Thursday, October 31, 2013

அன்பு நண்பரே,

                             
       இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் !


நாம் சிரித்தால் தீபாவளி

 
தீபாவளி என்றாலே,

கொண்டாட்ட நினைவு
உள்ளத்தினின்று
அரிப்பதுதான் !

கவலைத்தோலை
மனித நாகங்கள்
உரிப்பதுதான் !

பட்டாசுகளை
பரவசத்தோடு
எரிப்பதுதான் !

களிப்பு வியர்வை
உடம்பு முழுக்க
கரிப்பதுதான் !

மகிழ்ச்சி மதுவை
தொண்டைக்குழியில்
சரிப்பதுதான் !

உறவுகளோடு
உற்சாகமாய்
சிரிப்பதுதான் !

உண்டதையெல்லாம்
லேகியம் தின்று
செரிப்பதுதான் !

பட்ஜெட் துண்டால்
புருஷன் கழுத்தை
நெரிப்பதுதான் !

விருந்துண்டு
தாம்பூலம்
தரிப்பதுதான் !

விளக்கேற்ற
தாமரை நூலைத்
திரிப்பதுதான் !

வாங்கிய வெடிகளை
பங்குபோட்டுப்
பிரிப்பதுதான் !

ஏதோவொன்றை
எண்ணைச்சட்டியில்
பொரிப்பதுதான் !

நரகாசுரன்
நமக்குள்ளே
மரிப்பதுதான் !

ஒரு
சங்கல்பத்தை
நெஞ்சுக்குள்
வரிப்பதுதான் !

வண்ண வேடிக்கையை
வான் வெளியில்
விரிப்பதுதான் !

ஒன்றே ஒன்று
இறுதியாக !

தீபாவளிதான்
நாம் சிரித்தால் !
தீபாவளி அல்ல
நாம் மட்டும் சிரித்தால் !


Friday, October 25, 2013

விலை

அவளொரு
தாசி !
பாவ ஆற்றில்
இச்சை மீன்கள்
தின்னும்
பாசி !
ஆண்கள்
மட்டுந்தான்
அவளுக்கு
ராசி !

அவள் நடையில்
எப்போதுமிருக்கும் - ஒரு
பீடு !
இன்பம் தருவதில்
வானுலக ரம்பை
அவளுக்கு,
ஈடு !
ஒதுக்குப்புறமானது
அவள்,
வீடு !

அவள் மேனி,
ஒரு சிலையை
நிகர்க்கும் !
எப்படிப்பட்ட
பிரம்மச்சர்யத்தையும்
அவள் பார்வை
தகர்க்கும் !

எப்படிப்பார்த்தாலும்
அவள்,
அழகி !
போனால்
திரும்பிவரலாம்
இன்பத்தை
அவளிடம்
பழகி !

அவளிடம்,
துன்பம் நடுங்கும்
பருந்தைக்கண்ட
அரவு போல !
கவலை மறையும்
பகலவன் உதித்த
இரவு போல !
அவளிடம் சென்றால்,
அந்நாள் ஆகும்
நம்
இன்பக்கணக்கில் - ஒரு
வரவு போல !

அன்று.....................

அவள்,
குளித்து விட்டு
செயற்கையாக
வேர்த்திருந்தாள் !
மயக்கும் வித்தைகளை
மனதோடு
சேர்த்திருந்தாள் !
திறந்த வாசலில்
யாரையோ - எதிர்
பார்த்திருந்தாள் !

அவன்
வந்தான் !

அவன்,
தோற்றத்தில்
முப்பதை
முடித்திருந்தான் !
சொல்ல முடியாத
சோகத்தை
முகம் முழுக்க
வடித்திருந்தான் !

அவனைக்கண்டு
அவள்,
சிரித்தாள் !
பார்வையால்
அவனை
உரித்தாள் !
பெருமூச்சால்,
அந்த அறையையே
எரித்தாள் !

அவன்,
சட்டென எழுந்தான்
கட்டிலிலிருந்து !
எடுத்து விட்டான்
கவலைக் குழந்தையை
தன் மனமெனும்
தொட்டிலிலிருந்து !

அவனுக்கு,
இணையவில்லையாம்
இருமனம் !
ஆகவில்லையாம்
திருமணம் !

ஒவ்வொன்றாய்
முடித்தானாம்
கடமையை !
முடித்து விட்டு
உணர்ந்தானாம்
வாலிபம் தொலைத்த
மடமையை !

அவன்,
நாடி வரவில்லையாம்
அவளிடம்
சுகத்தை !
தடவ வேண்டுமாம்
அன்பு வார்த்தைகளால்
அவன்,
அகத்தை !
தொடக்கூட
மாட்டானாம்
அவன்,
அவள்,
நகத்தை !

அவள்,
அமைதியாக
அவனை
ஏறிட்டாள் !
பிறகு,
பின்வரும்
வார்த்தைகளால்
அவனை இரண்டாகக்
கூறிட்டாள் !

" ஐயா,.
ஒட்டிக்கொள்கிறேன்
உங்களிடம்
அட்டை போல !
அணியலாம்
நீங்கள் என்னை
சட்டை போல !
கிடக்கிறேன்
இரவெல்லாம் - மர
கட்டை போல !

உடம்புக்கு
மட்டுந்தான்
இங்கே,
விலை !
உங்கட்கு
உகந்தல்ல
என்,
நிலை !
இன்ப விருந்தென்றால்,
இதோ இருக்கிறது
இலை !

அனுதினமும்
உடம்பால்
மட்டுந்தான்
எனக்கு
சாவு !
மனதையும்
கொடுக்க மாட்டேன்
மற்றவனுக்குக்
காவு !
தர முடியாது,
உங்கள்
மனப்பசிக்கு
ஆறுதல்தோசை வார்க்க
மாவு !

கற்கவில்லை
நான் இன்னும்
மனதை விற்கும்
கலையை !
எதிர்பார்க்க வேண்டாம்
தெப்பக்குளத்தில்
கடல்,
அலையை !

மனது
மட்டுமாவது
என்னிடம்
எஞ்சட்டும் !
நரகத்தின் கதவுகள்,
இதற்காகவாவது
என்னைக்கண்டு - சற்று
அஞ்சட்டும் !

நீங்கள்
போகலாம்  !  "

இப்படியாக,
இறுதிவரை
அவள்,
அவனுக்கு
இணங்கவில்லை !
அதன் பிறகு
அவனை
அவள்,
வணங்கவில்லை !

அவனுக்கு
அந்தப்பணம்
திருப்பித்தரப்பட்டது !

அவனுக்கு
அந்தக்கதவு
சாத்தப்பட்டது !


Wednesday, October 23, 2013

சூழல் !


நான்,
நிறுத்தத்தில்
நின்று கொண்டிருந்தேன் !
எதையோ வாயில்
மென்று கொண்டிருந்தேன் !
போகும்
பெண்களையெல்லாம்
பார்வையால்
தின்று கொண்டிருந்தேன் !

திகைக்காதீர்கள் !
கேலியாய்
என்னைப் பற்றி
நகைக்காதீர்கள் !

அழகை ரசிப்பதில்
அப்படியொன்றும் இல்லை
பிழை !
பிறன்மனை நோக்கினும்,
புயலடித்தாவது பெய்யும்
மழை !

நான்,
வெந்ததைத் தின்று
விதிக்குக் காத்திருக்கும்
சாமானியன்தான் !
ரோமில் வாழ்ந்தால்
ரோமானியன்தான் !

ஆகவே,
அப்படித்தான் !

சங்கதி
அதுவல்ல !

அந்த
நாய்க்குட்டிகள் !

எங்கிருந்தோ அவை
ஓடிவந்தன !
நம்பிக்கையோடு
நிறுத்தத்தை,
நாடிவந்தன !
துள்ளல் இசையை
பிஞ்சுக் கால்களால்
பாடிவந்தன !

நாய் கண்டு
சிலர்,
புன்னகை
பூத்தார்கள் !
வேறு சிலர்,
பொறுமை
நீத்தார்கள் !
இன்னும் சிலர்,
அமைதி
காத்தார்கள் !

ஒரு நாயின் நிறம்
காவி !
ஓடியோடிக் குதித்தது - அது
தாவி !

இன்னொரு
நாய்க்கு,
கண்கள் மட்டும்
பச்சை !
கீழே உருண்டு
புரள்வதில்
அதற்கு அப்படியொரு
இச்சை !

மற்றொரு
நாய்க்கு,
ஆடிக்கொண்டேயிருந்தது
வால் !
நிற்கவில்லை
அதற்குத் தரையினில்
கால் !

இன்னுமொரு நாய்
நிற்போரின்
காலில் போய்
ஈசியது !
அவர்களோடு,
அது ஏதோ
பேசியது !

நான்,
அக்காட்சி விருந்தை
கண்களால்
புசிக்க ஆரம்பித்தேன் !
அந்தச் செய்கைகளை
மெய்மறந்து
ரசிக்க ஆரம்பித்தேன் !
அவற்றின்
உலகத்தில்,
கொஞ்ச நேரம்
வசிக்க ஆரம்பித்தேன் !

என்னை உணர்ந்தேன்
மனிதனாக !
ஆகிக் கொண்டிருந்தேன்
புனிதனாக !

அப்போது,
எங்கிருந்தோ
அவன் வந்தான் !
தன்,
அடிவயிற்றில் இருந்து
காறி ............
ஓங்கித் தரையினில்
துப்பி ..........
தன்
பிரம்மகடமையை
நிறைவேற்றினான் !

பொங்கிவந்த புனிதம்
பட்டெனக்
குறைந்தது !
ஒரு உலகம்
என்னிலிருந்து
மறைந்தது !
ஒரு பெரியகை
ஓங்கி என்னை
அறைந்தது !

இப்போது
அந்த நாய்க்குட்டிகளை
சிலர்,
சூ சூ  வென்று
விரட்டினர் !
கல்லெடுத்து
அடிக்கப் போவதாய்
மிரட்டினர் !
ஏதோ ஒரு
கோபத்தை
அவைகட்கெதிராய்த்
திரட்டினர் !

அதன் பிறகு
அவை
ஓடிவிட்டன !

இப்போது,
மீண்டும் நான் ............

நிறுத்தத்தில்
நின்று கொண்டிருந்தேன் !
எதையோ வாயில்
மென்று கொண்டிருந்தேன் !
போகும்
பெண்களையெல்லாம்
பார்வையால்
தின்று கொண்டிருந்தேன் !


சூழல் !

Saturday, October 19, 2013

பிச்சைக்காரன்

அவன்,
கந்தலான
கச்சைக்காரன் !
சோற்றின் மீது
இச்சைக்காரன் !
சுருங்கச் சொன்னால்
பிச்சைக்காரன் !

அவன்,
ஒவ்வொரு வேளையும்
உணவுக்காக
வெம்புகிறான் !
எப்படியும்
மகேசன்
படியளப்பானென்று
நம்புகிறான் !

அவனுக்கு,
வாழ்வென்பது
காற்றிலாடும்
ஊசல்தான் !
வயிற்றுக்கும்
அவனுக்கும்
அனுதினமும்
பூசல்தான் !
அவன்,
வசிப்பிடம்
ஒரு தேநீர்க்கடை
வாசல்தான் !

அவன்,
ஒரு நாளும்
குளித்ததில்லை !
சோறுண்ண
யாரும் அவனை
விளித்ததில்லை !
வயிறார
அவனும் உண்டு
களித்ததில்லை !.

உடம்பில்
இல்லை
முடம் !
இன்னும்
இருக்கிறது
திடம் !
ஆனாலும்,
உழைப்பு கூடாதென்று
அவனுக்கு ஒரு
அடம் !

தொடக்கத்தில்
அவனும்,
காண்போரிடமெல்லாம்
ஒரு வேலையை
இரந்து பார்த்தான் !
பரிதாபத்தை
பக்குவமாய்க்
கரந்து பார்த்தான் !
கண்ணீரை
கணக்கில்லாமல்
சுரந்து பார்த்தான் !

ஒன்றும்
நடக்கவில்லை !
அதிர்ஷ்ட தேவதை,
அவனைக்
கடக்கவில்லை !
பொங்கியெழுந்த
பிச்சை வேட்கையை
அவனும் பெரிதாய்
அடக்கவில்லை !

உடனே
ஏந்தினான்
கையை !
ஏதோ
நிரப்பினான்
பையை !
ஓரளவு
வளர்த்தான்
மெய்யை !.

எதற்குக்
கிளற வேண்டும்
அதையெல்லாம் !
தேவையில்லை
நடந்து முடிந்த
கதையெல்லாம் !

அது ஒரு
பகல் !
தகித்தது
சூரிய
அகல் !
ஒவ்வொருவரின்
காலடியிலும்
குட்டியாய்
இருளின்
நகல் !

ஓய்வாய்
சற்று அமர
நிழற்குடையொன்றை
நாடிப்போனான்
நமது கதாநாயகன் !

யாரும்
அவனுக்கு
சிவப்புக் கம்பளம்
விரிக்கவில்லை !
காசு கேட்டு
யாரையும் அவன்
அரிக்கவில்லை !
காரணம்
காலையில் உண்டது
கொஞ்சம்
செரிக்கவில்லை !

ஓரிடத்தில்
அமர்ந்தான் !

சுற்றிலும்
பார்த்தான் !

வாங்கித்தாராத
ஏதோ ஒன்றிற்காக
அழும்
ஒரு சிறுவன் !

எதற்கோ
காதலியிடம்
கெஞ்சும்
ஒரு காதலன் !

போகும்
பேருந்தையெல்லாம்
ஏக்கமாய்ப்
பார்க்கும்
படிக்காத
ஒரு கிழவி !

அங்கிருந்த
முதலாளிக்கு
இங்கிருந்தே
அடிபணியும்
ஒரு பணியாளன் !

வாங்கிய கடனுக்கு
சமாதானம் சொல்லும்
ஒரு நடுத்தரன் !

இந்த ரீதியில்
இன்னும் சிலர் ............

நம்மாள்
இப்போது
ஒரு
பீடியைப்
பற்ற வைத்தான் !

புகையை,
ஆழ இழுத்து
நிதானமாய் விட்டான் !

சுகமாகத்தான்
இருந்தது !!!

Thursday, October 17, 2013


இன்னும்
விடியவில்லை !
உறக்கம்
கலையவில்லை !
இன்னும் கொஞ்சம்
உறங்குவோம் !

விடிந்துவிட்டது !
உறக்கம்
கலையவில்லை !
இன்னும் கொஞ்சம்
உறங்குவோம் !

உறக்கம்,
கலைந்து விட்டது  !
யாராவது எழுப்பட்டும் !
இன்னும் கொஞ்சம்
உறங்குவோம் !

எழுப்பியும் விட்டார்கள் !
பக்கத்தில் இருப்பவன்
எழட்டுமே !
இன்னும் கொஞ்சம்
உறங்குவோம் !


=================================================

நாய் குரைத்தது !
நாய்கள் குரைத்தன !
மனிதன் குரைத்தான் !
மனிதர்கள்,
வேடிக்கை பார்த்தனர் !

================================================

நீ
சுதந்திரமானவன்  !
தேர்தெடுக்க
முழு உரிமை உள்ளவன் !
ஜனநாயகத்தின்
பிரதிநிதி !
சொல் !
தூக்கா ?
விஷமா ?
கழுமரமா ?
மலையுச்சியா  ?

=================================================

எல்லா
நிர்பந்தமும்
பழக்கமாகி விடுவதில்லை !
எல்லா
பழக்கமும்
நிர்பந்தத்தில் இருந்து
வருவதில்லை !

==================================================

பெஞ்சில்
தலைசாய்க்கிறான்
ஒரு மாணவன் !
வடியத்தொடங்குகிறது
உறக்கம் !

==================================================

மறுபடியும்  ஒரு
சந்தர்ப்பத்தில்
மறுபடியும்
அத்தவறைச் செய்து
மறுபடியும்  நாம்
சராசரிகளாகின்றோம் !

===================================================

                                                                          

Friday, October 11, 2013

அகில உலக காதலன்களுக்கு இக்கவிதை அர்ப்பணம்


அன்பே,

சாகசங்களால்
உன்னை வியக்க வைக்க
என்னால் முடியாது !

அபூர்வப் பரிசுதந்து
ஆச்சர்யப்படுத்த
என்னால் முடியாது !

சுண்டுவிரல் படாமல்
கண்ணியமாய்க்
காதலிக்க
என்னால் முடியாது !

பிற ஆண்களுடன் 
நீ பழகுவதை
பெருந்தன்மையோடு
ஏற்றுக்கொள்ள
என்னால் முடியாது !

உன்
விரல் நகங்களுக்கும்
கவிதை பாட
என்னால் முடியாது !

சொடக்குப் போட்டு
சொர்க்கத்தை வரவழைக்க
என்னால் முடியாது !

எப்போதும்
உன்னைச் சிரிக்க வைக்க
என்னால் முடியாது !

ஒரே பாடலில்
பணக்காரனாக
என்னால் முடியாது !

நுனி நாக்கில்
ஆங்கிலம் பேச
என்னால் முடியாது !

நீ வாசிக்கும்
புத்தகங்களின்
ரசிகனாக
என்னால் முடியாது !

ஆனால் ......

உன் தந்தைக்கு
ஒரு ஹாய் சொல்ல
என்னால் முடியும் !

என் அம்மாவை
உன் தோழியாக்க
என்னால் முடியும் !

நம் காதலின்
முக்கிய தினங்களில்
உனக்கொரு வாழ்த்துக்கூற
என்னால் முடியும் !

கொஞ்சம் கொஞ்சமாய்
 ராமனாய் மாற
என்னால் முடியும் !

சிறிது சிறிதாய்
மதுவை மறக்க
என்னால் முடியும் !

ஒரு நாளைக்கு
ஒரு சிகெரெட்
கண்டிப்பாய் முடியும் !

உன்
தாமத வருகைக்கு
புன்னகை புரிய
என்னால் முடியும் !

நம்
எல்லா சண்டைக்கும்
முதலில் சமாதானமாக
என்னால் முடியும் !

உன்
பரீட்சைக்கு
அலாரம் வைத்தெழ
என்னால் முடியும் !

உறக்கம் வராத
உன் இரவுகளில்
உன்னோடு கதை பேச
என்னால் முடியும் !

உன்
துன்பங்களுக்குப்
பிரார்த்தனை செய்ய
என்னால் முடியும் !

ஒரு சொட்டுக்
கண்ணீரளவு
உன்னை நெகிழவைக்க
என்னால் முடியும் !

ஒரு வாய் சோற்றையும்
உன்னோடு பகிர்ந்து கொள்ள
என்னால் முடியும் !

நீ பறப்பதற்கு
சிறகுகள் தரமுடியுமா
தெரியவில்லை !
உன்னோடு கைகோர்த்து
சாலையில் நடக்க
என்னால் முடியும் !

நீ
உறங்குவதற்கு
என் மடி தந்து
உன் தலை கோத
என்னால் முடியும் !

                                                                            - குருச்சந்திரன்

Wednesday, October 9, 2013

குப்பா ..............
குடித்து விட்டு
தெருவில் கிடக்கும்
குப்பா !
நினைவிருக்கிறதா
நீ
மூன்று பிள்ளைகளுக்கு
அப்பா !

அவிழ்ந்து
கிடக்கிறது உன்
வேட்டி !
இன்னுமா
எடுக்கிறாய்
உறக்கத்தைப்
பேட்டி ?

புலர்ந்து விட்டது
காலை !
நிரம்பி விட்டது
சாலை !
இன்னும் உனக்கு
புழுதியில்  என்ன
வேலை ?

குப்பா ..........
உன் தினப்படி
சங்கதியென்ன ?

உழைத்தே
உன் முதுகை நீ
ஓடிக்கிறாய் !
காசு கேட்கும்
மனைவியை
அடிக்கிறாய் !
மாலை வந்ததும்
குடிக்கிறாய் !
இப்படியே
ஒவ்வொரு நாளையும்
முடிக்கிறாய் !

குடி எனும்
கூர்வாளால்
உன் குடும்பத்தோரணம்
கிழிகிறது !
குடித்துக் குடித்தே
உன் உடம்பு கெட்டு
அழிகிறது !
உன் பொழுதெல்லாம்
இப்படியே நாளும்
கழிகிறது !

இன்னும் காயவில்லை
உன் வியர்வையின்
திவலை !
உனக்கென்ன
அப்படியொரு
கவலை ?
இடிக்கத்தான் வேண்டுமா
உரலில் இட்டு
அவலை ?

குப்பா ...........
நீ
கட்டியிருக்கிறாய்
ஒருத்திக்குத்
தாலி !
உன்
வாழ்வுப்பயிருக்கு
அதுதானே
வேலி !
இப்படியே குடித்தால்
வெகு விரைவில்
உன் ஆரோக்கியம்
காலி !
போதை தருவதில்
மனைவியைத் தவிர
மற்றதெல்லாம்
போலி !

குப்பா .........
உழைப்பைக்
காரணங்காட்டி
இங்கே நீ
குடித்தால் .....
ஓராயிரம்
காரணம் கூறி
உன் மனைவியும்
அங்கே குடிக்கலாம் !

குப்பா ....................
இனி உன் கால்கள்
தேர்ந்தெடுக்கட்டும்
வீடு செல்லும்
வீதியை !
இனி காட்டாதே
குடும்பத்திற்கு
பசி எனும்
பீதியை !
நாளும் கடைபிடி,
சம்பாதித்ததை
சம்சாரத்திடம் தரும்
நீதியை !
வாங்கிக் கொள்,,,
செலவழித்து
அவள் தரும்
மீதியை !
அப்புறம் அறிவாய்
வாழ்வில்
வசந்தம் வரும்
சேதியை !

குப்பா .........
ஆயிரம் பேர்
சொருகலாம்
அறிவுரை எனும்
கத்தியை !
நீ
நினைத்தாலொழிய
மாற்ற முடியாது
யாரும் உன்
புத்தியை !.

நீயாகத்தான்
திருந்த வேண்டும் !
தவறை நினைத்து
வருந்த வேண்டும் !

அதற்குள்
வந்து விடும்
முதுமை !
மலராது
உன் வாழ்வில்
புதுமை !

ஆனால் ...........

ஒரே
ஒரு வேண்டுகோள் !

தொடக்கக்கல்வி
வரையிலாவது
உன் பிள்ளைகள்
படிக்கட்டும் !

நாளை,
உன்னைப் போலவே
கூலி பெற்று
குடிக்கப் போகும்
உன் பிள்ளைகளில்
ஒருவனாவது
இதைப் படித்துத்
திருந்தட்டும் !!!!!

Monday, October 7, 2013

ஒரு பழைய புகைப்படம் !


அது ஒரு
பழைய புகைப்படம் !

ஒரு
விடுமுறை நாளில்
பீரோவைக் குடைந்த போது
தற்செயலாகக் கிடைத்தது !

புன்னகையுடன்
சிலர் !

மௌனமாக 
சிலர் !

ப்ளாஷ் விழும்போது
இமை மூடிவிட்ட
 சிலர் !

அழுகையோ சிரிப்போ 
அடக்கிக் கொண்ட
சிலர் !

தலைக்கு மேல்
ஆங்கில v
அவசரமாய்
முளைக்கப் பெற்ற
சிலர்.........................
......... !

சிலர்
கண்ணாடி
அணிந்திருக்கவில்லை !

சிலர்
ஒல்லியாக இருந்தனர் !

சிலர் தொப்பை
போட்டிருக்கவில்லை !

சிலருக்கு
தலை நிறைய
முடியிருந்தது !

எல்லா முகமும்
நினைவிருக்கிறது !
எந்தப் பெயரும்
மறக்கவில்லை !

ஒரு சிலர்
ஒரு சிலரோடு
சண்டை போட்டிருந்தனர் !

ஒரு சிலரை
ஒரு சிலர்
காதலித்திருந்தனர் !

இணை பிரியாத
நண்பர்களாக
சிலர் இருந்தனர் !

சிலரால்
வகுப்பே கலகலப்பாகும் !

சிலர்
யாருடனும் பேசாத
உம்மணாமூஞ்சி !

சிலர்
இப்போது
தொடர்பில் இல்லை !

சிலரது
தொடர்புகள்
கிடைக்கவேயில்லை !

சிலர்
முக நூலில்
முகம் காட்டுகிறார்கள் !

சிலர்
அவ்வப்போது
அலைபேசியில் !

பெரும்பாலோருக்கு
திருமணம்
முடிந்து விட்டது !
முடிந்திருக்கும் !

ஒரு
அலுமினி விழாவில்
சிலர்
குடும்பத்தோடு 
சந்தித்துக் கொண்டார்களாம் !

சிலர்
இன்னும் 
அப்படியேயிருப்பார்கள் !
சிலர்
கட்டாயம்
மாறியிருப்பார்கள் !

ஒரு
நன்னாள் தேர்ந்தெடுத்து,
அனைவரும் சந்தித்து,
அதே வகுப்பறையில்,
அதே ஆசிரியரின்,
ஒரு பழைய பாடத்தைத்
திரும்பவும் கேட்கவேண்டும் !

வகுப்பிற்குத்
தாமதமாக
வருபவர்கள்,
இப்போதும்
அப்படியே வந்து 
செயற்கையாகத் 
திட்டு வாங்கட்டும் !

சண்டை போட்டிருந்தவர்கள்
கைகுலுக்கிக் கொள்ளலாம் !

உம்மணாமூஞ்சிகளுக்கு
தண்டனை
பாட்டு பாடுவது !

காதலித்தவர்கள்
காதல்கடிதம் எழுதிவந்து
கூட்டத்தின் முன்
வாசித்துக் காட்ட
கலாச்சாரம் அனுமதிக்காதோ ?

அவரவர்
கொண்டு வந்த
மதிய உணவை
இலைக்கொரு
கைப்பிடி வைத்து
ஒன்றாக அமர்ந்து
சாப்பிடத் தொடங்கலாம் !

கூட்டத்தில் பகிர
ஒவ்வொருவருக்கும்
தலா
ஒரு மறக்க முடியாத நிகழ்வு !

அவகாசமிருந்தால்
அணிபிரித்து
குட்டியாய் ஒரு
பட்டிமன்றம் !

பிரிவதற்கு முன்,
கடைசியாக
அந்தப் பழைய புகைப்படத்தின்
அதே வரிசையில்
அனைவரும் நின்று
மீண்டுமொரு
க்ளிக் !!! 

Friday, October 4, 2013

கள்ளம்
கயமை  என்ற
எரிபொருளால்
உடல்
நனைந்து விட்டது !
காமத் தீ,
அங்கே எரிகிறது !
குளிர்காய்வதற்கு முன்,
கொஞ்சம் யோசிக்கலாமே !

நெறி கொண்டு
பயணித்தால்தான்
அது நதி !
நெறி பிறழ்ந்து
பயணித்தால்,
அது வெள்ளம் !

உறக்கம்
கண்ணில்
இருக்கும் வரை
இருட்டு
சுகமானதுதான் !

ஏதோ ஒரு மனதை
வெட்டிக்
கூறு போட்டுத்தான்,
மாமிசம்
உண்ண வேண்டுமா ?

பள்ளத்தில் விழும்
அனைவருக்கும்,
கிளைகள்
கிடைத்துவிடுவதில்லை !

காமம் என்பது
புண் !
மருந்திடலாமா ?
சொறியலாமா ?
முடிவு நம்மிடம் !

எந்த ஒரு
தப்புக்கும்
ஒருநொடி அவகாசம்,
குறைந்தபட்சம்
இருக்கிறது !

உள்ளத்தில்
பள்ளத்தைத் தோண்டி - அதில்
கள்ளத்தைப்
புதைத்து வைத்தாலும்,
எவனும், எவளும்
தப்ப முடியாது !
சூனியத்தின் வேர்கள்
என்றாவது
கழுத்தை
நெரிக்கத்தான் நெரிக்கும் !

மனதில் கள்ளத்தனம்
எட்டிப் பார்க்கும்
போதெல்லாம்,
சின்னச் சின்ன
தண்டனைகள்
உடனே
கிடைக்கப் பெறுபவர்கள்
பாக்கியசாலிகள் !

' ஒரே இணை ' என்ற
அமைப்பு தரும்
சலிப்பில் தான்
கள்ளத்தனம்
பிறக்கிறது
என்பவர்களுக்காக.................

வெறும்
பசியைத்
தணித்துக் கொள்வது
மட்டுமல்ல
தாம்பத்யம் !
அது,
ஒருவருக்காக
மற்றொருவர்
சுவாசிப்பது !
சுவாசம், 
சலிக்குமா என்ன ?

Wednesday, October 2, 2013

அபார்ட்மெண்ட் சிறுவனே ...................
அடே ! சிறுவா !

உன்னைத்தான் !

இங்கே பார் !

கணினி விளையாட்டை
கணநேரம் ஒத்திவை !

கேள் !

விரிந்திருகிறது
வீதி ! 
அதில்,
விளையாடுவது தானே
நீதி ?

கட்டம் கட்டு,
குறுக்கே கோடிடு !
ஆடலாம் சடுகுடு !

கைக்குட்டை எடு ,
கண்ணைக் கட்டு !
ஆடு கண்ணாமூச்சி !

ஓடித்தொடுதல்
ஆடியதுண்டா ?

ஒற்றைக் காலிலும்
ஓடித் தொடலாம் !
அதற்குப் பெயர்தான்
நொண்டி !
ஆரோக்கியக் காசுகள்
சேர்ப்பதில்,
அதுவொரு
அற்புத
உண்டி !

அப்புறம்
இன்னோர் விளையாட்டு !

ஒருகால் மடக்கிக்
குந்து !
தேவையில்லை
பந்து !
குச்சியால் குச்சியை
உந்து !
எம்பியெழுவதை,
' கில்லித்தட்டு '   -  என்றே நீ
சொல்லித்தட்டு !

 நிறம் கூறித்
துரத்தும் ஆட்டம்
பரிச்சையமுண்டா ?

திருடன் போலீஸ்
தெரியுமா ?

நூல் பிடித்தோடி
பட்டம் விட்டதில்லையா ?

உத்திரத்தில்
கயிறு கட்டி
தூரி.............?

என்னடா உனக்கு
எதுவுமே தெரியவில்லை !

மேற்கண்ட
விளையாட்டில்
வலிமையாகும் உன்
தசை !
வெறும்
கணினியைத் தட்டுவதில்
விரலுக்கு மட்டுமே
விசை !

யாருமில்லையா
வீட்டில் ?

ஓ !

இரவுப்பணி முடித்து
இன்னும் உறங்கும்
தந்தை !

அழகுநிலையம்
சென்று விட்ட
அம்மா !

அலைபேசியில்
மூழ்கிவிட்ட
அக்கா !

சிறப்பு !

கிடக்கிறது
கழுதை !
நான் நீக்குகிறேன்
உன் தனிமையெனும்
பழுதை !

வா வெளியே !
பிரபஞ்சம் பார் !
வெளியை உணர் !

இது,
இறைவனின்
தானம் !
இயற்கையின்
கானம் !
முடிவில்லாது .........
விரிந்திருக்கும்
வானம் !

வா ! வா !

அடடே !

என்ன  இது ?

படியிறங்கியதும்
வந்து விட்டதே
சாலை ?
இல்லையா
உன் வீட்டின் முன்
ஒரு
சோலை ?

விளையாட
இல்லை
திடல் !
தொலைவிலுள்ளது
கடல் !
என்னாவது உன்
உடல் ?

நெடியேறிச்
சிவக்கிறது
நாசி !
நுரையீரல்
துளைக்கிறது
தூசி !
உனக்கில்லை,
வீதியில்
விளையாடும்
ஆசி !

அடுக்கு மாடி,
அபார்ட்மெண்ட் சிறுவனே !

விரைந்தோடு
வீட்டுக்குள் !

விட்டதிலிருந்து
விளையாட்டைத் தொடர் !

கணினி காத்திருக்கிறது !!!