Thursday, July 28, 2011

வாழ வைக்கும் காதல்


பண்டிகை நாளொன்றில்
பார்த்துச் சிரித்தவளோடு
பேசுவதெப்படி என
அனுபவப்பட்டவர்களிடம்
ஆலோசனை கேட்டபடிதான்
ஆரம்பித்தேன் நானும் !


ஒரு வெள்ளிக்கிழமையின்
அதிகாலையில்
அலைந்து திரிந்து
அவள் இல்லம் கண்டுபிடித்த போது ,
கோலமிட்டுக் கொண்டிருந்தவள்
நிமிர்ந்து பார்த்து
சிலிர்த்து சிவந்து
சிரித்துவிட்டுச் சென்றாள் !
அவள் இட்டிருந்த
வண்ணக்கோலத்தை விடவும்
அழகாக இருந்தது
பாதவிரலால் அவள் இட்ட
வெட்கக் கோலம் !


இல்லாத கல்லூரிக்கு
வராத பேருந்திற்காய்
நிறுத்தத்தில் நானும்
நின்றிருப்பேன்
அவளுக்கான
பேருந்து வரும்வரை !


அவள் ,
கலந்த கூந்தலை
சரிசெய்யும் சாக்கில்
கடைக்கண்ணால்
எனைப் பார்த்து
குற்றுயிரைக் குதறி எடுப்பாள் !


என் மனதை
ஆனந்தத்தில்
அலைய வைக்கவே
காற்று அவள் கூந்தலை - அடிக்கடி
கலைய வைக்கும் !


ஒரு நாள் ,
கண்களால் என்னைக்
கவனித்துக் கொண்டே - யாரிடமோ
எண்களால் பேசினாள் ! நான் ,
குறிப்பறிந்து குறித்துக்கொண்டதும் - காதல்
பண்களால் நிரம்பியது மனம்
அன்றைய தினம் !


அதன் பிறகு
ஒவ்வொரு பொழுதிற்கும்
ஒவ்வொரு வணக்கம் சொல்லி ,
வாழ்க்கை ,
வணக்கங்களுக்கு
இணக்கமானது !


தினந்தோறும் வருகிற
" தினங்களுக்காக "
திரும்பத் திரும்ப
வாழ்த்துக்கள் கூறிக்கொண்டிருந்தோம் !


ஒருநாள் ,
அவள் கண்களைப் பார்த்து நான்
காதலைச் சொன்ன போது
தலை குனிந்து சென்றுவிட்டாள்
மௌனமாக !
மறுநாளே ,
பச்சை சுடிதாரில் வந்து
பிச்சையாய் நான்கேட்ட காதலை
இச்சையோடு ஈந்து சென்றாள் !


அதன் பிறகு
திரையரங்குகளில் நாங்கள்
ஒளித்திரைகளை
கவனித்ததை விட எங்கள்
விழித்திரைகளை
கவனித்ததே அதிகம் !


எத்தனையோ
இரவுப் பேச்சுக்களில் ,
அவள் அங்கு
உம் கொட்டியபடியே
உறங்கிப் போனதறியாமல்
நானும் இங்கு
உம் கொட்டியபடியே
உறங்கிப் போயிருக்கிறேன் !


அவள்
புன்னகையைப்
பார்த்தவுடனே
பொடிப் பொடியாகின்றன
எனது காத்திருப்பின்
அத்தனை கோபங்களும் !


அவளுக்கும் எனக்கும்
ஒரே அலைநீளம் இருப்பதன்
ஒரே பிரச்சனை ,
அலைபேசியில்
நான் அழைக்கும் அதேசமயம்
அவளும் அழைத்துத் தொலைப்பது தான் !


மேலதிகாரியிடம் நான்
திட்டு வாங்கிய
நாட்கள் எல்லாம் அநேகமாக
அவள் எனக்கு
காலை வணக்கம்
சொல்லாத நாட்களாயிருக்கும் !


பூங்காவில் ஓர்நாள் ,
காதல் கைகூடுமா என
கண்ணீரோடு என்னிடம்
கவலைப் பட்டவளிடம்
நான் சொன்னேன் ,
" நம் உயிரை ஊற்றி
நாம் வளர்த்த காதல்
நம்மை வாழ வைக்காமலா போய்விடும் ! " என்று ...பேரின்பம் என்பது ..........


அது ஒரு
பிரம்மச்சர்யப்
பகல் பொழுது !


சூழல் முழுக்க
சூனியம்
அப்பிக்கிடந்தது !


இளமைக்கு ,
தனிமைதரும்
மானியம் இந்த
சூனியம் என்று
அல்லாடும் மனதை
ஆறுதல்படுத்த முயன்றேன் !


அச்சமயத்தில்
தொலைக்காட்சியில் ஓர்
கொலைக்காட்சி கண்டேன் !
மண்டை பிளக்கும்
சண்டைப்படம் அது !


தலையில்
முக்காடு போட்டுக்கொள்ள
வெள்ளைத்துண்டை
வினியோகிஸ்தர்களுக்கு
விநியோகித்த படமும் கூட !


அப்படத்தில்
இடையழகி ஒருத்தியின்
இடையாட்டும் பாட்டொன்று
இடைவேளைக்குப் பிறகு
இடையே சொருகப்பட்டிருக்கும் என்று
நண்பனொருவன் பேச்சின்
இடையே சொல்லியிருந்தானென்று
உப்பிலாத காட்சிகளை
அந்த ஒரு காட்சிக்காக
சப்புக்கொட்டிப் பார்த்துக்கொண்டிருந்தேன் !


இடைவேளைக்குப் பிறகு
சட்டென்று அப்பாட்டு வருகையில்
பட்டென்று போனது மின்சாரம் !


அய்யகோ !
எப்போதும் போவதுபோல
இப்போது போன மின்சாரம் - இனி
எப்போது வருமோ என
ஏங்கிக் காத்திருந்தேன் !


இதுபோன்ற
சமயங்களில் தான்
ஒரு காதலி அல்லது
ஒரு தோழியின் சேவை
மிகவும் தேவை !


அவர்களோடு
பேசப்பேச
காமத்தின் சாரம்
நீர்த்துப் போய்விடும் !
தாபத்தின் காய்ச்சல்
வேர்த்துப் போய்விடும் !


ஆனால் ,
அப்படி ஓர் பாக்கியம்
வாய்க்கும்படி
தலையில் ஓர் வாக்கியம் கொள்ள
எனக்கு யோக்கியம் இல்லையென
யோசித்திருந்த ஆண்டவன்
மன்மதன் சபையில் எனது பெயரை
வாசிக்காமலேயே விட்டிருந்தான் !


குடிக்கலாமா ?
போதை கொண்டு
காமத்தின் கதையை
முடிக்கலாமா ? என
நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன் !


அப்போது பார்த்து
பக்கத்து வீட்டுக்குழந்தை
பைய பைய
பார்த்தபடி
தைய தைய
தவழ்ந்து வந்தது !


சமையலில் ஈடுபட்டிருந்த
தன் தாயை
சமயம் பார்த்து
ஏமாற்றி வந்திருக்கும் என
யூகித்துக் கொண்டேன் !


என் அருகே வந்து
என்னைப் பார்த்து
சிரிக்கவும் செய்தது
குழந்தை !


சூரியனிருக்கும் ஆகாசம்
கீழிறங்கி வந்தது போல
அப்படியொரு பிரகாசம்
அந்தச்சிரிப்பில் !


குழந்தையை
அள்ளி எடுத்தேன் - உற்சாகத்தில்
துள்ளிக் குதித்தது !
தளிர் போன்ற
அதன் மேனியில்
கதகதப்பானதொரு குளிர்
குடிகொண்டிருந்தது !
தெய்வத்தின் வாசனை - அதன்
தேகம் முழுவதும் !


விளையாடிக் கொண்டிருந்த குழந்தை
வீறிட்டழுதது திடீரென !


பதறியடித்துப்
பரிசோதித்ததில்
எறும்பு ஒன்று செய்த
குறும்பு எனத் தெரியவந்தது !


எறும்பைத்
தட்டிவிட்ட பிறகும்
கண்களில் கண்ணீர்
முட்டிக் கொண்டிருந்தது !


அழுகை நிறுத்தும்படி
கைகூப்பி அதனிடம்
தொழுகை செய்தும் பலனில்லை !


அடடா !
சேய் அழுத காரணத்தை - அதன்
தாய் வந்து கேட்டால்
பேய் முழி முழிக்க நேரிடும்
என்ன செய்யலாம் என
நாய் போல நாலாப்புறமும்
அலையவிட்டேன் சிந்தனையை !


விளையாட்டுக் காட்டலாமென
வெடுக்கென நான் எழுந்து
கோமாளி போல
குதித்தாடினேன் !
அழுகையை உடனே நிறுத்தி
கைகொட்டிச் சிரித்தது
குழந்தை !
அதனுடனே நானும்
கைகொட்டி சிரிக்கலானேன்
இன்னொரு குழந்தையென !


மது மற்றும்
மாதுவை விட
பேரின்பங்கள் பலவும்
பூவுலகில் இருப்பதை - நான்
புரிந்து கொண்ட தருணம் அது !!!


Friday, July 22, 2011

வாலிபா ...........

வாலிபா ,
காலையில் எழும்போதே
ஆலைக்குப் போய்
வேலை செய்வதென்றாலே
வெறுப்பாய்த்தானிருக்கும் !

எல் தோன்றும் முன்பே
பல் துலக்க வேண்டியதிருக்கும் !
( எல் - சூரியன் )

குளிப்பு நடக்கும்போது
களிப்பு இருக்காது !

சீரணம் சீர்கேடும் என்கிற
காரணம் சொல்லி ,
சிலநேரங்களில் நீ
சிற்றுண்டியை
சீண்டாமலே போகலாம் !

அலுவலகத்தில்
இருக்கையில் அமர்ந்தாலே
இக்கட்டுகள் உன்னோடு
சொக்கட்டான் ஆடலாம் !

அடுப்பு எரிவது போல் - உன்னுள்
கடுப்பு எரியலாம் !

மேலதிகாரியின்
முகம் பார்க்காத நாளையே
மாபெரும் நாளாய்
மனது கொண்டாடலாம் !

ஒருவாய் சோற்றிற்கும்
ஒருபாய் உறக்கத்திற்கும்
பகலெல்லாம்
பேய்பாடு படுவதும்
நித்தம் நித்தம்
நாய்பாடு படுவதும்
எதற்க்காக ?
சிறிது சிறிதாய்
சாவின் பக்கம்
சாயத்தானே ?
ஒருநாள்
அனைத்தும் அடங்கி
ஒயத்தானே ?
என்று நீ
தத்துவங்களின்
தத்துப்பிள்ளை ஆகலாம் !

ஆனாலும் வாலிபா .........
சிகரங்களில் சிம்மாசனம்
கிடைக்கப்பெற்றவர்கள் எல்லாம்
பாடுகள் பட்டு
மேடுகள் ஏறியவர்கள்தான் என - வரலாற்றின்
ஏடுகள் புரட்டிப்பார் புரியும் !

நெற்றியின் வியர்வை
நிலத்தில் விழாவிட்டால் - உனது
வெற்றியின் வேர்
உலர்ந்து விடும் !
உழைப்புக்கு அஞ்சாதே !
உனக்கொரு பொழுது
விரைவிலேயே
புலர்ந்து விடும் !

வாழ்வே
வெறுப்பாயிருக்கிறது என
விலைகொடுத்து நீ போதையை
வாங்கினால் ,
இன்னல்களுக்கு நீயே
ஜன்னல் திறப்பது போலாகும் !

உனது விரக்தியின்
வாயில் அடைபட
வாரம் ஒருமுறை
கோயில் செல் !

தெரியாமல்
காலை மிதித்தாலும்
அதனைப் புன்னகையோடு ஏற்கும்
நல்ல உள்ளங்களை
அங்கே காணப்பெறுவாய் !

தாய்தந்தையரின்
தோளில் தலைசாய்த்தபடி
உன்னைப் பார்த்து பார்த்து
சிரிக்கும் குழந்தைகள் வடிவில்
அங்கே கடவுள் உனக்கு
தரிசனம் தரலாம் !

அயல் நாட்டில்
பணியில் இருக்கும்
தன் மகன் போலவே
நீயிருக்கிறாய் என
பாசத்தோடு உன்னைப்பார்க்கும்
வயது முதிர்ந்தோரின்
ஆசிர்வாதங்கள்
அங்கே உனக்குக் கிடைக்கலாம் !

கடவுள் உனக்குக்
கல்லாகவே தெரிந்தாலும்
இரண்டு நிமிடங்கள்
கண்களை மூடி நின்றுபாரேன் !
கவலைகள் அனைத்தும்
சலவை செய்யப்பட்டு
உன் மனது
வெண்மையாய் மாறிவிட்ட
உண்மையை உணர்வாய் !

தொலைகாட்சி பார்க்கும்
உனது தாயை
ஒருநாள் கவனித்துப்பார் தெரியும் !
நெகிழ்ச்சியான காட்சிகளில்
அவள் தன் கண்ணீரை
எத்தனை முறை துடைத்துக்கொள்கிறாள் என்று !
அந்த நல்ல மனம்
புண்படாமல் வாழ்ந்தாலே
சமுதாயம் உன்னைப்
பண்பட்ட மனிதன் என்று போற்றும் !

உனது சக்திக்குத் தகுந்தபடி
தங்கைக்கு ஒரு அணிகலன்
வாங்கித்தாயேன் !
அண்ணன் வாங்கித்தந்தது என
ஆண்டு முழுவதும்
அண்டை அயலாரிடம் சொல்லிக்கொண்டிருப்பாள் !

படகுகளும்
துடுப்புகளும் உனக்காகக்
காத்திருக்கும் போது
துன்பத்தின் கடலை
நீந்திக் கடக்க முயல்வது
அறிவீனம் என்று
அறிந்து கொள் தோழா !!!

Saturday, July 16, 2011

அன்பே ,
நம் மீது நமக்கு
உள்ள காதல் ,
என்றும் அழியாத
உள்ளக் காதல் !


நீயில்லாத போதும்
உன்னையே நான்
எண்ணிக்கொண்டிருக்கிறேன் !
உனக்காகக் காத்திருக்கையில்
நேரம் போக ,
நொடிகளை ஒவ்வொன்றாக நான்
எண்ணிக்கொண்டிருக்கிறேன் !


உன்னோடு இருக்கும்போது
இன்னும் அழகாகத் தெரிகிறது
பார் !
வெட்கப்பட்டது போதும்
கண்களைத் திறந்து
அதன் அழகைக் கொஞ்சம்
பார் !

( பார் - உலகம் , பார் - பார்த்தல் )


அடடா !
பேசிக்கொண்டிருக்கும் போதே
மின்சாரம் போய்விட்டதே !
உன் இதழ் திறந்து
ஒரே ஒருமுறை நகையடி !
அந்த உன் புன்னகை
மினுமினுத்தபடி வெளிச்சத்தை
முணுமுணுக்கும் பொன் நகையடி !

( நகை - சிரிப்பு , நகை - அணிகலன் )


அடியே ,
பொழுதுகளின் வீணையில்
காதலின் நரம்பை
சிறிது மீட்டு !
பிறகு ,
பெருமுயற்சி செய்தும்
எடுக்க முடியாது
உன்னிலிருந்து என்னை மீட்டு !


உன் அருகாமையில்
சுத்தமாய்
அடங்கி விடுகிறது
என் நாடி !
அதனால் தானோ என்னவோ
வேகமாய்ப் பயணிக்கின்றன
என் ஐம்புலன்களும்
உன்னையே நாடி !


எனக்குத் தெரிந்தவரை
அந்தப் பூங்காதான்
நாம் காதலின் பாடம் கற்ற
பள்ளியறை !
கூட்டம் குறைந்த தருணங்களில்
அதுவே ,
நான் உன்னை
செல்லமாக சீண்டி விளையாடும்
பள்ளியறை !


நீ உண்ணும்போது
கீழே சிந்திய
அந்த இனிப்பின் மீது
அமர்ந்து விட்டுப் பறந்தது
மோட்சம் பெற்ற அந்த ஈ !
நானும் மோட்சமடைய
நீ உண்ணும்
அந்த இனிப்பிலிருந்து
எனக்கும் சிறிது ஈ !

( ஈ - பறக்கும் பூச்சி , ஈ - கொடு )


நம் காதலைக் கொண்டாடக்
கண்டுபிடிப்போம்
மனிதர்கள் யாருமற்ற
ஒரு தீவை !
நாம் பிரிந்து விடுவோமோ
என்ற உனது ஐயத்திற்கு
உடனடியாக நீ தீவை !

( நன்றி : கவிஞர் வாலி )


நான் உன்னைப்
பார்த்துக்கொண்டே இருந்தால்
வெட்கத்தவிப்பில் நீ
திருகித் திருகியே
கிழிந்து போகிறது
உனது சேலையின் தலைப்பு !
நீயே சொல்லேன் !
இந்தக்கவிதைக்குப்
பொருத்தமானதொரு தலைப்பு !!!
Thursday, July 14, 2011

அரசியல்வாதிகளே ..........

அரசியல்வாதிகளே ,
உங்கள் அறிக்கைகளில்
இலவசங்களே
இலக்காக இருப்பதால்
தொலைநோக்கு என்பது - உங்களுக்கு
தொலைந்த நோக்கு
ஆகிவிட்டது போலும் !

அரசியல்வாதிகளே ,
சமச்சீர்கல்வி போன்று
சமச்சீர்சமுதாயம் என்றொரு
சீர்மிகு கருத்தை உங்கள்
சிந்தையில் என்றாவது
சீர்தூக்கிப்பார்த்திருக்கிறீர்களா ?

அரசியல்வாதிகளே ,
உங்களுக்கிடையேயான
ஏட்டிக்குப்போட்டியில்
எட்டி உதைக்கப்படுவதெல்லாம்
ஏதுமற்ற மக்கள்தான் என்பதை
எப்போது உணரப்போகிறீர்கள் ?

அரசியல்வாதிகளே ,
மதுபோதை போல
மாதுபோதையும்
அரசுடைமையாக்கப்படும் என்று
ஆசைகாட்டியே நாளை
ஆட்சியைப் பிடித்தாலும் பிடிப்பீர்கள் !
அப்போது ,
விபச்சாரதிற்கும்
விபரமானதொரு
பட்டயப் படிப்பு வந்து
பட்டையைக் கிளப்பப்போகிறது !

அரசியல்வாதிகளே ,
" யார் செய்தார்கள் ? " என்பதைவிட
" என்ன செய்தார்கள் ? " என்ற கருத்தே
தராசின் முள் போல உங்கள்
சிரசில் நிலை பெறட்டும் !

அரசியல்வாதிகளே ,
பேசுவதும் , கேட்பதும்
எழுதுவதும் ,
எப்போதும் சுகமானவைகள் !
அனுபவத்தின் வலி
அனுபவிப்பவனுக்குத் தான் தெரியும் !
களத்தில் இறங்கிக்
காரியம் ஆற்றாதவரை
களங்கம் என்பது
கடைசிவரை கழுவப்படாது !
களமிறங்கும்
தைரியமில்லாத நீங்கள்
தயவுசெய்து இனிமேல்
உங்களை சிங்கங்களோடு
ஒப்பிடாதீர்கள் .
அது சிங்கங்களுக்கு அசிங்கம் !

அரசியல்வாதிகளே ,
எந்த ஆட்சி வந்தாலும்
முந்தைய ஆட்சியின்
மாட்சிகளை ,
சாட்சியின்றி அழிப்பதையே
அன்றாடக் காட்சியாய்
வைத்திருந்தால் ,
ஆண்டுகள் ஐந்து
மாண்ட போதிலும்
விண்டு கொடுக்கும் அளவுகூட
தொண்டு நடந்திருக்காது !
அடுத்த ஐந்தாண்டில்
காட்சி மாறுவது போல
ஆட்சி மாறினாலும்
பழைய கதையே
புதிய அத்தியாயமாய்த் தொடரும் !

அரசியல்வாதிகளே ,
மனிதநேயம் என்னும்
புனித நேயத்தில்
பட்டம் பயின்றவனே
சட்டம் ஒழுங்கு காக்க
சீருடை அணிய வேண்டும் - என்றொரு
திட்டம் தீட்டிடுங்கள் !
ஏனெனில் இங்கு
பலசமயங்களில் ,
பயிரை மேய்வது
வெளியிலிருந்து வரும்
'கூலிகள் ' அல்ல !
உள்ளேயே இருக்கும்
'வேலிகள் ' தான் !

அரசியல்வாதிகளே ,
கொள்ளையடிக்கவே நீங்கள்
வெள்ளையாய்ச் சிரிக்கிறீர்கள் !
ஏழைகளின் வீட்டில் நீங்கள்
உணவு உண்ணுவது கூட - உங்கள்
கனவு நிறைவேறத்தான் !
உங்கள்
'தடை' களையப்பெறவே
நடை பயணங்களை
நாடு முழுவதும்
நாடிப் போகிறீர்கள் !'
உண்மையைச் சொல்லுங்கள் .
இன்னும் எத்தனை
இருக்கின்றன
உங்கள் புத்தியில்
இதுபோன்ற 'யுத்திகள் '?

அரசியல்வாதிகளே ,
நீங்கள் கோட்டையில்
அமர்ந்துகொண்டு
எத்தனை பழங்களைத் தின்று
எத்தனை கொட்டைகள் போட்டீர்கள்
என்பதல்ல வரலாறு !
நீங்கள் போட்ட விதைகளில்
எத்தனை விதைகள்
விருட்சங்களாகி இருக்கின்றன
என்பது மட்டுமே வரலாறு !!!
Tuesday, July 12, 2011

மேலதிகாரிகளே ..............
மேலதிகாரிகளே ,
அணியில் நீங்கள் இல்லாவிடினும்
பிணி ஏதும் இன்றிப்
பணி நடந்துகொண்டுதானிருக்கும்
என்பதை எப்போது
புரிந்து கொள்ளப்போகிறீர்கள் ?

மேலதிகாரிகளே ,
அறிவுரைகளை நீங்கள்
அடுக்கிக்கொண்டே போனால்
மதிப்பிழந்து போகும் உங்கள்
" முகவுரை " என்பதை
மனதில் பதித்துக்கொள்ளுங்கள் !
மேலதிகாரிகளே ,
சுட்டுவதாலும்
குட்டுவதாலும்
உங்கள்மீது வராத மரியாதை ,
ஆறுதலாய்த் தோளைத்
தட்டுவதால் வருமென்பதைத்
தெரிந்து கொள்ளுங்கள் !
மேலதிகாரிகளே ,
உங்கள்
புத்தியில் அமிழ்ந்திருக்கும்
பள்ளமும் ,
கண்கள் உமிழ்ந்திருக்கும்
கள்ளமும் ,
ஆகிய இவையிரண்டும்
உங்கள்காலடியில் நீங்கள் பறிக்கும்
பள்ளமென்பதை
உள்ளத்தால் உணர்ந்திடுங்கள் !
மேலதிகாரிகளே ,
பொறுப்பாய் இருக்கிறேனென்று
எந்நாளும் ,
வெறுப்பாய் நீங்களிருந்தால் ,
நற்பெயரென்பது உங்களுக்கான
மறுப்பாகிவிடும் மறந்துவிடாதீர்கள் !
மேலதிகாரிகளே ,
உங்கள்
கர்வமுடிச்சு அவிழ்ந்தாலே
சர்வசிக்கல்களும்
சரியாகுமென்பதைப்
புரிந்து கொள்ளும்
பக்குவம் உங்களுக்கிருக்கிறதா ?
மேலதிகாரிகளே ,
அனுபவம் தரும்
" மன - பாடத்தை " விடவா
புத்தகத்தின் மனப்பாடம் - உங்கள்
வித்தகத்தை விஸ்தரிக்கப்போகிறது ?
மேலதிகாரிகளே ,
ஒரு குழந்தையின்
குசும்பையே ரசிக்க முடியாத நீங்கள் ,
விசும்பையே வெற்றிகொண்டேனென்று
வீண்பெருமை கொள்ளாதீர்கள் !
மேலதிகாரிகளே ,
பலசமயங்களில்
இரைந்து பேசுவதைவிடவும்
கரைந்து பேசுவதென்பது
காரியத்தைச் சாதிக்குமென்பதை
கவனத்தில் வையுங்கள் !
மேலதிகாரிகளே ,
உங்கள் மகளின்
பள்ளிவிபரம் தெரியாமல் , - உலகின்
புள்ளிவிபரம் அத்துபடி என்று நீங்கள்
பீற்றிக்கொள்வதில்
பெருமையொன்றுமில்லை !
மேலதிகாரிகளே ,
உடலுழைத்து
நீங்கள் சிந்திய
வியர்வைத்துளிகளை வைத்து
உங்களை மதிப்பிட்டால் ,
அந்த மதிப்பில்
ராஜ்ஜியம் செய்வது வெறும்
பூஜ்ஜியமாகத்தானிருக்கும் !
மேலதிகாரிகளே ,
இறுகியமுகம் உங்களுக்கென்று
இறுமாந்திருக்காதீர்கள் .
அப்படிப்பார்த்தால்
இறந்தவனிடமும் இருக்கிறது
அதே இறுகியமுகம் !
மேலதிகாரிகளே ,
உங்கள் ஊழியர்களின்
சாதனைகளுக்கு
நீங்கள் ஒரு பாட்டாளியாவதும் ,
அவர்களின் தவறுகளுக்குப்
பொறுப்பு ஏற்பதில்
நீங்கள் ஒரு கூட்டாளியாவதும் - என
தலைமையின்
தலையாய பண்பே
இந்த இரண்டும்தானென்பதை
இதயத்தில் இருத்திக்கொள்ளுங்கள் !!!


Sunday, July 10, 2011

ஊடல் இருந்தாலும்
காதல் குறைவதில்லை .........

இப்போதெல்லாம்
காதலோடு தொடங்குகிற
நம் உரையாடல் ,
முடியும் போது
மோதலோடுதான் முடிகிறது !

முன்பெல்லாம்
காதலின் பசிக்கு
ஊடலை ,
ஊறுகாய் போலத்தான்
தொட்டுக்கொண்டிருந்தோம் !
இப்போது அதையே
உணவாக மாற்றி
உணர்வுகளை ஓயாமல்
சுட்டுக்கொண்டிருக்கிறோம் !

நான்கு நாள் தாடியோடு
நானிருந்தது
நாகரிகமாயில்லை என
நறுக்கென்று
நீ எடுத்துரைத்ததும் ,
மாலை நெருங்கும் போது
மதிய உணவு கொண்டால்
உடலானது உபாதைகளின்
புதிய உணவு ஆகிவிடும் என்று நான்
திட்டியபடியே உன் தலையில்
குட்டியதும் என
அழகாய்த்தான் ஆரம்பித்தது
நம் முதல் ஊடல் !

அழைத்த போது
அலைபேசி
அடித்துக்கொண்டே இருந்தது
எங்குதான் தொலைந்தாய் என
எதோ ஒரு மதியத்தில்
எக்குத்தப்பாய் நான் உன்னிடம்
எகிறியதும் ,
" அது என் தனிப்பட்ட
அந்தரங்கம் . " என
தந்திரமாய் நீ என்னைத்
திருப்பிதாக்கியதும் என
நம் இரண்டாவது ஊடலே
இதயங்களில் இடியை
இறக்கியது !

வலையில் தான்
உலவிக்கொண்டிருக்கிறாயே
சிறிது அரட்டையடிக்கலாம் என
ஆசையைத் திரட்டி நான்
அன்பு அழைப்பு விடுத்தால் ,
வேலையிருக்கிறது வேண்டாம்
என என்னை விரட்டி விடுகிறாய் !
கோபத்தில் வசைகளால் நான்
உன்னைப் புரட்டி விடுகிறேன் !
இப்படியே போனால் பிறகு
பிரிந்து விடுவதுதான் என
பதிலுக்கு நீயும் என்னை மிரட்டி விடுகிறாய் !

சனிக்கிழமை சாயங்காலம்
சந்திப்பது என நாம்
சிந்தித்து முடிவெடுத்து ,
சரியான சமயத்தில் நானும் வந்து
சலிக்க சலிக்க காத்திருப்பேன் !
இரண்டு மணிநேரமாகியும்
நீ வராததால்
மிரண்டு போன விழிகளோடு
அரண்டு போய் நின்றிருப்பேன் !
அப்போது பார்த்து நீ
அலைபேசியில் அழைத்து ,
" பெரிய பாளையத்தில் இருந்து
பெரியம்மா வந்திருப்பதால்
பெருமுயற்சி செய்தும்
புறப்பட்டு வர இயலவில்லை !
பிறிதொருநாள் சந்திக்கலாம் ! " என
புலபியபடியே
நீ
பொரிந்து கொட்டுவாய் !
"பிறகு வைத்துக்கொள்கிறேன் " என
இல்லாத வேட்டியை நானும்
வரிந்து கட்டுவேன் !

முந்தைய தேதிகளின்
சேதிகளை நாம்
பேசிப்பேசி மகிழ்ந்திருக்கும் போது
ஊசிபோல ஊடே நுழைந்து
ஊறு விளைவிக்கும்
வேறு அழைப்பிற்காக ,
பாதியில் என்னைப் புறக்கணித்து
ஆதியோடு அந்தமாய்
அங்கே நீ அளந்து கொண்டிருப்பாய் ! - நானோ
மீதிக்கதை பேச வழியின்றி
வீதியில் நிற்கும் விளக்குக்கம்பமாய்
நாதியற்று நேரம்போக நின்றிருப்பேன் !
அதற்குள் நீயோ , என்னை
சோதித்து வதைப்பதில் ,
சாதித்து முடித்திருப்பாய் !
நானோ ,
தாள முடியாத கோபத்தில்
தொலைபேசியைத் தரைக்குத்
தாரை வார்த்திருப்பேன் !

இப்படி ,
எவ்வளவு தான்
ஊடல் இருந்தாலும் ,
எள்ளளவும் குறைவதில்லை
நம் மீது நாம் கொண்ட காதல் !

வசதியில் வனப்பில்
உச்சமாய் இருக்கும்
உனக்கான வரங்களை
துச்சமாய்த் தூக்கிஎறிந்து
எனக்காக நீ காத்திருப்பதும் ,
நம் காதலை
என் வீட்டில் சொல்லியதற்கு
தண்டனையாய்
தாயன்பைத் துறந்து
தினம் தினம் துளித்துளியாய்
நான் இறந்து கொண்டிருப்பதும் , என
எங்கே தள்ளாடினாலும்
அங்கே மட்டும் நம்காதல்
நிமிர்ந்து நின்று விடுகிறதடி !!!

Tuesday, July 5, 2011

காதல் வந்த பிறகு ........


எப்போதும் இருக்கும்
உலகம் தான் !
இப்போது மட்டும்
நிறம் மாறித்தெரிகிறது !

எப்போதும் பார்க்கிற
மனிதர்கள்தான் !
ஆனால் அவர்களின்
மகிழ்வான தருணங்களில்
அவர்களுக்கு நான்
எதிர்படுகிறேன் !

எப்போதும் இருக்கும்
அதே அலுவலகம் தான் !
இப்போதுமட்டும்
கணிப்பொறியின் முன்பு
அமர்ந்தாலே
கவிதை கவிதையாக
கற்பனை விரிகிறது !

எப்போதும் கேட்கிற
பாடல்தான் !
இப்போதுமட்டும்
அதன் அர்த்தங்களை
உணர்ந்துகொண்டு
ஆனந்தப்படுகிறது மனது !

இப்போதெல்லாம்
மழை வந்தால்
கண்கள் முதலில்
வானவில்லைத்தான்
தேடுகின்றன !

இப்போதெல்லாம்
சக ஊழியனோடு
சண்டையே வருவதில்லை !

மொட்டைமாடியை விட
உன்னதமான ஒரு இடம்
உலகத்தில் வேறு ஏதாவது
இருக்கிறதா என்ன ?

இப்போதெல்லாம்
நானிருக்கும் இடத்தில்
அழகான பெண்களும்
இருக்கிறார்கள் !
ஆனால் ,
அவர்களைப் பார்க்கத்தான்
ஏனோ தோன்றுவதில்லை !

இப்போதெல்லாம்
குறைவான உணவை
நீண்ட நேரம் உண்கிறேன் என்று
அம்மா அடிக்கடி
குறைபட்டுக் கொள்கிறாள் !

இப்போதெல்லாம்
தன்னுடைய
அழகுசாதனப்பொருட்களை
நானெடுத்துப்
பூசிக்கொள்கிறேன் என்று
தங்கை தினமும்
என்னை ஏசிக்கொண்டிருக்கிறாள் !

இப்போதெல்லாம்
காதலின் காய்ச்சலின்
தேகம் எப்போதும்
திளைத்திருப்பதால்
வேலைநிறுத்தம்
செய்துவிட்டன போலும்
என் உடலின்
வியர்வைச்சுரப்பிகள் !

இப்போதெல்லாம்
ஆபாச சுவரொட்டிகள்
அருவருப்பாயிருக்கின்றன !

சந்தேகமேயில்லாமல்
இப்போதெல்லாம்
சந்திக்கும் பெண்களையெல்லாம்
சகோதரிகளாகத்தான்
நினைக்கிறேன் நான் !

இப்போதெல்லாம்
அலுவலகத்தில் எனக்கு
வேலையே இருப்பதில்லை !
ஆனாலும்
பொசுக்கென்று ஏன்
பலரும் பாராட்டித் தொலைக்கிறார்கள்
என்பதுதான் புரிவதில்லை !

இப்போதெல்லாம்
தொலைகாட்சியிலோ
திரைப்படத்திலோ ,
நெகிழ்ச்சியான காட்சி வந்தால்
கண்களில் தானாக
கண்ணீர் வழிவதை
சத்தியமாக என்னால்
நம்பவேமுடியவில்லை !!!