Skip to main content
மதியழகன் - சிறுகதை


மதியழகனை நான் முதன் முதலில் பார்த்த போது காலில் இத்துப்போன ரப்பர் செருப்புகளை அணிந்திருந்தான் . முக்கால் பேண்டும் , எண்ணையில் நனைந்த படியவாரிய தலையும் , அவனது கையில் இருந்த மஞ்சள் நிற பையும் , அவனை ஒரு அப்பழுக்கற்ற கிராமத்தானாக அடையாளம் காட்டின . இந்நேரம் நீங்கள் அந்த மதியழகனுக்கு ஒரு நாற்பது வயது இருக்கலாம் யூகித்திருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல . நான் இளங்கலை முதலாமாண்டு சேருவதற்காக அந்த கல்லூரிக்கு என் தந்தையோடு சென்றபோதுதான் அந்த மதியழகனைப் பார்த்தேன் . அவன் மேலே சொல்லப்பட்ட கோலத்தில் இருந்தான் . அவனும் முதலாமாண்டு சேருவதற்காகத்தான் வந்திருக்கிறான் என்று நான் பிற்பாடு அறிந்து கொண்டேன் . " இவன்ல்லாம் காலேஜ்ல சேர்ந்து என்னத்த கிழிக்கப் போகிறான் " என்று என்னுள் ஒரு குரல் கூவியது .

அதற்குப் பிறகு நான் இளங்கலை வேதியியல் பிரிவில் சேர்ந்து கல்லூரிக்கு முதன் முதலாக சென்றபோது என் தந்தை , கல்லூரி வளாகத்தில் நிறைய கட்டழகு பாவைகள் வலம் வந்ததை அறிந்து கொண்டு " டேய் ! நம்ம பரம்பரைலயே நீ தான் மொத மொதலா காலேஜ் போற . போனமா வந்தமா ன்னு இருக்கணும் . படிப்பத்தவிர வேற எதிலையும் கவனம் போகக்கூடாது " என்றார் . நான் " சரிப்பா சரிப்பா " என்று கடுப்பாக தலை அசைத்தேன் . பிறகு ஒரு வழியாக அப்பாவை அனுப்பிவிட்டு வேதியியல் முதலாமாண்டு வகுப்பில் போய் அமர்ந்தபோது அந்த மதியழகன் அங்கு அமர்ந்திருந்தான் . " இவன் கூட எல்லாம் நாம படிக்கணுமா ? கடிவுளே ! " என்று நான் நொந்து கொண்டு அவன் அருகே போய் அமர்ந்தேன் . அதற்குப் பிறகு நாங்கள் எங்கள் வகுப்பில் சேர்ந்திருந்த பெண்களை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தோம் . பெண்களும் ஒவ்வொருவராக வந்தார்கள் . அனைத்தும் வத்தல் , தொத்தல் , கேஸ்களாக இருந்தன . சுமார் என்ற அளவில் கூட ஒருத்தியும் இல்லை . " ச்சை , எல்லாம் அட்டு பிகருங்கடா " என்று எவனோ கமென்ட் அடித்தான் . எனக்கு என் அப்பாவுடைய வவுத்தெரிச்சலால்தான் இப்படி மொக்கை பிகர்களாக என் வகுப்பில் வந்து வாய்த்திருக்கின்றன என்று நினைத்துக் கொண்டேன் . முதன் முதலில் ஆங்கில வகுப்பு தொடகியது . அகிலன் என்ற ஒரு ஆங்கில பேராசிரியர் வந்தார் . நன்றாக பேசினார் . இறுதியாக " உங்களைப் பத்தி இங்கிலீஸ்ல ஒரு பேப்பர்ல எழுதிக் கொடுங்க . உங்க நாலெட்ஜ் எப்படி இருக்குன்னு பார்க்கலாம் . " என்றார் . நான் பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்தவன் . அதனால் மிகவும் சாவகாசமாக லாங்சைஸ் நோட்டில் இருந்து ஒரு பேப்பரைக் கிழித்து மிக மெதுவாக எழுத ஆரம்பித்தேன் . எனக்குப் பக்கத்தில் இருந்த மதியழகன் படுவேகத்தில் எழுதிக் கொண்டிருந்தான் . நான் ஆச்சர்யமாக அவனது பேப்பரை எட்டிப்பார்த்தேன் . மகா மட்டமான கையெழுத்தில் அவன் எழுதிய அந்த ஆங்கிலத்தில் , ஈஸ் , வாஸ் , இட் , பட் , என்ற நான்கு வார்த்தைகளே ஒரு பக்கம் முழுக்க மாறி மாறி இடம் பெற்றிருந்தன . நான் சிரிப்பை அடக்க மிகவும் சிரமப் பட்டேன் . நான் பார்ப்பதை உணர்ந்து கொண்ட மதியழகன் , " அதெல்லாம் அப்படித்தான் . கண்டுக்காதே " என்றான் . அப்போதும் என்னுள் " இவன்லாம் என்னத்த கிழிக்கப் போகிறான் " என்ற எண்ணம் தோன்றியது .

அதன் பிறகு மதியழகனை எங்கள் ஊரில் ஒரு வெள்ளிக்கிழமை சந்தையில் வைத்துப் பார்த்தேன் . லுங்கி கட்டிக் கொண்டு சைக்கிளில் வந்திருந்தான் . " இவனுக்கும் இதே ஊரா " என்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது . என்னை அடையாளம் கண்டு கொண்டு " ஹாய் " என்றபடி சென்றுவிட்டான் . பிற்பாடுதான் தெரிந்தது . அந்த மதியழகன் , நான் படித்த அதே அரசு மேல்நிலைப் பள்ளியில் எனக்கு ஒரு வருடம் முன்பு படித்தவன் என்று . ஒரு வருடம் " கேப் " விட்டு பிறகு கல்லூரியில் சேர்ந்திருக்கிறான் . எனக்கு சீனியராக பள்ளியில் இருந்தவனை எனக்கு தெரியாமல் போனதில் ஒன்றும் பெரிய ஆச்சர்யம் ஒன்றும் இல்லை . பொதுவாக என் சுபாவமே அப்படி . இப்போது நீங்கள் புகைவண்டியில் எனக்கு எதிர்த்த சீட்டில் அமர்ந்து கொண்டு என்னோடு ஒரு பத்து மணிநேரம் பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால் , பயணம் முடிந்த பிறகு , பிளாட்பாரத்தில் உங்களை மீண்டும் பார்க்க நேர்ந்தால் , உங்களுக்கு என்னை அடையாளம் தெரியும் . ஆனால் உங்களை எனக்கு அடையாளம் தெரியாது . அதுதான் நான் . ( நீங்கள் காறித்துப்புவது கேட்கிறது ) . அந்த வகையில் மதியழகனை நான் எனது பள்ளிப்பருவம் முழுக்க பார்க்காமலே இருந்ததில் வியப்பேதும் இல்லை . அதோடு , இன்னின்ன பேர்களை , இந்தந்த காலத்தில் , இந்திந்த இடத்தில் தான் பார்க்க வேண்டுமென்று ஒரு கணக்கு இருக்கிறதல்லவா !

எங்கள் கல்லூரிக்கு செல்லும் மூன்றாம் எண் பேருந்தில் ஏறி பிதுங்கி வழியும் பேருந்தில் பதுங்கி நின்று நான் பயணம் செய்த போது , சீனியர் கூட்டம் ஒன்று என்னை " ஓட்ட " ஆரம்பித்தது . ஒருத்தன் என்னிடம் " கண்ணா ..... நீ என்ன பண்ணறே , நம்ம காலேஜ் வரவரைக்கும் கம்பியப் புடிக்காம , கைய விட்டுட்டே வர . மவனே கம்பியப் புடிச்சே , அப்புறம் டாராயடுவே ! " என்றான் . நான் எச்சில் விழுங்கியபடி கம்பியிலிருந்து கையை எடுத்து தள்ளாடியபடி , பக்கத்தில் இருந்த ஒரு சுடிதார் முதுகின் மீது விழுந்து கிழுந்து தொலைக்கக் கூடாதே என்று பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருந்தேன் . அப்போதுதான் மதியழகன் எனக்கு சப்போட்டுக்கு வந்தான் . என்னை ஓட்டிய அந்த சீனியர் மதியழகனுக்கு பள்ளியில் கிளாஸ்மேட என்பதால் " டேய் ! நம்ம பையன்டா . விடு " என்று மதியழகன் சொன்னதும் அந்த சீனியர் கூலாகி , " என்னடா பயந்துட்டியா " என்று என்னைப் பார்த்து சிரித்ததும் , மதியழகனை நான் முதன் முதலாக பிரமிப்போடு பார்த்தேன் . அதன் பிறகு முதல் வருடம் முழுக்க எனக்கு ராக்கிங் தொல்லை அவ்வளவாக இல்லை என்றால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் மதியழகன் தான் .

அதன் பின் , முதல் செமஸ்டரில் நான் அனைத்து பாடங்களிலும் பாசாகி எழுபது விழுக்காடு பெற்றிருந்தேன் . மதியழகன் ஆங்கிலத்தில் அரியர் வாங்கியிருந்தான் . அந்த வாரத்தின் சனிக்கிழமையன்று மதியழகன் என் வீட்டிற்கு சைக்கிளில் வந்தான் . அவன் கையில் ஆங்கில நோட்ஸ் இருந்தது . " நீதான் எனக்கு இங்கிலீஸ் சொல்லிக் கொடுக்கணும் " என்றான் . பிறகு நானும் அவனும் பக்கத்தில் இருந்த ஒரு பள்ளியின் கிரவுண்டுக்குப் போனோம் . நான் ஒரு எஸ்ஸே வை ஒவ்வொரு வார்த்தையாக பொருள் சொல்லி சிறிது சிறிதாக அவனுக்கு விளங்க வைத்தேன் . அதன் பிறகு அவன் சனிக்கிழமையானால் ஆங்கில நோட்சைத் தூக்கிக் கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்துவிடுவான் . இதன் காரணமாக மதியழகன் அடுத்த செமஸ்டரில் ஆங்கிலத்தை கிளியர் செய்தான் . அதன் பிறகு ஒவ்வொரு முறை தேர்வு வரும்போதும் நான்தான் அவனுக்கு சொல்லிக் கொடுப்பேன் . ஒரு கட்டத்தில் மதியழகனுக்கும் எனக்கும் நட்பு அதிகமானது . நான் அவனை சுருக்கமாக " மதி " என்று கூப்பிட ஆரம்பித்தேன் . அவன் என்னை " வாடா , போடா " என்று கூப்பிட ஆரம்பித்தான் .

அடுத்ததாக மதியழகனிடம் நான் ஆச்சர்யப்பட்ட மற்றொரு விஷயம் , என் வகுப்பு பெண்களிடம் அவனுக்கு இருந்த செல்வாக்கு . பொதுவாக நான் பெண்களிடம் பேசமாட்டேன் . அல்லது அவர்கள் என்னிடம் பேசமாட்டார்கள் . என் ராசி அப்படி . என் வகுப்பில் அனைவரும் அட்டு பிகர்களாக இருந்தாலும் , அதிலும் பார்க்கும்படியாக இருப்பவர்கள் , மணிமாலா , கலைச்செல்வி , வேலுமணி , சங்கீதா , சித்ரா , ரேணுகா போன்றவர்கள் . இவர்களை நான் ரகசியமாக சைட் அடிப்பதுண்டு . ஆனால் ஒரு வார்த்தை பேசியது கிடையாது . அவர்களும் " கண்ணாடி " போட்ட என்னை , " காந்தி " என ஒதுக்கி வைத்திருந்தார்கள் . ஆனால் மதியழகனோடு மட்டும் விசேசமாக நட்பு பாராட்டினார்கள் . இத்தனைக்கும் மதியழகன் கருப்பு . தெற்றுப்பல் வேறு . ஆனாலும் அவனுக்கு பெண்கள் விசயத்தில் ஒரு மச்சம் இருந்தது . இன்றைக்கும் அந்தப் பெண்களிடம் மதியழகன் அலைபேசியில் பேசிவருகிறான் . அந்த அளவுக்கு , பெண்களுக்கும் அவனுக்கும் ஒரு ஆழமான அன்யோன்யம் அடிப்படையிலேயே இருந்தது .

அதன் பிறகு அவன் , எங்கள வகுப்பு வாத்தியார்களை " தனியே " போய் பார்க்க ஆரம்பித்தான் . இதனாலேயே மூன்றாம் வருடத்தின் எங்கள வகுப்பின் " ரெப் " ஆனான் . மூன்று வருடத்தின் முடிவில் மதியழகனை கல்லூரியில் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருந்தது. தேர்வு முடிவில் , அவன் எழுபது விழுக்காடு பெற , நான் என்பது விழுக்காடு பெற்றேன் . நாங்கள் அதே கல்லூரியில் முதுகலைப் படிப்பு பயின்றோம் . அப்போது தான் நானும் அவனும் ஒன்றாக சினிமா போக ஆரம்பித்தோம் . சினிமாவில் , கதாநாயகனுக்கு ஒரு காமெடி நண்பன் இருந்தால் , அந்தக் கதாநாயகனாக என்னையும் , அந்தக் காமெடி நண்பனாக மதியழகனையும் நான் கற்பனை செய்து கொள்வேன் . ஆனால் பின்னாளில் அது அப்படியே உல்டாவாக மாறிப்போனது .
என் கல்லூரிக் காலங்களில் நான் பெரும்பாலும் மதியழகனுடனேயே சுற்றிக்கொண்டிருப்பேன் . அவன் அழகில் சுமார் என்பதால் , அவனோடு இருக்கும் போது நான் பெண்களையே பார்ப்பதைத் தவிர்த்தேன் . இதனாலேயே என் ஆட்டோ கிராப்பில் ஒரு பக்கம் கூட பசுமையாக இல்லை எனலாம் . ஒரு வழியாக முதுகலைப் படிப்பும் முடிந்தது . நான் கோபிச்செட்டி பாளையத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன் . மதியழகன் வேலை தேடிக்கொண்டிருந்தான் . ஆறு மாதங்கள் அவன் வேலை வெட்டி எதுவும் இல்லாமல் தான் இருந்தான் . அவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது . ஆனால் ஒரு நாள் , தட தட வென்று எங்கள வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கினான் . கையில் புது மொபைல் இருந்தது . பெங்களூரில் ஒரு உயர்ந்த நிறுவனத்தில் , நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்திருப்பதாக அவன் சொன்னதும் சத்தியமாக எனக்கு பொறாமையாக இருந்தது . நான் அப்போது மூவாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன் . அவனது சம்பளம் எடுத்த எடுப்பிலேயே பதினெட்டாயிரம் ! அதன் பிறகு மதியழகனின் " கலரே " மாறி விட்டது . அவனைப் பார்த்து நானும் வாத்தியார் வேலையை விட்டுத் தொலைத்து ஒரு தனியார் கம்பனியில் வேலைக்கு சேர்ந்து நாசமாய்ப் போனேன் . ஆனால் மதியழகன் பெங்களூரில் அடி பிச்சு உதறுகிறான் . இரண்டு வருடங்களில் சீனியர் சயன்டிஸ்ட்டாக பதவி உயர்வு பெற்று இன்று நாற்பதாயிரம் சம்பளம் வாங்குகிறான் . என் வகுப்புப் பெண்கள் தங்கள் திருமணத்திற்குக் கூட என்னை அழைப்பதில்லை . மதியழகனை மட்டும் அவன் வீட்டிற்க்கே சென்று வருந்தி வருந்தி அழைக்கிறார்கள் . என் வாத்தியார்களுக்கு என் மூஞ்சியே மறந்திருக்கும் . ஆனால் மதியழகன் இப்போதும் அவர்களோடு தொடர்பில் இருக்கிறான் .

இப்போதெல்லாம் ரப்பர் செருப்பு போட்டுக்கொண்டு , நிறைய எண்ணை வைத்து படிய தலை வாரிக்கொண்டு , முக்கால் பேன்ட் போட்டுக்கொண்டு , மஞ்சள் பையை வைத்துக் கொண்டு , மஞ்ச மாக்கான் மாதிரி எவனாவது தென்பட்டால் , " இவன்ல்லாம் என்னத்த கிழிக்கப் போகிறான் " என்று நான் சத்தியமாக நினைப்பதில்லை ! நீங்களும் நினைக்காதீர்கள் !!!

Comments

Post a Comment

Popular posts from this blog

திருமணம் 2013 


' சொல்லியனுப்புகிறோம் '
என்ற சொல்லை
காலம் என்ற
விலை கொடுத்து
பெண் வீட்டார்
வாங்கி விட்டனர் !
--------------------------------------------

இன்ஜினியர் பெண்ணும்
இன்ஜினியர் ஆணும்
தம்பதியாவது
காலத்தின் கட்டாயம் !
டாக்டருக்கும் இது
டிட்டோ !
--------------------------------------------

திருமணம்
கல்லூரியில்
நிச்சயிக்கப்படுகிறது !
--------------------------------------------

மாப்பிள்ளையின்
சம்பளமும்
மறைமுக
வரதட்சணைதான் !
கொண்டுவாருங்கள்
இதற்கொரு
இ. பி. கோ !
--------------------------------------------

குவித்துத்தான்
வைக்கிறார்கள்
ஆண் ஜாதகத்தை !
பொறுக்கித்தான்
எடுக்கிறார்கள்
பெண் ஜாதகத்தை !
--------------------------------------------

ஒவொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு !
ஆணினமே
அனுபவி !
--------------------------------------------

காலஸ்த்ரி,
திருநாகேஸ்வரம்,
திருவிடந்தை,
திருமணஞ்சேரி .......................
அடுத்து என்ன
ஜோசியரே ?
--------------------------------------------

தந்தை மகற்காற்றும் உதவி திருமணத்திற்கு
சாதி பார்க்காச் செயல் !
------------------…
பிரிந்த காதலி

அவளை
அந்தப் பேருந்தில்
பார்ப்பேனென்று
நான் நினைக்கவில்லை !

அவள்
அப்படியே தானிருந்தாள் !

காதோரத்தில்
அதே
சுருண்ட முடி !

தலைகுளித்த
அதே
ஒற்றைப் பின்னல் !

சூடப்பட்ட
அதே
ஒற்றை ரோஜா !

அந்த
பச்சை நிற
சுடிதாரை
எனக்குப்
பரிச்சையமிருக்கிறது !

மெட்டியில்லா
அவள்
பாதங்களைக் கண்டு
நான் ஏன்
ஆறுதல் அடைகிறேன் ?

மனதுக்குள்
மீண்டும்
மழை பெய்ய
ஆரம்பித்தது !

வருஷங்கள்
கடந்தும்
என்னைச் சுற்றி
மீண்டும் ஒரு
வசந்தம் குட்டியாய் !

அவள்
இன்னும் என்னைப்
பார்க்கவில்லை !

திறந்திருந்த
ஜன்னலில்
வெளியை
வெறித்துக் கொண்டிருந்தாள் !

இப்போதெல்லாம்
அவள்
இசை கேட்பதில்லை
போலும் !

இறுதியாக
நிகழ்ந்த
அந்த கடைசிச்சந்திப்பு
ஆயுளுக்கும்
மறக்காது !

என்னருகே
ஒட்டிநின்ற
அந்த பருவப்பெண்ணை
உரசாமல்
எவ்வளவு முடியுமோ
அவ்வளவு
விலகி நின்றேன் !

ஏதோ
எங்கள்
பழைய காதலுக்கு
நான் செலுத்தும்
என்னால் இயன்ற
மரியாதை !

சுற்றிலுமிருந்த
ஆண்களிடமிருந்து
தன் காதலியை
அடைகாத்துக் கொண்டிருந்தான்
ஒரு காதலன் !

சட்டென்று
அவனுக்காக
என் கண்கள்
ஈரமாயின !

ஒருகாலத்தில்
நானும்
என் காதலியை
அப்படி
அடைகாத்தவன் தான் !

பிரிந்த
காரணங்களைப்
பட்டியல் போட
விருப…
குறிப்பு : இந்தக் கதை வயது வந்தவர்களுக்கு மட்டும் .

தடயம்

எனக்கு அவசரமாக ஒரு துப்பாக்கி வேண்டும் . துப்பாக்கி எதற்கு என்று கேட்கிறீர்களா ? சுகுமாரைக் கொல்வதற்கு . நான் ஏன் சுகுமாரைக் கொல்ல வேண்டும் ? எல்லாம் அந்த சுமலதா மேடத்திற்காகத்தான் . சுமலதா மேடம் ? வருகிறேன் ....... ஆரம்பத்திலிருந்தே வருகிறேன் .
என் பெயர் ரங்கநாதன் . வயது 28 . என்னது எதோ பிளாட்பாரக்கடை " மதன சுந்தரி " டைப் புத்தகத்தில் வரும் கதைகளின் முதல் வரி போல இருக்கிறது என்று நினைக்கிறீர்களா ? எனது கதையும் ஏறக்குறைய அதே மாதிரித்தான் . நான் வேலை செய்யும் தொழிற்சாலையின் முதலாளி தீவிர ஆஞ்சநேயர் பக்தர் போல . அதனாலேயே எங்கள் அலுவலகத்தில் / தொழிற்சாலையில் கக்கூஸ் கழுவுவதற்க்கூட ஆண் " ஆயாக்கள் " தான் இருக்கிறார்கள் . தினம் தினம் வேலைக்குப் போவதற்கே " கடுப்பு முடியாக " இருக்கும் . முடி என்று நான் கௌரவமாக சொல்கிறேன் . நான் படித்த கல்லூரி கூட ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரி . எனக்கென்று காதலியோ கீதலியோ கிடையாது . தற்போது நான் குடியிருக்கும் அறையில் கூட மூன்று அறைநண்பர்கள் இருக்கிறார்கள் . ஆளுக்கொரு காதலி …