தவற விட்ட தருணங்கள்
பேருந்து ஜன்னலில் ,
எட்டிப்பார்த்த குழந்தையொன்று
அழகாய்ச் சிரித்தது !
பதிலுக்கு சிரித்திருக்கலாம்
பேருந்து காத்திருக்கவில்லை !
தனியாய் வந்த திருமதி
தவிப்போடு பார்த்தாள்
பதிலுக்குப் பார்த்திருக்கலாம்
"தயக்கம்" தடைசெய்து தொலைத்தது !
தந்தை எதற்கோ திட்டினார்
தலைகுனிந்து கேட்டிருக்கலாம் !
அகந்தை அனுமதிக்கவில்லை !
நொண்டிப்பிச்சைக்காரன்
கைநீட்டிக் காசு கேட்டான் !
மூன்று ரூபாயாவது கொடுத்திருக்கலாம்
முகங்கோணிப் புலம்பிச் சென்றான் !
அறைநண்பன் ஒருவன்
மூன்று வயது மூத்தவன் !
"அண்ணா " என்றே அழைத்திருக்கலாம்
"தன்மானம் " தடுத்து விட்டது !
பிடித்த பாடல் ஒன்று ,
பண்பலையில் பவனி வந்தது !
கேட்டுவிட்டே போயிருக்கலாம்
காலம் மறுத்து விட்டது !
அன்பு மனைவி ,
ஆசையாய் வார்த்த தோசை
அருமையாக இருந்தது !
இன்னும் இரண்டு சாப்பிட்டிருக்கலாம் !
இரண்டு நிமிடங்களை ,
இழக்கவேண்டி இருந்திருக்கும் !
தாய்க்கு உடல் சுகமில்லையாம்
தாமதப்பணியாளன் காரணம் சொன்னான் !
திட்டாமல் விட்டிருக்கலாம் !
தலைகுனிந்த படியே சென்றுவிட்டான் !
பக்கத்து வீட்டுப் பரந்தாமன் மகன் ,
பந்தடித்து விளையாடியதில்
பாதி ஜன்னல் பெயர்ந்துவிட்டது !
சமாதானமாகப் போயிருக்கலாம்
சண்டையைத் தெருவே வேடிக்கை பார்த்தது !
இதுபோன்ற
தவற விட்ட தருணங்களுக்காக
தயவுசெய்து என்னை
இன்னொரு முறை
படைத்து விடு இறைவா !!!
Comments
Post a Comment