Saturday, June 11, 2011

உத்தமக் காதலியே ...........
நான் நானாகவும் ,


நீ நீயாகவும் இருந்து - பிறகு


நான் நீயாகவும்


நீ நானாகவும் மாறிப்போனதன்


மர்மம் உணர்கிறாயா


என் மனங்கவர்ந்தவளே !
மௌனத்தின் மொழிகற்றதும்


விழிகளால் பேசும் கலை அறிந்ததும்


காத்திருப்பின் சுகம் புரிந்ததும்


நம் காதலால் தானென்று


என்னைபோலவே நீயும் உணர்கிறாயா


என் இதயத்திருடியே !
பேசிகொண்டிருந்த


எத்தனையோ இரவுகளில்


யார் முதலில் தூங்கிப்போனாலும்


மறுநாளே மனமார


மன்னிப்புக் கேட்பதும் ,


மன்னிப்புக் கேட்டதற்க்குத்தான்


மன்னிப்பில்லை என்று


பொய்யாகக் கோபிப்பதும் என


விட்டுக் கொடுத்தலின் உச்சத்தில்


வாழ்ந்திருக்கும் நாட்கள் இவை என்று


விளங்குகிறதா வசந்தம்தந்தவளே !
அலுவலுக்கு நடுவே ,


அவ்வப்போது பேசிக்கொண்டிருப்பதும்


பிறகு ,


பேச்சிற்கு நடுவே


அவ்வப்போது அலுவல் பார்ப்பதும் ,


அதன் பின்


பேசிக்கொண்டிருப்பதே


அலுவல் ஆனதும் என


அன்றாட வழக்கங்கள் அனைத்தும்


அப்படியே தலைகீழானதன்


சூட்சமம் தெரிகிறதா


என் இனிய சூனியக்காரியே !
கல்லூரி செல்வதாய் நீயும்


அலுவலகம் செல்வதாய் நானும்


அவரவர் வீட்டில் அழகாகப் பொய்சொல்லி ,


பொதுவானதொரு பேருந்து நிலையத்தில்


பதைபதைத்து சந்தித்து


கோவிலுக்குப் போவதாய்த்


தீட்டியிருந்த திட்டத்தைக் கைவிட்டு


திரைப்படம் போகலாமென


திடீரெனத் தீர்மானித்து


கூட்டமில்லாதொரு திரையரங்கில்


தனியிடம் தேடியமர்ந்து ,


தவறு செய்கிறோமோ என்ற


தடுமாற்றத்தில் ,


பாதிப் படத்திலேயே எழுந்து வந்து


மீதிப் பொழுது கழிக்க


பூங்காவிற்குச் சென்று


பூக்களைப் பார்த்துக் கொண்டே


பேசிக்கொண்டிருந்து விட்டு


பிறகு பசியெடுத்தது என


கொண்டுவந்த மதியஉணவை


மாறி மாறிப் பகிர்ந்துண்டு


மகிழ்ந்திருக்கும் நாட்களை


மறக்க முடியுமா


என் மனதின்நாயகியே !
நான் வாழ்த்துக்கூறிய தேர்வில்


முதல் மதிப்பெண் பெற்றதை


மகிழ்ச்சியோடு நீ சொன்னபோது ,


கைம்மாறாய் கையிலாவது முத்தம் கொடு என


நான் சண்டித்தனம் செய்ததும்


முடியவே முடியாதென


மருகி நீ மறுத்ததும் பிறகு


வாடிய என் முகம் கண்டு


என் கன்னத்திலே நீ


கனியிதழ் பதித்ததும் ,


வண்ண வண்ண விண்மீன்கள் என்


விழிகளில் வட்டமிட்டதும் என


காதலில் வாழ்கிற கவிதை நாட்களை


கவனிக்கிறாயா


என் கனவுதேவதையே !
நானும் நீயும்


நடந்து போகும்போது ,


எதிரில் வரும்


'எக்குத்தப்பான ' பெண்களை


ஏக்கமாய் நான் பார்த்தால்


தலையில் குட்டியிருக்கிறாய்


கன்னத்தைக் கிள்ளியிருக்கிறாய்


" அவள் பின்னாலேயே போ ! " என


செல்லமாய்க் கடிந்திருக்கிறாய் !


ஆனால் ஒருநாள் கூட


" பதிலுக்கு நானும் பிறஆண்களைப்


பார்த்தால் என்ன ஆகும் ? " என்று


நீ கேட்டதேயில்லை !


ஒருநாள் இதை


உன்னிடமே கேட்டுவிட்டேன் .


அப்போது நீ சொன்னாய் ,


" உன்னோடு இருக்கும்போது


என் உலகமே நீயாக இருப்பதால்


புறவுலகம் மறந்துவிடுகிறதடா


பைத்தியகாரா ! " என்று


என் தலைமுடி கலைத்தபடி !


உணர்ச்சிவசத்தில் என் கண்கள்


தானாய்க் கலங்க


அது கண்டு நீயும் கலங்கி


ஆறுதலாய் என்னை நீ


அணைத்துக் கொள்ளுப்போது


நம் உயிர்கள் ஒன்றுகலப்பதை


உணர்கிறாயா என் உத்தமக்காதலியே !!!


No comments:

Post a Comment