Tuesday, March 1, 2016


இன்றுதான் கவனித்தேன் 
பூந்தமல்லி 
வைத்தீஸ்வரன் கோவிலருகே 
தள்ளுவண்டியில் 
டிபன் விற்கும் 
அந்த இளைஞனின் 
மார்புக்கு மத்தியில் 
பிரபாகரன் 
சிரித்துக் கொண்டிருந்தார் 
அவர் 
உயிரோடிருக்கிறார் என்று தெரியும் 
ஆனால் 
எங்கிருக்கிறார் என்ற 
எனது நீண்டநாள் கேள்விக்கு 
இன்று விடைகிடைத்தது

Monday, February 29, 2016

எங்கள்
ஞாயிற்றுக் கிழமை மதிய
பசியிருட்டுக்கு
வெள்ளாட்டுக்கறிக்குழம்பு
என்றொரு  விளக்கு
நாட்டுகோழி வறுவல்
என்றொரு விளக்கு
ரத்தப் பொரியல்
என்றொரு விளக்கு
முட்டைப் பொடிமாஸ்
என்றொரு விளக்கு
என
அம்மா ஏற்றிவைத்திருந்த
அத்தனை  விளக்குகளையும்
நொடிப்பொழுதில்
ஊதியணைத்தது
குழம்பில் உப்புக்குறைவு என்று
தட்டை விசிறியடித்த
அப்பாவின் கோபம்