Thursday, September 22, 2011

மாந்தி - நாவல் அத்தியாயம் இரண்டு
முன்னொரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாக இருந்த இடம் இப்போது " பொறம்போக்கு நிலமாக " , பொட்டல் காடாக இருந்தது . அந்தப்பகுதியை தற்காலிகமாக ஆக்கிரமித்திருந்தனர் மாணவ மாணவிகள் . அனைவரும் முதுகலை வரலாறு . ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருந்தனர் . மண்டையில் முடி இருந்த , கண்ணாடி போடாத புரபசர் ஒருவர் அந்தப்பகுதியின் அருமை பெருமைகளை மாணாக்கர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தார் . அவர்களும் ஆவென்று வாயைப் பிளந்த வண்ணம் கேட்டுக் கொண்டிருந்தனர் . வகுப்பறைச் சூழலை விட்டு , சுதந்திரமான வெட்டவெளி சூழலில் ஆசிரியர் சொல்வதைக் கேட்பதற்கு அவர்களுக்கு உற்சாகமாக இருந்தது . சற்று நேரம் அந்தப்பகுதிகளின் சிறப்புகளை விளக்கிய ஆசிரியர் , பிறகு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வராயும் பகுதிக்கு மாணவர்களைக் கூட்டிச்சென்றார் . பெரிய குழிமாதிரி வெட்டி என்னத்தையோ தோண்டிக்கொண்டிருந்தனர் . ஹரிப்ரியாவுக்கு போர் அடித்தது . ஹரிப்ரியா ? வயது , திருமணத்திற்குத் தயாராகிவிட்ட இருபத்தி ஒன்று . பௌர்ணமிப் பளிங்கு மேனி . செதுக்கி வைத்தது போன்ற பாகங்கள் . அடிவேர்வரை ஊடுருவும் " இன்டெலிஜென்ட் பார்வை " . பணக்கார பெற்றோர் . பங்களா . கார் ... வேலையாட்கள் ....... இன்னபிற இன்னபிற .......

மதிய உணவு இடைவேளையில் மோகன் , ஹரிப்ரியாவை நெருங்கினான் . மோகன் , அந்தக்கூட்டத்திலேயே அழகன் . வெள்ளைத்தோல் . சுருள் முடி . ஹரிப்ரியாவுக்கு ஈடான பணக்காரன் .

" ஹாய் ஹரி " ........
" கால் மீ ஹரிப்ரியா " .........
" ப்ரியமானவங்களை சுருக்கமா கூப்பிடறது தானே , அந்தப்பிரியத்துக்கே அழகு "
" ஓ ........மோகன் ....... நிறைய தமிழ் படம் பார்ப்பே போலிருக்கு ...............கூடவே சில்லியான கவிதைகளையும் படிப்பியோ .."
" கவிதைகளை நான் படிப்பதில்லை .....வெறுமனே பார்ப்பேன் ........ இப்போது கூட நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் ............"
" மோகன் , நீ இந்த மாதிரி பேசறது ..........எரிச்சலா இருக்கு ........ப்ளீஸ் .........."
" நான் உன்னையே சுத்தி சுத்தி வர்றது ஏன்னு புரியலையா ஹரிப்ரியா ? "
" ம்ம்ம் புரியுது ......... ஒரு சண்டே வாயேன் ....... எங்கனா ரூம் போடுவோம் . மறக்காம் காண்டமையும் எடுத்துக்கோ ! "
மோகன் பேயறையப்பட்டான் ...................... அதற்கு மேல் எதோ பேச முற்பட்டவனை ஹரிப்ரியா முறைத்துத துரத்தினாள் . அவளுக்கு மோகனைப் பிடிப்பதில்லை . எப்போது பார்த்தாலும் அவனைச்சுற்றிப் பெண்கள் கூட்டம் . அவன் " குதி " என்றால் ஆறாவது மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள ஜூனியர் பெண்கள் தயாராக இருக்கிறார்கள் . ஹரிப்ரியாவைப் பொறுத்தவரை அவன் ஒரு எச்சம் . எத்தனையோ பெண்கள் ரசித்து ருசித்த மிச்சம் . அவள் விடு விடு வென நடந்தாள் ............... ஒரு மரத்தடியில் ரங்கராஜன் தென்பட்டான் . ரங்கராஜன் சகல விஷயங்களிலும் சாதாரணன் . ஹரிப்ரியா , அவளாக அவனருகே சென்றாள் ......

" என்ன ரங்கராஜன் ..... இங்கே தனியா ............... "
" ஒரே போர் ....... அதான் இந்த மரத்தடிக்கு வந்திட்டேன் ......... புத்தருக்குக் கிடைச்ச மாதிரி எனக்கும் ஞானம் , கீனம் கிடைச்சாலும் கிடைக்கலாம் "
" எனக்கும் போர்தான் . ஏண்டா இந்த ஹிஸ்டரியை எடுத்தோமேன்னு இருக்குது ........"
" நாங்க இல்ல அந்த மாதிரி சொல்லணும் .......... எம் . ஏ ஹிஸ்டரி . உங்களை மாதிரி பணக்காரங்களுக்கு வேணா இது கெட்டிப்படிப்பு .............எங்களைப்பொறுத்தவரை இது வேலை கொடுக்காத வெட்டிப்படிப்பு ."
" ஹல்லோ .......... நேத்து என்ன டி . ராஜேந்தர் படம் பார்த்தீயா .........கெட்டி , வெட்டினுட்டு....
" தட் ஈஸ் ரியல் ஹரிப்ரியா .......... இதை வைச்சுகிட்டு என்ன வேலை தேடமுடியும் . தனியார் பள்ளிக்கூடத்துல மட்டுந்தான் வேலை கொடுப்பான் ..... அங்கயும் வகுப்பு எடுக்க விடமாட்டானுங்க ......... பண்டல் பண்டலா பத்தாவது , ப்ளஸ் டூ பேப்பரை திருத்த விட்டுடுவானுங்க ........... " என்று ரங்கராஜன் கோபமாக தரையில் இருந்த ஒரு பெரிய கல்லை எட்டி உதைத்தான் . அது பெயர்ந்தது . உதைத்த வேகத்தில் செருப்பு அணிந்திருந்த ரங்கராஜனின் கால் பெருவிரல் கிழிந்து அவனது சூடான இளஞ்சூடு ரத்தம் குபு குபுவெனப்பொங்கி கல் பெயர்ந்த இடத்தை நனைத்தது . அதைப்பார்த்த ஹரிப்ரியாவுக்கு படபடவென வந்தது ..... " ஓ கடவுளே என்ன இது ? " என்றாள் . ரங்கராஜன் துணுக்குற்றான் . ஹரிப்ரியாவின் பதற்றத்தைப் பார்த்து அல்ல . அவன் கல்லை உதைத்த போது ஏற்பட்ட அந்த " ணங் " என்ற ஒலியை உணர்ந்து . ரங்கராஜன் கல் பெயர்ந்த இடத்தைப் பார்த்தான் . அரை அடி ஆழத்திற்குக் குழி உண்டாகியிருந்தது . அந்தக் குழிக்கு உள்ளே புள்ளி புள்ளியாக ஏதோ மின்னியது . தடக்கென மண்டியிட்டு ரங்கராஜன் அந்தக் குழிக்குள்ளே கைவிட்டு அந்த மின்னும் புள்ளிகள் உள்ள பகுதியைத் தடவினான் . இதற்குள் ஹரிப்ரியா அவளது கைகுட்டையால் ரங்கராஜனின் கால் பெருவிரலைக் கட்ட முயற்சிக்க , அவன் அவளைத்தடுத்து அந்த குழியை நோண்டி சதுரமான ஒன்றை எடுத்து , " செப்புத்தகடு " என்றான் . கல் பெயர்க்கப்பட்ட விசையில் அந்த செப்புத்தகட்டின் பாகங்கள் தேய்க்கப்பட்டு மின்னியிருக்கின்றன என்பதை ரங்கராஜன் தெரிந்து கொண்டான் . ஹரிப்ரியாவின் கைக்குட்டையைப் பிடுங்கி , அந்தத்தகட்டைத் துடைத்தான் . தமிழில் செய்யுள் போல ஏதோ எழுதப்பட்டிருந்தது . அந்த செய்யுளுக்குத் தலைப்பாக " புதையல் ரகசியம் " என்று எழுதப்பட்டிருந்தது . ரங்கராஜன் , அந்த செப்புத்தகட்டை எடுத்துக் கொண்டு வேக வேகமாக அந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இருந்த பகுதிக்கு விரைந்தான் . பின்னாலிருந்து ஹரிப்ரியா அவனைக் கூப்பிடுவதைக் கண்டுகொள்ளவில்லை .

ஹரிப்ரியா கிட்டத்தட்ட ஓடினாள் . மேல்மூச்சு , கீழ்மூச்சு வாங்க ரங்கராஜனை நெருங்கினாள் . அவன் கையைப்பற்றிக்கொண்டு " ரங்கராஜன் , என்ன பண்ணப்போறே " என்றாள் . அவன் , " இது ஒரு புதையல் ரகசியம் அடங்கின செப்புத்தகடு . இதை அந்த தொல்பொருள்ஆய்வாளர்கள் கிட்ட கொடுக்கப்போறேன் . " என்றபடி மேலும் வேக வேகமாக சென்றான் . அந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் ஒரு டென்ட் போல அமைத்துத் தங்கியிருந்தார்கள் . உள்ளே அவர்கள் சிரித்தபடி ஏதோ பேசிகொண்டிருந்தார்கள் . வெளியே வந்து நின்ற ரங்கராஜனுக்கும் , ஹரிப்ரியாவுக்கும் அவர்கள் பேசியது தெளிவாகக் கேட்டது .

" அந்தப் புதையலைப் பத்தின குறிப்பு மட்டும் இந்த இடத்துல கிடைச்சுட்டா ..............நம்மள யாரும் அசைச்சுக்க முடியாது "..............
" அது ஒண்ணும் அவ்வளவு சுலபமில்லை .......புதையல்ன்னா சும்மா இல்லை . ரத்தக் காவு , உயிர்பலி கொடுக்கணும் "
" இங்க வேலை செய்யற கூலி ஆட்கள்ல எவனையாவது கொடுத்துற வேண்டியது தான் "

இந்த சம்பாஷணையைக் கேட்டதும் , ஹரிப்ரியா , வெடுக்கென ரங்கராஜனின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு உடனடியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் ...............


தொடரும்

"

Monday, September 19, 2011

மாந்தி - நாவல்
சக்கரவர்த்தி கோபிநாத் , தனது தோட்டத்தில் . தனது ஆஸ்தான சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு , அன்றைய தினசரியின் நாலாவது பக்கத்தை நாலாவது முறையாகப் படித்துக் கொண்டிருந்தார் . வாழ்க்கை அவருக்கு , எதோ அவார்ட் வாங்கின ஒரு திரைப்படத்தைப் போல பிரேம் பை பிரேமாக நகர்ந்து சென்றுகொண்டிருந்தது . அறுபது வயதாகிவிட்ட அவர் இனிமேல் வாழ்க்கையில் சாதிக்கவேண்டிய அம்சங்கள் எதுவும் இல்லை . மனைவி போய்ச்சேர்ந்து விட்டாள் . ஒரே மகள் திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டாள் . இங்கு அவரும் , நாளுக்கு இரண்டு வேளை " வந்து போகும் " ஒரு வேலைக்காரியும் மட்டும் ! சக்கரவர்த்தி கோபிநாத் அந்த வேலைக்காரியை , " கரெக்ட் " செய்யலாமென்று கூட நினைத்தார் . அப்படி " கரெக்ட் " செய்யும் முயற்சியில் ஓரளவாவது பொழுது போகுமே என்பது அவர் எண்ணம் . ராணிக்கு வயது ஒரு நாற்பது நாற்பத்தி ஐந்து இருக்கும் . சும்மா சொல்லக்கூடாது , சும்மா கும்மென்று இருப்பாள் . ஒரு நாள் , அவர் அவளிடம் , " ராணி , கை காலெல்லாம் வலிக்குது . கொஞ்சம் அமுக்கி விடறியா ? " என்றார் . கேட்டுவிட்டு அவளிடம் அவர் எதிர்பார்த்தது ஒரு வித மருட்சி கலந்த தயக்கத்தை . ஆனால் அவளோ , இதற்காகவே காத்திருந்தது போல முந்தானையைக் கீழே சரிய விட்டு , " என்னங்க ஐயா , பண்ணும் . " என்றாள் . சக்கரவர்த்தி கோபிநாத்துக்கு இந்தமாதிரி ," ஈசி அவைலபிள் " ஆக இருக்கும் பெண்களைப் பிடிப்பதில்லை . அவரைபொருத்தவரை பெண் என்பவள் , ஒரு பட்டாம்பூச்சி போல இருக்க வேண்டும் . நம்மையே சுற்றி சுற்றி வரவேண்டும் . ஆனால் பிடிக்க எத்தனித்தால் பிடிகொடுக்காமல் நழுவ வேண்டும் . அப்படிப்பட்ட பத்தினிகளைத்தான் கோபிநாத் எதிர்பார்க்கிறார் . அவருக்கு வாய்த்த மனைவி அவர் எதிர்பார்த்த பத்தினித்தன்மையோடு இருந்தாள். போறாத காலம் . போய்ச்சேர்ந்து விட்டாள் . கோபிநாத் தினம் தினம் எழுகிறார் . காலையில் காலையுணவு தின்கிறார் . மதியத்தில் மதிய உணவு தின்கிறார் . இரவில் இரவு உணவு தின்கிறார் . இந்தத் " தின்னுதல் " களுக்கு இடையே அவருடைய காலத்தை நிரப்புபவை , தினசரிகள் , தொ . கா . தொ , ( தொலைக்காட்சித் தொடர்கள் ) , தோட்டம் , சாய்வு நாற்காலி , வானத்தை வெறிக்கும் சூனியம் . அவ்வளவுதான் . தினம் தினம் அவருக்கு அப்படித்தான் கழிகிறது . இருந்தாலும் அவருக்கு வாழுதலின் மீதிருக்கும் இச்சை குறையவில்லை . காலை உணவில் அவருக்கு மெதுமெதுவென்ற இட்டிலிகளோடு கூடவே " ஒனத்தியான " புதினா சட்டினி இல்லையென்றால் கடுப்பாகி விடுவார் . மதியத்தில் அவருக்கு மீன் வறுவல் இருந்தே ஆக வேண்டும் . இல்லையென்றால் ராணியை வறுத்து எடுத்து விடுவார் . இரவில் மெது மெது தோசைக்கு , தக்காளிச்சட்டினி . தேங்காய்ச் சட்டினி இருந்தாலும் தேவலாம் . வயது ஆக ஆக மனிதன் சாவின் மீதிருக்கும் பயத்தை , ஏதாவது புலன் இன்பத்தை நாடுவதன் மூலம் குறைக்க முயல்கிறான் . ஆனால் ஒவ்வொரு புலனின்ப நுகர்ச்சிக்குப் பிறகும் அந்த பயம் அவனிடம் பன்மடங்காகப் பெருகிவிடுகிறது . சக்கரவர்த்தி கோபிநாத்துக்கு இப்போதெல்லாம் தத்துவார்த்தமான சிந்தனைகள் வர ஆரம்பித்திருக்கின்றன . " சாவைப்பற்றித் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் " , " சாவிற்குப் பிறகு மனித உயிர் அடையும் நிலை " என்பது போன்ற புத்தகங்கள் அவருடைய மேசையை அலங்கரிக்கின்றன .

சக்கரவர்த்தி கோபிநாத் , அந்த தினசரியை சலிப்போடு அந்த சிறிய மேசையின் போது விட்டெறிந்தார் . ஹ்ஹ்ஹா என்று சோம்பல் முறித்தார் . அப்போது ஒரு பட்டாம்பூச்சி , மஞ்சள் கலரில் சிவப்புப் புள்ளி போட்ட பட்டாம்பூச்சி ஒன்று அவரை சுற்றி சுற்றி வந்தது . கோபிநாத்துக்கு சட்டென்று எதோ ஒரு உற்சாகம் தொற்றிக்கொண்டது . இந்தப்பட்டாம்பூச்சிகளைப் பார்த்து எவ்வளவு நாட்களாகின்றன . கிளி , புறா , சிட்டுக்குருவி , முதலிய உயிர்கள் காலப்போக்கில் அழிந்து வருகின்றன . அந்தப் பட்டாம்பூச்சி விளையாட்டுக் காட்டுவது போல படபடத்த படி மாயாஜாலம் காட்டியது . அந்தப் பட்டாம்பூச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த கோபிநாத் , சட்டென்று பக்கத்து வீட்டு மாடியைப் பார்த்தார் . பிறகு பட்டாம்பூச்சியைப் பார்த்தார் . மாடியைப் பார்த்தார் . எதற்கு இரண்டையும் மாறி மாறிப் பார்க்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை . அனிச்சை செயல் போல அவராலேயே கட்டுப்படுத்த முடியாத எதோ ஒரு நிகழ்வுக்கு தான் உட்படுத்தப் பட்டுக் கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார் . சட்டென்று அவருக்கு அந்த எண்ணம் தோன்றியது . அவரைச் சுற்றிப் பறந்து கொண்டிருந்த அந்தப் பட்டாம்பூச்சி அவரது வலது கையில் வந்து அமர்ந்தால் , அந்த மாடி வீட்டுக்கதவு திறக்கப்பட்டு ஒரு பெண் வெளிவரப்போகிறாள் . வந்து அவரைப்பார்த்துப் புன்னகைக்கப் போகிறாள் என்பதுதான் அது . ச்சே என்ன பைத்தியகாரத்தனமான சிந்தனை இது என்று அவருக்கே தோன்றிய சமயம் அது நிகழ்ந்தது . பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சி சட்டென்று அவரது வலது கையில் வந்து அமர்ந்தது . இறக்கையை விரித்து விரித்து மூடிவிட்டு பறந்து சென்றது . கோபிநாத் , அந்த மாடியைப் பார்த்தார் . திடுக்கிட்டார் . அங்கே ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள் . தலை முடியைக் கோதிவிட்டுக்கொண்டிருந்தாள் . நைட்டி அணிந்திருந்தாள் . கோபிநாத் அவளைச் சற்று உற்றுப்பார்த்து விட்டு அவள் நைட்டி " மட்டுமே " அணிந்திருப்பதை உறுதி செய்தபோது , அந்தப் பெண் அவரைப்பார்த்துப் புன்னகைத்தாள் . அவளுக்கு இருந்தால் முப்பது முப்பத்தி இரண்டு வயது இருக்கும் . தனது " தரிசனத்தை " அவருக்குக் காட்டிவிட்ட திருப்தியோடு அந்தப்பெண் உள்ளே போய்விட்டாள் . கோபிநாத்துக்குத்தான் படபட வென்று வந்தது . நார்மலாக முயன்றார் . சட்டென்று வானத்தைப் பார்த்தார் . இப்போது ஒரு விமானம் அவரைக் கடந்து சென்றால் , அமெரிக்காவில் இருக்கும் அவர் மகள் தொலைபேசியில் அழைத்துப் பேசப்போகிறாள் என்று அவருக்குத் தோன்றியது . ச்சே நான் ஏன் பைத்தியகாரத்தனமாக நினைக்கிறேன் . என்று நினைத்தார் . எதேச்சையாக மீண்டும் வானத்தைப் பார்த்தார் . அவரது உடம்பு சிலிர்த்தது . ஒரு விமானம் , உய்ய் என்ற சத்தத்தோடு பறந்து சென்றது . அவரது அலைபேசி , அந்தப் புத்தக மேசையின் மீது இருந்தது . நகம் கடித்தபடி அதையே பார்த்தார் . திடீரென்று அது கத்தியது . கோபிநாத் பாய்ந்து அதை எடுத்தார் . மதுமிதா . அவரது மகள் .அமெரிக்க மகள் . அழைக்கிறாள் . மேலே விமானம் பறந்து சென்றது . மகள் அழைக்கிறாள் , பட்டாம்பூச்சி கையில் அமர்ந்தது , மாடியில் அந்தப்பெண் தரிசனம் தந்தாள் . என்ன நடக்கிறது இங்கே . திடீரென்று , அலைபேசியை தன்னையறியாமலேயே " ஆன் " செய்துவிட்டு எதுவுமே பேசாமல் பிரமை பிடித்தது போல தான் அமர்ந்திருப்பதை உணர்ந்தார் . அங்கே மதுமிதா , அப்பா அப்பா என்னாச்சுப்பா என்று கத்திக்கொண்டிருந்தாள் . கோபிநாத் , " ஹலோ " என்றார் . அவரது குரலில் இலேசான நடுக்கம் இருந்தது . " என்னப்பா ...... ஆன் பண்ணிட்டு ஏன் பேசலை .. என்னாச்சு உங்களுக்கு ? " என்றால் மதுமிதா . இங்கே இவர் , " அது வந்து ...... ஒண்ணும் இல்லைம்மா .......... " என்று தடுமாறுகிறார் . " என்னப்பா .... குரல் ஒரு மாதிரி இருக்குது ........ " என்று மதுமிதா பதற , அடுத்த நொடியே கோபிநாத்துக்கு கண்கள் இருண்டன . பேச்சு வரவில்லை , சட்டென்று அவர் மயங்கிக் கீழே சரிந்தார் .........................


தொடரும்

Tuesday, September 6, 2011

உன் மீது சில புகார்கள்


அடியே ,
காதலைக் கைது
செய்த நான் - இப்போது
காதலின் கைதியாகி நிற்கிறேன் !


தங்கத்தால்
செய்யப்பட்டதைத் தவிர
இந்த சிறைக்கம்பிகளுக்கு
வேறு சிறப்புகள் எதுவுமில்லை !


சிறகடித்து
சந்தோஷமாகப்
பறந்து கொண்டிருந்தேனடி !
எனது
இறக்கைகளை வெட்டிவிட்டு
கால்களைக் கட்டிவிட்டாய் !
பறக்கவும் முடியாமல்
நடக்கவும் முடியாமல் நான்
நொந்து நொந்து
நூலாகிறேன் !
வெந்து வெந்து
வீணாகிறேன் !


விடுதியில் இருக்கிறாய் நீ !
வீட்டில் இருக்கிறேன் நான் !
சாலையில் நடப்பதைப்போன்றது
உன் நிலை !
கம்பி மீது நடப்பதைப் போன்றது
என் நிலை !
உனக்காக நான்
விழுந்து எழுந்து
எழுந்து விழுந்து
விழுப்புண்கள் பெற்றாலும்
விருப்பத்தோடு உன்
விருப்பம் நிறைவேற்ற
விழைகிறேன் !
நீயோ
உனக்கான சாலையில்
எனக்காக நடப்பதற்கே
சிரமாயிருக்கிறது என்கிறாய் !
எந்த ஊர் நியாயம் இது ?


பக்கத்து வீட்டுக்காரனைப்
பலநாட்களாகத் தெரியும் !
ஈன்றெடுத்த
பச்சிளம் குழந்தையைப்
பத்து நாட்களாகத்தான் தெரியும் !
அதனால்
பக்கத்து வீட்டுக்காரனே
பெரிதும் உயர்ந்தவன் என்று
பைத்தியகாரன் கூடப்
பிதற்ற மாட்டான் !
உனது
பக்கத்து வீட்டுக்காரர்களுக்காக
பச்சிளம் குழந்தை என்னைப்
பரிதவிக்க விடாதே !


காதலிக்க
என்னைத் தேர்ந்தெடுத்தது
தவறு என்று
நினைக்கிறாய் தானே !
நானும் உன்னை
அப்படித்தான் நினைக்கிறேன் !
ஆனால் ,
நான் உன்னையோ
நீ என்னையா
தேர்ந்தெடுக்க வில்லை
காதல் தான் நம்மைத்
தேர்ந்தெடுத்திருக்கிறது !
அதை முதலில்
தெரிந்து கொள் !


நீ உனது
பிற ஆண் நண்பர்களோடு
பேசுவதைத் தவறு என்று
சொல்ல மாட்டேன் !
ஆனால்
இந்த முனையில் நான்
காத்துக் காத்துத்
தவித்துக் கொண்டிருக்க ,
அந்த முனையில் நீ
வேறு எதோ ஒரு முனையோடு
முனைப்பாக
வறுத்துக் கொண்டிருப்பதைத்தான்
பொறுத்துக் கொள்ளமுடியவில்லை
என்னால் !


உன்னோடு
நடக்கையில்
எதிரில் அழகான பெண்
வந்தால் ,
நான் தலைகுனிந்து
கொள்வதையும் ,
அழகான ஆண்
எவனாவது வந்தால்
நீ பார்க்கிறாயா என்று
பார்க்காமல்
பெருந்தன்மையோடு நான் வருவதையும்
பார்த்து என்னை
கேணப்பயல் என்று மட்டும்
நினைத்து விடாதே !


முன்பெல்லாம்
வணக்கம் சொல்லி
ஆரம்பிக்கும் நம் பேச்சு ,
வளர்ந்து வளர்ந்து
வான் முட்டும் !
இப்போதோ வெறும்
வணக்கத்தோடு
முடித்துக் கொள்வதே உனக்கு
இணக்கமாய் இருக்கிறது !

எனது இனிமைகள்
அனைத்தையும்
உறிஞ்சிக் குடித்து விட்டு
சக்கையான என்னைத்
தூக்கியெறிய நீ நினைத்தால்
மன்னித்து விடு ,
நாம் இதுவரை செய்ததற்குப்
பெயர் காதல் இல்லை !!!