Skip to main content


பகை வெல்லல் சிறுகதை



என்னை அந்த இருட்டு சந்தில் வைத்து ஒரு மூன்று பேர் செமத்தியாக அடித்து விட்டனர் . அதன் பிறகும் உலகம் எப்போதும் போலத்தான் இயங்கிக்கொண்டிருந்தது . அத்தனை அடிகளையும் வாங்கிக்கொண்டு நான் சமர்த்துப் பிள்ளையாக அறைக்கு வந்து பருப்பு சாதம் சாப்பிட்டு விட்டு படுத்து விட்டேன் . அதிசயமாக அன்று நன்றாக தூக்கம் வந்தது . தூக்கத்தில் கனவு வந்தது . கனவில் ஒரு பிரபல திரைப்படக் கதாநாயகி என்னோடு " அயிட்டம் சாங்கிற்கு " குத்தாட்டம் போட்டாள் . மொத்தத்தில் அந்த இரவு எனக்கு இனிமையாகவே கழிந்தது .

நடந்த சங்கதி இதுதான் . அன்று ஞாயிற்றுக்கிழமை . நான் பக்கத்தில் இருந்த ஒரு பிரவுசிங் சென்டருக்குப் போய் ,பலானது பலானது எல்லாம் பார்த்து விட்டு அறைக்கு திரும்பிக்கொண்டிருந்தேன் . அந்த இருட்டு சந்தில் நுழைந்தேன் . சிறிது நடந்திருப்பேன் . ஒரு மோட்டார் சைக்கிள் ஒன்று வேக வேகமாக அந்த சந்தினுள் நுழைந்தது . அதன் மீது மூன்று பேர் அமர்ந்திருந்தனர் . தண்ணி அடித்திருப்பார்கள் போல . படுவேகத்தில் வந்த அந்த மோட்டார் சைக்கிள் , தடாலென்று அந்த வளைவில் வளைந்ததால் பாலன்ஸ் இன்றி சர்ரார்க் என்று கீழே சரிய அந்த மூன்று பேரும் கீழே விழுந்தனர் . அவர்கள் கீழே விழுந்த சமயம் , நான் அவர்களுக்கு ஒரு பத்தடி தள்ளி வந்து கொண்டிருந்தேன் . சத்தியமாக அவர்கள் விழுந்ததற்கும் எனக்கும் துளியும் சம்பந்தம் இல்லை . ஆனால் அன்று எனக்கு சூரியன் நாலாமிடத்தில் இருந்திருப்பான் போல . கீழே விழுந்த ஒருவன் " ....................த்தா ....... " என்றபடியே எழுந்தான் . தள்ளாடினாலும் வேகமாக என்னை நெருங்கி பொளேர் என்று செவிட்டில் அறைந்தான் . பொறி கலங்குதல் என்றால் என்ன ? என்பதை அப்போது உணர்ந்தேன் . இதற்குள் இன்னொருவன் எழுந்து வந்து என்னை எட்டி உதைத்தான் . சொத் என கீழே விழுந்தேன் . அந்த இரண்டு பேரும் என்னை எட்டி எட்டி மிதிக்க , மூன்றாவதாய் இருந்தவன் , ஒரு வீட்டில் வளர்ந்திருந்த ஒரு மரக்கிளையை ஒடித்து வந்து " சுலுக் ....... சுலுக் " என்று என்மீது விளாசினான் . " கண்ண பின்னாடி வைச்சுட்டு வரயாடா பரதேசி நாயே " என்று சொல்லிக்கொண்டே அடித்தார்கள் . இதைத்தான் , நேரம் சரியில்லை என்றால் ............... கூட சாரைப்பாம்பாய் மாறும் என்பார்கள் . பொதுவாக இந்த நாய் இருக்கிறதே நாய் , எங்காவது வேறு ஓரு நாய் குரைக்கும் சத்தம் கேட்டால் என்ன ஏது என்று உணராமலேயே இதுவும் குரைக்க ஆரம்பித்துவிடும் . அந்த சமயத்தில் நாம் அதைக் கடந்து போனால் , நம்மையும் பார்த்து குரைக்க ஆரம்பிக்கும் . அதுபோலத்தான் இங்கும் நடந்தது . அவன்களாக வந்தான்கள் . வளைவில் விழுந்தான்கள் . அதற்கு நான்தான் காரணமென்று கிறுக்குத்தனமாக கருதிக்கொண்டு என்னை அடிக்கிறான்கள் .
அந்த அடியை இரண்டு நாட்களில் மறந்து விடுவேன் என்றுதான் நினைத்தேன் . ஆனால் என் கல்லூரித்தோழன் ஒருவன் , முன்னொரு காலத்தில் எனது அறை நண்பனாக இருந்தவன் , அதிசயமாக அலைபேசியில் அழைத்து , தனக்கு திருமணம் என்று சொன்னான் . பெண் நல்ல வசதி படைத்த குடும்பம் என்பதையும் அழுத்தி சொல்லி மறக்க வேண்டியதை மறந்து விட்டு மறக்காமல் வந்துவிடு என்றான் . மறக்கவேண்டியத்தை மறந்துவிட்டு என்றால் எனக்கும் அவனுக்குமான பழைய பகையை ! ஒருவருடம் அவனோடு அறை நண்பனாக இருந்த காலங்களில் , கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் நான் அவனோடு பேசாமல் இருந்தேன் . அதன்பிறகு கல்லூரிப்படிப்பு முடிந்தது . அவனுக்கு என்னைவிட நல்ல வேலை கிடைத்தது . அப்போதும் அவனாகத்தான் அதை அலைபேசியில் அறிவித்தான் . நான் ஓரு சுமாரான நிறுவனத்தில் , சுமாரான பதவியில் , சுமாரான சம்பளம் வாங்கி நாட்களை உருட்டிக்கொண்டிருக்கிறேன் . அதேபோல இப்போதும் தனக்கு ஓரு உயர்ந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு நங்கை , மாலையிடும் மங்கையாக வரப்போகிறாள் என்பதையும் அவனாகத்தான் அலைபேசியில் அறிவிக்கிறான் . இதன் பின்னால் இருக்கும் சூட்சமம் என்னவென்றால் , " பார் ! அன்று அறையில் என்னோடு சண்டை போட்டாய் . இன்று நான் உன்னைவிட நல்ல வேலையில் அமர்ந்து விட்டேன் . உனக்கு முன்பு உரிய வயதில் , நல்ல பெண்ணை மணக்கப்போகிறேன் . என்னைப் பகைத்ததில் நீ இன்னும் பலவிதங்களில் தோற்றுக்கொண்டிருக்கிறாய் ! நான் உன்னைவிட பன்மடங்கு முன்னேறி உன்னை மறைமுகமாக ஜெயித்துக் கொண்டிருக்கிறேன் ! " என்பது தான் அது .
இப்போதுகூட என்னை அடித்த அந்த மூன்று பேர் நாளைக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக ஆனாலும் ஆகலாம் . எனவே நான் சொல்ல வருவது என்னவென்றால் , என்னைப் பகைத்தவர்கள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கக்கூடாது . அல்லது நான் அவர்களைப் பழிக்குப் பழி வாங்கவேண்டும் . இப்படித்தான் நான் அந்த மூன்று பேரையும் பழி வாங்குவது என்று முடிவெடுத்தேன் .

அந்த மூன்று பேரும் நல்ல தடியன்கள் . அதில் இரண்டு பேர் சராசரி உயரம் . ஒருவன் மட்டும் ஆறு புள்ளி இரண்டு அடி இருப்பான் . அவர்களை சமாளித்து அடிக்க வேண்டுமென்றால் , நான் இன்னும் வலுவாக வேண்டும் . எனது தசைகளில் ஆண்ட்ரோஜென் ததும்பி வழிய வேண்டும் . தோள்கள் தினவெடுத்து , புஜங்கள் புஷ்டியாக வேண்டும் . ஒரு நாள் அறையில் யாரும் இல்லாத சமயம் , அதற்கான ஆயத்த வேலையைத் தொடங்க ஆரம்பித்தேன் . ஆடைகளை அவிழ்த்து விட்டு வெறும் ஜட்டியோடு நின்று கண்ணாடியில் என்னைநானே பார்த்தேன் . குடுமி வைத்த குண்டு பூசாரி போல உடம்பு தொள தொள என்று இருந்தது . இந்த உடம்பை வைத்துக்கொண்டு , ஒரு வாட்ச்மேனைக் கூட என்னால் அடிக்க முடியாது . நான் வொர்க் அவுட் பண்ணியாக வேண்டும் . தொலைகாட்சியை ஆன் செய்தேன் . சன் மியுசிக் சேனலை வைத்தேன் . எதோ ஒரு பாட்டு ஓடிக்கொண்டிருந்தது . நான் நின்ற இடத்தில் இருந்தே ஓட ஆரம்பித்தேன் . என்னுடைய குறிக்கோள் அந்தப்பாட்டு முடியும் வரை தொடர்ந்து ஓட வேண்டும் . வெறித்தனமாக , மூச்சு இறைக்க , அங்கு அங்கு அங்கு ஓடிக்கொண்டிருந்ததை , திறந்திருந்த ஜன்னல் வழியாக பக்கத்து வீட்டுப் பாட்டி பார்த்து விட்டு , பேயடித்தது போல ஆனது . இப்படியாக ஒரு நாலைந்து பாடல்கள் ஓடின . ஓட்டப்பயிற்சி முடிந்த பிறகு " தண்டால் " . பத்து தண்டால் எடுப்பதற்குள்ளாகவே பிராணன் போய் விட்டது . விட்டு விட்டு ஒரு ஐம்பது தண்டால் எடுத்து விட்டு எழுந்த போது , பக்கத்து வீட்டுப் பாட்டி , ஜன்னல் வழியாக என்னை எட்டிப்பார்த்தது . அநேகமாக எனக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என அது எண்ணியிருக்கலாம் .
எனது ஓட்டப்பயிற்சியும் , தண்டால் பயிற்சியும் ஆரம்பித்து சரியாக ஒரு வாரம் முடிந்த நிலையில் , நான் அதே ஞாயிற்றுக் கிழமை மாலை , அந்த இருட்டு சந்தில் காத்திருந்தேன் . பொதுவாக அந்த சந்தில் ஆள் நடமாட்டமே இருக்காது . அவ்வப்போது எதோ ஒரு பைக்கோ , சைக்கிளோ அந்த இடத்தைக் கடக்கும் . எனவே அங்கு காத்திருப்பது என்பது அப்படியொன்றும் கடினமான காரியம் அல்ல . எனது நோக்கம் அந்த மூன்று பேரும் இந்தமுறையும் அங்கு வருகிறார்களா என்று வேவு பார்ப்பது தான் . சுமார் அரைமணி கடந்திருக்கும் . தடதட வென்று அந்த பைக் சத்தம் கேட்டது . என் புலன்கள் கூர்மையாயின . அந்த பைக் , அந்த வளைவில் வளைந்து , சந்தில் நுழைந்தது . அந்த மூன்று பேர் அப்போதும் இருந்தனர் . நான் சிறுநீர் கழிப்பது போன்ற பாவனையில் நின்று கொண்டு அவர்கள் போவதையே நோட்டமிட்டேன் . அதன் பிறகு அறைக்கு வந்து அன்றுபோலவே பருப்பு சாதம் சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டேன் . அந்த ஞாயிற்றுக் கிழமை சம்பவத்திற்குப் பிறகு , ஞாயிற்றுக் கிழமை மாலை பருப்பு சாதம் மட்டுமே சாப்பிடுவது என முடிவெடுத்திருந்தேன் . எதிலும் ஒரு ஒழுங்கு வேண்டுமல்லவா ? மொத்தத்தில் நான் பருப்பு தின்று பருப்பு தின்று பகையை வளர்த்துக் கொண்டிருந்தேன் . அதோடு மூன்று வாரங்கள் கடந்து விட்டன . தினமும் குறைந்தபட்சம் ஒருமணிநேரமாவது எனது பயிற்சிகள் தொடர்ந்து நடந்தன . வார வாரம் ஞாயிறு மாலை அந்த இருட்டு சந்திற்குள் காத்திருந்து அவர்களை நோட்டமிட்டேன் . அவர்களும் அவ்வழியே தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர் . எனது உடம்பு முறுக்கேற ஆரம்பித்திருந்தது . சரியாக ஒரு மண்டலம் கழிய வேண்டும் . அப்போதுதான் எதுவும் ஒரு முழுமை பெறும் . இதற்கிடையில் ஒரு செவ்வாய்க் கிழமை எனக்கு பி ஷிப்ட் . ஒரு பத்து மணியிருக்கும் . அறையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன் . தொ. காவில் மாசாணியம்மன் கோவில் பற்றிய ஒரு நிகழ்ச்சி ஒன்று மறு ஒளிபரப்பு ஆகிக்கொண்டிருந்தது . பகைமையை வெல்வதற்கு மாசாணியம்மன் கோவில் மிகச்சிறந்த ஆலயம் என்று தெரிந்தது . நான் சட்டென்று , ஒரு பிளேடை எடுத்து வலது கையில் செவ்வாய் மேடு இருக்கும் பகுதியில் ஒரு கிழி கிழித்தேன் . சூடான சிவப்பு ரத்தம் பொங்கி வழிந்து தரையில் விழுந்தது . " மாசாணித் தாயே ! அந்த மூன்று தடியன்களையும் பழிவாங்கும் சக்தியை எனக்குத்தா ! நல்லபடியாக அவன்களைப் பழிவாங்கினால் உன்னுடைய கோவிலுக்கு வந்து சேவித்துக் கொள்கிறேன் . அதற்க்கு அட்வான்சாக இப்போது என் இரத்தத்தை உனக்குக் காணிக்கையாக்குகிறேன் . " என்று மனமார வேண்டி நின்றேன் . நான் இப்படித்தான் சிலசமயங்களில் சைக்கோ போல நடந்து கொள்வேன் . கண்டுகொள்ளாதீர்கள் .
நான் எதிர்பார்த்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாற்பத்தெட்டு நாள் முடிந்த அந்த ஞாயிற்றுக் கிழமையும் வந்தது . நான் வெங்காயம் நறுக்கும் கத்தியை எடுத்து பேன்ட் ஜோப்பில் வைத்துக்கொண்டேன் . ......த்தா .... அந்த மூன்று பேரையும் இன்று கிழி கிழி என்று கிழித்து விடவேண்டியது தான் . என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் . சரியாக ஆறுமணிக்கு அந்த சந்தில் காத்திருந்தேன் . தடதட என்று சத்தம் கேட்டது . எனது புலன்கள் கூர்மையாயின . ஜோப்பில் இருந்த கத்தியை எடுத்துக் கொண்டேன் . சரியாக அந்த மோட்டார் சைக்கிள் வரும்போது நான் குறுக்கே நின்று அவர்களைக் கவிழ்க்க வேண்டும் . அந்த பைக் அந்த வளைவில் வளைந்து அந்த சந்தில் நுழைந்தது . அந்த மூன்று பேரும் இருந்தார்கள் . நான் எவ்வளவோ முயன்றும் அந்த பைக்கின் குறுக்கே நிற்கும் தைரியம் எனக்கு வரவில்லை . ச்சை என்று என் தலையில் நானே அடித்துக் கொண்டு அறைக்கு வந்து , பருப்பு சாதம் சாப்பிட்டுவிட்டு படுத்து விட்டேன் . அன்று இரவு நான் உறங்கவே இல்லை .

மறுநாள் . அன்றைய நாளிதழின் மூன்றாவது பக்கத்தில் , கட்டம் கட்டி ஒரு செய்தி வந்திருந்தது .
" நேற்று இரவு பூந்தமல்லி பைபாஸ் ரோட்டில் சாலையைக் கடக்க முயன்ற ஒரு மோட்டார் வாகனம் மீது லாரி ஏறியதில் மூன்று வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள் . "


Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர