Wednesday, June 22, 2011

குறிப்பு : இந்தக் கவிதை என் அலுவலக நண்பன் சுரேஷிற்காக .......................சுரேஷ் ,
உனது பெயரைப் போலவே ,
சிங்கத்தின் பெயர் கூட
'சு' வரிசையில் தான்
ஆரம்பிக்கிறது !


சுரேஷ் ,
'சு' வரிசையில்
உனது பெயர்
ஆரம்பிப்பதாலோ என்னவோ - நீ
சாகசங்களுக்கு சொந்தக்காரன் !
சரித்திரத்தில் இடம்பெறுபவன் !
சிந்தனைகளின் சீர்திருத்தவாதி !
சோதனையிலும் சாதனை செய்பவன் !


சுரேஷ் ,
நீ நடத்திடு
வெற்றியைத் தேடி
ஒரு வீர வேட்டை !
நீ எடுத்திடு
எதிரிகளை விரட்ட
ஒரு வேக சாட்டை !
நீ அமைத்திடு
அன்பால் ஒரு
உறவுக்கோட்டை !
தொடங்கப்போகிறது
இனிதான் உன் ராஜபாட்டை !


சுரேஷ் ,
நீ ,
உழைப்புக்கு அஞ்சாத
வீரத்தளபதி !
நீ ,
உரிமை முழக்கமிடும்
புரட்சித்தளபதி !
நீ ,
வயதில் மூத்தோருக்கு
செல்லத்தளபதி !
நீ ,
அழகைப் பொறுத்தவரை
இன்னொரு இளையதளபதி !
என் போன்ற நண்பனுக்கு
என்றென்றும் நீ அன்புத்தளபதி !


சுரேஷ் ,
நீ ,
சுருங்கச்சொல்லி
விளங்க வைப்பவன் அல்ல !
எதையுமே
விளங்கச்சொல்லி ,
அறிவை மேலும்
துலங்க வைப்பவன் !


சுரேஷ் ,
ஆண்டுக்கணக்காய்
அல்லும் பகலும் ,
அயராது உழைத்து ,
அறிவில் தேக்கிய
அனுபவத் தொழில் நுட்பத்தை
உன் சகஊழியனுக்கு
களங்கமில்லாமல் நீ
கற்றுத்தரும் போதெல்லாம் ,
தன்னையே எரித்துக்கொண்டு
உலகிற்கு ஒளிதரும் தீபம்தான்
சட்டென்று நினைவுக்கு வருகிறது !


சுரேஷ் ,
எதிலும் நீ
தர்க்கம் செய்பவன்
என்பதுதான்
உன் மீதிருக்கும்
ஒரே குற்றச்சாட்டு !
ஆனால்
வரலாற்றின் ஏடுகளை
புரட்டிப்பார்த்தால் ,
வாதிட்டவர்கள் தான்
சாதித்திருக்கிறார்கள்
என்பது புரியும் !
நீ , சாதிக்கப்பிறந்தவன்
வாதிப்பதை நிறுத்தாதே !


சுரேஷ் ,
கருஜெகனும் நீயும்
ஒன்றாக வரும்போதெல்லாம்
வந்தியத்தேவனும்
அருள்மொழித்தேவனும்
வாழ்ந்து வந்த
வரலாறு திரும்புகிறதோ என
வியப்பாய் இருக்கிறது !


சுரேஷ் ,
வெள்ளித்திரையில் ,
வெற்றிகளை
அள்ளிக்குவிக்கும்
அந்தக்காலம்
விரைவிலேயே உன்னிடம்
துள்ளி வரப்போகிறது !
அப்போது பார் !
உன்னை ,
எள்ளி நகையாடியவர்களை எல்லாம் நீ
சொல்லி அடிக்கப்போகிறாய் !
நீ சொல்லி அடிக்கப்போகிறாய் !

Monday, June 20, 2011

முகநூல் அழகி


முதன் முதலில்


முகநூலில் அவள்


முகம் பார்த்தேன் !
பால்நிலவொளி


பளிங்குக்கல்லில்


பட்டுத்தெறித்தது போல


பைங்கிளியவள்


பட்டொளிவீசிக்கொண்டிருந்தாள் !
" நான் நலம்


நீ நலமா ? " என்று


நாசுக்கானதொரு


நேசவரியை அனுப்பிவைத்து


நாட்கணக்காய்


நகம்கடித்துக் காத்திருந்தேன் !
நான்கு நாட்கள் கழித்து


நான் யார் என்பதை


யூகிக்க முடியாமல்


" யார் இது ? " என்று


ஒரே ஒருவரியை மட்டும்


ஒப்புக்கு அனுப்பியிருந்தாள் !
எதிர்பாராத அவள்


எதிர்வினை கண்டு


மேற்கொண்டு என்ன செய்வதென


மேலும் மேலும் யோசிக்கலானேன் !
நான்


அனுப்பியது போன்றதொரு


அன்புத்தூதை அநேகமாக


ஆயிரம் பேராவது


அவளுக்கு அனுப்பியிருப்பார்கள் .


அவளும் அவைகளை


அழகாக மறுத்து மறுத்து


வெறுத்துப் போயிருப்பாள் !


நான் அவளுக்கு அந்த


ஆயிரத்தோடு ஒருவனாய்


ஆவதா ? அல்லது


ஆயிரத்தில் ஒருவனாய்


ஆவதா ? என்பதை


ஆண்டவனால் கூட


அனுமானிக்க முடியாது என்று


அடிமனதில் ஒரு அவலக்குரல்


அடிக்கடி சொல்லித்தொலைத்தது !
கொதிநீருள்ள


கண்ணாடிக் குடுவையை


கைகளில் வைத்துக்கொண்டு


கயிற்றின் மீது நடக்கிறாயே


கடன்காரா ! என்று


மனசாட்சி மௌனமாய்


மனதிற்குள் சிரித்தது !
இருந்தாலும்


இயன்றவரை


முயன்று பார்ப்பதை


அனுபவத்திலும் சிறிது


பயின்று பார்ப்போமே என்று ,


" நான் இன்னார் .


இங்கு பணிபுரிகிறேன்


உன்னோடு நட்புச்செய்ய


உவப்பாய் உள்ளேன்


விருப்பமிருந்தால்


விருப்பம் தெரிவி ! " என்று


நாகரிகமாய் நயந்து


அனுப்பினாலும்


பதில் வருமோ வராதோ என


பயந்து காத்திருந்தேன் !
பத்து நாளாகியும்


பதில் வராததால்


" போடி இவளே ! " என்று


பிழைப்பைப் பார்க்கப்


புகுந்த போது ,


முகநூலில் அவள்தன்


முகவுரை அனுப்பியிருப்பதை


மின்னஞ்சல் ஒன்று


மின்னல் போல அறிவித்ததில்


இதயத்தில் ஓர்


இன்பப்பின்னல்


இதமாய் வந்து விழுந்தது !
முகவுரை அனுப்பியவளுக்கு


பக்கத்தை நிரப்பி


பதிலுரை எழுதி ,


பதில் வருமா என


பைத்தியகாரன் போல


பரிதவித்திருந்தேன் !
சிலநாட்கள் கழித்து


சாவகாசமாக ,


" சரி " என்று மட்டும்


செய்தியனுப்பினாள்


சதிகாரி !
அடுத்ததாக அவளது


அலைபேசி எண் கேட்டு


அறிவுகெட்டு அரைவரியில்


அனுப்பினேன் மறுசெய்தி !


சுக்கிரன் எனக்கு


சூனியம் வைத்து விட்டான் போலும் !


பழையபடியே


பத்து நாளாகியும்


பதிலில்லை !
ஆனாலும் ஒரு


நப்பாசையில் ,


அவள் மீதிருந்த


தப்பாசையில் ,


முகநூலை ,


மீண்டும் மீண்டும் திறந்தேன் !


அன்றாட அலுவலை


அடிக்கடி மறந்தேன் !


அவள் நினைவாலேயே


மனத்தால் மட்டும்


மறுபடி மறுபடி இறந்தேன் !
மாதம் ஒன்று


உருண்டு போயிருந்த போது


அவள் முகம்


என் மனத்திரையில்


இருண்டு போயிருந்தது !


பிழைப்பு


பிழைத்திருத்தம் செய்யப்பட்டு


பழையபடி பங்கமில்லாமல் நடந்தது !
ஆனால் ,
மந்தகாசமான


ஒரு வெள்ளிக்கிழமை


மாலையில் ,


முகநூலை


மறுபடியும் திறந்தபோது


மற்றொருத்தியின்


முகம் பார்த்தேன் !
தங்கத் துகள் கொண்டு


அங்கம் செய்தது போல


மினு மினுவென


மின்னிக்கொண்டிருந்தாள் அந்த


முகநூல் அழகி !!!
" நான் நலம்
நீ நலமா ? " என்று
நாசுக்கானதொரு
நேசவரியை அனுப்பிவைத்து
நாட்கணக்காய்
நகம்கடித்துக் காத்திருக்கலானேன் !!!


குறிப்பு : முகநூல் - face book
Sunday, June 12, 2011


குறிப்பு : எனது வருங்கால மனைவியின் பாதங்களில் இந்த சிறுகதையை அர்ப்பணம் செய்கிறேன்


பாலைவனச்சோலைகள் - சிறுகதை

அங்கம்மாவிற்கு பத்து வயது இருந்த போது எனக்கு ஏழு வயது . அங்கம்மா , பார்க்க கருப்பாக இருந்தாலும் , லட்சணமாக இல்லாமல் இருந்தாலும் அவளுக்கும் எனக்கும் அடிப்படையிலேயே ஒரு ரசாயனம் ( கெமிஸ்ட்ரி ) இருக்கவே செய்தது . என் " அம்மாபாட்டி " ( அம்மாவைப் பெற்ற பாட்டி = அம்மாபாட்டி ) வீட்டில் நான் தங்கிப் படித்த காலங்களில் எனக்கிருந்த ஒரே பெண்தோழி அவள்தான் . நான் படித்த புளூ பேர்ட் கான்வென்டில் ஆயா வேலை பார்த்த குருவம்மாவின் மகள் தான் அங்கம்மா . நானும் அவளும் அதிகமாக விளையாடும் விளையாட்டு , " படத்தின் பேர் கண்டுபிடிக்கும் " விளையாட்டுதான் . அவள் , " முதல் எழுத்து ' பி ' , கடைசி எழுத்து ' லா ' . என்ன படம் கண்டுபிடி ! " என்பாள் . நான் மண்டையைப் பிய்த்துக்கொண்டு , சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு , " தெரியல " என்பேன் . சாமானியத்தில் விடை சொல்ல மாட்டாள் . " நான் வேணா க்ளூ தர்றேன் " என்பாள் . நான் அப்பாவியாக " க்ளூ ன்னா என்ன ? " என்பேன் . அவளோ " க்ளூ ன்னா , க்ளூ தான் . அதுல பரட்டைத் தலையன் நடிச்சிருக்கான் " என்பாள் . எனக்கு கோபம் கோபமாக வரும் . அந்த வயதிலேயே நான் ரஜினியின் அதி தீவிர விசிறியாக இருந்தவன் . தியேட்டரில் ரஜினி படத்தின் சண்டைகாட்சிகள் வந்தால் , படம் பார்த்துக் கொண்டிருக்கும் நான் எழுந்து , ஆ ... ஊ .... எனக் கத்தியபடி கை கால்களை உதைத்துக் கொண்டு காற்றில் சண்டை செய்ய ஆரம்பித்து விடுவேனாம் . பிறகு என்னை அடக்குவதற்குள் போதும் போதும் என்றாகி விடுமாம் . இதனாலேயே என் வீட்டில் சண்டையில்லாத ஒரு கமல் படத்திற்கு கூட்டிச் சென்றார்கள் . படத்தில் சண்டையே இல்லை என்று திரையை விட்டுத் திரும்பி படம் முடியும் வரை அப்படியே அமர்ந்திருந்தேனாம் . அங்கம்மா அந்தக் க்ளூவைக் கொடுத்ததுமே நான் படத்தைக் கண்டுபிடித்து விடுவேன் . ஆனாலும் ரஜினியை பரட்டைத்தலையன் என்று சொன்னதாலேயே அவளிடம் " வேற படம் சொல்லு " என்பேன் . இப்படியாக நாங்கள் அடிக்கடி விளையாடுவோம் . ஒரு வருடம் முழுக்க என் தோழியாக இருந்தவள் அவள் . அம்மாவைப் பிரிந்திருக்கும் என் வலியை , வலிந்து வந்து ஆற்றியவள் அவள் . அதன் பிறகு முழுஆண்டு விடுமுறைக்கு நான் ஊருக்குப் போய்விட்டு வந்த போது அங்கம்மா என்னைத் தேடி வரவில்லை . பாட்டியிடம் கேட்டதற்கு , " அவ சாமிகிட்ட போய்ட்டா " என்று சொல்லியது . அந்த வயதில் எனக்குப் புரியவில்லை . " எப்ப வருவா " என்றேன் . பாட்டி " இனிமே வரமாட்டா " என்றதும் எனக்கு அழுகை அழுகையாக வந்தது . ஒரே சூனியமாக இருந்தது . " நான் ஊருக்குப் போறேன் . ஊருக்குப் போறேன் . அம்மாவைப் பாக்கணும் " என்று தரையில் புரண்டு அழுதேன் . பாட்டி , " இப்படி அடம்புடிச்சே , அப்புறம் ' அக்குப்புத்திரன்' கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன் . " என்று பயமுறுத்தியது. அந்த வயதில் எனக்கு அக்குப்புத்திரன் மீது பயம் அதிகம் . அக்குப்புத்திரன் எழுகடல் தாண்டி வரும் அரக்கன் . மலையையே ஒற்றைக் கையில் பிடித்து வீசுவான் . அழுது அடம் பிடிக்கும் சிறுவர்களின் காதை அப்படியே திருகி கையோடு எடுத்துகொண்டு போய் விடுவான் . பாட்டி அக்குப்புத்திரன் பெயர் சொன்னதும் அழுகையை அப்படியே விழுங்கிக் கொண்டேன் . அங்கம்மா என்னிலிருந்து படிப்படியாக மறைந்தாள் .

அதன் பிறகு நான் பர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும் போது சித்ரா மிஸ் என்றொரு மிஸ் வந்தார்கள் . சிவப்பாக அழகாக இருந்தார்கள் . அவர்களின் உதடுகள் ஆரஞ்சு சுளையை எனக்கு ஞாபகப் படுத்தும் . அவர்களின் சேலை எப்போதும் மொறுமொறுவென்று பாட்டி சுட்டுத் தரும் முறுகலான தோசையைப் போலவே இருக்கும் . அழகாக இருந்தாலும் அந்த மிஸ் எல்லாரிடமும் எப்போதும் சிடு சிடு வென்றே இருந்தார்கள் . நான் பள்ளி செல்லும் வழியிலேயே அந்த மிஸ்ஸின் வீடு இருப்பதை அறிந்து , நான் போகும்போதும் , வரும்போதும் என் கூடவே அந்த மிஸ் வரமாட்டார்களா என்பது என்னுள் ஒரு ஏக்கமாகவே இருந்தது . ஆனால் அந்த மிஸ்ஸை , ஒரு சொட்டைத் தாத்தா தினமும் ஸ்கூட்டரில் கூட்டிச் சென்று வருவது தெரிந்து எனக்கு அந்தாள் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது . அது அந்த மிஸ்ஸின் அப்பாவாம் . ஒரு நாள் வகுப்பில் நான் சித்ராமிஸ்ஸையே ஆசையோடு பார்த்துக்கொண்டிருந்ததை மிஸ் பார்த்து விட்டார்கள் . " என்னடா அப்படி பாக்குற . வந்து ஒன டூ த்ரீ சொல்லு " என்றார்கள் . நான் எழுந்து சென்று கைகளைக் கட்டிக் கொண்டு ஒன டூ த்ரீ சொல்ல ஆரம்பித்தேன் . பிப்டி நைன் வரைக்கும் சொன்ன பிறகு எனக்கு கை கால்கள் உதற ஆரம்பித்தன . அடுத்ததாக , " சிஸ்டி ஒன , சிஸ்டி டூ " என்று நான் பயந்துகொண்டே ஆரம்பிக்க , மிஸ் என் காதைப் பிடித்துத் திருகி , " ஒழுங்கா சொல்லு . சிக்ஸ்டி ஒன , சிக்ஸ்டி டூ ..... " என்றார்கள் . நான் மீண்டும் " சிஸ்டி ஒன , சிஸ்டி டூ " என்றேன் . வகுப்பே சிரிக்க ஆரம்பித்தது . அதிலும் அந்த முதல் பென்ச் சசிகலா , குள்ளக் கத்திரிக்காய் , விழுந்து விழுந்து சிரித்தாள் . என் கண்கள் கலங்க ஆரம்பித்தன . அதைப் பார்த்த மிஸ் புன்னகையோடு என் தலையைத் தடவி , " இதுக்காடா அழறது " என்றதும் நான் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தேன் . உடனே மிஸ் தன் மடியோடு என்னை அணைத்துக் கொண்டு என் முதுகைத் தடவி விட்டார்கள் . அதனாலேயே நான் ரொம்ப நேரம் அழுது கொண்டிருந்தேன் . எப்போதும் சிடு சிடுவென்று இருக்கும் சித்ராமிஸ் அப்படி நடந்து கொண்டது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது . நான் அழுது முடிந்ததும் மிஸ் , " வீட்ல போய் தனியா சொல்லிப்பாரு . உன் அம்மாக்கிட்ட சொல்லிக்காட்டு " என்றார்கள் . நான் , " அம்மா , ஊர்ல இருக்காங்க மிஸ் " என்றேன் . உடனே மிஸ் , " சரி அப்ப , சரஸ்வதி சாமி முன்னாடி நின்னு சொல்லிப்பாரு . கண்டிப்பா வரும் . இவங்க எல்லாம் உன்னைப் பார்த்து சிரிச்சாங்க இல்ல . நாளைக்கு இவங்க முகத்துல நீ கரியப் பூசனும் .. குட்பாய் ...போய் உக்காரு " என்றார்கள் . அன்று மாலையே நான் வீட்டிற்குப் போய் சாமி படம் முன்னாடி நின்று " சிஸ்டி ஒன சிஸ்டி டூ " சொல்ல ஆரம்பித்தேன் . கடும் முயற்சிக்குப் பின் " சிக்ஸ் " எனக்கு வசப்பட்டது . அடுத்தநாள் மிஸ்ஸின் முன் சொல்லிக் காட்டி " குட்பாய் " வாங்க வேண்டுமென்று ஆசை ஆசையாக நான் போனபோது மிஸ் அன்று வரவில்லை . சித்ரா மிஸ் இனிமேல் வரமாட்டார்களாம் . அவர்களுக்கு கல்யாணமாம் . ஹெட் மாஸ்டர் வந்து அப்படித்தான் சொல்லிவிட்டுப் போனார் . பக்கத்து பென்ச் ஜெயராமன் மட்டும் என் காதில் , " மிஸ் கெட்டவார்த்தை பண்ணிட்டு , ஓடிப் போய்ட்டாங்க " என்றான் . காதலித்து ஓடிப்போவதைத் தான் அவன் அப்படி சொன்னானென்று அந்த வயதில் எனக்குப் புரியவில்லை . சித்ரா மிஸ் கடைசி கடைசியாக என்னிடம் சொன்ன " குட்பாய் " என்பது " குட்பை " ஆக ஆகிவிட்டிருந்தது . அதன் பிறகு பள்ளி செல்லமாட்டேனென்று நான் அழுது அடம் பிடித்ததும் , பாட்டி , மீண்டும் அக்குப்புத்திரனிடம் என்னைப் பிடித்துக் கொடுப்பதாக சொன்னதும் வேறு வழியின்றி நான் பள்ளி சென்றேன் .அதன் பிறகு என் வாழ்க்கையில் யாரும் எனக்குத் தோழியாக வரவில்லை . நான் டவுசரில் இருந்து பேண்டுக்கு மாற ஆரம்பித்த போதுதான் முத்தரசி எனக்கு அறிமுகமானாள் . எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் வாடகைக்குக் குடிவந்திருந்தனர் . முத்தரசிக்கு அப்போது பதினைந்து வயது இருக்கும் . அவளது அம்மா பலகாரங்கள் சுட்டு விற்பார்கள் . அவளுக்கு அப்பா கிடையாது . அவள் எங்கள் வீட்டுக் கிணற்றில் தண்ணீர் எடுக்க வரும்போது நானும் அவளும் பார்த்துக் கொள்வோம் . ஆனால் ஒரு வார்த்தை பேசியது கிடையாது . அவளுக்கும் எனக்கும் சம்பவங்கள் அதிகம் இல்லை . ஆனால் இவள் என் வாழ்க்கைத் துணையாக வந்தால் நன்றாக இருக்குமே என்று நான் நினைத்ததுண்டு . என் ராசியோ என்னவோ அவள் என் வீட்டருகே குடிவந்து ஆறே மாதத்தில் , அவளுடைய மாமன் ஒருவான் கிடாய்மீசை வைத்துக் கொண்டு முத்தரசியைப் பார்க்க வருவதும் , அவளோடு ஆசை ஆசையைப் பேசுவதும் நிகழ்ந்தது . அதன் பிறகு முத்தரசி என்னை பதிலுக்குப் பார்ப்பதைத் தவிர்த்தாள் . அடுத்த சித்திரையிலேயே அவளுக்கும் அந்த கிடாய் மீசை மாமனுக்கும் கோலாகலமாகத் திருமணம் நடந்தது . மற்றபடி சொல்வதற்கு ஒன்றும் இல்லை .
நான் இளங்கலை படிக்கும் போது இசைப்பிரியாவும் என்னோடு படித்தாள் . இசைப்பிரியாவின் கண்கள் எனக்கு மிகவும் பிடித்த அம்சங்கள் . அவள் , பெண்கள் வரிசையில் இரண்டாவது பென்ச்சில் முதல் ஆளாக அமர்ந்திருப்பாள் . நானும் ஆண்கள் வரிசையில் இரண்டாவது பென்ச்சில் முதல் ஆளாக அமர்ந்திருப்பேன் . முதல் செமஸ்டரில் ஆங்கிலத்தில் நானும் அவளும் ஒரே மதிப்பெண் எடுத்திருந்தோம் . கெமிஸ்ட்ரி லேபில் எனக்கு எதிர்த்த ஆய்வக மேசை அவளுடையது . இப்படி ஒருசில சென்டிமென்ட்களால் இசைப்பிரியாவிடம் ஒரு ஈர்ப்பு இயல்பாகவே இருந்தது .ஆனால் அவள் என்னிடம் ஆரம்பத்திலிருந்தே பேசவில்லை . பொதுவாக இந்தக்காலப் பெண்கள் , தங்களிடம் பேசாத ஆண்களிடம் பேசுவதே இல்லை . நான் எந்தப் பெண்ணிடமும் பேசாத காரணத்தாலேயே என் வகுப்புப் பெண்கள் என்னை ஒரு சைக்கோ போலவே பார்த்தார்கள் . மூன்றாமாண்டு முடிவில்தான் இசைப்பிரியா என்னுடன் பேசினாள் . எங்கள் ஜூனியர்கள் எங்களுக்கு ஒரு பிரிவு உபச்சார விழா நடத்தினார்கள் . அதில் மேடை கீடைஎல்லாம் அமைத்து , நடனம் ஆடி , பாட்டுப் பாடி , ஜமாய்த்து விட்டார்கள் . ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களுக்கு நடுவே சட்டென்று அனைவரும் அமைதியானார்கள் . மேடையில் ஒருவன் , " இப்ப நம்ம டிபார்ட்மென்ட்லையே ரொம்ப அமைதியான ஒருத்தர் மேடைக்கு வரப்போறார் " என்றான் . எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது . பத்து கல் தொலைவில் ஒரு குண்டூசி விழுந்தாலும் " டான் " என்று கேட்க்குமளவு படு அமைதி ! அனைவரும் திரும்பி என்னைப் பார்க்க , " ஏண்டா , இதெல்லாம் மொதல்லையே சொல்லித் தொலைக்க மாட்டீங்களா ? " என்று நான் மனதுக்குள்ளேயே சொல்லிக் கொண்டு பலியாடு போல எழுந்து மேடைக்குச் சென்றேன் . அடுத்ததாக மேடையில் இருந்தவன் அழைத்தது இசைப்பிரியாவை . அவள் புன்னகையோடு எழுந்து வந்தாள் . உடனே மேடையில் இருந்தவன் , நான்காய் மடிக்கப்பட்ட நான்கைந்து துண்டுக் காகிதங்களை குலுக்கிப் போட்டு ஒன்றை என்னை எடுக்கச்சொன்னான் . நான் , ராசிப்படி மூன்றாவதாய் இருந்த சீட்டை எடுத்துப் பிரித்தேன் . அதில் " செத்துப் போவது போல நடித்துக் காட்டவும் " என்று இருந்தது . அதைப்பார்த்து உண்மைமயிலேயே நான் பாதி செத்துப் போனேன் . அந்த சீட்டில் இருக்கும்படி நான் நடிக்க வேண்டுமாம் . இசைப்பிரியா அதைப்பார்த்து அந்த சீட்டில் என்ன எழுதியிருந்தது என கண்டுபிடித்துச் சொல்ல வேண்டுமாம் . எனக்கு கண்ணை இருட்டிக்கொண்டு வந்து அப்படியே தொப்பென மேடையில் விழுந்தேன் . ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று தெரியவில்லை . இதற்குள் இசைப்பிரியா , அந்த சீட்டில் இருந்ததை சரியாக சொல்லி விட்டிருந்தாள்கீழே இருந்த அனைவரும் கைதட்டிய பிறகுதான் சுயநினைவு வந்து நான் எழுந்தேன் . அப்படியே தத்ரூபமாக நடித்ததாக அனைவரும் என்னைப் பாராட்ட , " நான் எங்கடா நடிச்சேன் .. நடந்ததே அதுதாண்டா " என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் . அதன் பிறகு விழா முடிந்து போகும்போது இசைப்பிரியா என்னோடு நடந்து வந்தாள் . " ரொம்ப நல்லா இருந்தது " என்றாள் . நான் " எது " என்றேன் . " நீ நடிச்சது " என்றாள் . நான் " அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல " என்று வெட்கப்பட்டு வழிந்தேன் . " டவுசர் கிழிஞ்சது எனக்கில்ல தெரியும் " என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன் . " பியூச்சர்ல அந்த மாதிரி பீல்ட சூஸ் பண்ணி போ. நல்லா வருவே " என்றாள் . நான் , மென்மையாக " தேங்க்ஸ் " என்றேன் . பேச்சு அதோடு முடிந்தது .
அந்தப் பேச்சை மட்டும் வளர்க்கும் " வள்ளல் " அப்போது எனக்கிருந்திருந்தால் இசைப்பிரியா எனக்குக் காதலியாகி இருப்பாள் . அதன் பிறகு நான் அவளைப் பார்க்கவே இல்லை . ஏழுவருடங்கள் கழித்து அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதாக மதியழகன் ( ஆம் ! அவனே தான் ) அலைபேசியில் சொன்னான் . அதன் பின் என் வாழ்க்கை வழக்கம் போல பாலைவனமாகவே இருந்து வருகிறது .

Saturday, June 11, 2011

உத்தமக் காதலியே ...........
நான் நானாகவும் ,


நீ நீயாகவும் இருந்து - பிறகு


நான் நீயாகவும்


நீ நானாகவும் மாறிப்போனதன்


மர்மம் உணர்கிறாயா


என் மனங்கவர்ந்தவளே !
மௌனத்தின் மொழிகற்றதும்


விழிகளால் பேசும் கலை அறிந்ததும்


காத்திருப்பின் சுகம் புரிந்ததும்


நம் காதலால் தானென்று


என்னைபோலவே நீயும் உணர்கிறாயா


என் இதயத்திருடியே !
பேசிகொண்டிருந்த


எத்தனையோ இரவுகளில்


யார் முதலில் தூங்கிப்போனாலும்


மறுநாளே மனமார


மன்னிப்புக் கேட்பதும் ,


மன்னிப்புக் கேட்டதற்க்குத்தான்


மன்னிப்பில்லை என்று


பொய்யாகக் கோபிப்பதும் என


விட்டுக் கொடுத்தலின் உச்சத்தில்


வாழ்ந்திருக்கும் நாட்கள் இவை என்று


விளங்குகிறதா வசந்தம்தந்தவளே !
அலுவலுக்கு நடுவே ,


அவ்வப்போது பேசிக்கொண்டிருப்பதும்


பிறகு ,


பேச்சிற்கு நடுவே


அவ்வப்போது அலுவல் பார்ப்பதும் ,


அதன் பின்


பேசிக்கொண்டிருப்பதே


அலுவல் ஆனதும் என


அன்றாட வழக்கங்கள் அனைத்தும்


அப்படியே தலைகீழானதன்


சூட்சமம் தெரிகிறதா


என் இனிய சூனியக்காரியே !
கல்லூரி செல்வதாய் நீயும்


அலுவலகம் செல்வதாய் நானும்


அவரவர் வீட்டில் அழகாகப் பொய்சொல்லி ,


பொதுவானதொரு பேருந்து நிலையத்தில்


பதைபதைத்து சந்தித்து


கோவிலுக்குப் போவதாய்த்


தீட்டியிருந்த திட்டத்தைக் கைவிட்டு


திரைப்படம் போகலாமென


திடீரெனத் தீர்மானித்து


கூட்டமில்லாதொரு திரையரங்கில்


தனியிடம் தேடியமர்ந்து ,


தவறு செய்கிறோமோ என்ற


தடுமாற்றத்தில் ,


பாதிப் படத்திலேயே எழுந்து வந்து


மீதிப் பொழுது கழிக்க


பூங்காவிற்குச் சென்று


பூக்களைப் பார்த்துக் கொண்டே


பேசிக்கொண்டிருந்து விட்டு


பிறகு பசியெடுத்தது என


கொண்டுவந்த மதியஉணவை


மாறி மாறிப் பகிர்ந்துண்டு


மகிழ்ந்திருக்கும் நாட்களை


மறக்க முடியுமா


என் மனதின்நாயகியே !
நான் வாழ்த்துக்கூறிய தேர்வில்


முதல் மதிப்பெண் பெற்றதை


மகிழ்ச்சியோடு நீ சொன்னபோது ,


கைம்மாறாய் கையிலாவது முத்தம் கொடு என


நான் சண்டித்தனம் செய்ததும்


முடியவே முடியாதென


மருகி நீ மறுத்ததும் பிறகு


வாடிய என் முகம் கண்டு


என் கன்னத்திலே நீ


கனியிதழ் பதித்ததும் ,


வண்ண வண்ண விண்மீன்கள் என்


விழிகளில் வட்டமிட்டதும் என


காதலில் வாழ்கிற கவிதை நாட்களை


கவனிக்கிறாயா


என் கனவுதேவதையே !
நானும் நீயும்


நடந்து போகும்போது ,


எதிரில் வரும்


'எக்குத்தப்பான ' பெண்களை


ஏக்கமாய் நான் பார்த்தால்


தலையில் குட்டியிருக்கிறாய்


கன்னத்தைக் கிள்ளியிருக்கிறாய்


" அவள் பின்னாலேயே போ ! " என


செல்லமாய்க் கடிந்திருக்கிறாய் !


ஆனால் ஒருநாள் கூட


" பதிலுக்கு நானும் பிறஆண்களைப்


பார்த்தால் என்ன ஆகும் ? " என்று


நீ கேட்டதேயில்லை !


ஒருநாள் இதை


உன்னிடமே கேட்டுவிட்டேன் .


அப்போது நீ சொன்னாய் ,


" உன்னோடு இருக்கும்போது


என் உலகமே நீயாக இருப்பதால்


புறவுலகம் மறந்துவிடுகிறதடா


பைத்தியகாரா ! " என்று


என் தலைமுடி கலைத்தபடி !


உணர்ச்சிவசத்தில் என் கண்கள்


தானாய்க் கலங்க


அது கண்டு நீயும் கலங்கி


ஆறுதலாய் என்னை நீ


அணைத்துக் கொள்ளுப்போது


நம் உயிர்கள் ஒன்றுகலப்பதை


உணர்கிறாயா என் உத்தமக்காதலியே !!!