
நிற்கவே செய்யும்  !

ஒரே இடத்தில் ஏறி
ஒரே இடத்தில்
இறங்கினாலும்
பயண நோக்கம்
ஒருவருக்கொருவர்
வேறுபடத்தான் செய்கிறது !

தொலைவு
அதிகமாக இருந்தால்
பயணச்சீட்டின் விலையும்
அதிகமாகத் தான் இருக்கும் !

நிறுத்தம் வருவது
தெரியாமல்
தூங்கிக் கொண்டிருப்பவர்களை
விழித்துக் கொண்டிருப்பவர்கள்
சற்று
எழுப்பி விடலாமே !

நடக்கக்கூடிய அளவுதான்
கடக்கக்கூடிய தொலைவு
என்றால்
நடந்தே போய்விடலாமே !
பேருந்திற்காகக்
காத்திருபானேன் ?