Skip to main content
கல்லூரிக் கன்னியும்

வாகனக் கணவனும் !அன்று ,

அதிகாலையில் எழும்போதே

அவளை நினைத்து

ஆவலாய் எழுந்தேன் !


அவள் ?


காலை வேளையில்

கடந்து போகும்

கல்லூரிக் கன்னி !


குனிந்தே வருபவள்

அருகே வந்ததும்

நிமிர்ந்து பார்த்து

நகர்ந்து போவாள் !


எனக்கு மட்டும்

மழை பொழியும் !


இன்று எப்படியும்

இனிதாய் சிரித்து ,

இளங்கிளியை இன்பமாய்

இம்சித்து விடவேண்டும் !

என்ற தீர்மானத்தில்

இருந்த போதும் ,

இந்தக் கவிதை

அதைப் பற்றி மட்டுமல்ல !


வண்டி சாவியை

வைத்த இடம் தெரியவில்லை !


தொலைந்த சாவியால்

தேகத்தின் தினவும்

தொலைந்து போனது

அன்றைய தினத்தின்

கனவும் கலைந்துபோனது !


வண்டி ,

தேடி வாங்கிய

தவணை வண்டி !

அதனால் தான்

சாவியும்

தவணை முறையில்

தினமும் தொலைகிறது !


ஒருமுறை ,

தொலைந்ததைத் தேடி

தவித்த போது

தொலைக்காட்சிப் பெட்டியின்

தலையில் இருந்ததென

தங்கை வந்து தலையில் குட்டி

திட்டிக் கொடுத்தாள் !


இன்னொரு முறை

படுக்கை விரிப்பில்

பார்த்த அன்னை ,

பொறுப்பே இல்லையென்று

பொருமிப் போனாள் !


மற்றொருமுறை ,

குளியலறையில்

கண்டெடுத்த தந்தை

கண்டித்து விட்டே

கொடுத்துச் சென்றார் !


இப்போது

வியூகம் அமைத்துத்

தேடினாலும் ,

வாகனக் கணவன்

ஒளிந்து கொண்டு

வித்தை காட்டினான் !


வாகனக் கணவன் ?

வாகனத்தின் பூட்டைப் புனர்பவன் !


வலைவீசித் தேடினாலும்

வகையாய் மாட்ட - அது என்ன

விலாங்கு மீனா ?


சல்லடை கொண்டு

சலித்தாலும்

சடுதியில் சிக்க - அது என்ன

சில்லறைக் காசா ?


இன்றைக்குப் பார்த்து

அலுவலகத்தில்

அவசியப் பணியொன்றை

அவசரமாய் முடிக்க வேண்டும் !


நேற்று

பாதியில் விட்ட

புள்ளிவிபரத்தை - இன்று

பத்து மணிக்குள்

பதிந்து கொடுக்க வேண்டும் !


தவறினால் ,

மேலதிகாரியின்

நாராசப் பேச்சிற்கு

நாய் கூட நாணிச் சாகும் !


இன்று

என்ன தவறு செய்தேன் ?

அல்லது

செய்ய இருந்தேன் ?


இது

சாவு தண்டனை அல்ல

சாவி தண்டனை !


யோசித்துப் பார்த்ததில் ,

இளங்கிளி தான்

இடறி வந்தாள் !

இன்று

கல்லூரிக் கன்னியை

கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை என

கடவுளிடம்

கற்பூரம் அடித்தேன் !


மறுநொடியே ,

" வண்டில பார்த்தியா "

என்றொரு அசீரிரி !

அம்மாதான் சொன்னாள் .

ஆண்டவனே சொன்னது போல

விரைந்து ஓடி

வெளியே வந்தேன் !


சொருகிய சாவியைக்

கண்டவுடன்

உறைந்த உயிர்

உருகி வந்தது !


வேகமாய் ஏறி

விரட்டி ஓட்டினேன் !


என் காலை நேர தேவதை

எதிரே வந்தாள் !

என்னையே பார்த்தாள் !

எதோ சொல்லவும் வந்தாள் !


நான் ,

சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு ,

சாலையை மட்டும் பார்த்தபடி

சென்று விட்டேன் !


அடுத்த நாள்

அவள் வரவில்லை !

அதற்கும் அடுத்த நாளும்

அவள் வரவில்லை !

வழியை அவள் மாற்றினாளா ?

அல்லது

விதி மாற்றியதா ?

தெரியவில்லை !


இரண்டு மாதங்களாகி விட்டன

இளங்கிளி கண்ணில் பட்டு !


இப்போதெல்லாம் நான்

எவளையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை !!!


Comments

Popular posts from this blog

திருமணம் 2013 


' சொல்லியனுப்புகிறோம் '
என்ற சொல்லை
காலம் என்ற
விலை கொடுத்து
பெண் வீட்டார்
வாங்கி விட்டனர் !
--------------------------------------------

இன்ஜினியர் பெண்ணும்
இன்ஜினியர் ஆணும்
தம்பதியாவது
காலத்தின் கட்டாயம் !
டாக்டருக்கும் இது
டிட்டோ !
--------------------------------------------

திருமணம்
கல்லூரியில்
நிச்சயிக்கப்படுகிறது !
--------------------------------------------

மாப்பிள்ளையின்
சம்பளமும்
மறைமுக
வரதட்சணைதான் !
கொண்டுவாருங்கள்
இதற்கொரு
இ. பி. கோ !
--------------------------------------------

குவித்துத்தான்
வைக்கிறார்கள்
ஆண் ஜாதகத்தை !
பொறுக்கித்தான்
எடுக்கிறார்கள்
பெண் ஜாதகத்தை !
--------------------------------------------

ஒவொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு !
ஆணினமே
அனுபவி !
--------------------------------------------

காலஸ்த்ரி,
திருநாகேஸ்வரம்,
திருவிடந்தை,
திருமணஞ்சேரி .......................
அடுத்து என்ன
ஜோசியரே ?
--------------------------------------------

தந்தை மகற்காற்றும் உதவி திருமணத்திற்கு
சாதி பார்க்காச் செயல் !
------------------…
பிரிந்த காதலி

அவளை
அந்தப் பேருந்தில்
பார்ப்பேனென்று
நான் நினைக்கவில்லை !

அவள்
அப்படியே தானிருந்தாள் !

காதோரத்தில்
அதே
சுருண்ட முடி !

தலைகுளித்த
அதே
ஒற்றைப் பின்னல் !

சூடப்பட்ட
அதே
ஒற்றை ரோஜா !

அந்த
பச்சை நிற
சுடிதாரை
எனக்குப்
பரிச்சையமிருக்கிறது !

மெட்டியில்லா
அவள்
பாதங்களைக் கண்டு
நான் ஏன்
ஆறுதல் அடைகிறேன் ?

மனதுக்குள்
மீண்டும்
மழை பெய்ய
ஆரம்பித்தது !

வருஷங்கள்
கடந்தும்
என்னைச் சுற்றி
மீண்டும் ஒரு
வசந்தம் குட்டியாய் !

அவள்
இன்னும் என்னைப்
பார்க்கவில்லை !

திறந்திருந்த
ஜன்னலில்
வெளியை
வெறித்துக் கொண்டிருந்தாள் !

இப்போதெல்லாம்
அவள்
இசை கேட்பதில்லை
போலும் !

இறுதியாக
நிகழ்ந்த
அந்த கடைசிச்சந்திப்பு
ஆயுளுக்கும்
மறக்காது !

என்னருகே
ஒட்டிநின்ற
அந்த பருவப்பெண்ணை
உரசாமல்
எவ்வளவு முடியுமோ
அவ்வளவு
விலகி நின்றேன் !

ஏதோ
எங்கள்
பழைய காதலுக்கு
நான் செலுத்தும்
என்னால் இயன்ற
மரியாதை !

சுற்றிலுமிருந்த
ஆண்களிடமிருந்து
தன் காதலியை
அடைகாத்துக் கொண்டிருந்தான்
ஒரு காதலன் !

சட்டென்று
அவனுக்காக
என் கண்கள்
ஈரமாயின !

ஒருகாலத்தில்
நானும்
என் காதலியை
அப்படி
அடைகாத்தவன் தான் !

பிரிந்த
காரணங்களைப்
பட்டியல் போட
விருப…
ரயில் சினேகிதி 
சட்டென்று
எனக்குள்
சகலமும்
வெளிச்சமாகி
விடுகின்றன,
எதற்கோ புன்னகைத்தபடி
எதிரே வந்தமர்ந்த
அவளைப் பார்த்ததும் !

கோழிக்குஞ்சை
உள்ளங்கையில்
பொத்திக் கொண்டால்
எப்படியிருக்குமோ
அப்படியிருக்கிறது
என் காதுகளுக்கு
யாருடனோ பேசியபடி
அவள் சிரிப்பது !

வேடிக்கை பார்த்தபடி
பூ விரல்களால்
அவள் கழுத்தை
அவளே
வருடிக் கொள்கிறாள் !
இங்கே எனக்கு
சொக்குகிறது !

எப்படியும்
நிமிர்ந்து என்னைப்
பார்த்து விடுவாள்
என்ற நம்பிக்கையில் தான்
எழுந்து போய்
காசு போடுகிறேன்
அந்த
குருட்டுப் பிச்சைக்காரனுக்கு !

இளஞ்சிவப்பு
நெயில் பாசிஷ்
தடவிய
அவள் பாதங்களைப்
பார்த்துக் கொண்டிருக்கறேன்,
சட்டென்று
கதை பேச
ஆரம்பிக்கின்றன
அந்தப் பாதங்கள்
என்னோடு !

நீர் குடிப்பதற்காக
அந்த வாட்டர் பாட்டிலின்
மூடியை
மென்மையாக
மிக மென்மையாக
அவள் திருகுகிறாள்,
தேவராகம்
கேட்டது போல
இன்பமாக அதிர்கிறது
என் பின்னங்கழுத்து !

பற்ற வைத்த
அணுகுண்டு
எப்போது வெடிக்குமென
பதைப்போடு
பார்ப்பது போலப்
பார்க்கிறேன்
உறக்கத்தில்
இமை மூடிய
அவள் விழிகளை !

அவளை விட
அழகான ஒருத்தி
அங்கே வந்து நின்றாலும்
அந்த அழக…