Thursday, August 28, 2014

ஒரு கரண்டி அன்பு
எழுதி முடித்ததில்
செத்துப் போனது
ஒரு
கவிதை !

=========================

பூட்டிய கதவுக்குள்
எரிந்து கொண்டிருக்கும்
மின்விளக்கும்
கத்திக்கொண்டிருக்கும்
தொலைக்காட்சியும்
ஓடிக்கொண்டிருக்கும்
மின்விசிறியும்
கொண்டாடித் தீர்க்கின்றன
ஒரு
மறதியை !

===========================

எடுக்க வேண்டும்
எடுக்க  வேண்டும்
என்று நினைக்கும்
முடிவுகளையே
நாம்
எடுத்து விடுகிறோம்
என்றாவது !

===========================

இந்திரியத்தின்
கடைசித் துளி
வெளியேறுகிறது !
ஞானத்தின்
முதல் துளி
உள் நுழைகிறது !

===========================

வேலை என்பது
கடல் !
வாழ்க்கை என்பது
தீவு !
இங்கேயும் தீவு,
கடலில் தான்
இருக்கிறது !

===========================

நம்முடைய
இறுக்கமெல்லாம்
ஒரு
கண்ணாடியைப் போலத்தான் !
அன்பின் சிறுகல்
பட்டாலும்
அது
உடைந்து விடும் !

===========================

அலைபேசிக்குள்
ஆயிரம் ரகசியம்
புதைத்திருக்கும்
பெண்ணே ........
நீயல்ல
பாரதி கண்ட
புதுமைப் பெண் !

===========================

இறைச்சியை மட்டும்
ஒதுக்கி விட்டு
மேலாக்க எடுத்துப் போடும்
குஸ்காவுக்கு
அசைவ தோஷமில்லையாம் !

பின்னிரவுப் பொழுதுகளில்
அலைபேசி வழியே
குஸ்கா சாப்பிடுபவர்கள்
இங்கே அதிகம் !

===========================

தனிமைப் பெருநெருப்பால்
பற்றியெரிகிறது
என் காடு !
ஆறுதல் எனும்
கானல் நீர்
வார்ப்பவர்களே ........
எனக்கு வேண்டியது
மழை !

===========================

பணக்கார
வீட்டுத் திருமணம் !

பந்தியில்
அனைத்துமிருந்தன !

ஒரேயொரு கரண்டி
அன்பு கேட்டால் .....

இல்லையாம் !

===========================

புழுதியில்
ஓய்யாரமாய்ப் படுத்துச்
செல்லமாய் உருண்டபடி
நாயொன்று
எழுதுகிறது கவிதையை
இயற்கையின் மொழியில் .......
படிக்கத் தெரிந்தவர்கள்
பாக்கியவான்கள் !

===========================

சிலபோது
திடுப்பென
முன்னறிவிப்பில்லாமல்
பெய்து விடுகிறது
மழை !
கப்பல் விட
ஆசைப்பட்ட
ஒரு சிறுவனுக்காகவும் .............
வானவில் பார்க்க
ஆசைப்பட்ட
ஒரு சிறுமிக்காகவும்...............Thursday, August 21, 2014

மழைக் கலைஞன்
பரபரப்புக்கு மட்டுமே 
பஞ்சமே வராத 
அந்தப் பெருநகரத்துச் 
சாலையில் 
வான் பூக்களென 
பெய்து கொண்டிருந்தது 
மழை ! 

சாலையோரத்தில் 
அவன் 
சுருண்டு கிடந்தான் 
தன் 
ஒற்றைக் கையை 
மழையில் 
ஏந்தியபடி ! 

ஒரு 
நவீன மழை ஓவியம் 
போன்றுதான் 
அந்தக்காட்சி 
முதலில் 
மண்டைக்குள் பதிந்தது ! 

கொஞ்சமிருந்த 
சில்லறைகளில் 
துன்பச்சங்கீதம் 
இசைத்துக் கொண்டிருந்த 
அந்த 
ஒற்றைக் கையும் 
மழைக்குளிரில் 
நடுங்கிக்கொண்டிருந்த 
' என்புதோல் போர்த்த ' 
அந்த உடம்பும் 
அவனொரு 
ரத்தமும் சதையுமான 
இல்லையில்லை ............ 
ரத்தமும் எலும்புமான 
ஒரு உயிர் என்பதை 
புத்தியில் அறைந்தன ! 

பரிதாபப்பார்வையும் 
மிரட்சி நடையுமாகப் 
பெண்கள் அவனைக் 
கடந்து போயினர் ! 

குடைபிடித்து 
வந்த ஒருவன் 
அந்த 
ஒற்றைக் கைக்கு 
காசு போட்டுப்போனான் 
ஏற்கனவே 
அந்தக் கை 
இசைத்துக் கொண்டிருந்த 
துன்ப சங்கீதத்திற்கு 
மேலும் 
சுருதி சேர்ப்பது போல ! 

மழைக் கலைஞன் 
போலக் கிடந்த 
அவனை 
திகைப்போடு பார்த்து 
குரைத்துவிட்டு ஓடியது 
தெருநாய் ! 

மனசாட்சியை 
சமாதானப்படுத்துவதற்காகவே 
அவனைத் 
திரும்பித் திரும்பிப் 
பார்த்தபடி சென்றனர் 
ஒரு சிலர் ! 

அதற்கு 
அவசியமே இல்லாமல் 
அலுத்துக்கொண்டு சென்றனர் 
ஒரு சிலர் ! 

ஓடிப்போய் 
அவனையெழுப்பி 
பரிதாபம் கறப்பதற்காக 
அவன் செய்யும் 
விபரீத யுத்திக்கு 
சும்மாவேனும் 
நாலு திட்டுத்திட்டி 
" இனி இப்படிச் செய்யாதே " 
என அறிவுறுத்தி 
மழைக்கு இதமாய் 
அவனுக்கு 
ஒரு தேநீர் 
வாங்கிக்கொடுக்க................ 

தோன்றத்தான் 
தோன்றினாலும் 
எல்லாரையும் போலவே 
அசட்டுப்பார்வை 
பார்த்தபடி 
அவனைக் கடந்துவிடுகிறேன் 
நானும் !!! 

=========================== 

- குருச்சந்திரன்