Saturday, May 28, 2011

காதல் தருணங்கள்
அந்தப் பெயரை


அதற்குமுன்பு பிடிக்காமலிருந்து ,


அவள் பெயர் அதுதான் என்றதும்


அதுமட்டுமே இப்போது


அதிகமாய்ப் பிடிக்கிறது !
அவளால் இடறப்பட்டதில் ,


இப்போதெல்லாம் இதயம்


இடதுபக்கம் இருப்பதே


சிறிது சந்தேகமாய்த்தான் இருக்கிறது !
அது என்னமோ தெரியவில்லை


அவள் பெயர் வைக்கப்பட்ட


எந்தக்கடைக்குமே எளிதில் நான்


வாடிக்கையாகி விடுவதுதான்


வேடிக்கையாக இருக்கிறது !
சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள் !


அவளும் பார்க்கிறாள் என்பதால்


இப்போதெல்லாம்


தொலைக்காட்சித் தொடர்கள்


அத்தனையும் எனக்கு


அப்படியே அத்துபடி !
இப்போதெல்லாம்


பிச்சைக்காரர்களுக்கு மறுக்க


மனமே வருவதில்லை !
அவள் சொன்னபடியே


அந்த ஆரஞ்சு நிற சட்டையில்


நான் அழகாய்த்தான் இருக்கிறேன் !
பக்கத்துவீட்டுச் சிறுமி


பரிட்சையில் தேறவேண்டுமென்று


பக்கம் பக்கமாய் ஸ்ரீ ராமஜயம் எழுத


அவளால் எப்படித்தான் முடிகிறதோ ?
அவளுடன் அமர்ந்து பயணித்ததில் ,


நடத்துனர் தரவேண்டிய


நான்கு ரூபாய் சில்லறையை


நானெப்படி மறந்தேன் ?
உங்களுக்கு ஒன்று தெரியுமா ?


வெள்ளிக் கிழமையென்றால்


அம்மன் கோவிலுக்குப் போகவேண்டுமாம் !


சனிக்கிழமை என்றால்


ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போகவேண்டுமாம் !


ஆம் ! அவள் தான் சொன்னாள் !
மது அருந்துவது தீங்கு என்று


எனது நண்பர்களுக்கு


நான் உபதேசம் செய்ய ஆரம்பித்திருப்பதில்


ஆச்சர்யம் இருக்கிறதா என்ன ?
ஏதோ ஏகாதசியாம் !


அவள் விரதமிருக்கிறாள் என்று


நானும் வீட்டில் விரதமிருந்ததை


அம்மா ஆயிரம் முறையாவது


அண்டை வீட்டில் சொல்லியிருப்பாள் !
நேற்று அவளுக்கும் எனக்கும்


ஒரு விஷயத்தில் சண்டை !


மழைக்கு முன்பு


வானவில் வரும் என்கிறாள் அவள் !


மழைக்குப் பின்புதான்


வானவில் வரும் என்கிறேன் நான் !


நீங்களே சொல்லுங்கள்


வானவில் எப்போதுவரும் ?
அவளோடு நடக்கும்போது


எதிரில் உலக அழகியே வந்தாலும்


ஏறெடுத்தும் பார்க்க


ஏனோ தோன்றுவதே இல்லை !
கடைசியில் ,


காதலர்கள் பிரிந்து விடுவது போன்ற


ஒரு திரைப்படத்திற்கு


நான் கூட்டிச் சென்றேனென்று


இரண்டு வாரங்கள் என்னோடு


பேசாமல் இருந்தவள் அவள் !
அப்புறம் ஒரு


முக்கியமான விஷயம் !


பட்டாம்பூச்சியை ,


யார் முதலில் பிடிப்பதென்று


நேற்று பூங்காவில் ,


எனக்கும் அவளுக்கும்


நடந்த போட்டியில்


வென்றது அவள்தான் தெரியுமா !!!


Thursday, May 26, 2011

பழகிப் புளித்த தயிர்
உருட்டிப் பார்த்தேன்


விழவில்லையடி தாயம் !


மருந்தில்லாமல்


ஆறவில்லை மனக் காயம் !
முடவன் ,


கொம்புத்தேனுக்குப் பட்ட ஆசை !


வேதனையில் ,


நரைத்தே போய் விட்ட மீசை !
நெஞ்சுக்கு பாரமடி


இந்த மூச்சு !


மனதில் விழுந்ததோ


வெட்டரிவாள் வீச்சு !
இனி நான்


படிக்க நினைப்பது ராமாயணம் !


முடிக்க நினைப்பது ,


உன் பெயரின் பாராயணம் !
இதயத்தைக் கொடுத்தேனே


உனக்கு யாசகம் !


அதன் துடிப்பை நிறுத்தியது


உனது ஒரு வாசகம் !
மறந்து விடு என்றதற்கு ,


இறந்து விடு என்றிருக்கலாமே - என்


இறந்த காலக் காதலியே !
நீ ,


தூரத்தில் தெரிந்த


கோணல் நீர் !


கிட்டே வந்ததும் ,


காணாமல் போன


கானல் நீர் !
நான் ,


வடையைத் தொலைத்த


காக்கை !


உடையில் நடமாடும்


யாக்கை !
"ஊற்றிப்பார்த்தேன் "


அடங்கவில்லையடி புகைச்சல் !


இது ,


கையில்லாதவனுக்கு ,


முதுகில் வந்த நமைச்சல் !
மறந்து போனது


குயிலோசை கேட்கும்


நம் பூங்கா !


உன் குரலோசை இன்றி


என் இரவுகள் இனி தூங்கா !
ஆடித் தோற்றேன்


காதலின் சதுரங்கம் !


ஆடப் போகிறேன்


இனியென்றும் 'மது' ரங்கம் !
போதுமடி , இனி எதற்கு


உடம்பில் இந்த உயிர் !


சாவென்பது , இனி எனக்கு


பழகிப் புளித்த தயிர் !


பழகிப் புளித்த தயிர் !!!

Saturday, May 21, 2011

மனிதம்
ஏதாவது ஒரு


ஆசீர்வதிக்கப்பட்ட காலையில்


நீங்களாக எழுந்து


தேநீர் தயாரித்து விட்டு


தூங்கிக் கொண்டிருக்கும் உங்கள்


துணைவியைத்


தட்டி எழுப்பி இருக்கிறீர்களா ?
ஏதாவது ஒரு விடுமுறை நாளில்


தொலைக்காட்சியைத் துறந்து விட்டு ,


தாயின் மடியில்


தலைசாய்த்துப் பேசியபடியே


தூங்கிப் போயிருக்கிறீர்களா ?
காதலியோடு நடக்கும்போது


அழகான எவளாவது


எதிரே வந்தால் ,


கண்ணியமாகத் தலைகுனித்து


கடந்து சென்றிருக்கிறீர்களா ?


அது போலவே ,


காதலியோடு நடக்கும்போது


அழகான எவனாவது


எதிரே வந்தால் ,


பெருந்தன்மையோடு உங்கள் பார்வையை


வேறு பக்கம் திருப்பியிருக்கிறீர்களா ?
உங்களுக்குக் கீழ் பணிபுரியும்


உங்கள் ஊழியனோடு


மதிய உணவு உண்டபடியே


மனம் விட்டுப் பேசியிருக்கிறீர்களா ?
பக்கத்து வீட்டுத் தோட்டத்தின்


வாடிய ரோஜாச்செடிக்காக


மாலையில் ,


மழை வரவேண்டுமென்று


வருண பகவானிடம்


விண்ணப்பம் செய்திருக்கிறீர்களா ?
பேருந்து நிறுத்தத்தில்


அம்மாவோடு வந்த சிறுவனைக் கண்டு


பிடித்துக் கொண்டிருந்த சிகரெட்டைப்


பாதியில் அணைத்து விட்டுப்


புன்னகை செய்திருக்கிறீர்களா ?
அது போல ,
பேருந்திலோ புகைவண்டியிலோ


ஏதோ ஒரு கணவன் மனைவிக்காக


உங்களது ஜன்னலோர இருக்கையை


விருப்பத்தோடு


விட்டுக் கொடுத்திருக்கிறீர்களா ?
கல்லூரியில் படிக்கும்


உங்கள் மகளின் அறையில் ,


திறந்திருக்கும் நாட்குறிப்பைப்


படித்துப் பார்க்காமல்


நாகரீகத்தோடு மூடிவைத்து


நகர்ந்து போயிருக்கிறீர்களா ?
வீட்டுப்பாடம் செய்யாத


உங்கள் மாணவனைத்


தட்டிக்கொடுத்து அமரவைத்து - பிறகு


தனியே அழைத்து


காரணம் கேட்டிருக்கிறீர்களா ?
அழகான உங்கள் மனைவின்


அலைபேசியை உபயோகிக்கவும்


அவளிடம் அனுமதி கேட்டிருக்கிறீர்களா ?
போன மாதம் வரவேண்டிய


வாடகை பாக்கியை


கோபமாகக் கேட்கப்போய் - அங்கு


விருந்தினர் வருகை கண்டு


எதுவுமே கேட்காமல்


வெறுமனே திரும்பியிருக்கிறீர்களா ?
பண்டிகை நாளில் நீங்கள்


பட்டாசு வெடிப்பதையே


பாவமாகப் பார்த்துக் கொண்டிருந்த


பக்கத்து வீட்டு ஏழைச்சிறுமியைப்


பக்கத்தில் அழைத்து


பட்டாசு பலகாரங்களோடு கூடவே சிறிது


புன்னகையையும் கொடுத்திருக்கிறீர்களா ?
ஏதோ ஒரு உணவகத்தில்


எடுப்புச் சாப்பாடு வாங்கிக்கொண்டு


எதிரே எவனோ வந்தானென்று


துப்ப வந்த எச்சிலைத்


துப்பாமல் தவிர்த்திருக்கிறீர்களா ?
பக்கத்து நாட்டில் ,


பூகம்பத்தில் பலர் மாண்டதற்கு ,


அன்றைக்குத் திரைப்படம்


பார்க்கும் திட்டத்தைக் கைவிட்டு


கோவிலுக்குப் போய்


கடவுளின் முன்பு


கண்மூடி நின்றிருக்கிறீர்களா ?
Friday, May 20, 2011

யாருமே இல்லாத கடையில் ..............


யாருமே இல்லாத கடையில்


யாருக்காக நான்


தேநீர் ஆற்றுகிறேன் ?
வார்த்தைகளில் ,


நான் நிகழ்த்திய


சித்து விளையாட்டை ,


எண்ணங்களில்


ஊறித்திளைத்த


பித்து விளையாட்டை


முடிவுக்குக் கொண்டுவந்து


மூடுவிழா நடத்த


முஹூர்த்த நாள் பார்த்துக்கொண்டிருக்கிறேன் !
எனக்கும் ஒரு


ரசிகன் இருக்கிறான் .


யார் என்கிறீர்களா ?


நான் எழுதியதை


நானே படிக்கும்


நான் தான் அவன் !
காதலிக்காமலே


காதலை எழுதி ,


கானல் நீரில்


மீன் பிடிக்கக் கற்றேன் !


சக மனிதனின்


சூழல் திருடி


ஊழல் செய்யும் வித்தையில்


முதுகலைப் பட்டம் பெற்றேன் !
அமிலத்தைத் தரம்


பார்க்கையிலும்


அழகுணர்ச்சியின் கரம் தானே


ஓங்கியிருந்தது !


ரசாயனங்களின் நடுவே


ரசனைகள் ,


ரகசியக் கூட்டம் போட்டது தான் குற்றமோ ?
பணிநேரப்


புள்ளிவிவரங்களுக்கு நடுவே


கவியின் மஞ்சத்தில்


பள்ளி கொள்வதென்பது


கட்டாந்தரையில்


கர்ணமடிப்பதை விடக்


கடூரமானது !
கண்ணாடிக் குடுவைகளை


நிரப்பும் இடத்தில் ,


கற்பனைக் குடுவை நிரப்பி


நான் ஊற்றி வளர்த்த


கவிதைப் பயிர்


அறுவடைக்கு ஆளில்லாமல்


அழுகிக் கொண்டிருக்கிறது !


தன்னிரக்கம் தாங்காமல்


தனியே நான்


அழுது கொண்டிருக்கிறேன் !
காதலி இருந்தாலாவது


கவிதை என்று சொல்லி


கண்டதைக் கிறுக்கினாலும்


கலக்கி விட்டாயென்று ,


கன்னம் தட்டிக் குதூகலித்திருப்பாள் !


கஷ்ட காலம் !


அதற்கும் வழியில்லை !
அருமை என்று


ஆரம்பத்தில் சிலாகித்த


அலுவலக நண்பர்கள் இப்போது


அருகே வரவே அஞ்சுகிறார்கள் !


கிட்டே போனால்


கவிதை சொல்லிக்


கலங்கடிப்பான் கடன்காரன் என்ற


கழிவிரக்கம் காரணமாய் இருக்கலாம் !
பதிலே வராத


பத்திரிகைகளுக்கு


பேனா பிடிப்பதற்கு ,


சுவற்றில் பந்தடிப்பதே


பரவாயில்லை என்று


சும்மாயிருந்து விட்டேன் !
வலைப்பூ தோட்டத்தில் எனது


கலைப்பூ பூத்து


காத்து காத்து


கருகிப் போனது !
காதலில்லாமல்


காதல் கொண்டு ,


கோபமில்லாமல்


கோபம் கொண்டு ,


உணர்ச்சிகளுக்கு


வார்த்தைகளால்


வடிவம் கொடுத்ததற்கு ,


பைத்தியகாரன் என்ற


பட்டம் தான்


பரிசாகக் கிடைத்தது !
ஏட்டில் வடித்ததைப்


படிக்க ஆளில்லை என்று


போன நூற்றாண்டில்


பாரதியும் இப்படித்தான்


புலம்பிக் கொண்டிருந்தானாம் !


அதற்காக பாரதியோடு


என்னை நானே ஒப்பிட்டால்


பாரதத்தில் ,


தீக்குளிக்கத் தயாராகும்


பாமரர்களின் எண்ணிக்கை


பலகோடியைத் தாண்டிவிடும் !!!
Thursday, May 19, 2011

குறிப்பு : எனது கல்லூரித்தோழி சங்கீதாவின் திருமணத்திற்கு என்னால் இயன்ற அன்புப்பரிசாக இந்தக் கவிதையை சமர்ப்பிக்கிறேன்
வாழ்த்த


வயது இருந்தாலும்


வணங்குகிறேன்


உங்களுக்காக இறைவனை !
மலரின் மணம்


நிலவின் குளிர்ச்சி


தேனின் இனிப்பு


வானின் நீலம்


இந்த வரிசையில் இனி


கார்த்தியின் சங்கீதா ,


சங்கீதாவின் கார்த்தி !
நோபல் பரிசு போல


உலகின்


உன்னத தம்பதிகளுக்கான பரிசு


உங்களைப் பார்த்து


உருவாக வேண்டும் !
சொர்க்கத்தில்


நிச்சயிக்கப்பட்ட


உங்கள் திருமணம் ,


இனி உங்களுக்கான


சொர்க்கத்தையும்


நிச்சயம் செய்யட்டும் !
இனி வரும்


உங்கள் வாழ்நாட்களில்


ஒளிவீசும் விளக்காக நீங்கள்


விளங்குவதற்காகத்தான்


உங்களுக்கு வெள்ளிக்கிழமையில்


திருமணம் வைத்துள்ளார்கள் !


ஏனெனில் ,


வெள்ளிக்கிழமை ,


விளக்கேற்ற உகந்த நாள் !
தித்திப்பான உங்கள்


தாம்பத்தியத்தால் ,


உங்களுக்குள்


மூன்றாவதாய் ஒரு சொந்தம்


விரைவில் உருவாகட்டும் என்று தான்


மூன்றாம் தேதி பார்த்து


உங்கள் திருமணம்


தானாய் அமைந்து விட்டதோ ?
உங்களைப் பொறுத்தவரை


அறுபதாம் கல்யாணம் என்பது


அறுபதாவது அகவையில்


செய்வதாக இருக்கக்கூடாது !


உங்கள் திருமண நாளிலிருந்து


அறுபது ஆண்டுகள் கழித்து


அதன் பிறகு செய்வதாக


இருக்க வேண்டும் !
இனி உங்கள்


அகராதியின் பக்கங்களில்


அன்பு என்ற வார்த்தையே


அதிகமாய் நிரம்பட்டும் !


இனி உங்கள்


வான்வெளியில்


மகிழ்ச்சி என்ற சூரியன்


என்றென்றும் ஒளிவீசட்டும் !
தாம்பத்தியம் என்பது தவம் !


விட்டுகொடுத்தல் என்பது வரம் !


முதலில் வரத்தைப் பெறுங்கள் !


பிறகு தவத்தில் ஈடுபடுங்கள் !