Skip to main content
உயர்ந்த உள்ளங்கள் .............. - சிறுகதை

எனக்கு எப்போது பார்த்தாலும் "ஈடுகட்டும் விடுமுறை" ( Compensatory off ) செவ்வாய்க் கிழமையன்றே வந்து தொலைக்கிறது . செவ்வாய்க் கிழமை போர் செய்ய உகந்தது . எவனிடமாவது தீர்த்துக்கொள்ள வேண்டிய பழைய பழி பாக்கி இருந்தால் செவ்வாய்க் கிழமையன்று அவன் வீட்டிற்க்கே போய் அவன் செவினியில் அறையலாம். அல்லது பொஞ்சாதி குழம்பில் உப்பு உறைப்பை சரியாகப் போடவில்லை எனில் சோத்துத் தட்டை சுவற்றில் எறிந்து அவளது குடுமியைப் பிடித்தபடி வண்டை வண்டையாக வையலாம் . இதைத் தவிர செவ்வாய் கிழமையன்று செய்ய வேண்டிய இன்ன பிற நல்ல சங்கதிகளையும் ஆராய்ந்தால் , நிலம் , நீச்சு , வீடு , வாசி வாங்கலாம் . ரத்தத்தின் ரத்தமான உடன் பிறந்த தம்பி தங்கைகளுக்கு பிடித்தமான எதையாது வாங்கிக்கொடுக்கலாம் . மத்தபடி செவ்வாய்கிழமையன்று ஒய்யாரமாக விடுமுறையைக் கழிப்பது என்பது கூரிய வேல் ஒன்றை எடுத்து ஆசன வாயில் சொருகிக் கொள்வதற்குச் சமம் . அன்றும் செவ்வாய்க் கிழமை . காலையில் எழுந்ததுமே கடுப்பாக இருந்தது . இரண்டு முறை டூ பாத்ரூம் போனேன் . நன்றாக இருக்கிறது என்பதற்காக தள்ளுவண்டி சமூசாவை கூடுதலாக உள்ளே தள்ளியது வேலையைக் காட்டி விட்டது . குளித்தேன் . சிவப்பு நிறத்தில் சட்டையையும் , பச்சை நிறத்தில் சாயம் போன பேன்ட்டையும் டக் இன் செய்து விட்டு கோமாளி மாதிரி அறையை விட்டுக் கிளம்பினேன் . தெருவில் நாய் ஒன்று குரைக்கலாமா வேண்டாமா என்று ஏறெடுத்துப் பார்த்துவிட்டு " ச்சீ போய்த்தொலை " என்கிற தொனியில் தலையைத் திருப்பிக் கொண்டு போனது . எதிரே ஒருவன் , விபச்சாரியுடனான சல்லாபத்தில் இருந்து பாதியில் எழுந்து வந்தவன் போல கன்றாவியாக இருந்தான் . என்னைப் பார்த்தவுடன் அடிவயிற்றில் இருந்து ஹர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று காறித் துப்பினான்
அவனது உயிர்நிலையில் சீழ் பிடித்து அவன் சாகக் கடவது என சபித்தேன் . என்னால் சபிக்கத்தான் முடியும் . ஒரு முடியையும் பிடுங்க முடியாது . நொந்தபடியே பேருந்து நிறுத்தத்திற்கு வந்தேன் . காஞ்சிபுரம் போவது எனது திட்டம் . போய் ? ஒரு உருப்படாத உணவகத்தில் வெந்த சோத்தை விதியே என்று தின்று விட்டு , எதாவது ஒரு சீர்கெட்ட சினிமாவை சிரமத்தோடு சிரமமாக பார்த்து நாசமாகப் போக வேண்டியது தான் . அதில் பாருங்கள் , பூந்தமல்லியில் இருந்து சினிமா பார்க்க காஞ்சி புரம் செல்வது இந்த பேரண்டத்திலேயே நான் ஒருவனாகத் தான் இருப்பேன் . எந்தக் கேனக் கிறுக்கனும் இந்த மாதிரிச் செய்ய மாட்டான் . ஆனால் நான் அப்படிப் போவதற்குக் இன்றியமையாத காரணம் ஒன்று இருக்கிறது . என் அறை நண்பர்களுக்கு நைட் ஷிப்ட் . எனக்கு விடுமுறை . ஒருவன் உள் அறையில் தூங்குவான் . இன்னொருவன் முன் அறையில் தூங்குவான் . மொத்தமே இரண்டு அறைகள் தான் . இதையும் மீறி நான் தனிமையில் உல்லாசமாகப் பொழுது போக்குவதென்றால் ஒன்று சமையலறையில் போக்க வேண்டும் அல்லது "கழி - குளியலறையில்" போக்க வேண்டும் . எனவே அவர்கள் தூங்கி எழுகின்ற வரைக்கும் நான் பொழுதின் கழுத்தைப் பிடித்துத் தள்ளு தள்ளு என்று தள்ளியாக வேண்டும் . அதற்காகத்தான் இந்த காஞ்சி புரம் சென்று சினிமாப் பார்க்கும் திட்டம் . சிற்சில சமயங்களில் நான் வேலூருக்கே சென்று சினிமா பார்த்திருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் . சரி சரி என் மனநிலையை சந்தேகிக்காதீர்கள் . எனக்கே அந்த சந்தேகம் இருக்கிறது . நான் இப்படித்தான் சொல்ல வந்ததை விடுத்து வள வள வென்று எங்கெங்கோ போய் விடுவேன் .
பேருந்து நிறுத்தத்தில் கும்பல் கும்பலாய் ஆண்கள் நின்று கொண்டிருந்தார்கள் . ஒரு காஞ்சிபுரம் பேருந்து அடைத்துக் கொண்டு வந்தது . நல்லவேளையாக நிற்ப்பதற்கு இடம் இருந்தது . ஒருவழியாக ஏறினேன் . உள்ளே பேருந்துக் கம்பியோடு சாய்ந்து நின்ற ஒருவன் என்னைப் பார்த்ததும் பெருமூச்சு விட்டான் . அதுவரை ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு காலைப் பரப்பியபடி பெப்பரப்பே என நின்றிருந்தவனுக்கு புதிதாக பேருந்தில் ஏறிய கூட்டத்தால் அவனது மோன நிலை பாதிக்கப்பட்டு , அந்தக் கடுப்பை , அவனுக்கு அருகே போய் நின்ற என்மீது பெருமூச்சாகக் கொட்டினான் . நான் இப்படித்தான் தேடிப் போய் தேளை எடுத்து கீழ் உள்ளாடைக்குள் விட்டுக்கொள்வேன் .
எனக்குப் பக்கத்தில் நரைகூடிக் கிழப்பருவம் எய்திய மூதாட்டி நின்றிருந்தாள் . வயது எப்படியும் எழுபது இருக்கும் . அந்தப் பாழாய் போன கத்துக்குட்டி ஓட்டுனன் அடிக்கொருமுறை ஆயிரம் " உந்துத் தடையை " போட்டான் . அப்படிப் போட்டதில் இரண்டு முறை அந்த பேரிளம் பெண் மீது மோதி விட்டேன் . சோடாபுட்டி கண்ணாடி அணிந்திருந்த அந்தக் கிழமங்கை , " ஏண்டாப்பா ........... சும்மா சும்மா உரசிகிட்டே வர்றியே .............. கொஞ்சம் தள்ளி நிக்கறது ..... அங்க தான் அவ்வளவு இடம் கெடக்கே " என்றாள். போதாக் குறைக்கு பக்கத்தில் நின்றிருந்த குண்டான நடுத்தர வயதுத் திருமதி ஒருத்தி " ஏம்ப்பா ...........இதுக்குன்னே வரீங்களா ? நானும் பார்த்துகிட்டே இருக்கேன் . அப்பத்துல இருந்து அந்தம்மாவ இடிச்சுகினே வரியே ? " என்றாள் . எனக்கு , அப்படியே ஓடிக்கொண்டிருக்கும் அதே பேருந்தின் முன் சக்கரத்தில் தலையைக் கொடுத்துச் சாகலாம் என்றிருந்தது . அதற்குப் பிறகு நான் அந்த கிழவியை விட்டு எவ்வளவு எட்ட நிற்க முடியுமோ அவ்வளவு எட்ட நின்றேன் . இதற்குள் கடைசி இருக்கையின் சன்னலோரத்தில் இருந்தவன் , எழுவதற்கான அறிகுறிகளைக் காட்ட ஆரம்பித்தான் . அதை நானும் பார்த்தேன் . பக்கத்தில் இருந்த அந்த பெருமூச்சுப் பார்ட்டியும் பார்த்தான் . அவனது மூக்கு வியர்ப்பதை நான் திரும்பிப் பார்க்காமலேயே உணர்ந்தேன் . அவனும் காஞ்சிபுரத்திற்குத்தான் பயணச்சீட்டு வாங்கியிருந்தான் . எழுவதற்கான ஆயத்தம் காட்டிய பயணி இரட்டை நாடி சரீரம் உடையவனாகவும் , கிட்டத்தட்ட அவனுடைய எடைக்கு சரிநிகர் சமானமான லக்கேஜ் பேக்கை உடையவனாகவும் இருந்தான் . அவன் எழுந்த போது பேருந்தே ஓரு ஆட்டம் கண்டது போல இருந்தது . ஒருவழியாக அவன் எழுந்து அனைவரையும் இடித்துத் தள்ளிவிட்டு , புதிதாகப் பிறக்கும் குழந்தையின் அவஸ்தையோடு வெளியேற பிரம்ம பிரயத்தனம் செய்தான் . அதன் விளைவாக , காலியான அந்த இருக்கைக்கு " கைக்கு எட்டும் " தொலைவில் இருந்த நான் , எட்டாத தொலைவுக்குத் தள்ளப்பட்டேன் . அந்த மூக்கு வியர்த்த பார்ட்டி , புறப்பட்ட புல்லட் போல , பாய்ந்து விரைந்து அந்த காலி இருக்கையை ஆக்கிரமித்து வெற்றித் தெனாவெட்டோடு என்னைப் பார்த்தான் . இப்போது நான் பெருமூச்சு விட்டேன் . இப்போது புதிதாக பேருந்தினுள் ஏறிய சிலரில் ஒருகணவன்-மனைவி இருந்தனர் . அந்த " கற்புக்கிழவியும் வக்காலத்து குண்டமாவும் , நல்லவேளையாக சென்ற நிறுத்தத்தில் இறங்கி விட்டனர் . இல்லையென்றால் அவர்கள் " ரவுசு " தாங்காமல் நான் இறங்கிஇருப்பேன் . இதற்குள் அந்தக் கணவன் மனைவிக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயது ஆள் தான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் இறங்க எழுந்தான் . உடனே அந்தக் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஒரு வாக்குவாதமே நடந்தது . கணவன் , தன மனைவியை அந்த இருக்கையில் அமரச்சொன்னான் . மறுத்த மனைவியோ கணவனை அமரச்சொன்னாள் . இவர்களின் களேபரத்தில் , நின்றிருந்த வேறு ஒரு மூன்றாவது மனிதனின் மூக்கு , அந்த காலி இருக்கையைப் பார்த்து வியர்க்க ஆரம்பித்தது . அதற்குள் நல்லவேளையாக அந்த மனைவி அமர்ந்து கொண்டாள். அதன் பிறகு அவர்கள் சுற்றுப்புறத்தை மறந்து பேசிக்கொண்டு வந்தனர் . அடுத்த நிறுத்தம் வந்தது . நான் நின்றிருந்த இடத்திற்கு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்த இன்னொருவன் எழ ஆரம்பித்தான் . நான் நினைத்திருந்தால் அந்த இடத்தில் எளிதாக அமர்ந்து இருக்க முடியும் . ஆனால் நின்றுகொண்டிருக்கும் அந்த கணவன் அமரட்டுமே என காலியான அந்த இருக்கையை கண்டும் காணாமல் இருந்து கொண்டேன் . அந்தக் கணவன் , சுற்றுப்புறத்தையே மறந்து , தன மனைவியோடு பேசிக்கொண்டே இருந்தான் . நான் அவனது கவனத்தைக் கலைப்பதற்காக தொண்டையை செருமினேன் . பேருந்துச் சத்தத்தில் அந்த செருமல் சத்தம் செத்துப்போனது . எனவே இப்போது அடிவயிற்றில் இருந்து சத்தமாக இருமினேன் . எருமை மாட்டுமேல் மழை பெய்ததைப் போல அந்த "மனைவி தாசன்" மனம் போன போக்கில் பேசிக்கொண்டே இருந்தான் . நான் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன் . எனது பார்வையால் , இயல்புநிலை பாதிக்கப்பட்ட அந்த மனைவி கவனம் கலைந்து என்னைப்பார்க்க , அப்போது தான் அந்த "கண்கண்ட"கணவன் , கவனம் கலைந்து காலியான இருக்கையைப் பார்த்தான் . பாய்ந்து சென்று அதிலே அமர்ந்தான். அவனுக்குப் பக்கத்தில் சன்னலோரத்தில் அந்தப் பெருமூச்சுப் பார்டி !! . இப்போது கணவனும் மனைவியும் வேறு வேறு இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர் . அந்தக் கணவனுக்கு இப்போது தனது மனைவியோடு பேசுவதற்கு சிறிது சங்கடமாக இருந்தது போலும் . அவன் பக்கத்தில் இருந்த அந்த பெருமூச்சுப் பார்ட்டியிடம் . " சார் ....... கொஞ்சம் அந்த முன் சீட்டுல போய் உட்கார்ந்துக்கங்களேன் . நானும் என் வொய்பும் இதுல உட்கார்ந்துக்கறோம் " என்றான் . அந்த பெருமூச்சுப் பார்டி , " சார் ..... நான் எழுந்திரிக்க முடியாது ..... வேணுமின்னா முன்னாடி இருக்கறவனை இங்க பின்னாடி வரச்சொல்லுங்க ...... " என்று விடாப்பிடியாக அங்கேயே அமர்ந்து இருந்தான் . இதற்குள் அந்த மனைவி , தன பக்கத்தில் அமர்ந்து இருந்தவனிடம் , " சார் .....ப்ளீஸ் அப்படி பின்னாடி போய் உட்கார்ந்துக்கங்களேன் ................... நானும் என் ஹஸ்பண்டும் இதுல உட்கார்ந்துக்கறோம் " என்றாள் . அந்த அந்நியன் உடனே , எழுந்து பின்புறம் வந்து அந்த பெருமூச்சுப் பார்ட்டியிடம் அமர்ந்து கொண்டான் . இப்போது கணவனும் மனைவியும் ஒன்றாக அமர்ந்து கொண்டு வந்தனர் . அவர்களுக்கு ஒரே இருக்கை கிடைத்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது . இந்த உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் , ஏதாவது ஒரு ஜோடி மகிழ்ச்சியாக இருந்தால் , அதைப்பார்த்து நானும் மகிழ்கிறேன் . ஆனால் எனக்குத்தான் இன்னும் ஜோடி கிடைக்கவில்லை . சுக்கிர பகவான் , தன் கடைக்கண்ணால் கூட என்னைப் பார்ப்பது இல்லை . பரவாஇல்லை . உலகத்தில் உள்ள அனைத்து காதலர்களும் , இனிய இளம் கணவன் மனைவிகளும் , மகிழ்ச்சியாக இருப்பதற்கு , என்னைப்போன்ற முதிர் பிரமச்சாரிகளின் ஏக்கங்களும் , ஏமாற்றங்களும் தான் " ஈடுகட்டும் கச்சாப் பொருள்கள் " . ( Compensatory raw materials ) புரியவில்லையானால் விட்டுத்தள்ளுங்கள் கழுதையை !
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நான் இறங்கியதும் முதல் வேலையாக ஒரு உணவகத்திற்குச்சென்றேன் . கை கழுவிவிட்டு , உணவு மேசையை ஓட்டிப் போடப்பட்டிருந்த " உணவு நாற்காலி " யில் அமர்ந்து , பொங்கலும் வடையும் ஆர்டர் செய்தேன் . இதற்குள் என் முதுகின் பின்னே பேச்சுக்குரல் கேட்டது . " ஏங்க ............. அந்த பஸ்சுல , கண்ணாடி போட்டுக்கிட்டு ஒருத்தன் பேக்கு மாதிரி இருந்தானே . அவன் நம்மளையே பார்த்துகிட்டு இருந்தாங்க ...... பக்கத்துல ஒரு சீட் காலியானதக்கூட கவனிக்காம நம்மளையே முறைச்சு முறைச்சு பார்த்துட்டு இருந்தாங்க .......... " " சரி விடு கமலா ......... இவனுங்க எல்லாம் இதுக்குன்னே பஸ்சுல வரவனுங்க ............ அப்பவே சொல்லி இருந்தீன்னா அவனை செவுனி செவுனியா அப்பி இருப்பேன் . " என்னைப்பற்றித்தான் பேசுகிறார்கள் என்று புரிந்தது . அதன் பிறகு அந்தப் பொங்கலையும் , வடையையும் ரசித்துச் சாப்பிடும் மனநிலையில் நான் இல்லை . அவசர அவசரமாக விழுங்கி விட்டு , அந்தக் கணவனின் கண்ணிலோ அல்லது அந்த மனைவியின் கண்ணிலோ பட்டு விடக்கூடாது என்ற அச்சத்தில் ஓசை பாடாமல் ,பில்லை செட்டில் செய்து விட்டு அந்த உணவகத்தை விட்டு நழுவினேன் .
" இந்த உலகத்தில் மக்கள் , உயர்ந்த விஷயங்கள் எதையுமே , தாழ்வான கண்ணோட்டத்தோடுதான் பார்க்கிறார்கள் . ஆனால் , கேவலமான , வெளிப்பகட்டான சங்கதிகளில் தேடிப்போய் விழுந்து ஏமாறுகிறார்கள் . " எனக்கு நானே நொண்டி சமாதானம் செய்து கொண்டு காலைக்காட்சி படம் பார்ப்பதற்கு ஒரு தியேட்டரினுள் நுழைந்தேன் ............................. !!!

Comments

Popular posts from this blog

திருமணம் 2013 


' சொல்லியனுப்புகிறோம் '
என்ற சொல்லை
காலம் என்ற
விலை கொடுத்து
பெண் வீட்டார்
வாங்கி விட்டனர் !
--------------------------------------------

இன்ஜினியர் பெண்ணும்
இன்ஜினியர் ஆணும்
தம்பதியாவது
காலத்தின் கட்டாயம் !
டாக்டருக்கும் இது
டிட்டோ !
--------------------------------------------

திருமணம்
கல்லூரியில்
நிச்சயிக்கப்படுகிறது !
--------------------------------------------

மாப்பிள்ளையின்
சம்பளமும்
மறைமுக
வரதட்சணைதான் !
கொண்டுவாருங்கள்
இதற்கொரு
இ. பி. கோ !
--------------------------------------------

குவித்துத்தான்
வைக்கிறார்கள்
ஆண் ஜாதகத்தை !
பொறுக்கித்தான்
எடுக்கிறார்கள்
பெண் ஜாதகத்தை !
--------------------------------------------

ஒவொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு !
ஆணினமே
அனுபவி !
--------------------------------------------

காலஸ்த்ரி,
திருநாகேஸ்வரம்,
திருவிடந்தை,
திருமணஞ்சேரி .......................
அடுத்து என்ன
ஜோசியரே ?
--------------------------------------------

தந்தை மகற்காற்றும் உதவி திருமணத்திற்கு
சாதி பார்க்காச் செயல் !
------------------…
பிரிந்த காதலி

அவளை
அந்தப் பேருந்தில்
பார்ப்பேனென்று
நான் நினைக்கவில்லை !

அவள்
அப்படியே தானிருந்தாள் !

காதோரத்தில்
அதே
சுருண்ட முடி !

தலைகுளித்த
அதே
ஒற்றைப் பின்னல் !

சூடப்பட்ட
அதே
ஒற்றை ரோஜா !

அந்த
பச்சை நிற
சுடிதாரை
எனக்குப்
பரிச்சையமிருக்கிறது !

மெட்டியில்லா
அவள்
பாதங்களைக் கண்டு
நான் ஏன்
ஆறுதல் அடைகிறேன் ?

மனதுக்குள்
மீண்டும்
மழை பெய்ய
ஆரம்பித்தது !

வருஷங்கள்
கடந்தும்
என்னைச் சுற்றி
மீண்டும் ஒரு
வசந்தம் குட்டியாய் !

அவள்
இன்னும் என்னைப்
பார்க்கவில்லை !

திறந்திருந்த
ஜன்னலில்
வெளியை
வெறித்துக் கொண்டிருந்தாள் !

இப்போதெல்லாம்
அவள்
இசை கேட்பதில்லை
போலும் !

இறுதியாக
நிகழ்ந்த
அந்த கடைசிச்சந்திப்பு
ஆயுளுக்கும்
மறக்காது !

என்னருகே
ஒட்டிநின்ற
அந்த பருவப்பெண்ணை
உரசாமல்
எவ்வளவு முடியுமோ
அவ்வளவு
விலகி நின்றேன் !

ஏதோ
எங்கள்
பழைய காதலுக்கு
நான் செலுத்தும்
என்னால் இயன்ற
மரியாதை !

சுற்றிலுமிருந்த
ஆண்களிடமிருந்து
தன் காதலியை
அடைகாத்துக் கொண்டிருந்தான்
ஒரு காதலன் !

சட்டென்று
அவனுக்காக
என் கண்கள்
ஈரமாயின !

ஒருகாலத்தில்
நானும்
என் காதலியை
அப்படி
அடைகாத்தவன் தான் !

பிரிந்த
காரணங்களைப்
பட்டியல் போட
விருப…
குறிப்பு : இந்தக் கதை வயது வந்தவர்களுக்கு மட்டும் .

தடயம்

எனக்கு அவசரமாக ஒரு துப்பாக்கி வேண்டும் . துப்பாக்கி எதற்கு என்று கேட்கிறீர்களா ? சுகுமாரைக் கொல்வதற்கு . நான் ஏன் சுகுமாரைக் கொல்ல வேண்டும் ? எல்லாம் அந்த சுமலதா மேடத்திற்காகத்தான் . சுமலதா மேடம் ? வருகிறேன் ....... ஆரம்பத்திலிருந்தே வருகிறேன் .
என் பெயர் ரங்கநாதன் . வயது 28 . என்னது எதோ பிளாட்பாரக்கடை " மதன சுந்தரி " டைப் புத்தகத்தில் வரும் கதைகளின் முதல் வரி போல இருக்கிறது என்று நினைக்கிறீர்களா ? எனது கதையும் ஏறக்குறைய அதே மாதிரித்தான் . நான் வேலை செய்யும் தொழிற்சாலையின் முதலாளி தீவிர ஆஞ்சநேயர் பக்தர் போல . அதனாலேயே எங்கள் அலுவலகத்தில் / தொழிற்சாலையில் கக்கூஸ் கழுவுவதற்க்கூட ஆண் " ஆயாக்கள் " தான் இருக்கிறார்கள் . தினம் தினம் வேலைக்குப் போவதற்கே " கடுப்பு முடியாக " இருக்கும் . முடி என்று நான் கௌரவமாக சொல்கிறேன் . நான் படித்த கல்லூரி கூட ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரி . எனக்கென்று காதலியோ கீதலியோ கிடையாது . தற்போது நான் குடியிருக்கும் அறையில் கூட மூன்று அறைநண்பர்கள் இருக்கிறார்கள் . ஆளுக்கொரு காதலி …