Wednesday, October 23, 2013

சூழல் !


நான்,
நிறுத்தத்தில்
நின்று கொண்டிருந்தேன் !
எதையோ வாயில்
மென்று கொண்டிருந்தேன் !
போகும்
பெண்களையெல்லாம்
பார்வையால்
தின்று கொண்டிருந்தேன் !

திகைக்காதீர்கள் !
கேலியாய்
என்னைப் பற்றி
நகைக்காதீர்கள் !

அழகை ரசிப்பதில்
அப்படியொன்றும் இல்லை
பிழை !
பிறன்மனை நோக்கினும்,
புயலடித்தாவது பெய்யும்
மழை !

நான்,
வெந்ததைத் தின்று
விதிக்குக் காத்திருக்கும்
சாமானியன்தான் !
ரோமில் வாழ்ந்தால்
ரோமானியன்தான் !

ஆகவே,
அப்படித்தான் !

சங்கதி
அதுவல்ல !

அந்த
நாய்க்குட்டிகள் !

எங்கிருந்தோ அவை
ஓடிவந்தன !
நம்பிக்கையோடு
நிறுத்தத்தை,
நாடிவந்தன !
துள்ளல் இசையை
பிஞ்சுக் கால்களால்
பாடிவந்தன !

நாய் கண்டு
சிலர்,
புன்னகை
பூத்தார்கள் !
வேறு சிலர்,
பொறுமை
நீத்தார்கள் !
இன்னும் சிலர்,
அமைதி
காத்தார்கள் !

ஒரு நாயின் நிறம்
காவி !
ஓடியோடிக் குதித்தது - அது
தாவி !

இன்னொரு
நாய்க்கு,
கண்கள் மட்டும்
பச்சை !
கீழே உருண்டு
புரள்வதில்
அதற்கு அப்படியொரு
இச்சை !

மற்றொரு
நாய்க்கு,
ஆடிக்கொண்டேயிருந்தது
வால் !
நிற்கவில்லை
அதற்குத் தரையினில்
கால் !

இன்னுமொரு நாய்
நிற்போரின்
காலில் போய்
ஈசியது !
அவர்களோடு,
அது ஏதோ
பேசியது !

நான்,
அக்காட்சி விருந்தை
கண்களால்
புசிக்க ஆரம்பித்தேன் !
அந்தச் செய்கைகளை
மெய்மறந்து
ரசிக்க ஆரம்பித்தேன் !
அவற்றின்
உலகத்தில்,
கொஞ்ச நேரம்
வசிக்க ஆரம்பித்தேன் !

என்னை உணர்ந்தேன்
மனிதனாக !
ஆகிக் கொண்டிருந்தேன்
புனிதனாக !

அப்போது,
எங்கிருந்தோ
அவன் வந்தான் !
தன்,
அடிவயிற்றில் இருந்து
காறி ............
ஓங்கித் தரையினில்
துப்பி ..........
தன்
பிரம்மகடமையை
நிறைவேற்றினான் !

பொங்கிவந்த புனிதம்
பட்டெனக்
குறைந்தது !
ஒரு உலகம்
என்னிலிருந்து
மறைந்தது !
ஒரு பெரியகை
ஓங்கி என்னை
அறைந்தது !

இப்போது
அந்த நாய்க்குட்டிகளை
சிலர்,
சூ சூ  வென்று
விரட்டினர் !
கல்லெடுத்து
அடிக்கப் போவதாய்
மிரட்டினர் !
ஏதோ ஒரு
கோபத்தை
அவைகட்கெதிராய்த்
திரட்டினர் !

அதன் பிறகு
அவை
ஓடிவிட்டன !

இப்போது,
மீண்டும் நான் ............

நிறுத்தத்தில்
நின்று கொண்டிருந்தேன் !
எதையோ வாயில்
மென்று கொண்டிருந்தேன் !
போகும்
பெண்களையெல்லாம்
பார்வையால்
தின்று கொண்டிருந்தேன் !


சூழல் !

12 comments:

 1. இன்றைய வலைச்சரத்தில் உங்களின் பதிவை பகிர்ந்துள்ளேன் குரு

  ReplyDelete
 2. மிக மிக நன்றி எழில் ! ஏது கொஞ்ச நாட்களாக எனது வலைப்பூ பக்கம் வருவதில்லையே என்று நினைத்தேன். இப்படி வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் ! நன்றியோ நன்றி !

  ReplyDelete
 3. நீங்களும் ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்கலாமே...

  விவரங்களுக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி நண்பர் தனபாலன் அவர்களே ! கண்டிப்பாக இந்தப்போட்டியில் என்னால் இயன்ற பங்களிப்பைச் செய்கிறேன்

   Delete
 4. யதார்த்தமான சூழலை விவரித்துள்ள இந்தப்படைப்பு அருமை. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஐயா, சூழலை ரசித்த தங்களுக்கு மிகவும் நன்றி, கூடவே தங்கள் தொடர்வாசிப்புக்கும், தொடர் பின்னூட்டத்திற்கும் !

   Delete
 5. விலங்குகளின் செய்கைகளை பார்த்து மனிதமாகும் மனது மனிதனின் செய்கைகளை பார்த்து மீண்டும் சூழலுக்கே போய்விடுகிறது... என்னமாய் எழுதறிங்க... வியப்புடன் பாராட்டுக்கள்...!

  ReplyDelete
  Replies
  1. கவிதையில் நான் என்ன சொல்ல வந்தேனோ அதை இரண்டே வரிகளில் சொல்லி விட்டீர்கள் தோழி ! நன்றி !

   Delete
 6. மனிதன் என்னும் மிருகம்...
  அங்கே மிருகங்கள் அதன் உலகம்... எத்தனை யதார்த்தமானது.

  உங்கள் கவிவரிகளில் காட்சிப்பதிவினைச் சேர்த்தே தந்துவிட்டீர்கள்...
  அற்புதம்!.. மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. இந்தக்கவிதைக்கும் தாங்கள் பின்னூட்டமிட்டதில் மிகவும் மகிழ்ச்சி தோழி

   Delete
 7. சூழலை மிக அருமையாக சித்தரித்தது கவிதை! சிறப்பான படைப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வாசிப்புக்கும், தொடர் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே

   Delete