Friday, October 25, 2013

விலை

அவளொரு
தாசி !
பாவ ஆற்றில்
இச்சை மீன்கள்
தின்னும்
பாசி !
ஆண்கள்
மட்டுந்தான்
அவளுக்கு
ராசி !

அவள் நடையில்
எப்போதுமிருக்கும் - ஒரு
பீடு !
இன்பம் தருவதில்
வானுலக ரம்பை
அவளுக்கு,
ஈடு !
ஒதுக்குப்புறமானது
அவள்,
வீடு !

அவள் மேனி,
ஒரு சிலையை
நிகர்க்கும் !
எப்படிப்பட்ட
பிரம்மச்சர்யத்தையும்
அவள் பார்வை
தகர்க்கும் !

எப்படிப்பார்த்தாலும்
அவள்,
அழகி !
போனால்
திரும்பிவரலாம்
இன்பத்தை
அவளிடம்
பழகி !

அவளிடம்,
துன்பம் நடுங்கும்
பருந்தைக்கண்ட
அரவு போல !
கவலை மறையும்
பகலவன் உதித்த
இரவு போல !
அவளிடம் சென்றால்,
அந்நாள் ஆகும்
நம்
இன்பக்கணக்கில் - ஒரு
வரவு போல !

அன்று.....................

அவள்,
குளித்து விட்டு
செயற்கையாக
வேர்த்திருந்தாள் !
மயக்கும் வித்தைகளை
மனதோடு
சேர்த்திருந்தாள் !
திறந்த வாசலில்
யாரையோ - எதிர்
பார்த்திருந்தாள் !

அவன்
வந்தான் !

அவன்,
தோற்றத்தில்
முப்பதை
முடித்திருந்தான் !
சொல்ல முடியாத
சோகத்தை
முகம் முழுக்க
வடித்திருந்தான் !

அவனைக்கண்டு
அவள்,
சிரித்தாள் !
பார்வையால்
அவனை
உரித்தாள் !
பெருமூச்சால்,
அந்த அறையையே
எரித்தாள் !

அவன்,
சட்டென எழுந்தான்
கட்டிலிலிருந்து !
எடுத்து விட்டான்
கவலைக் குழந்தையை
தன் மனமெனும்
தொட்டிலிலிருந்து !

அவனுக்கு,
இணையவில்லையாம்
இருமனம் !
ஆகவில்லையாம்
திருமணம் !

ஒவ்வொன்றாய்
முடித்தானாம்
கடமையை !
முடித்து விட்டு
உணர்ந்தானாம்
வாலிபம் தொலைத்த
மடமையை !

அவன்,
நாடி வரவில்லையாம்
அவளிடம்
சுகத்தை !
தடவ வேண்டுமாம்
அன்பு வார்த்தைகளால்
அவன்,
அகத்தை !
தொடக்கூட
மாட்டானாம்
அவன்,
அவள்,
நகத்தை !

அவள்,
அமைதியாக
அவனை
ஏறிட்டாள் !
பிறகு,
பின்வரும்
வார்த்தைகளால்
அவனை இரண்டாகக்
கூறிட்டாள் !

" ஐயா,.
ஒட்டிக்கொள்கிறேன்
உங்களிடம்
அட்டை போல !
அணியலாம்
நீங்கள் என்னை
சட்டை போல !
கிடக்கிறேன்
இரவெல்லாம் - மர
கட்டை போல !

உடம்புக்கு
மட்டுந்தான்
இங்கே,
விலை !
உங்கட்கு
உகந்தல்ல
என்,
நிலை !
இன்ப விருந்தென்றால்,
இதோ இருக்கிறது
இலை !

அனுதினமும்
உடம்பால்
மட்டுந்தான்
எனக்கு
சாவு !
மனதையும்
கொடுக்க மாட்டேன்
மற்றவனுக்குக்
காவு !
தர முடியாது,
உங்கள்
மனப்பசிக்கு
ஆறுதல்தோசை வார்க்க
மாவு !

கற்கவில்லை
நான் இன்னும்
மனதை விற்கும்
கலையை !
எதிர்பார்க்க வேண்டாம்
தெப்பக்குளத்தில்
கடல்,
அலையை !

மனது
மட்டுமாவது
என்னிடம்
எஞ்சட்டும் !
நரகத்தின் கதவுகள்,
இதற்காகவாவது
என்னைக்கண்டு - சற்று
அஞ்சட்டும் !

நீங்கள்
போகலாம்  !  "

இப்படியாக,
இறுதிவரை
அவள்,
அவனுக்கு
இணங்கவில்லை !
அதன் பிறகு
அவனை
அவள்,
வணங்கவில்லை !

அவனுக்கு
அந்தப்பணம்
திருப்பித்தரப்பட்டது !

அவனுக்கு
அந்தக்கதவு
சாத்தப்பட்டது !


6 comments:

 1. விலையில்லை இதற்கு
  வெகுமதிதான் உங்களுக்கு..

  நல்ல கவிக்காட்சிப் பதிவு!

  வரிகளை ரசித்தேன்... வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. கவிதையின் காட்சிப்பதிவை ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு நன்றி இளமதி

   Delete
 2. சொல்லாடல்கள் எல்லாமே மிகவும் சுவையாக உள்ளன. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. இக்கவிதையின் சொல்லாடல்களை ரசித்த தங்களுக்கு மிக்க நன்றி ஐயா !

   Delete
 3. அருமையான கவிதை! வாலி போல எழுத முயற்சிப்பது புலனாகிறது! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஆம் நண்பரே ! தமிழ்நாடு தன்னை இழந்த வலி தெரியாமல் பார்த்துக் கொள்ளும்படி என் குருவான வாலி என்னிடம் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் ! அதனால் தான் ! கவிதைகளில் பிழையிருப்பின் பொறுத்தருளவும் !

   Delete