Saturday, October 19, 2013

பிச்சைக்காரன்

அவன்,
கந்தலான
கச்சைக்காரன் !
சோற்றின் மீது
இச்சைக்காரன் !
சுருங்கச் சொன்னால்
பிச்சைக்காரன் !

அவன்,
ஒவ்வொரு வேளையும்
உணவுக்காக
வெம்புகிறான் !
எப்படியும்
மகேசன்
படியளப்பானென்று
நம்புகிறான் !

அவனுக்கு,
வாழ்வென்பது
காற்றிலாடும்
ஊசல்தான் !
வயிற்றுக்கும்
அவனுக்கும்
அனுதினமும்
பூசல்தான் !
அவன்,
வசிப்பிடம்
ஒரு தேநீர்க்கடை
வாசல்தான் !

அவன்,
ஒரு நாளும்
குளித்ததில்லை !
சோறுண்ண
யாரும் அவனை
விளித்ததில்லை !
வயிறார
அவனும் உண்டு
களித்ததில்லை !.

உடம்பில்
இல்லை
முடம் !
இன்னும்
இருக்கிறது
திடம் !
ஆனாலும்,
உழைப்பு கூடாதென்று
அவனுக்கு ஒரு
அடம் !

தொடக்கத்தில்
அவனும்,
காண்போரிடமெல்லாம்
ஒரு வேலையை
இரந்து பார்த்தான் !
பரிதாபத்தை
பக்குவமாய்க்
கரந்து பார்த்தான் !
கண்ணீரை
கணக்கில்லாமல்
சுரந்து பார்த்தான் !

ஒன்றும்
நடக்கவில்லை !
அதிர்ஷ்ட தேவதை,
அவனைக்
கடக்கவில்லை !
பொங்கியெழுந்த
பிச்சை வேட்கையை
அவனும் பெரிதாய்
அடக்கவில்லை !

உடனே
ஏந்தினான்
கையை !
ஏதோ
நிரப்பினான்
பையை !
ஓரளவு
வளர்த்தான்
மெய்யை !.

எதற்குக்
கிளற வேண்டும்
அதையெல்லாம் !
தேவையில்லை
நடந்து முடிந்த
கதையெல்லாம் !

அது ஒரு
பகல் !
தகித்தது
சூரிய
அகல் !
ஒவ்வொருவரின்
காலடியிலும்
குட்டியாய்
இருளின்
நகல் !

ஓய்வாய்
சற்று அமர
நிழற்குடையொன்றை
நாடிப்போனான்
நமது கதாநாயகன் !

யாரும்
அவனுக்கு
சிவப்புக் கம்பளம்
விரிக்கவில்லை !
காசு கேட்டு
யாரையும் அவன்
அரிக்கவில்லை !
காரணம்
காலையில் உண்டது
கொஞ்சம்
செரிக்கவில்லை !

ஓரிடத்தில்
அமர்ந்தான் !

சுற்றிலும்
பார்த்தான் !

வாங்கித்தாராத
ஏதோ ஒன்றிற்காக
அழும்
ஒரு சிறுவன் !

எதற்கோ
காதலியிடம்
கெஞ்சும்
ஒரு காதலன் !

போகும்
பேருந்தையெல்லாம்
ஏக்கமாய்ப்
பார்க்கும்
படிக்காத
ஒரு கிழவி !

அங்கிருந்த
முதலாளிக்கு
இங்கிருந்தே
அடிபணியும்
ஒரு பணியாளன் !

வாங்கிய கடனுக்கு
சமாதானம் சொல்லும்
ஒரு நடுத்தரன் !

இந்த ரீதியில்
இன்னும் சிலர் ............

நம்மாள்
இப்போது
ஒரு
பீடியைப்
பற்ற வைத்தான் !

புகையை,
ஆழ இழுத்து
நிதானமாய் விட்டான் !

சுகமாகத்தான்
இருந்தது !!!

12 comments:

 1. யதார்த்தமான ஒருவனின் இயல்பான கதையை அழகான வரிகளில் கவிதையாக்கி அசத்தியுள்ளீர்கள். வரிக்கு வரி ரஸித்துப்படித்தேன். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் தொடர் வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா

   Delete
 2. தினம் தோறும் சந்திக்க கூடிய பிச்சைக்காரனை பற்றி சிறப்பான கவிதை! சந்தங்கள் சிறப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. சந்தங்களை ரசித்த உங்களுக்கு மிக்க நன்றி நண்பரே

   Delete
 3. ஆழமான வரிகள்..
  யதார்த்தமான ஒரு யாசிப்போனை
  அழகிய கருப்பொருளாக்கிய விதம் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் எல்லாம் எனது கவிதையைப் படிப்பதே பெரும் பாக்கியம் நண்பரே

   Delete
 4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வலைச்சரத்தில் சென்று பார்த்தேன் நண்பரே ! கருத்தும் இட்டு விட்டேன் ! குறிப்பிட்டுச் சொன்னதற்கு நன்றி !

   Delete
 5. வணக்கம் சகோதரரே!..

  இன்றைய வலைச்சர அறிமுகத்தில் உங்களைக் கண்டு வந்தேன்.

  இங்கு உங்கள் கவிதைகண்டு அசந்துபோனேன்...
  பொருளோ மிகமிகச் சிறப்பு!..

  வாழ்த்துக்கள் சகோ!

  தொடர்கிறேன்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாசிப்புக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ

   Delete
 6. பசிக்கு வயிற்று நிரப்புவது மட்டும் போதும்.. பிச்சைக்காரனுக்கு வேறு எதுவும் தேவைப்படுவதில்லை... சுகமாகத்தான் இருக்கிறது அவன் நிலை.. அருமை! கவிதையை மிக மிக ரசித்தேன்...!

  ReplyDelete
  Replies
  1. தினந்தோறும் யாசிக்கும் பிச்சைக்காரன், பிச்சையெடுத்தல் தேவையற்ற ஒரு பொழுதில் அதுவரையில் அவனை நிராகரித்த மனிதர்களின் துன்பங்களில் கொஞ்சம் சுகப்படுகிறான் என்பதே இக்கவிதையின் சாரம் ! புரிந்து கருத்திட்டதற்கு நன்றி தோழி !

   Delete