Sunday, August 21, 2011

ஒரு காதலின் முளைநாம்
வகுப்பினுள்
இருக்கும்போதெல்லாம்
நான் என்னை
உன் மூலமாகவே
உணர்ந்திருக்கிறேன் !
அதுபோல
நீயும் உன்னை
என் மூலமாக
உணர்ந்திருப்பாய் !

தோழிகளுடன்
எதிரே வருகையில்
நீ தலைகுனிந்து சென்றாலும்
உன் சிவந்த கன்னங்கள்
காட்டிக் கொடுக்கின்றன !
தொலைவில் வரும்போதே
என்னைப்பார்த்து ரகசியமாய்ப்
புன்னகைத்திருக்கிறாய் என்பதை !


பேருந்தில்
நான் உன்னைப்
பார்த்துக் கொண்டேயிருந்தேன் !
நீயும் மௌனமாக
அனுமதித்துக் கொண்டேஇருந்தாய் !
திடீரென்று
ஒரே நொடியில்
ஒட்டுமொத்தமாக
என்னைப் பார்த்துவிட்டு
உனக்கான நிறுத்தத்தில்
இறங்கிச் சென்றாய் !
அதிர்ச்சியில்
எனக்கான நிறுத்தத்தில்
நான் இறங்காமல்
இரண்டு நிறுத்தங்கள்
தள்ளியே இறங்கினேன் !


நம் பார்வைகள்
சங்கமிக்கும் போது
உண்டாகும்
மின்சாரத்தைச் சேமிக்க
உடனடியாக ஒரு கருவி
செய்யச்சொல்லி
அரசாங்கத்திற்கு
ஆலோசனை தரலாம்
என்றிருக்கிறேன் நான் !
என்ன சொல்கிறாய் நீ ?


உண்மையைச்சொல் !
ஒருநாள்
வகுப்பிற்குத் தாமதமாய்
வந்து திட்டு வாங்கினேன் என்று
அடுத்த நாள்
நீயும் தாமதமாய் வந்து
திட்டு வாங்கியது
எனக்காகத்தானே ?


கலைந்த
உன் கூந்தலை
விரல்களால் நளினமாக நீ
ஒதுக்கிக் கொள்வதைப்
பார்ப்பதிலேயே
போதும் போதும் எனும்படி
போதை கிடைப்பதால்
நண்பர்களுடன் மதுவருந்துவதை
நாசுக்காக மறுத்துவிடுகிறேன் !


எப்போதோ
உன்னிடமிருந்து வாங்கிய
உன் எழுதுகோலில்
இப்போதும் உணர்கிறேன்
உன் உள்ளங்கையின்
வெப்பத்தை !


நேற்று
உன்னிடம்
என் காதலைச்
சொல்லித்தீர்த்ததில்
சொல்லி வைத்தது போல
கொட்டித் தீர்த்தது மழை !
இன்று ,
வரும் வழியில்
புதிதாகப் பூத்திருந்த
ஒரு ரோஜாவைப் பார்த்ததும்
நம்பிக்கை வந்துவிட்டது
நீ கட்டாயம்
சம்மதம் சொல்லப்போகிறாய் என்று !!!
Friday, August 5, 2011

எதிரே வரும் அவள்

தொலைவில் வரும்போதே
தலையுயர்த்திப் பார்த்து ,

கடல் அலைபோல் மனதை
அலைக்கழித்து ,

எண்ணத்தை சிதற வைத்து
இதயத்தைப் பதற வைத்து ,

இரத்த ஓட்டம் உறையச்செய்து
நாடித்துடிப்பு குறையச்செய்து ,

அருகே வந்ததும்
பார்வையை உரச விட்டு ,

இளமைக்கு மழை பெய்து
புன்னகைத்து உயிர் கொய்து , - என

இவ்வளவும் நடத்தி விட்டு
எதுவுமே நடக்காதது போல
எப்படித்தான் கடந்து போக முடிகிறதோ
தொடர்ந்து மூன்றாவது நாளாக
எனக்கு எதிரே வரும் அவளால் ???Wednesday, August 3, 2011

தொலைக்காட்சியைத் துறந்திடுங்கள்

வாரத்தில் ஓர்நாள்
ஏதேனும் ஒரு கிழமையில்

தொலைக்காட்சியைத்

துறந்திடுங்கள் !


மாலைபோட்டு
மாலை உங்களை
வரவேற்கும் !


அன்றைக்கென்று
உங்கள் மனைவி
உங்களுக்கு
அழகாகத் தெரிவாள் !


கூடம் சொன்ன
பாடம் படிக்கும் மகளின்
சந்தேகம் தெளிவித்து
சந்தோசம் கொள்வீர்கள் !


சும்மாவேனும்
அம்மாவிடம்
அன்போடு பேசுவீர்கள் !


சர்க்கரை நோய்பற்றி
அக்கறையாய்
அப்பாவிடம் விசாரிப்பீர்கள் !


இல்லம் தேடிவந்த
நண்பரிடம்
நல்லவிதமாய்
நலம் விசாரித்து - நட்பை மேலும்
பலம் பெறச்செய்வீர்கள் !


அண்டை
அயலூரில் வாழும்
தங்கை தமக்கையிடம்
பாசம் ஊட்டி
மாமன் மச்சானிடம்
நேசம் காட்டி
உறவுப்பாலத்தை
உறுதிப்படுத்துவீர்கள் !


அந்த வாரத்தின்
வாரஇதழை
வேறு எதைப்பற்றியும்
யோசிக்காமல்
வாசித்து முடிப்பீர்கள் !


மாத இறுதியில்
குலதெய்வக் கோயிலுக்கு
குடும்பத்தோடு போய்வரும்
இனிய திட்டமொன்று உங்கள்
இதயத்தில் உதயமாகும் !


அன்பு மனைவி
ஆசையோடு வார்த்துத்தரும்
தோசையில் அன்பானது
முறுகலாய் வெளிப்பட்டு
முறுவலிக்கும் !


இரவு உணவு முடித்து
தெருக்கோடிக் கடைவரை
நடை பயின்று வருவீர்கள் !


அன்றைக்கென்று
நிலவைப்பார்த்து
உங்களுக்கு ஒரு
கவிதை தோன்றும் !


நோட்குறிப்பு போல
நாட்குறிப்பு எழுதாமல்
அந்த நாளுக்கான பக்கத்தை
பூரிப்போடு பூர்த்தி செய்வீர்கள் !


உங்கள் மனதில்
குமைந்து கொண்டிருக்கும்
நீண்ட நாள்
சுமைகளை ,
இமை மூடும் முன்
இல்லாளிடம்
இறக்கி வைப்பீர்கள் !


உங்கள் மீது
இரக்கம் கொண்ட
உறக்கம் ,
உங்களைத் தழுவ
விரைந்தோடி வரும் !


ஒரு
முழுநாளை
முழுதாக முடித்த
முழுமையுணர்வில்
முழுமையாக
மூழ்கிப்போவீர்கள் !


ஆகவே ,
வாரத்தில் ஓர் நாள்
ஏதேனும் ஒரு கிழமையில்
தொலைக்காட்சியைத்
துறந்திடுங்கள் !!!