Skip to main content

குறிப்பு : எனது வருங்கால மனைவியின் பாதங்களில் இந்த சிறுகதையை அர்ப்பணம் செய்கிறேன்


பாலைவனச்சோலைகள் - சிறுகதை

அங்கம்மாவிற்கு பத்து வயது இருந்த போது எனக்கு ஏழு வயது . அங்கம்மா , பார்க்க கருப்பாக இருந்தாலும் , லட்சணமாக இல்லாமல் இருந்தாலும் அவளுக்கும் எனக்கும் அடிப்படையிலேயே ஒரு ரசாயனம் ( கெமிஸ்ட்ரி ) இருக்கவே செய்தது . என் " அம்மாபாட்டி " ( அம்மாவைப் பெற்ற பாட்டி = அம்மாபாட்டி ) வீட்டில் நான் தங்கிப் படித்த காலங்களில் எனக்கிருந்த ஒரே பெண்தோழி அவள்தான் . நான் படித்த புளூ பேர்ட் கான்வென்டில் ஆயா வேலை பார்த்த குருவம்மாவின் மகள் தான் அங்கம்மா . நானும் அவளும் அதிகமாக விளையாடும் விளையாட்டு , " படத்தின் பேர் கண்டுபிடிக்கும் " விளையாட்டுதான் . அவள் , " முதல் எழுத்து ' பி ' , கடைசி எழுத்து ' லா ' . என்ன படம் கண்டுபிடி ! " என்பாள் . நான் மண்டையைப் பிய்த்துக்கொண்டு , சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு , " தெரியல " என்பேன் . சாமானியத்தில் விடை சொல்ல மாட்டாள் . " நான் வேணா க்ளூ தர்றேன் " என்பாள் . நான் அப்பாவியாக " க்ளூ ன்னா என்ன ? " என்பேன் . அவளோ " க்ளூ ன்னா , க்ளூ தான் . அதுல பரட்டைத் தலையன் நடிச்சிருக்கான் " என்பாள் . எனக்கு கோபம் கோபமாக வரும் . அந்த வயதிலேயே நான் ரஜினியின் அதி தீவிர விசிறியாக இருந்தவன் . தியேட்டரில் ரஜினி படத்தின் சண்டைகாட்சிகள் வந்தால் , படம் பார்த்துக் கொண்டிருக்கும் நான் எழுந்து , ஆ ... ஊ .... எனக் கத்தியபடி கை கால்களை உதைத்துக் கொண்டு காற்றில் சண்டை செய்ய ஆரம்பித்து விடுவேனாம் . பிறகு என்னை அடக்குவதற்குள் போதும் போதும் என்றாகி விடுமாம் . இதனாலேயே என் வீட்டில் சண்டையில்லாத ஒரு கமல் படத்திற்கு கூட்டிச் சென்றார்கள் . படத்தில் சண்டையே இல்லை என்று திரையை விட்டுத் திரும்பி படம் முடியும் வரை அப்படியே அமர்ந்திருந்தேனாம் . அங்கம்மா அந்தக் க்ளூவைக் கொடுத்ததுமே நான் படத்தைக் கண்டுபிடித்து விடுவேன் . ஆனாலும் ரஜினியை பரட்டைத்தலையன் என்று சொன்னதாலேயே அவளிடம் " வேற படம் சொல்லு " என்பேன் . இப்படியாக நாங்கள் அடிக்கடி விளையாடுவோம் . ஒரு வருடம் முழுக்க என் தோழியாக இருந்தவள் அவள் . அம்மாவைப் பிரிந்திருக்கும் என் வலியை , வலிந்து வந்து ஆற்றியவள் அவள் . அதன் பிறகு முழுஆண்டு விடுமுறைக்கு நான் ஊருக்குப் போய்விட்டு வந்த போது அங்கம்மா என்னைத் தேடி வரவில்லை . பாட்டியிடம் கேட்டதற்கு , " அவ சாமிகிட்ட போய்ட்டா " என்று சொல்லியது . அந்த வயதில் எனக்குப் புரியவில்லை . " எப்ப வருவா " என்றேன் . பாட்டி " இனிமே வரமாட்டா " என்றதும் எனக்கு அழுகை அழுகையாக வந்தது . ஒரே சூனியமாக இருந்தது . " நான் ஊருக்குப் போறேன் . ஊருக்குப் போறேன் . அம்மாவைப் பாக்கணும் " என்று தரையில் புரண்டு அழுதேன் . பாட்டி , " இப்படி அடம்புடிச்சே , அப்புறம் ' அக்குப்புத்திரன்' கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன் . " என்று பயமுறுத்தியது. அந்த வயதில் எனக்கு அக்குப்புத்திரன் மீது பயம் அதிகம் . அக்குப்புத்திரன் எழுகடல் தாண்டி வரும் அரக்கன் . மலையையே ஒற்றைக் கையில் பிடித்து வீசுவான் . அழுது அடம் பிடிக்கும் சிறுவர்களின் காதை அப்படியே திருகி கையோடு எடுத்துகொண்டு போய் விடுவான் . பாட்டி அக்குப்புத்திரன் பெயர் சொன்னதும் அழுகையை அப்படியே விழுங்கிக் கொண்டேன் . அங்கம்மா என்னிலிருந்து படிப்படியாக மறைந்தாள் .

அதன் பிறகு நான் பர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும் போது சித்ரா மிஸ் என்றொரு மிஸ் வந்தார்கள் . சிவப்பாக அழகாக இருந்தார்கள் . அவர்களின் உதடுகள் ஆரஞ்சு சுளையை எனக்கு ஞாபகப் படுத்தும் . அவர்களின் சேலை எப்போதும் மொறுமொறுவென்று பாட்டி சுட்டுத் தரும் முறுகலான தோசையைப் போலவே இருக்கும் . அழகாக இருந்தாலும் அந்த மிஸ் எல்லாரிடமும் எப்போதும் சிடு சிடு வென்றே இருந்தார்கள் . நான் பள்ளி செல்லும் வழியிலேயே அந்த மிஸ்ஸின் வீடு இருப்பதை அறிந்து , நான் போகும்போதும் , வரும்போதும் என் கூடவே அந்த மிஸ் வரமாட்டார்களா என்பது என்னுள் ஒரு ஏக்கமாகவே இருந்தது . ஆனால் அந்த மிஸ்ஸை , ஒரு சொட்டைத் தாத்தா தினமும் ஸ்கூட்டரில் கூட்டிச் சென்று வருவது தெரிந்து எனக்கு அந்தாள் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது . அது அந்த மிஸ்ஸின் அப்பாவாம் . ஒரு நாள் வகுப்பில் நான் சித்ராமிஸ்ஸையே ஆசையோடு பார்த்துக்கொண்டிருந்ததை மிஸ் பார்த்து விட்டார்கள் . " என்னடா அப்படி பாக்குற . வந்து ஒன டூ த்ரீ சொல்லு " என்றார்கள் . நான் எழுந்து சென்று கைகளைக் கட்டிக் கொண்டு ஒன டூ த்ரீ சொல்ல ஆரம்பித்தேன் . பிப்டி நைன் வரைக்கும் சொன்ன பிறகு எனக்கு கை கால்கள் உதற ஆரம்பித்தன . அடுத்ததாக , " சிஸ்டி ஒன , சிஸ்டி டூ " என்று நான் பயந்துகொண்டே ஆரம்பிக்க , மிஸ் என் காதைப் பிடித்துத் திருகி , " ஒழுங்கா சொல்லு . சிக்ஸ்டி ஒன , சிக்ஸ்டி டூ ..... " என்றார்கள் . நான் மீண்டும் " சிஸ்டி ஒன , சிஸ்டி டூ " என்றேன் . வகுப்பே சிரிக்க ஆரம்பித்தது . அதிலும் அந்த முதல் பென்ச் சசிகலா , குள்ளக் கத்திரிக்காய் , விழுந்து விழுந்து சிரித்தாள் . என் கண்கள் கலங்க ஆரம்பித்தன . அதைப் பார்த்த மிஸ் புன்னகையோடு என் தலையைத் தடவி , " இதுக்காடா அழறது " என்றதும் நான் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தேன் . உடனே மிஸ் தன் மடியோடு என்னை அணைத்துக் கொண்டு என் முதுகைத் தடவி விட்டார்கள் . அதனாலேயே நான் ரொம்ப நேரம் அழுது கொண்டிருந்தேன் . எப்போதும் சிடு சிடுவென்று இருக்கும் சித்ராமிஸ் அப்படி நடந்து கொண்டது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது . நான் அழுது முடிந்ததும் மிஸ் , " வீட்ல போய் தனியா சொல்லிப்பாரு . உன் அம்மாக்கிட்ட சொல்லிக்காட்டு " என்றார்கள் . நான் , " அம்மா , ஊர்ல இருக்காங்க மிஸ் " என்றேன் . உடனே மிஸ் , " சரி அப்ப , சரஸ்வதி சாமி முன்னாடி நின்னு சொல்லிப்பாரு . கண்டிப்பா வரும் . இவங்க எல்லாம் உன்னைப் பார்த்து சிரிச்சாங்க இல்ல . நாளைக்கு இவங்க முகத்துல நீ கரியப் பூசனும் .. குட்பாய் ...போய் உக்காரு " என்றார்கள் . அன்று மாலையே நான் வீட்டிற்குப் போய் சாமி படம் முன்னாடி நின்று " சிஸ்டி ஒன சிஸ்டி டூ " சொல்ல ஆரம்பித்தேன் . கடும் முயற்சிக்குப் பின் " சிக்ஸ் " எனக்கு வசப்பட்டது . அடுத்தநாள் மிஸ்ஸின் முன் சொல்லிக் காட்டி " குட்பாய் " வாங்க வேண்டுமென்று ஆசை ஆசையாக நான் போனபோது மிஸ் அன்று வரவில்லை . சித்ரா மிஸ் இனிமேல் வரமாட்டார்களாம் . அவர்களுக்கு கல்யாணமாம் . ஹெட் மாஸ்டர் வந்து அப்படித்தான் சொல்லிவிட்டுப் போனார் . பக்கத்து பென்ச் ஜெயராமன் மட்டும் என் காதில் , " மிஸ் கெட்டவார்த்தை பண்ணிட்டு , ஓடிப் போய்ட்டாங்க " என்றான் . காதலித்து ஓடிப்போவதைத் தான் அவன் அப்படி சொன்னானென்று அந்த வயதில் எனக்குப் புரியவில்லை . சித்ரா மிஸ் கடைசி கடைசியாக என்னிடம் சொன்ன " குட்பாய் " என்பது " குட்பை " ஆக ஆகிவிட்டிருந்தது . அதன் பிறகு பள்ளி செல்லமாட்டேனென்று நான் அழுது அடம் பிடித்ததும் , பாட்டி , மீண்டும் அக்குப்புத்திரனிடம் என்னைப் பிடித்துக் கொடுப்பதாக சொன்னதும் வேறு வழியின்றி நான் பள்ளி சென்றேன் .அதன் பிறகு என் வாழ்க்கையில் யாரும் எனக்குத் தோழியாக வரவில்லை . நான் டவுசரில் இருந்து பேண்டுக்கு மாற ஆரம்பித்த போதுதான் முத்தரசி எனக்கு அறிமுகமானாள் . எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் வாடகைக்குக் குடிவந்திருந்தனர் . முத்தரசிக்கு அப்போது பதினைந்து வயது இருக்கும் . அவளது அம்மா பலகாரங்கள் சுட்டு விற்பார்கள் . அவளுக்கு அப்பா கிடையாது . அவள் எங்கள் வீட்டுக் கிணற்றில் தண்ணீர் எடுக்க வரும்போது நானும் அவளும் பார்த்துக் கொள்வோம் . ஆனால் ஒரு வார்த்தை பேசியது கிடையாது . அவளுக்கும் எனக்கும் சம்பவங்கள் அதிகம் இல்லை . ஆனால் இவள் என் வாழ்க்கைத் துணையாக வந்தால் நன்றாக இருக்குமே என்று நான் நினைத்ததுண்டு . என் ராசியோ என்னவோ அவள் என் வீட்டருகே குடிவந்து ஆறே மாதத்தில் , அவளுடைய மாமன் ஒருவான் கிடாய்மீசை வைத்துக் கொண்டு முத்தரசியைப் பார்க்க வருவதும் , அவளோடு ஆசை ஆசையைப் பேசுவதும் நிகழ்ந்தது . அதன் பிறகு முத்தரசி என்னை பதிலுக்குப் பார்ப்பதைத் தவிர்த்தாள் . அடுத்த சித்திரையிலேயே அவளுக்கும் அந்த கிடாய் மீசை மாமனுக்கும் கோலாகலமாகத் திருமணம் நடந்தது . மற்றபடி சொல்வதற்கு ஒன்றும் இல்லை .
நான் இளங்கலை படிக்கும் போது இசைப்பிரியாவும் என்னோடு படித்தாள் . இசைப்பிரியாவின் கண்கள் எனக்கு மிகவும் பிடித்த அம்சங்கள் . அவள் , பெண்கள் வரிசையில் இரண்டாவது பென்ச்சில் முதல் ஆளாக அமர்ந்திருப்பாள் . நானும் ஆண்கள் வரிசையில் இரண்டாவது பென்ச்சில் முதல் ஆளாக அமர்ந்திருப்பேன் . முதல் செமஸ்டரில் ஆங்கிலத்தில் நானும் அவளும் ஒரே மதிப்பெண் எடுத்திருந்தோம் . கெமிஸ்ட்ரி லேபில் எனக்கு எதிர்த்த ஆய்வக மேசை அவளுடையது . இப்படி ஒருசில சென்டிமென்ட்களால் இசைப்பிரியாவிடம் ஒரு ஈர்ப்பு இயல்பாகவே இருந்தது .ஆனால் அவள் என்னிடம் ஆரம்பத்திலிருந்தே பேசவில்லை . பொதுவாக இந்தக்காலப் பெண்கள் , தங்களிடம் பேசாத ஆண்களிடம் பேசுவதே இல்லை . நான் எந்தப் பெண்ணிடமும் பேசாத காரணத்தாலேயே என் வகுப்புப் பெண்கள் என்னை ஒரு சைக்கோ போலவே பார்த்தார்கள் . மூன்றாமாண்டு முடிவில்தான் இசைப்பிரியா என்னுடன் பேசினாள் . எங்கள் ஜூனியர்கள் எங்களுக்கு ஒரு பிரிவு உபச்சார விழா நடத்தினார்கள் . அதில் மேடை கீடைஎல்லாம் அமைத்து , நடனம் ஆடி , பாட்டுப் பாடி , ஜமாய்த்து விட்டார்கள் . ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களுக்கு நடுவே சட்டென்று அனைவரும் அமைதியானார்கள் . மேடையில் ஒருவன் , " இப்ப நம்ம டிபார்ட்மென்ட்லையே ரொம்ப அமைதியான ஒருத்தர் மேடைக்கு வரப்போறார் " என்றான் . எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது . பத்து கல் தொலைவில் ஒரு குண்டூசி விழுந்தாலும் " டான் " என்று கேட்க்குமளவு படு அமைதி ! அனைவரும் திரும்பி என்னைப் பார்க்க , " ஏண்டா , இதெல்லாம் மொதல்லையே சொல்லித் தொலைக்க மாட்டீங்களா ? " என்று நான் மனதுக்குள்ளேயே சொல்லிக் கொண்டு பலியாடு போல எழுந்து மேடைக்குச் சென்றேன் . அடுத்ததாக மேடையில் இருந்தவன் அழைத்தது இசைப்பிரியாவை . அவள் புன்னகையோடு எழுந்து வந்தாள் . உடனே மேடையில் இருந்தவன் , நான்காய் மடிக்கப்பட்ட நான்கைந்து துண்டுக் காகிதங்களை குலுக்கிப் போட்டு ஒன்றை என்னை எடுக்கச்சொன்னான் . நான் , ராசிப்படி மூன்றாவதாய் இருந்த சீட்டை எடுத்துப் பிரித்தேன் . அதில் " செத்துப் போவது போல நடித்துக் காட்டவும் " என்று இருந்தது . அதைப்பார்த்து உண்மைமயிலேயே நான் பாதி செத்துப் போனேன் . அந்த சீட்டில் இருக்கும்படி நான் நடிக்க வேண்டுமாம் . இசைப்பிரியா அதைப்பார்த்து அந்த சீட்டில் என்ன எழுதியிருந்தது என கண்டுபிடித்துச் சொல்ல வேண்டுமாம் . எனக்கு கண்ணை இருட்டிக்கொண்டு வந்து அப்படியே தொப்பென மேடையில் விழுந்தேன் . ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று தெரியவில்லை . இதற்குள் இசைப்பிரியா , அந்த சீட்டில் இருந்ததை சரியாக சொல்லி விட்டிருந்தாள்கீழே இருந்த அனைவரும் கைதட்டிய பிறகுதான் சுயநினைவு வந்து நான் எழுந்தேன் . அப்படியே தத்ரூபமாக நடித்ததாக அனைவரும் என்னைப் பாராட்ட , " நான் எங்கடா நடிச்சேன் .. நடந்ததே அதுதாண்டா " என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் . அதன் பிறகு விழா முடிந்து போகும்போது இசைப்பிரியா என்னோடு நடந்து வந்தாள் . " ரொம்ப நல்லா இருந்தது " என்றாள் . நான் " எது " என்றேன் . " நீ நடிச்சது " என்றாள் . நான் " அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல " என்று வெட்கப்பட்டு வழிந்தேன் . " டவுசர் கிழிஞ்சது எனக்கில்ல தெரியும் " என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன் . " பியூச்சர்ல அந்த மாதிரி பீல்ட சூஸ் பண்ணி போ. நல்லா வருவே " என்றாள் . நான் , மென்மையாக " தேங்க்ஸ் " என்றேன் . பேச்சு அதோடு முடிந்தது .
அந்தப் பேச்சை மட்டும் வளர்க்கும் " வள்ளல் " அப்போது எனக்கிருந்திருந்தால் இசைப்பிரியா எனக்குக் காதலியாகி இருப்பாள் . அதன் பிறகு நான் அவளைப் பார்க்கவே இல்லை . ஏழுவருடங்கள் கழித்து அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதாக மதியழகன் ( ஆம் ! அவனே தான் ) அலைபேசியில் சொன்னான் . அதன் பின் என் வாழ்க்கை வழக்கம் போல பாலைவனமாகவே இருந்து வருகிறது .

Comments

Popular posts from this blog

திருமணம் 2013 


' சொல்லியனுப்புகிறோம் '
என்ற சொல்லை
காலம் என்ற
விலை கொடுத்து
பெண் வீட்டார்
வாங்கி விட்டனர் !
--------------------------------------------

இன்ஜினியர் பெண்ணும்
இன்ஜினியர் ஆணும்
தம்பதியாவது
காலத்தின் கட்டாயம் !
டாக்டருக்கும் இது
டிட்டோ !
--------------------------------------------

திருமணம்
கல்லூரியில்
நிச்சயிக்கப்படுகிறது !
--------------------------------------------

மாப்பிள்ளையின்
சம்பளமும்
மறைமுக
வரதட்சணைதான் !
கொண்டுவாருங்கள்
இதற்கொரு
இ. பி. கோ !
--------------------------------------------

குவித்துத்தான்
வைக்கிறார்கள்
ஆண் ஜாதகத்தை !
பொறுக்கித்தான்
எடுக்கிறார்கள்
பெண் ஜாதகத்தை !
--------------------------------------------

ஒவொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு !
ஆணினமே
அனுபவி !
--------------------------------------------

காலஸ்த்ரி,
திருநாகேஸ்வரம்,
திருவிடந்தை,
திருமணஞ்சேரி .......................
அடுத்து என்ன
ஜோசியரே ?
--------------------------------------------

தந்தை மகற்காற்றும் உதவி திருமணத்திற்கு
சாதி பார்க்காச் செயல் !
------------------…
பிரிந்த காதலி

அவளை
அந்தப் பேருந்தில்
பார்ப்பேனென்று
நான் நினைக்கவில்லை !

அவள்
அப்படியே தானிருந்தாள் !

காதோரத்தில்
அதே
சுருண்ட முடி !

தலைகுளித்த
அதே
ஒற்றைப் பின்னல் !

சூடப்பட்ட
அதே
ஒற்றை ரோஜா !

அந்த
பச்சை நிற
சுடிதாரை
எனக்குப்
பரிச்சையமிருக்கிறது !

மெட்டியில்லா
அவள்
பாதங்களைக் கண்டு
நான் ஏன்
ஆறுதல் அடைகிறேன் ?

மனதுக்குள்
மீண்டும்
மழை பெய்ய
ஆரம்பித்தது !

வருஷங்கள்
கடந்தும்
என்னைச் சுற்றி
மீண்டும் ஒரு
வசந்தம் குட்டியாய் !

அவள்
இன்னும் என்னைப்
பார்க்கவில்லை !

திறந்திருந்த
ஜன்னலில்
வெளியை
வெறித்துக் கொண்டிருந்தாள் !

இப்போதெல்லாம்
அவள்
இசை கேட்பதில்லை
போலும் !

இறுதியாக
நிகழ்ந்த
அந்த கடைசிச்சந்திப்பு
ஆயுளுக்கும்
மறக்காது !

என்னருகே
ஒட்டிநின்ற
அந்த பருவப்பெண்ணை
உரசாமல்
எவ்வளவு முடியுமோ
அவ்வளவு
விலகி நின்றேன் !

ஏதோ
எங்கள்
பழைய காதலுக்கு
நான் செலுத்தும்
என்னால் இயன்ற
மரியாதை !

சுற்றிலுமிருந்த
ஆண்களிடமிருந்து
தன் காதலியை
அடைகாத்துக் கொண்டிருந்தான்
ஒரு காதலன் !

சட்டென்று
அவனுக்காக
என் கண்கள்
ஈரமாயின !

ஒருகாலத்தில்
நானும்
என் காதலியை
அப்படி
அடைகாத்தவன் தான் !

பிரிந்த
காரணங்களைப்
பட்டியல் போட
விருப…
குறிப்பு : இந்தக் கதை வயது வந்தவர்களுக்கு மட்டும் .

தடயம்

எனக்கு அவசரமாக ஒரு துப்பாக்கி வேண்டும் . துப்பாக்கி எதற்கு என்று கேட்கிறீர்களா ? சுகுமாரைக் கொல்வதற்கு . நான் ஏன் சுகுமாரைக் கொல்ல வேண்டும் ? எல்லாம் அந்த சுமலதா மேடத்திற்காகத்தான் . சுமலதா மேடம் ? வருகிறேன் ....... ஆரம்பத்திலிருந்தே வருகிறேன் .
என் பெயர் ரங்கநாதன் . வயது 28 . என்னது எதோ பிளாட்பாரக்கடை " மதன சுந்தரி " டைப் புத்தகத்தில் வரும் கதைகளின் முதல் வரி போல இருக்கிறது என்று நினைக்கிறீர்களா ? எனது கதையும் ஏறக்குறைய அதே மாதிரித்தான் . நான் வேலை செய்யும் தொழிற்சாலையின் முதலாளி தீவிர ஆஞ்சநேயர் பக்தர் போல . அதனாலேயே எங்கள் அலுவலகத்தில் / தொழிற்சாலையில் கக்கூஸ் கழுவுவதற்க்கூட ஆண் " ஆயாக்கள் " தான் இருக்கிறார்கள் . தினம் தினம் வேலைக்குப் போவதற்கே " கடுப்பு முடியாக " இருக்கும் . முடி என்று நான் கௌரவமாக சொல்கிறேன் . நான் படித்த கல்லூரி கூட ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரி . எனக்கென்று காதலியோ கீதலியோ கிடையாது . தற்போது நான் குடியிருக்கும் அறையில் கூட மூன்று அறைநண்பர்கள் இருக்கிறார்கள் . ஆளுக்கொரு காதலி …