Thursday, December 20, 2012

கலி, கலாச்சாரம், கற்பு




கலி இங்கே
முற்றிவிட்டது !
கலாச்சார நதி
வற்றிவிட்டது !
நாகரீகத் தீ
பற்றிவிட்டது !
ஆபாசப் பாம்பு
சுற்றிவிட்டது !

எல்லாம் இங்கே
கெட்டு விட்டது !
பண்பாட்டு மரம்
பட்டு விட்டது !

எல்லாருமே
காமத்தில்
கொழுக்கிறார்கள் !
பெரும்பாலோர்
பிஞ்சிலேயே
பழுக்கிறார்கள் !

சல்லடை போட்டுத்
தேடினாலும்
கற்புக்கரசர்களை - இங்கு
காண முடியாது !
ஸ்ரீ ராமனே
வந்தாலும்
நூறு சதம் கற்பை - இனி
பேண முடியாது !

ஒருத்திக்கு
ஒருவன்
என்றில்லாத
நிலை வரப்போகிறது !
கண்காட்சிக் கூடத்தில்
கற்புக்கும் ஒரு
சிலை வரப்போகிறது !

கொஞ்சம் கொஞ்சமாக
குடும்ப அமைப்பு
சிதையப் போகிறது !
உறவெனும் கோவில்
உருத்தெரியாமல்
புதையப் போய்கிறது !

அதென்ன
அச்சு பிசகாமல்
அழகானவர்களுக்கே
காதல் வருகிறது !
சொல்லி வைத்தாற்போல
சொடக்குப் போடுவதற்குள்
மோதல் வருகிறது !

எல்லா காதலர்களும்
காது சூடேற
பேசுகிறார்கள்
காமத்தை !
மோகத்தீயில்
வேக வைக்கிறார்கள்
அர்த்தராத்திரி
சாமத்தை !

அலைபேசியில்
அழைக்கும் போது
மாறிவிடுகிறது
ஒரே ஒரு
எண்ணானது  !
அதன் பின்
மொத்த வாழ்வையும்
மூடி விடுகிறது
கள்ளத்தனம் என்ற
மண்ணானது !

கணவனும்
மனைவியும் போல
ஆணும் பெண்ணும்
காதோடு பேசுகிறார்கள்
கணக்கிலடங்கா
 ரகசியம் !
அதனை
அவர்கள் நட்பென்று
சொல்வதுதான்
அளவிடமுடியாத
அதிசயம் !

சுடிதார்
பெண்ணொருத்தியின்
காலாடை
தோலாடை போல
ஓட்டிப் பிடித்திருக்கிறது
தொடையை !
ஈக்கள் தான்
மொய்க்காமல் இருக்குமா
திறந்து வைத்த
பலகாரக்
கடையை !

குடும்பக்குத்துவிளக்குகள் கூட
இறக்கித்தான்
கட்டுகிறார்கள்
சேலையை
வயிற்றில் !
எதிர் வருபவனின்
ஒழுக்கமெல்லாம்
அந்தரத்தில்
ஆடுகிறது
கயிற்றில் !

உருவத்தில்
மலர்ந்திருக்கும்
பருவத்தில்
உள்ள பெண்ணுக்கு
விலைபேசி,
அலைபேசி வாங்கினால்
இலவச இணைப்பாக
கூடவே சில
காதலர்களும்
கிடைக்கிறார்கள் !
பெற்றோர்களே
உஷார் !

நகரப் பேருந்திலும்
நிரம்பி வழிகிறது
கூட்டம் பிதுங்கி !
யாவரின் கற்புகளும்
ஓடி ஒளிகின்றன
ஓரமாய் ஒதுங்கி !

உரசுவதற்கென்றே
வருகிறார்கள்
கட்டுடல் கொண்ட
தடியர்கள் !
அவர்கள்
அந்தரங்கமாய்
அழகிகளின்
அனுமதி பெற்ற
இடியர்கள்  !

பெண்களும்
குடிக்கிறார்கள்
தயக்கமிற்றி
மதுவை !
புகலிடமாகிவிட்டது
அவர்களுக்கும்
புதுவை !

கொஞ்சம்
அழகாயிருப்பவள்
இணையத்திற்கு
வந்து விட்டால்
கெட்டது குடி !
அவள்,
ஆடவர்களுக்கு
ஆசை நெய்யும்
தறியாகிறாள் !
ஓநாய்க் கூட்டத்தில்
வந்து விழுந்த
ஒரு துண்டு
கறியாகிறாள் !

இனி,
அரசாங்க அனுமதி
பெற்றுத்தான்
இரண்டு எண்கள்
அலைபேசியில்
பேசிக் கொள்ளவேண்டும் !

காதல் என்பதற்கு
கட்டாயத் தடை
கட்டாயம்
வரவேண்டும் !

பேருந்தில்
பெண்களை
உரசுபவனை
முச்சந்தியில்
தூக்கிலிடுவோம் !

ஆபாச உடை
அணிபவளுக்கு
ஆயுள் தண்டனை விதிப்போம் !

கள்ளக் காமம்
செய்வோரைக்
கழுவிலேற்றுவோம் !

ஆபாசப்
படமெடுப்பவனை
அடித்தே கொல்வோம் !

எல்லா
சமூக வலைத்தளங்களும்
கால வரையின்றி
நிரந்தரமாக
மூடப் படட்டும் !

இருபாலர்
கல்லூரிகள்
இடித்துத் தள்ளப்படட்டும் !

ச்சை  !
இவ்வளவு
லோலாயம்  எதற்கு ?
பேசாமல்
கலாச்சாரம்
கற்பு
புனிதம்
பண்பாடு
புண்ணாக்கு
வெங்காயம்
போன்ற பக்கங்களை
நம்
வாழ்வகராதியில் இருந்து
கிழித்தெறிவோம் !
என்ன
குடியா முழுகிவிடும் ?

அரசாங்கத்திற்கு
ஒரு ஆலோசனை !
மதுவைப் போல்
விபச்சாரத்தையும்
ஏற்று நடத்தலாமே !
அதிலும்
ஆண் விபச்சாரர்களை
அறிமுகபடுத்தி
புதுமை செய்தால்
உலகம் இன்னும்
உருப்படும் !


Monday, December 17, 2012

பிரம்மச்சாரி 4





வாழ்க்கையில்
ஒரு பெண்ணிடமும்
பேசியதில்லை !
பிச்சைக்காரியைக் கூட
கோபப்பட்டு
ஏசியதில்லை !
எந்தப் பெண்ணுக்கும்
மோகனப் புன்னகை
வீசியதில்லை !
நாணிக் கோணி
எவளும் எங்கள்முன்
கூசியதில்லை !

கடைக் கண்ணால் கூட
கன்னிகள்
எங்களைப்
பார்ப்பதில்லை !
காலைப் பிடித்துக்
கெஞ்சினாலும்
காதலை யாரும்
ஏற்பதில்லை !

அனுதினமும்
எதிர்பார்க்கிறோம் 
 வீட்டிலிருந்து ஓர்
நறுஞ்செய்தியை !
அனாமதேய
எண்ணுக்கெல்லாம்
அனுப்பிப் பார்க்கிறோம்
அர்த்த ராத்திரியில்
குறுஞ்செய்தியை !

ஆனாலும்
போராட்டம்
முடியவில்லை !
ஒரு பொழுது
எங்களுக்கு
விடியவில்லை !

அந்தஸ்து எனும்
சிவதனுஷை
எங்களில் யாரும்
உடைக்கவில்லை !
எங்களுக்கென்று
ஒருத்திகளை
பிரம்மன் இன்னும் 
படைக்கவில்லை !

எதிர்படும்
பெண்ணிடமெல்லாம்
பிசியாகவே இருக்கிறது
அலைபேசி !
திருமணச்சந்தையில்
எகிறிவிட்டது
மணமகள்களின்
விலைவாசி !

பட்டம் விடக்கூட
உதவுவதில்லை
படித்து வாங்கிய
பட்டம் !
பட்டம்
படித்தவனுக்கு
பெண் கிடைக்காதென்பது
இங்கு
எழுதப்படாத
சட்டம் !
பாதகமாகத்தான்
இருக்கிறது
ஜாதகத்தின்
கட்டம் !
பார்த்துப் பார்த்து
போரடித்து விட்டது
வீட்டிலிருக்கும்
விட்டம் !

அந்தஸ்து
பார்த்துத் தான்
காதலின்
மடை திறக்கிறது !
காசிருப்பவனுக்குத் தான்
காமனின்
கடை திறக்கிறது !

நாட்டமில்லை
எங்களுக்கு
பொன் பொருளில் !
ஆனாலும்
மேதைகளில்லை
நாங்கள்
மென் பொருளில் !

திருமணப் போட்டியில்
எவன் இட்டானோ
அந்தஸ்து எனும்
வரம்பை !
எங்கு போய்
அறுத்துக் கொள்ளலாம்
ஆண்மைத்தனத்தின்
நரம்பை !

ஊதியம்
நாற்பதாயிரத்தில்
பொறியாளனாக
பன்னாட்டு நிறுவனத்தில்
பணிபுரிவதுதான்
பத்தாம் வகுப்புப்
படித்தவளை
மணப்பதற்கான
குறைந்த பட்சத் தகுதியே !

ஆயிரம் பேரைப்
பார்த்து
நூறு பேரைத்
தேர்ந்தெடுத்து
பத்து பேரையாவது
காதலிக்கிறாள்
பெண் !
ஒரு பெண்ணைக்
காதலிக்க
ஆயிரத்தோடு ஒருவனாக
வரிசையில்
காத்திருக்கிறான்
ஆண் !

ஒரு ஜோதிகாவுக்கு
இங்கு
ஓராயிரம் சூர்யாக்கள்
அடித்துக் கொள்ள,
' கஞ்சா கருப்பு ' களான
எங்களுக்கு
கோவை சரளா கூட
கேள்விக் குறிதான் !

வெறும்
அறுபது நாள்
ஆசைதான் !
முப்பது நாள்
மோகம் தான் !
அதற்கா
இந்தக் கூப்பாடு ?
காசு கொடுத்தால்
கடையில் கூட
கிடைத்து விடுமே
சாப்பாடு !

ஆனால்,

உண்ட நிறைவில்
வயிறு குளிர்வதற்கும்,
உணவு செரிக்காமல்
வயிறு எரிவதற்கும்
வித்தியாசம் இருக்கிறது !!!








Sunday, November 25, 2012

பிச்சைக்காரர்கள் 





பலரிடமும்
கெஞ்சிக் கேட்டு
ஒரு பத்துரூபாய்
தேற்றிவிட்டுப்
போய் அமர்ந்த
அந்தப் பிச்சைக்காரனிடம்
தெரிகிறது
ஒரு
அரசனின் கம்பீரம் !

ஒரு ரூபாய்
கொடுத்தாலும்
அதைக் கண்ணில் ஒற்றி
வாங்கிக் கொள்கிறவனே
உண்மையான
பிச்சைக்காரன் !

கால்கள் இழந்த
அந்தப்
பிச்சைக்காரனுக்கு
தற்காலிகமாக
சிறகுகள்
தர நினைக்கிறீர்களா ?
ஒரு ஐந்துரூபாய்
கொடுங்களேன் !

அந்தப்
பேருந்து நிறுத்தத்தில்
அந்தச் சிறுமி
தினமும்
வருபவர்களிடம்
பிச்சை கேட்பதில்லை !
பிச்சை தர்மம் !

அந்த
திரையரங்கு வாசலில்
எப்போதும்
அமர்ந்திருக்கும்
அந்த
பிச்சைக்காரக் கிழவியை
வெகு நாட்களாகக்
காணவில்லை !
ச்சே !
பத்து ரூபாயாவது
கொடுத்திருக்கலாம் !

எவ்வளவு
பாவமாகத்
தெரிந்தாலும்
சாப்பிடும் போது
தந்திரமாக வந்து
பிச்சை கேட்பவன்மீது
கோபம்
வரத்தான் வருகிறது !

பிச்சைக்காரன்
வரும் போது
சில்லறை
இருப்பதில்லை !
சில்லறை
இருக்கும்போது
பிச்சைக்காரன்
வருவதில்லை !

இங்கு
பெரும்பாலான
பிச்சை போடுதல்கள்
இரக்கப்பட்டு
நிகழ்வதில்லை !
தொல்லை
விட்டால் போதும் என்றே
நிகழ்கின்றன !

ஒருவகையில்
உலகிலேயே
மிகக் கடினமான வேலை
பிச்சையெடுத்தல் தான் !

நீங்கள்
உணவு வாங்கித்
தரும்போது
அந்தப் பிச்சைக்காரனுக்கு
பசியில்லாமல் 
இருக்கலாம் !
அவனுக்குப்
பசியெடுக்கும் போது
உங்கள் உணவு
கெட்டுப் போயிருக்கலாம் !
ஆகவே,
முடிந்தவரை
காசாகவே
கொடுத்து விடுங்கள் !

சாமி
கும்பிடுவதை விட
பிச்சைக்காரர்களுக்கு
காசு போடுவதற்காகவே
கோவிலுக்குப்
போய்ப் பாருங்கள் !
வரம்,
சீக்கிரம் கிடைக்கும் !

இந்தியா
பிச்சைக்காரர்கள்
மலிந்த நாடு
என்பதற்காக
நாம்
தலைகுனிய
வேண்டியதில்லை !
திருடர்களை விட
பிச்சைக்காரர்கள்
எவ்வளவோ மேல் !

ஏங்கிக்கிடப்பதும்
காத்திருத்தலும்
கெஞ்சிக் கேட்பதும்தான்
பிச்சை என்றால்
நாமும்
ஒருவகையில்
பிச்சைக்காரர்கள்தான் ! 





Friday, November 23, 2012

 குறிப்பு : இந்தக் கவிதை இந்தக் கால இளைஞர்களுக்கானது அல்ல



கல்லூரித்தோழி 




திருமணம் அறிவித்த
நண்பனிடம்
எதேச்சையாகத்தான்
அந்த
அலைபேசி எண்
கிடைத்தது !

திருமணம்
ஆகிவிட்டதாம்
அவளுக்கு !

அழைக்கக் கூட
இல்லை !

அவளைச் சொல்லியும்
குற்றமில்லை !

அலைபேசி
அவ்வளவாக
அறிமுகம்
ஆகாத காலத்தில்
கல்லூரி பயின்றவர்கள்
நாங்கள் !

தேடித்தேடித்தான்
தொடர்புகளை
புதுப்பிக்க
வேண்டியதிருக்கிறது !

கன்னமெல்லாம்
சதைபோட்டு
கண்ணாடி போட்ட
குண்டான பெண்ணாக
அவளை
நினைத்துப் பார்த்தேன் !
சிரிப்பு வந்தது !

இழந்து விட்ட
பிள்ளைப்பருவ
மகிழ்ச்சிகளை 
நாங்கள் மீட்டெடுத்த
அந்தத் தருணங்கள்
எவ்வளவு உன்னதமானவை !

ஆண் பெண்
பேதமின்றி
நாங்கள்
அடித்து விளையாடிக் கொண்ட 
அந்த நாட்கள்
எவ்வளவு அழகானவை !

ஒவ்வொரு
தோழியிலும்
ஒரு
சகோதரியைக் கண்ட
புனிதமான
காலமல்லவா அது !

இப்படி ஒருநாள்
தொடர்பற்றுத்
தொலைந்து போவோம்
என்றுதான்
அந்தக் கடைசிநாளில்
அவள்
அதிகம் அழுதாளோ ?

அவள்
மதிய உணவைப்
பிடுங்கித் தின்னும்
அந்த பாக்கியம்
இனிமேலும் கிட்டுமா ?

அழைத்து விட்டு
எதிர்முனை
எடுக்கக்
காத்திருந்த போது
பதட்டமாக இருந்தது !

எடுத்தது
அவளே தான் !

அலைபேசி வழியே
ஒலித்த போதும்
அப்படியொன்றும்
அதிகம்
மாறிவிடவில்லை
அந்தக் குரல் !

யார் வேணும் ?  என்றாள்
குழப்பமாக !

கல்லூரியைச் சொல்லி
பெயரைச் சொன்னேன் !

சட்டென்று
உற்சாகமாகித்
தீப்பற்றிக் கொண்டது
எதிர்முனை !

என் பெயரை
அவள் அங்கே
கூவிய போது
இங்கே
எட்டிப் பார்த்த
இரண்டு
கண்ணீர்த்துளிகள்
எங்கள்
நட்பின் அடையாளம் !

திருமணத்திற்கு
அழைக்காதது குறித்து
வருத்தப் பட்டேன் !

பதிவுத் திருமணம்
என்பதால் 
அழைக்க முடியவில்லையென 
அங்கலாய்த்தாள்   !

அவள்
காதலித்ததை
என்னால்
நம்ப முடியவில்லை !

" நீயா நீயா " என்று
நூறுமுறை கேட்டேன் !

" ஆமாண்டா
மரமண்டை ! " என்று
அங்கிருந்தே
கொட்டு  வைத்தாள் !

சட்டென்று,
என் திருமணம்
குறித்துக் கேட்டாள்
தாயின் பரிவோடு !

ஒரு பெண்
பார்க்கச்சொல்லி
அவளிடமே சொன்னேன் !

வருங்காலத்தில்
அவள் பையனுக்கும்
என் பெண்ணுக்கும்
திருமணம்
செய்து வைப்பது என
விளையாட்டாய்ப்
பேசிக் கொண்டோம் !

தொடர்ந்து நாங்கள்
பேசிக் கொண்டிருந்ததில்
எப்படிப் போனதோ
அந்த
அரைமணிநேரம் !

இழந்து விட்ட
ஒரு வசந்தம்
தற்காலிகமாகத்
திரும்பக் கிடைத்தது
போலிருந்தது !

அந்த நண்பனின்
திருமணத்திற்கு
குடும்பத்தோடு 
வருவதாகச் சொல்லி
விடை பெற்றபோது
ஏனோ
அவள் குரல்
கரகரத்தது !

தொலைத்து விட்ட
ஒரு நண்பனையோ
ஒரு தோழியையோ
எந்தத் திருமணத்திலாவது 
பார்த்துவிட மாட்டோமா
எனக் காத்திருக்கும்
சில கோடிப்பேரில்
ஒருவனாக 
நானும் காத்திருக்கிறேன்
அந்த
நண்பனின் திருமணத்திற்கு !!!



Tuesday, November 20, 2012

வேலை







அன்றொருநாள்
காலங்காலையில்
வெயில் கொஞ்சம்
எடுப்பாயிருந்தது  !
எழுவதை நினைத்தாலே
மண்டைக்குள் சற்று
கடுப்பாயிருந்தது !
ஞாயிறு என்பதால்
அன்று அலுவலுக்கு
விடுப்பாயிருந்தது  !
மனமெல்லாம் 
புதிய கதாநாயகியின்
இடுப்பாயிருந்தது !

திடுப்பென்று
ஏதோ பாடலை
அலைபேசி
உளறியது !
வஞ்சகமில்லாமல்
வயிற்றெரிச்சலைக்
கிளறியது !

இந்த நேரத்தில்
எந்த மூதேவி
கூப்பிடுகிறான் ?
 விடுமுறைப் பொழுதை  - ஏன் இப்படி
விவஸ்த்தையில்லாமல்
சாப்பிடுகிறான் ?

எடுத்தால்
எதிர்முனையில்
மேலதிகாரி !

இந்தாள் எதற்கு
இப்போது
அழைக்கிறான் ?
விடுமுறை நாளிலும்
இவன் ஏன்
இப்படி
உழைக்கிறான் ?

" ஐயா "   என்றேன்
வேண்டா வெறுப்பாய்
அவனை வணங்கி !
" சொல்லுங்கள் " என்றேன்
வேலையை நினைத்து
மனதிற்குள் சுணங்கி !

பழுதாகி விட்டதாம்
ஆலையில் ஒரு
கருவி !
கேட்டதும்
சிறகொடிந்தது என்
உற்சாகம் எனும்
குருவி !

இப்போதே போய்ப்
பார்க்க வேண்டுமாம்
அந்தப் பழுதை !
அலைபேசியில்
ஆணையிட்டது
அந்தக் கழுதை !

உடனடியாக

ரத்து செய்தேன்
அந்நாளின்
நிகழ்ச்சிகளை !
புதைத்துக் கொண்டேன்
வாரயிறுதியின்
மகிழ்ச்சிகளை !

மதுவருந்தக்
கூப்பிட்ட நண்பன்
தகாத வார்த்தைகளால்
திட்டினான் !
காத்திருந்த காதலி
அங்கிருந்தே தலையில்
குட்டினாள்  !

அவர்களின்
கோப நோய்க்கு
காரணம் எனும்
சூரணம் தந்து,

ஆலையை
அடைந்தேன் !
கருவியைக் கண்டதும்
உள்ளுக்குள்
உடைந்தேன் !

அங்கே,

ஏற்கனவே
இரண்டு பேர்
வேர்த்திருந்தார்கள் !
பழுது என்னவென்று
அவர்களும் கொஞ்சம்
பார்த்திருந்தார்கள் !

ஒன்றும்
பெயரவில்லை !
ஆனாலும் நான்
அயரவில்லை !

கருவியைப்
பிரித்தேன் !
கடையை
விரித்தேன் !

பகல் முழுக்க
செய்தேன்
ஆய்வை !
ஒரு நிமிடமும்
எடுக்க வில்லை
ஓய்வை !

பிரம்ம
பிரயத்தனப் பட்டு
பிரச்சனையின்
வேரைக் கண்டறிந்தபோது
பளிச்சென்று தெரிந்தது
உலகம் !

அப்புறம்
எளிதாக
கருவியின் பழுது
நீங்கி  விட்டது !
மகிழ்ச்சியில்
இதயம் சற்று,
வீங்கி விட்டது !

கேள்விப் பட்ட
மேலதிகாரி
துள்ளினார் !
பாராட்டுக்களைக்
கைநிறைய
எனக்காக
அள்ளினார் !

வேலை முடித்து
ஆலை விட்டு
வெளியே வந்தால்
உன்னதமாய்த் தெரிந்தது
உலகம் !

எதிரே வந்த
இளம்பெண்
புன்னகைத்தாள்  !

இரண்டு மடங்காய்
தேநீர்
சுவைத்தது !

பிடித்த
திரைப்படத்தை
தொலைகாட்சியில்
போட்டார்கள் !

களிப்பு தந்தது
காதலியின் பேச்சு !

நிறைவாய்
இருந்தது
இரவு உணவு !

அட்டகாசமாய்
வந்தது
ஆழ்ந்த உறக்கம் !

இது நடந்து
இரண்டு நாட்கள்
கழித்து,

ஏதோ நண்பன்
அலைபேசியில்
வேலை பற்றி
வினவினான் !

நான் சொன்னேன்,

" நாய்ப் பொழப்பு
மச்சி  !  "

இக்கவிதையால் அறியப்படும் நீதி :

எவரெவர்
எவ்வேலை செய்யினும்
அவரவர்க்கு
அவ்வேலை கடுப்பே !


Thursday, November 8, 2012

 பயணம்




இந்த தீபாவளிக்கு
ஊருக்குப் போகத்தான்
வேண்டுமா ?

மூன்று மாதங்களுக்கு
முன்னரே
முடிந்து விட்டன
புகைவண்டி
முன் பதிவுகள் !

சென்ற வாரத்தின்
ஒரு நாளில்
ஒரே மணிநேரத்தில்
விற்றுத் தீர்ந்தனவாம்
பேருந்துகளின்
அனைத்து இருக்கைகளும் !

ஒற்றைக் காலில்
நின்று கொண்டே
எட்டு  மணிநேரப்
பயணம்தான்
இனி சாத்தியம் !

அப்படிப்
போய்த்தான்
என்ன
ஆகப் போகிறது ?

மூன்று நாள்
விடுமுறையில்
பயணக்களைப்பிற்கு
முதல் நாள் !
பயணத் தயாரிப்பிற்கு
மூன்றாம் நாள் !
நடுவேயுள்ள
இரண்டாம் நாளில்தான்
தொலைக்காட்சி
பார்த்தலும்,
பலகாரம் ருசித்தலும்  !

பலகாரம்தான்
பண்டிகை என்றால்
இருக்கவே
இருக்கிறது
இங்கே
அர்ச்சனா பேக்கிரி !

கொஞ்சம்
மளிகைப் பொருட்களை
முன்கூட்டியே
வாங்கி வைத்தால்
உணவு விடுதிகளின்
ஒருவார விடுமுறையை
ஓரளவு சமாளிக்கலாம் !

கேஸ்
தீராமல் இருக்க வேண்டும் !

அறை
காலியாகத்தான்
இருக்கும் !

பீட்டரிடம்
கேட்டால்
பலான சிடிக்கள்
தருவான் !

ஏகபோகமாக
ஏகாந்தத்தை
அனுபவிக்கலாம் !

நான் ஒருவன்
ஊருக்குப் போகாததால்
உலகம்
அழிந்து  விடுமா
என்ன !

பால்ய நண்பர்களில்
பலருக்குத்
திருமணம் ஆகிவிட்டது !

அக்கா மகளோ
அத்தை மகளோ
எதிர்வீட்டு தேவைதையோ
யாரும் இல்லை !

இப்போதெல்லாம்
ஊருக்குப் போவதில்
மிஞ்சுவது
உடல் வலியும் 
உறக்கமிமையும் தான் !

எளிதாக
அப்பாவை
சமாளித்து விடலாம் !

ஆனால் .........

என்ன பலகாரம்
செய்வது என
ஒருவாரமாக
அலைபேசியில்
கேட்டுக் கொண்டேயிருக்கும்
அம்மாவை,

வாசலிலேயே
அமர்ந்து
வருகையை
எதிர்நோக்கியிருக்கும்
அம்மாவை,

இரண்டு மாத
கவனிப்பை
இரண்டே நாளில்
நடத்தி விடத்துடிக்கும்
அம்மாவை ,

இன்னமும்
புத்தாடை
அணிந்து நின்றால்
நெட்டி முறித்து
திருஷ்டி கழிக்கும்
அம்மாவை ,

பாசப்பசிக்கு
பதார்த்தங்களின்
வடிவில்
அன்பைப் பரிமாறும்
அம்மாவை,

எப்படி
சமாளிப்பது ?

பண்டிகை நாளில்
ஓடி ஓடி
பிள்ளைகளை
கவனிப்பதில் தானே
தன் வாழ்வை
அர்த்தப் படுத்திக்
கொள்கிறாள்
இங்கே
ஒவ்வொரு அம்மாவும் !

உண்மையில்
பண்டிகைகள்
ஏற்படுத்தப் பட்டது
கொண்டாட்டங்களுக்காக
அல்ல !
அம்மாக்களுக்காக !

அந்த நாளை
முழுமையாக
ஆள்பவர்கள்
அவர்கள்தான் !

எந்தப்
பேருந்தையாவது
பிடித்து
எப்படியும்
தன்மகன்
வந்து விடுவான் என
எங்கேயும் ஒருதாய்
எப்போதும்
காத்துக் கொண்டே
இருக்கிறாள் !

கடைசித் தருணத்தில்
மனது மாறி
நம்பிக்கையில்லாமல் தான்
இணையத்தில்
முயன்று பார்த்தேன் !
ஏதோ ஒரு
பேருந்தில்
ஏதோ ஒரு இருக்கை
காலியாக இருந்தது !  

 

Friday, November 2, 2012

படைப்பு





ச்சை !
சத்தியமாய்
அது ஒரு
படமில்லை !
அந்த நடிகனுக்கு
இனி என் மனதில்
இடமில்லை !

வெடித்தே விட்டது
தலை !
வெறுத்தே விட்டது
கலை !

அந்த இயக்குநனுக்கு
சுத்தமாய் இல்லை
டேஸ்ட் !
மொத்தமாய்
மூன்று மணிநேரம்
வேஸ்ட் !

இடைவேளை
வருவதற்குள்
முடிந்து விட்டன
இரண்டு மூன்று
யுகங்கள் !
கடித்துத் துப்பியே
காணாமல் போயின
கைவிரலின்
நகங்கள் !

ஆறுதல்
தரவில்லை
பாட்டு கூட !
அதை விட
இனிமையாய்
ஒலிக்கும்
தீபாவளி வேட்டு கூட !

படம் பார்த்தே
பலருக்கு வந்தது
காய்ச்சல் !
படம் முடிந்ததும்
தியேட்டரை விட்டு
அனைவரும் ஒரே
பாய்ச்சல் !

சத்தியமாய்
அது இல்லை
சினிமா !
சொல்லப்போனால்
அது
மூன்று மணிநேர
எனிமா !

போய் விட்டது
முன்னூறு ரூபாய்
தண்டமாக !
அரங்கை விட்டு
வெளியே வந்தோம்
கழுத்தறுந்து
முண்டமாக !

தன் பங்கை
நண்பன்
நிச்சயமாக
தருவானா ?
இனி நான்
படத்திற்குக்
கூப்பிட்டால்
வருவானா ?

இணையத்தில்
கண்டபடி
கிழித்திருந்தார்கள் !
மொத்த மதிப்பெண்ணில்
எண்பது விழுக்காட்டைக்
கழித்திருந்தார்கள் !

முன்னரே
விமர்சனத்தை
வாசித்திருக்கலாம் !
போவதற்கு முன்
கொஞ்சமாவது
யோசித்திருக்கலாம் !

ஒரு வழியாய்
வீடு வந்தபோது,
சோர்ந்து அமர்ந்திருந்தான்
சித்தப்பா பையன் !

அவனுக்கு
வயது
பத்து தான் !
படிப்பில் அவன்
சுடர்விடும்
முத்து தான் !

கேட்டதில்
பள்ளியில் ஏதோ
போட்டியாம் !
ஓவியம்
வரைய வேண்டுமாம் !

" ப்பூ.... இவ்வளவுதானா ?
கண்ணா ..........
நான்
கரைத்துக்
குடித்தவன்
கலைமகள் எழுதிய
காவியத்தை !
இதோ தீட்டுகிறேன்
காகிதத்தில்
ஓவியத்தை ! "            என்றேன்


" பெண்ணை
வரையலாமா ?  "
என்றதற்கு,
" சரி " என்றான்
சுட்டிப் பையன் !

மகிழ்ச்சியில்
வாயில் வரவில்லை
வாக்கியம் !
கிடைத்தது
காதலியை வரையும்
பாக்கியம் !

எடுத்தேன்
காகிதத்தை !
தொடுத்தேன்
பேனா எனும்
ஆயுதத்தை !

முதலில் முகம் !
வட்டமாய்
வரைய நினைத்து
கொஞ்சம்
நீள்வட்டமாய்ப்
போய் விட்டது !
முகம்,
வட்டமாய்த் தான்
இருக்கவேண்டும் என்று
சட்டமா என்ன !

பிறை நிலா போல
வரைய முனைந்தேன்
நெற்றியை ! 
வெற்றி கிட்டவில்லை !

அடுத்து கண் !
அதையாவது
அழகாய் வரையும்
என் நினைப்பில்
விழுந்தது மண் !
மை கொட்டி
அங்கே  ஆனது
புள்ளியாய்
ஒரு புண் !

மச்சம் என்று
சொல்லி
சமாளித்து விடலாம் !

அடுத்து ,
புருவம் கொஞ்சம்
நீண்டு விட்டது !
உயிரிழந்து
அந்த ஓவியம்
மாண்டு விட்டது !

அடுத்தது மூக்கு !
அச்சச்சோ !
பெரிதாகப்
போய் விட்டதே
ஓட்டை !
விட்டு விடுவேனோ
நான்
ஓவியத்தில்
கோட்டை !

அடுத்து
வாய் ஆனது
சப்பையாக !
எறியத்தான் வேண்டும்
இனி
இக்காகிதத்தைக்
குப்பையாக !

ஒரு நப்பாசையில்
வரைந்த ஓவியத்தை
தம்பிப்பயலிடம்
காட்டினேன் !

அவன்
ஒரே வார்த்தையில்
சொன்னான் !

" ச்சீச்சீ.....
இந்தப் படம்
நல்லாயில்ல "

வெறும்
அரைமணிநேர
சிரத்தை தான் !
ஆனாலும்
ஆனாலும்
அது
வலித்தது !







Monday, October 29, 2012

இரயில் பயணம்





அந்தப் புகைவண்டியின்
உள்ளே
கூட்டமிருந்தது !
ஒவ்வொருவனிடத்தும்
ஏதோவொரு
வாட்டமிருந்தது !
ஓரமாய் ஓரிடத்தில்
இளைஞர்களின்
ஆட்டமிருந்தது !
பெண்களைத்
தேடுவதிலேயே எனது
நாட்டமிருந்தது !

எவளாவது
சிக்குவாளா ?
கண்வழியே
காமத்தைக்
கக்குவாளா ?

முதலில்
சீட்டு !
பிறகுதான்
மன்மதனின்
பாட்டு !

கழுவி வைத்த
பாத்திரத்தில்
பருக்கையைத்
தேடுவது போல
நான் எனக்கான
இருக்கையைத்
தேடினேன் !

அதிர்ந்தேன் !
அடுக்கி வைத்த
ஆசைகளோடு
அப்படியே
உதிர்ந்தேன் !

உழைத்து
உழைத்து
ஓடாய்ப் போன
உழவன் போல
ஒரு கிழவன் !

நெறி பிறழாத
சத்தியன் போல
ஒரு மத்தியன் !

கணவனின்
வசவுகளையெல்லாம்
வெகுமதியாகக் கருதும்
ஒரு திருமதி !

தலை நரைத்த
சீமாட்டியாய்
ஒரு மூதாட்டி !

சீருடையணிந்த
ராணுவன் போல
ஒரு மாணவன் !

சம்பாதிப்பிலேயே
சிந்தை செலுத்தும்
ஒரு தந்தை !

அப்புறம்
ஒரு பாப்பா !

அடங்கொன்னியா !

இளசான ஒரு
பெண்ணைப் பார்த்து
அவளது
எண்ணை வாங்கலாம்
என்ற நினைப்பில்
மண்ணைப் போட்டானே
மகாதேவன் !

மூன்று மணிநேரமும்
போரடிப்பதா ?
இந்த மொக்கைகளைக்
கட்டிக் கொண்டு
மாரடிப்பதா ?

எனக்கு மட்டும்
பெண்களின் சூழலே
வாய்ப்பதில்லை !
என் குரலென்றால்
இந்த இறைவன்
செவியையே
சாய்ப்பதில்லை !

எதிரில்
பெண் இருந்தால்
நானென்ன
தின்றா விடுவேன் ?
கலாச்சாரத்தைக்
கழுத்தை நெரித்துக்
கொன்றா விடுவேன் ?

சில பார்வைகள்
சில புன்னகைகள்
பிறகு
 நல விசாரிப்பு !
அப்புறம் முடிந்தால்
குல விசாரிப்பு !

அவ்வளவுதானே !

அதற்குக் கூட
எனக்குத்
தகுதியில்லையா ?
மன்மதன் நாட்டில்
எனக்கென்று ஒரு
தொகுதியில்லையா ?

வெகுதிடீரென
வீரிட்டழுதது
பக்கத்திலிருந்த
பாப்பா !

தோ தோ
தோ என்றான்
தகப்பன் !

அங்கே இங்கே
என்று
அனைத்தையும்
வேடிக்கை காட்டினான் !

அன்னையின்
நினைப்பு வந்திட்ட
குழந்தைக்கு
அகிலத்தையே
வேடிக்கை காட்டினும்
அழுகையை நிறுத்துமா ?

அது
இன்னும் அழுதது
உரத்து !
அதிகரித்துக் கொண்டே
போனது
கண்ணீரின் வரத்து !

" மாமா பாரு
மாமா பாரு ! "
என
என்னைக் காட்டினான்
அந்தத் தகப்பன் !

இது வேறா ?

நான்
அசடு வழிந்தேன் !

குழந்தை
என்னையே
பார்த்தது
உற்று !
அழுகைக்கு
வைத்தது
அவசரமாய் ஒரு
முற்று !

குழந்தை
பிஞ்சுக் கையால்
தப் பென்று
 என் முகத்தில்
அடித்தது !
தாவி என்னைக்
கட்டிக் கொள்ளத்
துடித்தது !

அனைவரும்
அடியேனையே
பார்த்தனர் !

இப்போது
இக்குழந்தையை
வாங்கத்தான் வேண்டும் !
அதன் கனத்தை
கொஞ்சநேரமாவது
மடியினில்
தாங்கத்தான் வேண்டும் !

வாங்கிக் கொண்டேன் !

குழந்தை
 மடியில்
அமர்ந்து கொண்டது
பாந்தமாக !
அனைவரையும்
வேடிக்கை பார்த்தது
சாந்தமாக !

அதுவரையில்
மனதிலிருந்த வெம்மை
சட்டென்று
ஆறிப் போனது !
சகலமும்
ஒரு நொடியில்
மாறிப் போனது !

தெய்வத்தின்
ஸ்பரிசம்
இப்படித்தான்
இருக்குமோ ?

புகைவண்டியின்
தடதடப்பு !
குழந்தை தந்த
கதகதப்பு !
பரவசத்தின்
மதமதப்பு !

சத்தியமாய்
கிறங்கி விட்டேன் !
என்னையறியாமல்
உறங்கி விட்டேன் !

திடுக்கிட்டு
விழித்தால்
இறங்க வேண்டிய
இடம் வர
இரண்டு நிமிடமிருந்தது !

பக்கத்து
இருக்கை
காலியாக இருந்தது !

விடைபெறாமல்
போய் விட்டேனே
சற்று முன்னர்
என்னைத் தாலாட்டித்
தூங்க வைத்த
அந்த குட்டித் தாயிடம் !!!






Thursday, October 25, 2012

ரயில் சினேகிதி 





சட்டென்று
எனக்குள்
சகலமும்
வெளிச்சமாகி
விடுகின்றன,
எதற்கோ புன்னகைத்தபடி
எதிரே வந்தமர்ந்த
அவளைப் பார்த்ததும் !

கோழிக்குஞ்சை
உள்ளங்கையில்
பொத்திக் கொண்டால்
எப்படியிருக்குமோ
அப்படியிருக்கிறது
என் காதுகளுக்கு
யாருடனோ பேசியபடி
அவள் சிரிப்பது !

வேடிக்கை பார்த்தபடி
பூ விரல்களால்
அவள் கழுத்தை
அவளே
வருடிக் கொள்கிறாள் !
இங்கே எனக்கு
சொக்குகிறது !

எப்படியும்
நிமிர்ந்து என்னைப்
பார்த்து விடுவாள்
என்ற நம்பிக்கையில் தான்
எழுந்து போய்
காசு போடுகிறேன்
அந்த
குருட்டுப் பிச்சைக்காரனுக்கு !

இளஞ்சிவப்பு
நெயில் பாசிஷ்
தடவிய
அவள் பாதங்களைப்
பார்த்துக் கொண்டிருக்கறேன்,
சட்டென்று
கதை பேச
ஆரம்பிக்கின்றன
அந்தப் பாதங்கள்
என்னோடு !

நீர் குடிப்பதற்காக
அந்த வாட்டர் பாட்டிலின்
மூடியை
மென்மையாக
மிக மென்மையாக
அவள் திருகுகிறாள்,
தேவராகம்
கேட்டது போல
இன்பமாக அதிர்கிறது
என் பின்னங்கழுத்து !

பற்ற வைத்த
அணுகுண்டு
எப்போது வெடிக்குமென
பதைப்போடு
பார்ப்பது போலப்
பார்க்கிறேன்
உறக்கத்தில்
இமை மூடிய
அவள் விழிகளை !

அவளை விட
அழகான ஒருத்தி
அங்கே வந்து நின்றாலும்
அந்த அழகியைப்
பார்க்க விடாமல்
ஏதோ ஒரு கற்பு
உள்ளுக்குள்ளே தடுக்கிறது
என்றால்
அந்த கணத்தில்
எனக்கும் அவளுக்கும்
 என்ன உறவு ???






Saturday, October 13, 2012

பிரிந்த காதலி





 
அவளை
அந்தப் பேருந்தில்
பார்ப்பேனென்று
நான் நினைக்கவில்லை !

அவள்
அப்படியே தானிருந்தாள் !

காதோரத்தில்
அதே
சுருண்ட முடி !

தலைகுளித்த
அதே
ஒற்றைப் பின்னல் !

சூடப்பட்ட
அதே
ஒற்றை ரோஜா !

அந்த
பச்சை நிற
சுடிதாரை
எனக்குப்
பரிச்சையமிருக்கிறது !

மெட்டியில்லா
அவள்
பாதங்களைக் கண்டு
நான் ஏன்
ஆறுதல் அடைகிறேன் ?

மனதுக்குள்
மீண்டும்
மழை பெய்ய
ஆரம்பித்தது !

வருஷங்கள்
கடந்தும்
என்னைச் சுற்றி
மீண்டும் ஒரு
வசந்தம் குட்டியாய் !

அவள்
இன்னும் என்னைப்
பார்க்கவில்லை !

திறந்திருந்த
ஜன்னலில்
வெளியை
வெறித்துக் கொண்டிருந்தாள் !

இப்போதெல்லாம்
அவள்
இசை கேட்பதில்லை
போலும் !

இறுதியாக
நிகழ்ந்த
அந்த கடைசிச்சந்திப்பு
ஆயுளுக்கும்
மறக்காது !

என்னருகே
ஒட்டிநின்ற
அந்த பருவப்பெண்ணை
உரசாமல்
எவ்வளவு முடியுமோ
அவ்வளவு
விலகி நின்றேன் !

ஏதோ
எங்கள்
பழைய காதலுக்கு
நான் செலுத்தும்
என்னால் இயன்ற
மரியாதை !

சுற்றிலுமிருந்த
ஆண்களிடமிருந்து
தன் காதலியை
அடைகாத்துக் கொண்டிருந்தான்
ஒரு காதலன் !

சட்டென்று
அவனுக்காக
என் கண்கள்
ஈரமாயின !

ஒருகாலத்தில்
நானும்
என் காதலியை
அப்படி
அடைகாத்தவன் தான் !

பிரிந்த
காரணங்களைப்
பட்டியல் போட
விருப்பமில்லை !

ஏதோ
நிறுத்தத்தில்
பேருந்து நின்றது !

அவள்
இன்னும் திரும்பவில்லை !

நடத்துனர்
விசில் ஊதினார் !

உள்ளுணர்வு
சொல்லியிருக்கவேண்டும் !
சட்டென்று
அவள்  திரும்பி
என்னைப்
பார்த்து விட்டாள் !

அட சட் !

அது
அவளில்லை !

அவளைப் போன்ற
 சாயலில்
எவளோ !

கொஞ்சம்
நிம்மதியாகக் கூட
இருந்தது !

பெருமூச்சு
விட்டேன் !

பேருந்து
ஓடிக்கொண்டிருந்தது !

பழையபடி
திரும்பிக் கொண்டாள்
அவளைப் போலிருந்த
அந்த அவள் !

அவசரப் பட்டு
அந்த
அலைபேசி எண்ணை
அழித்திருக்க வேண்டாம் !


என்றாவது ஒருநாள்
பார்த்து விடலாமென்று
பார்ப்பவர்களிடமெல்லாம்
தேடிக் கொண்டிருக்கிறாளோ
என்னைப் போலவே
அவளும் !

Tuesday, October 9, 2012

வேதாளம்





அது ஒரு
விரும்பத்தகாத
விபத்து !
விளையாடிவிட்டது
விதி வாழ்வில்
உரத்து !
வற்றி விட்டது
உடம்பில்
சுரத்து !
குறைந்து விட்டது
குருதியின்
வரத்து !

உடைந்து விட்டது
எலும்பு !
அடங்கி விட்டது
அலும்பு !

ஒரு எட்டு கூட
நடக்க முடியவில்லை !
துணையின்றி
இம்மியளவும்
கடக்க முடியவில்லை !
பாழும் உடம்பை
மூலையில் போய்
முடக்க முடியவில்லை !
அழுகை வந்தால்
அணு அளவும்
அடக்க முடியவில்லை !

உணவு
பிடிக்கவில்லை !
காதலி
கசந்து விட்டாள் !
தொலைகாட்சி
திகட்டிப் போனது !
அலைபேசி
அநாதையானது !

அன்று .........
நடந்து என்ன ?

பலநாட்களாக
பின் தொடரப்பட்டவள்
புன்னகைத்து விட்டாளென்று
பார்ட்டி வைத்திருந்தான்
பாழாய்ப் போன நண்பன் !

விருந்தை
மருந்து போல
அருந்தலாமென்றுதான்
போயிருந்தேன் !

போதையில்
கண்ணும் தெரியவில்லை !
மயக்கத்தில்  ஒரு
மண்ணும் தெரியவில்லை !

அளவுக்கு
மீறி விட்டது !
ஒட்டு மொத்தமாய்
ஏறி விட்டது !

வாகனத்தை
அணுகிய போது
குறைவாய்க் குடித்தவன்
உதவ வந்தான் !

அவனிடம்,

" போடா பேமானி
யாரையும் நான்
அண்டியில்லை !
நான் ஒட்டாவிட்டால்
இது என்
வண்டியில்லை ! "

என்று,

நானே
எடுத்தேன் !
எடுத்தவுடன்
வேகத்தைத்
தொடுத்தேன் !

லாரியொன்றை
முந்த நினைத்து,

உள்ளங்கையை
இறுக்கினேன் !
உந்து விசையை
முறுக்கினேன் !

குறுக்குச்சாலை
குறுக்கிட்டதை
கவனிக்கவில்லை !

கடங்கார
கார்க்காரன்
கண்ணிமைக்கும் நொடியில்
காரியத்தைக்
கெடுத்தான் !

அப்புறம்
நடந்தது
நினைவில்லை !

விழித்துப்பார்த்தால்
சுற்றிலும் ஒரே
மருந்தின்
வாசம் !
நல்ல வேளை
உடம்பில்
ஓடிக்கொண்டிருந்தது
சுவாசம் !

வலது காலை
அந்தரத்தில் தூக்கிக்
கட்டியிருந்தார்கள் !
குடித்து விட்டு
ஒட்டியதற்குக்
கண்டபடி
திட்டியிருந்தார்கள் !

ஆறுமாதம்
அஞ்ஞாத வாசம் !

ஒருவழியாய்
மீண்டு வந்து
மீண்டும் அலுவலகம் !

யாவரும்
வருந்தி வருந்தி
நலம்  விசாரித்தார்கள் !
துருவித் துருவி
நடந்த விபத்தின்
குலம் விசாரித்தார்கள் !

" குடித்தேன்
இடித்தேன்
துடித்தேன் " - என
முடித்தேன் !

காலம்
சக்கரமாய்
உருண்டு போனது !
விபத்தின்
ஞாபகம் மனத்திரையில்
இருண்டு போனது !

ஒரு
வியாழக்கிழமை
பார்ட்டிக்கு அழைத்தான்
பக்கத்து இருக்கைக்காரன் !

" அக்கா மகள்
சமைந்து விட்டாளாம் ! "

மறுக்கத்தான்
நினைத்தேன் !
ப்ச் !
முடியவில்லை !



Sunday, October 7, 2012

தோற்றுப் போனவன்






அவன்
அறியப்பட்டான்
உரிமை இழந்த
குடிமை என்று !
உற்றுப் பார்த்தால்
தெரியும்
உண்மையில் அவன்
அடிமை என்று !

அரசைப்
பொறுத்தவரை
அவன் ஒரு
அகதி !
அண்டை நாட்டு
நட்புக் கொடியில்
தெறித்து விட்ட
சகதி !

ஆம்,
அவன்
வேற்று நாட்டு
மண்ணில்
நேற்று நடந்த
போரில்
தோற்றுப் போனவன் !

அவன்
தாய்மொழி கூட
தமிழ் தான் !
அவன் வாழ்வு
நிலையில்லா
நீர்க்குமிழ் தான் !

அவன்
தாய் தந்தையர்
இறந்து விட்டனர்
போரில் !
உறவென்று
யாருமில்லை
அவனுக்குப்
பாரில் !

அவனுக்கு
அடைக்கலம்
கொடுத்தது
சென்னை !
அந்த வகையில்
அதுதான்
அவனது
அன்னை !

அது,
நண்பனொருவனின்
தூரத்து
உறவு !
அதுவும்
மறுக்கப் பட்டிருந்தால்
அடுத்து
அவன் இலக்கு
துறவு !

அவனுக்கென
மாடியில்
ஒதுக்கப்பட்டிருந்தது
ஒரு அறை !
தனிமையை
உணர்த்துவதில்
அது கூட
ஒரு சிறை !

அவனுக்கு
மூன்று வேளையும்
தவறாது
உணவு வரும் !
உண்டுவிட்டுப்
படுத்தால்
உறக்கத்தை
முந்திக்கொண்டு
கனவு வரும் !

அந்தக் கனவுகளில்
முழுக்க முழுக்க
சத்தம் தான் !
ரத்தம் தான் !
யுத்தம் தான் !

ஆனால்
அனைத்தும்
நாளடைவில்
குறைந்து விட்டன !
மனதின் அடியாழத்தில்
அவையாவும்
உறைந்து விட்டன !

அவனிடத்தினின்று
பத்து கல்
தொலைவில் இருந்தது
ஒரு ஆலை !
அங்கு
அவனுக்கும்
கிடைத்தது
ஒரு வேலை !

பணியிடத்தில்
பக்கத்திலேயே
பருவ மொட்டு
ஒருத்தி !
பார்த்துப் பார்த்து
சிரித்தாள்
அவன் மனசையெல்லாம்
இன்பமாய்
வருத்தி !

இவனுக்கும்
காதல்
அரும்பியது !
வேறுதிசை நோக்கி
வாழ்க்கை
திரும்பியது !

ஒரு நாள்
மாலை,

கதவு திறந்ததில்
காலடியில்
கிடந்தது
ஒரு உறை !
பிரித்துப் பார்த்ததில்
உள்ளே
சிவப்பு சிவப்பாய்க்
கறை !

ஆம்,
எவனோ
தன் உதிரத்தை
எழுத்தாக்கியிருந்தான் !

" தோழர் ............."
என்று ஆரம்பித்த
அக்கடிதத்தின்
இறுதி வரி
இப்படியிருந்தது,

" மரம் வீழ்ந்தாலும்
அது விட்டுச்சென்ற
விதைகள்
வீரியம் பெறட்டும்
வீரம் தொடரட்டும்   "

மறுபடியும்
ஒரு போரா ?

நினைத்தாலே
மனதுக்குள்
மூண்டு எழுகிறது
ஆயாசம் !
இப்போதிருக்கும்
வாழ்க்கையோ
தித்திக்கின்ற
பாயாசம் !

" அப்படியானால்
வீழ்ந்தோர்களின்
தியாகமெல்லாம்
வீணாய்ப் போவதா ? "

யாரோ கேட்டார்கள் !

வீழ்ந்தார்கள்
வீழ்ந்தார்கள் என்று
இங்கே
இருப்பவர்களும்
இன்னும் இன்னும்
வீழ்ந்து கொண்டிருந்தால்
நாளை
வாழ்வதற்கு
யாரிருப்பார்கள் ???

அரைநொடி
ஆகவில்லை
அவன்
அக்கடிதத்தைக்
கிழிக்க !
அப்புறம் அவன்
குளியலறை சென்றான்
தன்
நீண்டநாள் தாடியை
மழிக்க !


Thursday, October 4, 2012

பிரம்மச்சாரி - 3





மனமெல்லாம்
ஒரே
குஷ்டமாயிருக்கிறது !
எவளைப் பார்த்தலும்
மனதுக்கு
இஷ்டமாயிருக்கிறது !
வாழ்வென்பதே
பெரும்
கஷ்டமாயிருக்கிறது !

நாங்கள்,
நொந்து நொந்தே
எழுகிறோம்
காலையில் !
கூலிக்கு
மாரடிக்கிறோம்
ஆலையில் !
தனியாகத்தான்
நடக்கிறோம்
வெறிச்சோடிய
சாலையில் !

அரிதாக
சில பெண்கள்
எங்கள் பாதையில்
நடக்கிறார்கள் !
ஒரு தெருவிளக்கைப்
போலெண்ணி
வெறுமனே எங்களைக்
கடக்கிறார்கள் !

அவ்வளவுதான் !

இப்படியே
எவ்வளவு நாள்தான்
ஏங்குவது ?
எத்தனை முறைதான்
கனவிலேயே காதலை
வாங்குவது ?

அநாதையாய்க்
கிடக்கிறது
அலைபேசி !
விற்றுவிடத்தான்
வேண்டும் அதனை
விலை பேசி !

பொறியாளன்
மருத்துவன்
மென்பொருள் வல்லுனன்
இவர்களுக்குத்தான்
இப்போது
வீசுகிறது அலை !
ஒவ்வொருவனும்
சந்தையில்
நல்ல விலை !
நட்டாற்றில் தவிக்கிறது
எங்களைப் போன்ற
நடுத்தரனின் நிலை !

பட்டம்
படித்தவனுக்கு
திருமணம் கூடாதென்று
சட்டம் வந்தாலும்
கட்டம் சரியில்லையென்று
விட்டம் பார்த்தே
வாழ்க்கையைத்
தொலைக்க வேண்டியது தான் !
வேறு என்ன செய்ய ?







Friday, September 21, 2012


 சுஜி வந்திருக்கிறாள் ( சிறுகதை )




சுஜித்ரா, முன்னைக்கு இப்போது கொஞ்சம் பொலிவோடு இருந்தாள். தோலில் மினுமினுப்பு ஏறியிருந்தது. ஆரம்பத்தில் அவள் மாநிறமாய் இருந்தவள் என்பதே மறந்து போய், அவள் இயல்பான நிறமே சிவப்பு தான் என்பது போல இப்போது ஆகிவிட்டிருந்தாள். எல்லாம் கர்ணாவைக் கைபிடித்த பிறகு வந்த தேஜஸ். திக்குத் தெரியாத காட்டில், கரடுமுரடு பாதையில் பயணித்துக் கொண்டிருந்தவளை, சட்டென்று யாரோ கைப்பிடித்து இழுத்து வந்து சொர்க்கத்தில் போட்டது போல இருந்தது. கர்ணாவைத் திருமணம் செய்து கொண்ட போது, சுஜித்ராவுக்கு வயது இருபத்தி ஐந்து. சுஜி, தன் மூக்குக்கண்ணாடியை நன்றாகப் பொருத்திக் கொண்டாள். இப்போதெல்லாம் இது இல்லாமல் நன்றாகக் கண் தெரிவதில்லை. வயது நாற்பதை நெருங்குகிறதல்லவா ! ஆனாலும், அவளைக் கடக்கும் ஆண்கள் ஒருகணம் அவளை உற்றுப் பார்த்துவிட்டே கடப்பதில் அவளுக்கு உள்ளூரப் பெருமிதம் தான். பெருமிதமில்லை என்று உண்மையைப் பூசி மெழுகுவானேன் ? கர்ணாவுக்கு இதுபோன்ற அபத்தங்கள் பிடிப்பதில்லை. அவன் அவளை மிக மிக சுதந்திரமாக வைத்திருக்கிறான்.

சுஜி, கர்ணா, அப்புறம் அவர்களின் அழகான தாம்பத்தியத்திற்குப் பரிசாக அபர்ணா ! அப்படியே கர்ணாவை உரித்துக் கொண்டு ! பிளஸ் ஓன் படிக்கிறாள். சுஜி, பேருந்தில் இருந்து இறங்கினாள். " குப்பிச்சி பாளையம் " என்று மஞ்சள் போர்டில் கருப்பு மையில் எழுதப்பட்ட, சிதிலமடைந்த எழுத்துக்கள் அவளை வரவேற்றன. குப்பிச்சி பாளையம் இன்னும் அப்படியே தானிருக்கிறது. அதோ, அந்த வடக்கே தென்னந்தோப்பை ஒட்டி இருக்கும் அந்த முனியப்பன் கோவில், கிழக்கே, சலசல வென்று ஓடும் வாய்க்கால், அந்த அரச மரம், எதுவுமே எதுவுமே மாறவில்லை, ஒரேயொரு செல்போன் டவர் மட்டும் புதிதாக இருந்தது. அப்புறம் தார் சாலை, தெருவிளக்குகளோடு கூடிய மின் கம்பங்கள்........... ம்ம்ம்ம் அந்த சிறிய கிராமம், முன்னைக்கு இப்போது எவ்வளவோ பொலிவடைந்து இருக்கிறது தன்னைப் போலவே ! சுஜி , ஒரு ஆழமான பெருமூச்சை விட்டாள். மெல்ல நடந்தாள்.

ஒருகாலத்தில் அவள் ஓடியாடிய இடம் ! அவளது அம்மா, அப்பா, அண்ணன், பெரியப்பா, என அனைத்து சொந்தங்களும் அங்குதானிருந்தன. அம்மா அப்பா பெரியப்பா என அனைவரும் காலமாகி விட்டார்கள் என்று ரங்கசாமி  மாமா மூலம் " சேதி " அறிந்து கொண்டதோடு சரி ! சாவுக்கு வரவில்லை. " நாஞ் செத்தாலும் வராத " என்று மண்ணை வாரித் தூற்றியடித்தவள் தானே அவள் தாய் ! ஆனாலும், அவள் சபித்தது போல தன் வாழ்வு ஒன்று அப்படி சீர்கெட்டுப் போய் விடவில்லையே ! சொல்லப்போனால், தான் நன்றாகவே இருக்கிறோமே ! என்று இறுமாப்பாக சுஜி நினைத்துக் கொண்டு வைராக்கியமாக பெத்தவள் சாவுக்குப் போகாமல் இருந்தாலும், அன்றிரவு அவளுக்கு தாயின் நினைவு வந்து விட்டது.  " பொழுது போன நேரத்துல வெளிய சுத்தாதடி  " என்ற அம்மாவெள்ளிக்கிழமையானால் சீகக்காய்  அரைத்து பரக் பரக் என்று தலைக்குத் தேய்த்துக் குளிப்பாட்டி விட்ட அம்மா, கவிச்சி சமைத்த நேரங்களில் எல்லாம் " மாவுக் கறி ன்னா மவளுக்கு அம்புட்டு இஷ்டம் " என்று சொல்லி சொல்லி பரிமாறிய அம்மா, கர்ணாவோடு ஒடிப்போவதை உணர்ந்து, தடாலென்று காலில் விழுந்து " வேணாண்டி மவளே " என்று கதறிய அம்...................... !  விம்மி வெடித்துக் கொண்டு அழுகை வந்தது சுஜிக்கு !

பெத்த மகள் காலில் தான் விழுந்த பிறகும், கர்ணாவோடு ஓடிப்போய் மாலையும் கழுத்துமாக வந்து நின்ற போதுதான் அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.வாரித் தூற்றினாள். அதன் பிறகு கர்ணாவும் அவளும் கோயமுத்தூர் வந்து விட்டார்கள். ஆனால், அப்படித் தூற்றிய பிறகும், தானிட்ட சாபம் தன் மகளுக்குப் பழிக்கக் கூடாதென்று எத்தனை தெய்வங்களிடம் முறையிட்டிருப்பாளோசுஜி பனித்த தன் கண்களை இப்போது நாசுக்காக கைகுட்டையில் ஒத்திக் கொண்டாள். அம்மா போய்ச் சேர்ந்த இரண்டு மாதங்களில் அப்பா படுக்கையில் விழுந்து, கவனிக்க ஆளின்றி , முதுகெல்லாம் புண் வந்து, சீழ் பிடித்து .............அப்புறம் இந்த அண்ணன், குடித்துக் குடித்தே வயிறு வெந்து அவனும் செத்துப் போனான், அவனைப் போலவே ............அவன்அவன் ? அவர் ? ..............சுஜிக்கு படபடவென்று வந்தது. கைகால்கள் மெலிதாக நடுங்க ஆரம்பித்தன.

அந்த ' அவன் ' அல்லது ' அவர்சுஜியின் முதல் கணவன் வேல்முருகன் ! வெயிட் ................பிடிக்காதவர்கள் இப்போதே விலகிக் கொள்ளலாம். வேல்முருகன் சுஜியின் தாய்மாமன். அவளுக்கும் அவனுக்கும் பத்து வயது வித்தியாசம் ! சுஜி பிறந்ததில் இருந்தே அவள் அவனுக்குத்தான் என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டுயாருமே எதிர்பார்க்காமல் சுஜி பத்தாம் வகுப்புத் தேர்வில் மாவட்டத்திலேயே முதலாவதாக வந்து, கலெக்டர் கையில் அவள் பரிசு வாங்கி, " மேலே படி " என்று ஆசிரியர்களால் அறிவுறுத்தப் பட்டு, பிளஸ் டூ விலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து கல்லூரி போவேன் என்று சொன்ன போது தான் வீடு " விழித்துக் " கொண்டது !  " அடியே, நீ படிச்சுக் கிழிச்சது போதும் .......... வீட்டோட அடுப்பங்கரையில சமையல் கத்துக்க....... இன்னும் ஒரு பூண்டு தட்டிப் போட்டு ரசம் வைக்கத் தெரியாது. எந்தம்பி வாய்க்கு வக்கணையா மூணு வேளையும் திங்கறவன் ........ நாளைக்கு அவன் மனசு கோணாம நடந்துக்கணும் " என்று அம்மா சொன்ன போது, சுஜிக்கு தன் தாய்மாமன் வேல்முருகன் மீது காரணமேயில்லாமல் கோபம் வந்தது.

 வேல்முருகன் அப்போது அந்த ஊர்  பஞ்சாயத்துத் தலைவர் வீட்டில் கொஞ்சம் அடியாள் போல வேலை செய்து கொண்டிருந்தான். அவன்,  " சுசி.........." என்று சுஜியின் கிட்டே வரும்போதெல்லாம் குப் என்ற சாராய நாற்றம். " மாமா, எத்தன வாட்டி சொல்லிட்டேன் என்ன அப்படிக் கூப்டாதிங்கன்னு ....." என்று அவள் எரிந்து விழுவது பற்றிய சொரணையே இல்லாமல், " இந்தாம்மா வாங்கிக்க " என்று வாழை இலையில் மடித்துக் கட்டிய மீன் வறுவலை நீட்டுவான். இவளுக்கு குமட்டிக் கொண்டு வரும். உள் அறைக்குப் போய் கதவை அறைந்து சாத்தி விடுவாள். இவனும் விடாப்பிடியாக நடுவீட்டில் சம்மணம் போட்டு அமர்ந்து அவள் அம்மா போடும் வெள்ளாட்டுக்கறி சோறை அள்ளி அள்ளி விழுங்கி விட்டு பெரிதாய் ஏப்பம் விட்டுப் போவான். அவனோடு கல்யாணமா ? சுஜிக்கு கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது !

ஆனாலும், திருமணம் நடந்து விட்டது. அம்மா, " அரளிக்கொட்டைய அரைச்சுக் குடுச்சுப் பிடுவேண்டி " என்றிருந்தாள். அப்பா " நாண்டுகிட்டு தொங்கிப் போடுவேன் கண்ணு " என்றிருந்தார். அண்ணா, " ஒரே வெட்டா வெட்டிட்டு ஜெயிலுக்குப் போயிருவேன் " என்றிருந்தான். சுஜி இறுகிய மனதோடு, அவர்களோடு பேசிப் பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்து மௌனமாக இருந்தாள். அந்த மௌனத்தை அவர்கள் சம்மதமாக எடுத்துக் கொண்டு காரியங்கள்  நடந்து ...............

 கடைசியில் சுஜி எனும் சுஜித்ரா பால் சொம்போடு முதலிரவு அறைக்குள் நுழைக்கப் பட்டாள். இங்கு கூட நான் வலுக்கட்டாயமாக நுழைக்கப் படுகிறேன். கற்பழிப்புக்கும் இதற்கும் என்ன பெரிய வேறுபாடு ? சொல்லப் போனால் அதுவே மேல். அதாவது ஒருமுறை நிகழ்ந்து முடித்து விடும். இது தினம் தினம் தொடர அல்லவா செய்யும் ! கடவுளே ! சுஜிக்கு மிகவும் களைப்பாக இருந்தது. வேல்முருகன் அன்று குடிக்க வில்லை. பொம்மை மாதிரி நின்று கொண்டிருந்த சுஜியைத் தொட்டு அவன் கட்டிலில் அமர்த்தினான். சுஜிக்கு களைப்பாக இருந்தது. அவள் அவனை ஒரு அயர்ச்சியோடு பார்த்தாள். " என்ன புள்ள ....... தூக்கம் வருதா ........ தா .....செத்த நேரம் தான் " என்றபடி அவளை அணைத்துக் கொண்டான். அதன் பிறகு சுஜி வெறும் உடலாக  மாறிப் போனாள். வெறும் உடல் ! தான் என்ற சுயம் அழிந்துபுலன் இன்பங்களின் புதுமையைத் தேடும் வெறும் உடல்! வேல்முருகன் சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டான்.

அடுத்த நாள் முதல் வேல்முருகன் குடித்து விட்டு வர ஆரம்பித்தான். சுஜிக்கு தாம்பத்தியமே கசந்து விட்டது. உடம்பும் மனதும் மரத்துப் போய் வாழக் கற்றுக் கொண்டாள். அவள் வயிற்றில் " புழுப் பூச்சி " உண்டானது. குமரேசன் பிறந்தான். வெயிட் .............பிடிக்காதவர்கள் விலகிக் கொள்ளலாம் ! குமரேசன், அப்படியே வேல்முருகனை உரித்துக் கொண்டு பிறந்திருந்தான். அம்மா முனியப்பனுக்கு பொங்க வைத்து கெடா வெட்டினாள். வேல்முருகன் அனைவருக்கும் கற்கண்டு விநியோகித்தான். தன் சந்தோஷங்களை எல்லாம் மொத்தமாகக் காவு வாங்கி விட்டுதன் சுற்றத்தார் மட்டும் கொண்டாடுவது சுஜிக்குள் வன்ம உணர்ச்சியைத் தூண்டியது. குழந்தை வேல்முருகனைப் போல இருப்பதாகச் சொன்னதுமே சுஜிக்கு ஏனோ குழந்தையைப் பிடிக்காமல் போய் விட்டது. இதுவும் அவன் ரத்தம் தான் ! இதுவும் அவன் எச்சம் தான் !

குழந்தையை சுஜி சீண்டுவதே இல்லை என்று தெரிந்த அவள் தாய், குழந்தை பராமரிப்பை தான் ஏற்றுக் கொண்டு விட்டாள். குழந்தை பெரும்பாலும் " அவர்கள் " வீட்டிலேயே இருந்தான். தாய்ப்பால் கூட சரியாக இல்லை. சுஜி ஒரு இயந்திரம் போல நடமாடிக் கொண்டு இருந்தாள். இந்த சமயத்தில் தான் கர்ணா ஒரு புயல் போல வந்து சேர்ந்தான். கர்ணா, ஒரு இளங்கலை வரலாற்று மாணவன். இறுதியாண்டில் இருந்தான். துருதுரு இளைஞன். அந்த கிராமத்தில் இருந்த கோவில் கல்வெட்டுக்களைப் பற்றி ஆராய அங்கிருந்த தன் பெரியம்மா வீட்டில் வந்து தங்கியிருந்தான். சுஜிக்குப் பக்கத்து வீடு ! சுஜியைப் பார்த்து சுலபமாகப் புன்னகைத்தான். அந்தப் புன்னகை அவளுக்கு இதமாக இருந்தது. அவனைப் பார்த்தாலே ஆசுவாசமாக இருந்தது. சுஜியும் பதிலுக்கு சிரிக்க ஆரமபித்து இருவரும் பேச ஆரம்பித்தார்கள்.

வேல்முருகன் பகல் நேரங்களில் பெரும்பாலும் வீட்டிலேயே இருப்பதில்லை. அந்த சமயத்தில் வயலில் " அறுப்பு " வேலை இருந்ததால் கர்ணாவின் பெரியப்பாவும் பெரியாம்மாவும் வயல் வேலையை கவனிக்கப் போய்விடுவார்கள். அவர்களுக்கு ஏக்கரா கணக்கில் புஞ்சையும், நஞ்சையும் இருந்தன. சந்தர்ப்பம் சரியாக அமைந்து சுஜியையும், கர்ணாவையும் தனியாக பழக அனுமதித்தன. ரொம்ப வருடங்கள் கழித்து சுஜி மனம் விட்டு சிரிக்க ஆரம்பித்தாள். அப்போதுதான் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் சுஜிக்கு கர்ணாவால் ஏற்படுத்தப்பட்டது. எவ்வளவு எழுத்தாளர்கள் ! ஜெயகாந்தன், அசோகமித்திரன், பிரபஞ்சன், ராஜநாராயணன், மௌனி, அப்புறம் இந்த சுஜாதா ! சுஜிக்கு ஒரு புதிய உலகம் அறிமுகமானது. அவளது மனம் என்னும் பறவை அங்கு சுதந்திரமாக சிறகடித்துப் பிறந்தது. அனைத்துக்கும் வடிகாலாக புத்தகங்கள் அமைந்தன. கர்ணா அமைந்தான். கர்ணாயு  ஆர் கிரேட் !

கர்ணா " அடுத்த செமஸ்டருக்கு வர்றேன் " என்று சொல்லி விட்டுக் கிளம்பிய அன்று சுஜி காரணமே இல்லாமல் அன்றிரவு அழுதாள். ஆனால்,அவன் வரும் வரை படிக்க அவன் ஏராளமான புத்தகங்களை கொடுத்துப் போயிருந்தான். இரவுகளில் எல்லாம் சுஜி அந்தப் புத்தகங்களைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டே தூங்குவாள். வேல்முருகனைக் கிட்டே நெருங்கவே விடுவதில்லை. அவன் இன்னும் அதிகமாகக் குடிக்க ஆரம்பித்தான். குழந்தை அம்மா வீட்டிலேயே இருந்தது. அடுத்த முறை கர்ணாவைப் பார்க்கும் போது இருவருமே மிக மிக மகிழ்ந்தார்கள். ஓடிப் போய் அவனை அப்படியே கட்டிக் கொள்ள வேண்டும் போலிருந்தது சுஜிக்கு. அந்த எண்ணம் தவறு என்றே அவளுக்குத் தோன்றவில்லை. அவளைப் பொருந்தவரைநடந்து முடிந்த திருமணமும், பிள்ளைப்பேறும் ஒரு விபத்து.

சுஜி, தனிமையான பல சந்தர்ப்பங்களில் கர்ணாவையும், வேல்முருகனையும் ஒப்பிட ஆரம்பித்தாள். கர்ணாவோடு இருக்கும்போது நேரம் போவதே தெரிவதில்லை. உரிமையாக அவனோடு பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது. அவன் அருகில் இருந்தாலே சூழல் வெளிச்சம் பெற்று விடுகிறது. திருமணமாகிக் குழந்தையும் பெற்ற அவள் இம்மாதிரி யோசிப்பதில் ஆரம்பத்தில் சிறிது தயக்கம் கண்டாலும், நாளாக நாளாக அது இயல்பான ஒரு விஷயம் போல அவள் மனதை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. கர்ணா, மீண்டும் ஒரு விடுமுறையில் அந்த ஊருக்கு வந்த பொது, சுஜி அவனிடம் வெளிப்படையாகவே கேட்டு விட்டாள். " என்னால இங்க இருக்க முடியல. பேசாம என்னை உங்களோடவே கூட்டிட்டுப் போயிடுங்களேன் கர்ணா "  கர்ணா, அதைக் கேட்டு அமைதியாக சொன்னான், " உங்கள இங்கிருந்து என்னோட மனைவியா கூட்டிட்டுப் போக நான் விரும்பறேன். நீங்க என்ன சொல்றீங்க ? " என்றான். அதைக் கேட்டு சுஜி அதிரவில்லை. " அப்படி நீங்க கூட்டிட்டுப் போனா அது என் பாக்கியம் " என்றாள்.

அதன் பிறகு எல்லாமே திட்டமிட்டு நடந்தன. சுஜி, பக்கத்து டவுனில் வேலைக்குப் போக ஆரம்பித்தாள். ஒரு தட்டச்சு நிறுவனத்தில் மாதம் அவளுக்குத் தேவையான வருமானம் வந்தது. வேல்முருகன் குடித்து விட்டு அடிக்கிறான் என்று சொல்லி அந்த டவுனிலேயே வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்துத் தங்க ஆரம்பித்தாள். வேல்முருகன் இரண்டு நாட்கள் குடித்து விட்டு வந்து வண்டை வண்டையாக வைதான். அங்கிருந்த மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததும் அவன் பொட்டிப் பாம்பாக அடங்கி அடுத்த நாளில் இருந்து வரவில்லை. அம்மா, குழந்தையோடு வந்து ஒப்பாரி வைத்தாள். குழந்தை திரு திருவென்று விழித்தது. அதற்கு அதன் அம்மாவை அடையாளம் கண்டு கொள்ளத் தெரியவில்லை. சுஜி வேண்டுமென்றே அந்தக் குழந்தையைத் தொடாமல் இருந்தாள். அது அப்படியே வேல்முருகனின் அச்சு அசல் பிரதியாக இருந்ததால் ஒருவேளை அதன் மீது அவளுக்கு இயல்பாகவே ஒரு வெறுப்பு இருந்திருக்கலாம். அம்மா, கடைசியாக " ஆனாலும் உனக்கு இவ்வளவு வைராக்கியம் ஆகாதுடி " என்று மூக்கை சிந்திவிட்டுப் போகும் போது, குழந்தை ஒருமுறை சுஜியைப் பார்த்து அழகாக " ம்மா " என்று புன்னகைத்தது. குபுக் என்று சுஜியின் கண்ணில் நீர் துளிர்க்க, அதை அப்படியே வாரி எடுத்துத் தன் மார்போடு அணைத்துக் கொள்ள  வேண்டும் என்ற வேட்கையை சுஜி சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டாள். அம்மா குழந்தையை எடுத்துக் கொண்டு போய் விட்டாள்.


சுஜி , சுயமாக வாழ ஆரம்பித்தாள்.  கர்ணா அடிக்கடி அவளை வந்து பார்த்தான். வேல்முருகனுக்கு  விவாகரத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவன் மிதமிஞ்சிய போதையில் அதை அலட்சியப் படுத்தினான். ஒரு வருடம்  போனதே தெரியவில்லை. கோர்ட் இருவருக்கும் விவாகரத்து கொடுத்தது. கோர்ட் வாசலிலேயே சுஜி தன் தாலியைக் கழட்டி வேல்முருகன்  முகத்தில் அடித்தாள். குழந்தை தன் ரத்தம், தன்னிடம் தான் இருக்க வேண்டும் என வேல்முருகன் முரண்டு பிடித்தான். சுஜி எளிதாக சம்மதித்து விட்டாள். குழந்தை எதற்கோ வீறிட்டு அழுதது. சுஜிக்கு மனசைப் பிசைவது போல இருந்தது. வயிற்றில் சுமந்த பத்து மாத பந்தம் அவ்வளவுதான் எனும் போது சுஜிக்கு பொசுக்கென்று எதையோ இழந்தது போல இருந்தது. கர்ணாதான் அன்றிரவு சுஜியைத் தேற்றினான். " இங்க பாரு சுஜி, நம்ம சமூகத்துல தேவையில்லாம தாய்மை அது இதுன்னு சொல்லி ஓவரா புனிதப்படுதிட்டாங்க. இது ஒருவகையில பெண்ணை அடிமைப்படுத்த அவர்கள் எடுத்த ஆயுதம். ரெண்டு நாள்ல எல்லாம் மறந்துரும் பாரு..... " என்றபடியே சுஜியை அணைத்துக் கொண்டான். இதமாக இருந்தது. 

மெல்ல மெல்ல அவன் கைகள் அத்துமீற ஆரம்பித்ததை சுஜி தடுக்கவில்லை. அவன் அணு அணுவாக அவளைக் கொண்டாடினான். பெண்ணாகப் பிறந்ததன் பயனை சுஜி உடல்ரீதியாக அன்றுதான் முழுமையாக அனுபவித்தாள். அடுத்த நாளே, இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள். சுஜி மாலையும் கழுத்துமாக அந்த ஊரில் காலடி எடுத்து வைத்தாள். ஒரு புரட்சிப் பெண்ணாகத்   தன்னை நினைத்துக் கொண்டாள். அப்போதுதான் அம்மா வாரித் தூற்றினாள். அந்தக் கோலத்தில் அங்கு போயிருக்க வேண்டாம் தான். ஆனால், ஒருவிதத்தில் அப்படிப் போனால் தான் எல்லாரையும் பழி வாங்கியதாக இருக்கும் என்று அவள் நினைத்திருந்தாள். குழந்தை சுஜியை நோக்கி ஆசை ஆசையாகத் தவழ்ந்து வந்தது. கர்ணா, அதற்கு மேல் அங்கிருக்காமல் சுஜியை இழுத்துக் கொண்டு போய் விட்டான். அதன் பிறகு சுஜியின் வாழ்க்கைமுறை அடியோடு மாறி விட்டது. கர்ணாவுடனான தாம்பத்தியம் திகட்டத் திகட்டத் தித்தித்தது. அவன் என்னவோ பரீட்சை எழுதி அரசு அதிகாரியானான். சுஜி மீண்டும் கர்ப்பமானாள். பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள். மேற்கொண்டு  படித்தாள். அவளும் பரீட்சை எழுதி அரசாங்கத்தில் ஆசிரயர் பணி கிடைத்தது.


இவ்வளவு வருடங்கள் கழித்து சுஜிக்கு அவள் பிறந்த ஊரிலேயே " டூட்டி " போட்டிருந்தார்கள். எதோ அரசுத் தேர்வில் " கண்காணிப்பாளராக " அவள் அந்த ஊர் பள்ளிக்கூடத்திற்கு வர வேண்டிய நிர்பந்தம். நினைத்தால் மறுத்திருக்கலாம். ஆனாலும், பிறந்த ஊர் எப்படித்தான் இருக்கிறது என்று பார்க்க உள்ளூர ஒரு ஆசை. வேல்முருகன் தான் இறந்து விட்டானே !. எதிரே, ரங்கசாமி மாமாவின் மகள் அம்சவல்லி இவளைக் கடந்த போது தயங்கி நின்று மீண்டும் உற்றுப் பார்த்து " சுஜி ......." என்று ஓடிவந்து இவள் கையைப் பற்றிக் கொண்டாள். ஊரார் சிலர் சூழ்ந்து சுஜியை நலம் விசாரித்தார்கள். அண்ணன் மகள், திவ்யா " அத்தை " என்று ஓடிவந்து கட்டிக் கொண்டாள். பதினைந்து வயதில் நன்றாக வளர்ந்து விட்டிருந்தாள். இவ்வளவு வருடங்கள் கழித்தும் அனைவரும் தன்னை ஞாபகம் வைத்திருந்தது சுஜிக்கு சற்று பெருமிதமாக இருந்தது. ஆனால் ........

சுஜி, முதலில் யாருடைய வீட்டுக்கும் போகக்கூடாது என்றுதான் நினைத்திருந்தாள். ஆனால்,அவள் எதிர்பார்த்த எதிர்ப்பு அவளுக்கு அங்கு இல்லை. அவளை அடையாளம் கண்டு கொண்டவர்கள் எல்லாம் வாஞ்சையோடு விசாரிக்கவே செய்தார்கள். மதினி கூட அவளை வீட்டுக்கு அழைத்து காபி கொடுத்தாள். சுஜிக்கு கொஞ்சம் மனது நிறைவாக இருந்தது. ஆனால் ..............தேர்வுக் கூடத்தில் கண்காணிப்பு செய்யும் போதுகூட அவள் கண்கள் யாரையோ தேடின.

குமரேசன் சாராயக்கடையில் இருந்தான். வயது பதினாறுதான். சாராயம் அவனுக்குத் தேவையாக இருந்தது. அதன் போதை அவனுக்கு அதுவரை கிடைக்காத எதையோ ஈடு செய்வதைப் போல இருந்தது. அவன், ரைஸ் மில்லில் வேலை செய்கிறான். படிப்பு கிடையாது. அவன் தகப்பன் வேல்முருகன் குடித்துக் குடித்தே செத்தான். குமரேசன் வேல்முருகன் போலவே அச்சு அசலாக இருந்தான். யாரோ அவனை நோக்கி ஓடிவருவது போல இருந்தது. குமரேசன் கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தான். அது அவன் சிநேகிதன் பழனிசாமி ! "  டே ! குமரேசா, உங்கம்மா வந்திருக்காங்கடா .........உங்கத்த வூட்டுக்கு வந்தாங்க டா ............ கண்ணாடி எல்லாம் போட்டுட்டு டீச்சராட்டம் ............"  பழனிசாமி முடிக்கவில்லை. குமரேசனுக்கு போதை மொத்தமும் இறங்கியது போல இருந்தது. " என்னடா சொல்ற ..."  கேட்கும் போதே அவன் கண்ணில் நீர் வழிந்தது. " அம்மா " என்று தன்னிச்சையாக சொல்லிக் கொண்டான். சிறு வயதிலேயே தன்னை விட்டுப் போன அந்த அம்மாவின்மீது அவனுக்கு ஏனோ கோபமே வரவில்லை. அவளுடைய பழைய போட்டோ ஒன்று எப்போதும் அவன் பாக்கெட்டில் இருக்கும்.

குமரேசன் தள்ளாடி எழுந்தான். அம்மாவைப் பார்த்து விட வேண்டும். என்னைத் தேடிக் கொண்டு தான் வந்திருக்கிறாள். ஐயோ ! அவள் வரும் சமயம் பார்த்து தான் இப்படி சாராயம் குடித்துக் கொண்டு ............ குமரேசன் மடேர் மடேர் என்று தலையில் அடித்துக் கொண்டான். எழுந்து தன் ஆடைகளில் இருந்த அழுக்கைத் தட்டி விட்டுக் கொண்டான். கையாலேயே தலையை வாரிக் கொண்டான். முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டான். அம்மாவைப் பார்க்க ஓடினான்.

சுஜி, யாவரிடமும் இனிதே விடைபெற்றுக் கொண்டாள். மதினி ஏதாவது சொல்லுவாள் என்று எதிர்பார்த்தாள். மதினி இவள் ஏதாவது கேட்பாள் என்று எதிர்பார்த்தாள். இந்த வயதிலேயே அப்பன் காரனைப் போலவே குடிகாரனாக மாறிவிட்ட குமரேசனைப் பற்றி சுஜியிடம் சொல்லாமல் இருப்பதே நல்லது என்று அவள் நினைத்திருந்தாள். சுஜிக்கும் அவர்களாக ஏதும் சொல்லாதவரை எதையும் கேட்காமல் இருப்பதே நல்லது எனப்பட்டது. ஆனாலும் நெஞ்சைப் பிசைவது போல இருந்தது. அவள் கிளம்பி விடடாள். யாராவது உடன் வந்து வழியனுப்புவார்கள் என்று பார்த்தாள். யாரும் வரவில்லை. வந்து, வழியில் குடிகார குமரேசனைப் பார்க்க நேர்ந்து " இது தான் உன் மகன் " என்று அறிமுகப்படுத்த வேண்டிய சங்கடத்தில் மாட்டிக் கொள்ள யாரும் தயாராக இல்லை. சுஜி சாலையில் நடக்க ஆரம்பித்தாள். சாலை வெறிச்சோ என்று இருந்தது அவள் மனது போலவே.  பொதுவாக அந்த ஊர் சாலைகளில் ஆள் நடமாட்டம் என்பது அரிதுதான். அவள் அங்கிருந்த  பேருந்து நிறுத்தத்தில் போய் நின்று கொண்டாள். காத்திருந்தாள்.

குமரேசன், தன் அத்தையின் வீட்டுக்கு ஓடோடி வந்தான். அம்மாவைக் காணவில்லை. அவள் என்னைப் பார்க்க வரவில்லையா ? அப்பாவை வெறுத்தது போல என்னையும் வெறுத்து விட்டாளா ? இந்த அப்பன் மூஞ்சி எனக்கெதற்கு வந்து தொலைத்தது. அவனுக்கு அடக்க மாட்டாத அழுகை வந்தது. " அத்த, அம்மா எங்கத்தே " என்று அவன் தேம்பி தேம்பி அழுது கொண்டே கேட்டதைப்பார்த்து அத்தை பதறிப் போய், " ஐயோ , உன்னைப் பத்தி ஒருவார்த்தை உங்கம்மா கிட்ட சொல்லாத பாவி ஆகிட்டனே ......... போடா சீக்கிரமா போ ......... உங்கம்மா பஸ் ஸ்டாப்புக்கு போய்ட்டாங்க ....." என்றாள். குமரேசன் ஓடினான்.

சுஜி பேருந்திற்குக் காத்திருந்தாள். அவள் மனதுக்கு எதுவோ தப்பாகப் பட்டது. கர்ணாவை அலைபேசியில் கூப்பிட்டு " என்னங்க ....எல்லாரையும் பார்த்தேங்க .....நல்ல ரெஸ்பான்ஸ் ...ஆனா ......"  என்றாள். கர்ணாவிற்குப் புரிந்தது. " விடு சுஜி, உன் பழைய வாழ்க்கையின் எந்த அடையாளமும் உனக்கு வேண்டாம். சில விஷயங்களை நீ பார்க்காம, ஏன் அதைப் பத்தி யோசிக்காம கூட இருக்கறது தான் உனக்கு நல்லது. " என்றான். சுஜிக்கு ஓரளவு தெளிவாக இருப்பது போல இருந்தது. அப்போதுதான் அவள் அவனைப் பார்த்தாள். பாவம் வெகுதூரம் ஓடி வந்திருப்பான்போல. மூச்சு வாங்கியது. அவனைப் பார்த்தால் இளம்வயது வேல்முருகனைப் போலவே இருந்தது.

குமரேசன் அம்மாவைப் பார்த்து விட்டான். அம்மாவா இது ! இந்த வயதிலும் அழகாக நாகரிகமாக, எவ்வளவு நேர்த்தியாக இருக்கிறாள் ஏன் அம்மா ! அவளை நெருங்கி " நான் தான் உன் மகன் " என்று சொல்ல அவனுக்கே கேவலமாக இருந்தது. கிட்டே போனால் சாராய நாற்றம் அடிக்கும். வேண்டாம்... நான் தூர நின்றே அம்மாவைப் பார்த்துக் கொள்கிறேன். அது போதும். குமரேசன் அப்படியே மரத்தடியில் குந்தி அமர்ந்து தன் உடம்பைக் குறுக்கிக் கொண்டான். அம்மா, அவனைப் பார்த்து விடடாள். அது போதும். இவனுக்கு கண்ணில் நீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.

தாயின் கருவறையில் இருக்கும் குழந்தை போல தன் உடம்பைக் குறுக்கி, அமர்ந்து கொண்டு தன்னைப் பார்க்காமல் தேம்பி தேம்பி அழும் அவனையே சுஜி பார்த்தாள். அவள் உள்ளுணர்வு சொல்லிவிட்டது. அவன் ஏன் அருகே வரமாட்டேன் என்கிறான் ? என்னைப் பார்க்க மாட்டேன் என்கிறான் ? ஐயோ எப்படி தேம்பித் தேம்பி அழுகிறான் ! சுஜி தன் மார்பைப் பிடித்துக் கொண்டாள். அவன், அவன்தான். சந்தேகமேயில்லை. நான் ஏன் இப்படி மரம் மாதிரி நிற்கிறேன் ? என் கைகாலெல்லாம் ஏன் இப்படி நடுங்குகிறது ? " தாய்மை என்பது கற்பிக்கப் பட்ட போலியான புனிதம் " என்ற கர்ணாவின் வார்த்தைகள் எவ்வளவு அர்த்தமற்றுப் போய்க் கொண்டிருக்கின்றனதன்னிச்சையாக சுஜியின் கண்ணில் நீர் வழிந்தது.

குமரேசனுக்கு நிறைவாக இருந்தது. போதும் ! அம்மாவைப் பார்த்தாயிற்று. அவன் எழுந்தான். கண்ணைத் துடைத்துக் கொண்டு சாலையைக் கடந்த போது, பேய்த்தனமாக தன்னை நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்ததை அவன் கவனிக்க வில்லை. கண்ணிமைக்கும் நேரம், குமரேசன் தூக்கி எறியப்பட்டான். லாரி நிற்காமல் தலை தெறிக்க ஓடியது. சுஜிக்கு முதலில் அந்தக் காட்சி மண்டைக்குள் பதியவில்லை.             " ஐயோ " என்று அடிவயிற்றில் இருந்து அவளை அறியாமலேயே ஒரு அலறல் புறப்பட்டு வந்தது. சாலைக்கு ஓடினாள். அங்கே இரத்த வெள்ளத்தில் குமரேசன் இழுத்துக் கொண்டு கிடந்தான். அவன் உதடுகள் " அம்மா அம்மா " என்று ஓயாமல் முணுமுணுத்தன. சுஜி சுற்றும் முற்றும் பார்த்தாள் " யாராவது வாங்களேன் " என்று கத்தினாள். சீக்கிரம் கொண்டு போனால் ஒருவேளை பிழைக்க வாய்ப்பிருக்கிறது. யாரும் வருவதாக இல்லை. திடீரென்று சுஜிக்கு எங்கிருந்து அவ்வளவு பலம் வந்தது எனத் தெரியவில்லை. அவள் குமரேசனைத் தூக்கிக் கொண்டு வெறிபிடித்தவள் போல ஓட ஆரம்பித்தாள். தூரத்தில் ஒரு பேருந்தின் ஒலி கேட்டது.