Skip to main content
அந்தி மாலையில்
அந்த சாலையில் ........... 
( சிறுகதை )








பணி முடிந்து வரும் ஒவ்வொரு மாலையும் அழகாகத்தான் இருக்கிறது, இல்லையில்லை சுகமாக இருக்கிறது, இல்லையில்லை அழகாக இருப்பதால் சுகமாக இருக்கிறதுஇல்லையில்லை............ சுகமாக இருப்பதால் அழகாக இருக்கிறது ..........ஆனால், உண்மையிலேயே நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் ................................சரி ! சரி !

என்னைப் பொறுத்தவரை இதன் அடிப்படை மனோதத்துவம் யாதெனில் அந்த சைக்கோ சொட்டைத் தலையன் முகத்தில் விழிக்க வேண்டியதில்லை. சரியான ' வொர்க்கஹாலிக் " மண்டையன் ! அவனை மேலதிகாரியாகப் பெற்றதற்கு போன பிறவியில் என்ன பாவம் செய்து தொலைத்தேனோ ? நொய் நொய் என்று எப்போது பார்த்தாலும். ச்சே ........... அந்தாள் பற்றி இப்போது என்ன வாழுகிறது ? சிந்தனையை மாற்று சிந்தனையை மாற்று. மாற்றுகிறேன், அதோ அந்த தேநீர் கடையில் பஜ்ஜி சுடுகிறார்கள், என்ன மணம் ! என்ன மணம் ! சற்று தள்ளி, கைவண்டியில் பாணி பூரி ! த்சோ த்சோஒரு தட்டு வாங்கி உண்டால் என்ன ? சபலமாக இருக்கிறதே என்று சுலபமாக வாங்கித் தின்று விட்டால் அப்புறம் இரவு சோறு இறங்காது. ( கவனிக்க : சபலமாக - சுலபமாக ) பவித்ரா கண்டுபிடித்து விடுவாள். பிறகு அவளும் சரியாக சாப்பிட மாட்டாள். அதன் பின் இரவெல்லாம் ஊடல் ! தேவையா இது !

ஒழுங்காக வீடு போய்க் கொண்டிருந்தேன். எதிரே ஒரு கிழவி வந்தாள்  ஹாய் கிழவிஅப்புறம் மிதிவண்டியில் வந்த எவனோ பேமானி காறித் துப்பி விட்டுக் கடந்தான். இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன், இந்த காறித் துப்புதலின் பின்னணி உண்மையிலேயே என்ன ? அது ஏன் மிகச்சரியாக ஒருவனைக் கடக்கும் போது மட்டும் காற வேண்டும். கடக்கும் போது காறித் துப்புபவன் மீது மான நஷ்ட வழக்கு போடுவதற்கு . பி. கோ இருந்தால் சொல்லுங்களேன்வெயிட்  மினிட்  ! அவள் .......அவள் .......என்னைப் பார்த்தாள். என் கண்ணைப் பார்த்தாள். நாங்கள் ஒருவரையொருவர் நோக்கிக் கொண்டோம் ! சட்டென்று திரும்பிப் பார்த்தேன். எனக்குள் ஒரு குட்டி பூகம்பத்தை ஏற்படுத்தி விட்டு ஒன்றுமே நடவாதது போல அவள் கடந்து போய்க் கொண்டிருந்தாள். தினமும் இவ்வழியே வருகிறாளா என்ன ? கல்லூரிப் பெண் தான். அவள் வயதுக்கு சத்தியமாக நான் " அங்கிள் " . என்னை ஏன் ' சைட் ' அடிக்க வேண்டும்  ? அநேகமாக, தோராயமாக, ஏறத்தாழ, கிட்டத்தட்ட  அப்படி இருக்காது தான். எதேச்சையாக நிகழ்ந்த ஒரு விபத்தாக இருக்கலாம்.

பெண்கள் யாரையாவது பாரத்தால் கண்ணைத் தான் முதலில் பார்ப்பார்களாயிருக்கும். பவித்ராவிடம் இதைப் பற்றிக் கேட்கலாமா ? நோ ! கண்டு பிடித்து விடுவாள். கள்ளி. ... அதற்குமேல் நான் அதைப்பற்றி சிந்திக்கவில்லை. வீடு வந்தேன், கைகால் முகம் மழுவினேன், காபி குடித்தேன், ஏழெட்டு பூரியை லவட்டினேன், கொட்டாவி விட்டேன், குறட்டை விட்டேன் , மறுநாள் எழுந்தேன், பல் துலக்கினேன், நாக்கு வழித்தேன் .....ன் , ன், ன், ன்,  !

மீண்டும் மாலை ! மீண்டும் பஜ்ஜி , மீண்டும் பேல்பூரி ................ அய்யய்யோ அவள் எதிரே வருகிறாளே ! உடலை ஒட்டிய சுடிதார். கழுத்தைச் சுற்றிய துப்பட்டா, ஒற்றை ஜடை, துள்ளல் நடை, சாயா கடை , ஆயா சுட்ட வடை ........... ச்சை . நேற்று பழைய டி.ராஜேந்தர் படம் பார்த்ததன் விளைவு. ஹையோ . நெருங்கி விட்டாளே . காற்றில் அலைந்த கூந்தலை ஒயிலாக ஒதுக்கியபடி என்னைப் பார்க்கிறாளே. பார்வைகள் உரசிக் கொண்டன. சுளீரென்று மின்னல் பூத்தது. தொண்டைக்குழியில் இதயம் துடித்தது. உஸ்ஸ் என்று பெருமூச்சு ஒன்று தன்னிச்சையாக வெளிப்பட்டது. தலையை உதறிக் கொண்டேன். நாளைக்கும் வருவாளா ? இந்தத்தெருவில் புதிதாகக் குடி வந்திருக்கிறாளோ ? பவித்ரா என்னை மன்னி !

தூங்கப் போகும் போது, அவள் முகம் நினைவில் வந்தது. " என்ன, ஐயா ஏதோ சிந்தனைல இருக்கீங்க போல " என்றாள் பவித்ரா ! " ஒண்ணுல்ல " என்றேன்.

"
ஆபீஸ்ல உங்க பாஸ் எதுனா சொன்னாரா ? " 
"
ப்ச் ....இல்ல "
"
உங்கம்மா போன் பண்ணாங்களா ? "
"
ம்ஹூம் "
"
தலை வலிக்குதா ? காபி போடவா ? "
"
வேண்டாம் "
"
ஹலோ , நீங்க என்ன மணிரத்னம் பட ஹீரோ வா ? ஒரு ஒரு வார்த்தைல பதில் சொல்றீங்க ! "
"
ஹேய் ! என்னம்மா ? நாளைக்கு ஆபீஸ்ல மன்த்லி மீட்டிங். ஒரு பிரசெண்டேஷன் பண்ணனும். அதைப்பத்தி யோசிச்சுட்டு இருந்தேன். "

பொய் ! மன்த்லி மீட்டிங் உண்மை , பிரசெண்டேஷன் உண்மை ! அதைப் பற்றித் தான் யோசித்துக் கொண்டிருந்தேன் என்பது பொய் ! மேலும் மன்த்லி மீட்டிங் நாளை மறுநாள் !

"
ஆபீஸ் மேட்டர, ஆபீஸ் வாசலோட மறந்துடணும்...என்ன புரியுதா  " என்றபடி பவித்ரா என்னைக் கட்டிக் கொண்டாள்.

மீண்டும் காலையில் எழும்போது அந்தப் பெண் ஒருமுறை நினைவில் வந்தாள். அதன் பிறகு தினப்படி அலுவல்களில் மூழ்கி விட்டேன். மீண்டும் மாலை வந்தது . அடிவயிற்றில் இனம் புரியாத ஒரு அவஸ்தை ! தன்னிச்சையாக இதயத் துடிப்பு அதிகரித்தது. நாக்கு வறண்டு போனது. அவளைக் காணவில்லை ! இன்றைக்கு வரமாட்டாளா ? ஒருவேளை ஐந்து நிமிடங்கள் முன்னதாக வந்துவிட்டேனோ ? சட்டென்று மின்னல் போல அவள் ஒரு திருப்பத்தில் இருந்து வெளிப்பட்டாள். நான் எச்சில் விழுங்கினேன். அங்கிருந்தே பார்த்தாள். நானும் பார்த்தேன். நாங்கள் பார்த்துக் கொண்டே நெருங்கினோம். " பார்க்காதே பார்க்காதே " என்று மனசாட்சி மனதின் பாதாளத்தில் இருந்து ஈனசுரத்தில் கத்தியது. அதை செவி மடுக்கும் மனநிலையில் நான் இல்லை. அருகே வந்ததும் ரகசியமாக, கபடமாக, கள்ளமாக இதழோரத்தில் என்னை நோக்கி சிக்கனமாகப் புன்னகைத்தாள். கால்கள் பின்னிக் கொண்டனஅவள் கடந்த பின்பு திரும்பிப் பார்த்த போது அவளும் திரும்பிப் பார்க்க .......... இந்த முறை அவள் புன்னகை பெரிதாக இருந்தது.  




 
பாவம், அவள் தான் சின்னப் பெண் ! எதிர்பாலினம் மீதிருக்கும் கவர்ச்சியினால் பார்க்கிறாள். பதினான்கு கழுதை வயசாகி தடி எருமை  மாதிரி வளர்ந்து, திருமணமும் ஆன எனக்கு எங்கே போயிற்று புத்தி ? ஆனாலும், வெறுமனே பார்க்கத் தானே செய்கிறோம் ! இது எந்த விதத்தில் சமூகத்திற்குக் கேடு விளைவிக்கப் போகிறது ? இன்று பார்ப்போம், பார்த்தல் சலித்துப் போய், பேச ஆரம்பிப்போம், ஒரு கட்டத்தில் பேசுதலும் சலித்துப் போய் .............. பவித்ரா ஸாரி டியர் ! வெரி ஸாரி !

மறுநாள் அலுவலகத்தில் மனது குறுகுறுத்தது, தலை கிறுகிறுத்தது, ஏதோ ஒன்று உள்ளே விறுவிறுத்தது. முகப் புத்தகத்தைத் திறந்தேன். அவள் கல்லூரிப் பேருந்தை கவனித்து கல்லூரியின் பெயரைப் பார்த்து வைத்திருந்தேன். அந்தப் பெயரைப் போட்டு தேட ஆரம்பித்தேன். ஒன்றும் பெயரவில்லை. பிறகு, குத்து மதிப்பாக " பிரியா " என்று போட்டு நான் இருக்கும் இடத்தைக் குறிப்பிட்டுத் தேட ஆரம்பித்தேன். அகப்படவில்லை. " காயத்ரி " போட்டுப் பார்த்தேன். மாட்ட வில்லை. விர்ர் விர்ர் என்று தொலைபேசி அலறியது. ஆஆ ! மேனேஜன்சைக்கோ , சொட்டை மண்டையன் .........! எதற்கு அழைக்கிறான் ? அட சட் ! மன்த்லி பிரசெண்டேஷன் . ஐயோ ....பண்ணவே இல்லையே ! போச்சு போச்சு .......கத்தப் போகிறான்...... வெங்கட்ரமணா, கோவிந்தா , ஏழு குண்டலவாடா ........

"
என்ன பிரசெண்டேஷன்  ரெடியா ? "
"
தோ....தோ .....அஞ்சு நிமிட்ல கொண்டாறேன் சார் "
"
ஒரு மணிக்கு மீட்டிங் ........ லஞ்ச் முடிஞ்சதும் ஷார்ப்பா வந்திடுங்க. "
"
....சரி சார் "
லொடக்வைத்து விட்டான். நான் பரபரத்தேன். ஒரு மணியடிக்க அரைமணிநேரமே இருந்தது. கேண்டீன் கட் ! ஆனாலும் அரைமணியில் என்னத்தைக் கிழிக்க முடியும் ? கிழிக்க முடிந்தவரை கிழித்தேன். ஒரு மணிக்கு ஓடினேன்.

அங்கே அலுவலகத்தின் பெரிய தலைகள் அனைவரும் குழுமியிருந்தார்கள். அழுத்தமாகப் பார்த்தார்கள். அழுத்த அழுத்தமாகப் பேசினார்கள், இவன்கள் கூட குப்பை கொட்டினால் வெகு சீக்கிரம் இதய அடைப்பு வந்து வைகுந்தப் பதவி எய்த வேண்டியது தான். என்னுடைய பாஸ் சொட்டைத் தலையன் எழுந்து " இப்போது எங்கள் பிரிவின் மாதாந்திர புள்ளி விவரங்களை  திரு. ரங்கராஜன் தங்களுக்கு எடுத்தியம்புவார் " என்றார். நான்தான் ரங்கராஜன். நான்தான் எடுத்தியம்ப வேண்டும் ! என்ன எழவை இயம்புவது ? தேவுடா ! பிரசெண்டேஷன் படு மொக்கையாக இருக்கிறதே ! எங்கள் பிரிவு, எப்போதும் கடைசியில் தான் பேச வேண்டியதிருக்கும் அப்போது எப்படியோ ஒப்பேத்தி விடலாம் என்றல்லவா எண்ணியிருந்தேன். போன மாதம் சக ஊழியன் ஜெகன் அப்படித்தானே ஐந்து நிமிடத்தில் ப்ரசெண்டேஷனை முடித்தான். அவனுக்கு உடம்பெல்லாம் மச்சம் ! சுக்கிரன் அவனுக்கு உச்சம் !

நான் எழுந்தேன். ம்கும் என்று கனைத்தேன். பெருந்தலைகள் எல்லாம் இருக்கையில் வசமாகச் சாய்ந்து கொண்டு என்னையே அர்த்த புஷ்டியோடு, அழுத்தமாகப் பார்த்தார்கள். எனக்கு கக்கா வருவது போல இருந்தது. நாக்கு எழும்பவில்லை, " கு....குட் நூன்  " என்றேன். அனைவரும் நிமிர்ந்து கொண்டார்கள். ஒரு சொட்டை மண்டையன் தன் குறிப்பேட்டில் நான் சொல்லப் போவதை குறித்துக் கொள்ளும் முனைப்போடு என்னைப் பார்த்தான். " எங்கள் பிரிவின் மொத்த உற்பத்தி தி தி .....இதுதான் " என்று சுவற்றில் ஒளிர்ந்த பவர்பாயிட்டைக் காட்ட , மேஜையின் வலது புறத்தில் இருந்து  " இதுவா " என்றொரு குரல் ! அப்புறம் கூட்டத்தில் சலசலப்பு ! என் பாஸ் எழுந்து,  " ரங்கராஜன், நம் இம்மாத மொத்த உற்பத்தி அதுவல்ல. இதுதான் " என்று ஒரு எண்ணைச் சொன்னார்நான் " ...எஸ் சார் ......ஸாரி சார் " என்று நொண்டினேன். அதற்குள், நான் சொல்லப் போவதில் சரக்கு ஒன்றும் இருக்காது என்பதைப் புரிந்து கொண்ட ஒரு புடுங்கி எழுந்து, " மற்ற பிரிவுகளை கவனித்து விட்டு இதை கடைசியாக கவனிப்போம் " என்று சொல்ல என் தலைவன் முகத்தில் எள்ளும் , கொள்ளும் , கடுகும் , கடலைப் பருப்பும் வெடிக்க நான் இருக்கைக்கு வந்து தொப் என்று விழுந்தேன். அந்த மன்த்லி மீட்டிங்கில் எங்கள் பிரிவின் பிரசெண்டேஷன் கடைசி வரை நடக்கவில்லலை.

சரியாக ஐந்து இருபத்தி ஐந்துக்கு, வீட்டுக்குப் புறப்பட ஐந்து நிமிடங்களே இருக்கும் சமயத்தில் பாஸ் என்னைக் கூப்பிட்டார். நகத்தைக் கடித்துத் துப்பிக் கொண்டே போனேன்.

"
மிஸ்டர் ரங்கராஜன் ! இரண்டு நாட்களுக்கு முன்னரே , ப்ரசெண்டேஷனைக் கொண்டு வந்து காட்டி சரிபார்த்துக் கொள்ளுமாறு சொல்லியிருந்தேனே ! அங்கே என்ன புடுங்கிக் கொண்டிருந்தீர்கள் ? " என்றார் தூய நாசுக்கான ஆங்கிலத்தில் !

"
ஸாரி சார் ....கொஞ்சம் பிசகி விட்டது. இனி இது போல நடக்காதுஎன்றேன்.

" GWM
நம் பிரிவு  பற்றி என்ன நினைப்பார் . நமகென்று ஒரு நல்ல பெயர் இருந்தது. அதை நீங்கள் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விட்டீர்கள். வேலையில் தங்களுக்கு விருப்பம் இல்லையெனில் மிக தாராளமாக இராஜினாமா பண்ணிக் கொள்ளலாம். எதற்காக சிரமப்பட்டு இங்கே இருந்து கொண்டு எங்களையும் சிரமப்படுத்துகிறீர்கள். ஒன்றாம் தேதியானால் வாங்கும் சம்பளத்திற்கு நாம் கொஞ்சமாவது நியாயமாக இருக்க வேண்டாமா ? ஜெகன் விடுமுறையில் இருக்கிறான் என்று தானே உங்களை செய்யச் சொன்னேன். அப்போதே உங்கள் மீது எனக்கு நம்பிக்கையில்லை. சத்தியமாக இனியெப்போதும் உங்கள் மீது நம்பிக்கை வராது எனக்கு "  

"
ஸாரி சார் "

"
மிஸ்டர் , நீங்கள் என்ன ஸாரி சொல்லும் இயந்திரமா ? உங்களுக்கு மெமோ கொடுக்கலாம் என்றிருந்தேன். திருமணமாகி விட்டதே என்று விடுகிறேன். மறுமுறை இம்மாதிரி என்றால் நிச்சயம் மெமோ தான். இரண்டு மெமோக்கள் தொடர்ச்சியாக வாங்கினால் அப்புறம் நாங்கள் உங்கள் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளலாம் தெரியுமல்லவா " என்றதும் எனக்கு கண்ணெல்லாம் கலங்கி விட்டது. அதை உணர்ந்தோ என்னவோ அவர்  " போங்கள் ............போங்கள் ....இனியாவது வேலையில் கவனமாயிருங்கள்  " என்றார். அவரது கேபினை விட்டு வெளியே வரும்போது மணி ஐந்து முப்பத்தி ஐந்து ! கம்பெனி வண்டி போயிருக்கும். பஸ் பிடித்துத் தான் வீடு போக வேண்டும். அவளைப் பார்க்க முடியாது. அவள் ..........அவள் ............அவளால் தான் ! ஆனாலும் அவளை இன்று மிஸ் பண்ணுகிறேனே ! யாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல, அந்த சொட்டை  டாக் முன்பு நான் கண் கலங்கி விட்டேனே ! பெருத்த அவமானம் ! பெருத்த அவமானம் ! நாளை அவளைப் பார்க்கும் போது ஒரு துண்டு சீட்டில் என் அலைபேசி எண்ணை எழுதிக் கொடுத்து விட வேண்டும்அடுத்தமுறை மெமோ வாமே

நான் இல்லம் வந்த போது பவித்ரா சோபாவில் அமர்ந்திருந்தாள். முகம் கழுவலாமென்று குளியலறை நோக்கிப் போனேன். சட்டென்று நின்றேன். நான் பவித்ராவைக் கடக்கும் போது அவள் கையில் அலைபேசி இருந்தது, அவள் உதட்டில் புன்னகை இருந்தது. யாருக்கேனும் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறாளா  ? அப்படியே இருப்பினும் அது யார் ? எவன் ? எவன் ? எவன் ? என் புலன்கள் தீப்பற்றிக் கொண்டது போல விழித்துக் கொண்டன. நான் பரபரத்தேன். சொட்டீர் சொட்டீர் என்று நீரை அள்ளி அள்ளி முகத்தில் அடித்துக் கொண்டேன். வெளியே வந்து இம்முறை அவளைக் கடக்கும் போதும் கடைக்கண்ணால் பார்த்தேன். அதே புன்னகை , இல்லை அதைவிடப் பெரிய புன்னகை !

"
பவித்ரா " என்று இரைந்தேன்.

"
காபி ........ பிளாஸ்க் இருக்கு ....ஊத்திக் குடிங்க " என்று அவள் மீண்டும் தன் அலைபேசிக்குள் ஆழ்ந்தாள். அடிக்கடி புன்னகைத்தாள். எனக்கு எரியோ எரியென்று எரிந்தது, எதுவோ ஒன்று புரியோ புரியென்று புரிந்தது. பவித்ரா இப்போதும் அழகாய்த் தான் இருக்கிறாள். கடை கன்னிக்கு வெளியே போகிறாள். அழகழகான இளைஞர்கள் சுலபமாக பார்வைக்குக் கிடைப்பார்கள், கிடைக்கிறார்கள். என்னை அந்த கல்லூரிப் பெண் பார்த்தது போல அவளை எந்த கல்லூரிப் பையனாவது ................... கடவுளேஅந்த அலைபேசியை வைக்கிறாளா பார் ! என்ன சிரிப்பு எழவு வேண்டிக் கிடக்கிறது ? கணவன் பணியிலிருந்து  மான மரியாதையெல்லாம் போய் வந்திருக்கிறேன், இங்கே அவளுக்கு இளிப்பு, இளிப்ப்ப்பு .

அதன்பிறகு அன்றிரவு அவளிடம் நான் பேசவில்லை. இதை உணர்த்து போல " என்னாச்சு ....ஒரு மாதிரி டல்லா இருக்கீங்க.....நானும் பார்க்கறேன் ...... மூணு நாளாவே ஆள் ஒரு மார்க்கமாத் தான் இருக்கீங்க. " என்றாள் என்னைப் புகார் சொல்வது போல. நான் அவளை கர்ண கடூரமாக முறைத்தேன். " ம்ம் ...... கோபம் வருது சாருக்கு ! நான் எதுவும் சொல்லலைப்பா ! " என்றபடி சென்று விட்டாள்.

இரவு ! கட்டில் ! நான் ! பவித்ரா ! தூங்கி விட்டாளா ? விட்டாள் . ,.... விட்டாள் ! அவள் அலைபேசி அதோ அவள் தலைமாட்டில் இருக்கிறது. யாருக்கு அப்படி SMS  அனுப்பினாள் என்று பார்த்தே ஆக வேண்டும் ! தலை விண் விண் என்று வலித்தது. நான் பூனை போல எழுந்தேன். அவள் அலைபேசியை எடுத்துக் கொண்டு கழிவறைக்குச் சென்றேன். குறுஞ்செய்திகளைப் படித்தேன். ஏதோ ஒரு புது எண் ! நலமா ? நலமே ! என்ன சாப்பாடு ? இன்ன சாப்பாடு ! ஒரு சர்தார்ஜி ஜோக் ! அதற்கு இவளது இளிப்பு ! அடுத்து ஒரு முருங்கைக்காய் ஜோக் ! அதற்கு இவள் செல்லமாய் உதை விழும் என்றிருக்கிறாள். படுபாவி, பாதகி, ................தாங்க முடியாமல் அந்த எண்ணிற்குத் தொடர்பு கொண்டேன். இந்த ராத்திரியில் அதுவும் பதினொன்னரை மணிக்கு அழைப்பதா என்றாலும் எதாக இருந்தாலும் இன்றே தீர்க்க வேண்டும் ! ஆம் ! தீர்க்கத்தான்  வேண்டும் !

மறுமுனையில் ரிங் போனது. போய்க்கொண்டிருந்தது. "  ஹெல்ல்லோ " என்றொரு தூக்கக் குரல் ! முதலில் அது ஒரு ஆணின் குரல் என்று தான் நினைத்தேன். அக்குரல் தொடர்ந்து  " ஹலோ  " என்றதும் தான் அக்குரலில் அதிர்வெண் சற்று அதிகமாயிருப்பதை, ஈஸ்ட்ரோஜென் ததும்புவதை, என் உடம்பின் ஆண்ட்ரோஜென்கள் உணர்ந்து கொண்டு " அது ஒரு பெண் ! பெண் ! பெண் ! " என்று கத்தின. நானும் என்னையறியாமல் " ஹலோ " என்றிருக்க வேண்டும். மறுமுனையில் தூக்கக் கலக்கம் போய் விட்டிருந்ததை உணர்ந்தேன். இப்போது தெளிவாக " ஹலோ சார் ......என்ன இந்நேரத்துல " என்றது ,என்றாள். பவித்ரா என்னைப் பற்றி அவளிடம் சொல்லியிருக்க வேண்டும் !  " ..... ........ ஒண்ணுமில்லமா ! கீ .....கீ ......... கீபேட் லாக் பண்ணல போல , கால் ஆட்டோமேட்டிக்கா போயிருச்சு ....ஸாரி " என்றேன். மறுமுனை " இட்ஸ் ஒகே .....இட்ஸ் ஒகே .....குட் நைட் " என்றதுநானும் " குட் நைட் " சொல்லி விட்டு நிமிர்ந்த போது, கையைக் கட்டிக் கொண்டு என்னையே பார்த்தபடி பவித்ரா நின்றிருந்தாள்.
 

எனக்கு ஒருகணம் உலகம் உறைந்து விட்டது. பேயதிர்ச்சி அடைந்தேன். கதவை நான் சாத்த வில்லை போலும். எப்போதிருந்து இங்கு நின்று கொண்டிருக்கிறாள் ? கடவுளே ! அவள் பார்வையில் அக்னி தெரிகிறதே ! " பவித்ரா ....பவி.......பவி .........அப்படி பார்க்காதே .........ப்ளீஸ் ..... நடந்ததை சொல்லிடறேன் ............ " என்றபோது அவள் அமைதியாக " சொல்லுங்க " என்றாள். நான் சற்று கோர்வையாக நடந்தது அனைத்தும் என் மனைவியிடம் சொல்ல ஆரம்பித்தேன். பவித்ரா அமைதியாக அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தாள். பிறகு " கடவுளுக்கு நன்றி சொல்றேன் " என்றாள்.        " ஏன் " என்றேன் புரியாமல்.

"
உங்க மனசுல இருக்கறதை ஒளிவு மறைவு இல்லாம எங்கிட்ட சொன்னீங்க இல்ல. இந்த சூழ்நிலையை, இவ்வளவு சீக்கிரமே ஏற்படுத்தி நடக்கவிருந்த ஒரு பெரிய மனஸ்தாபத்தை இல்லாம பண்ணிட்டாரே கடவுள் அதுக்காக அவருக்கு நன்றி ! "  என்றாள்

"
வாவ் ! நீ இவ்ளோ மெச்சூரிட்டியா பேசுவேன்னு நான் நினைக்கல மாஎன்றேன்.

"
ஆனாலும் நீங்க இவ்ளோ இம்மெசூர்டா, ஒரு காலேஜ் பொண்ணை  சைட் அடிச்சத எல்லாம் என்கிட்டே சொல்வீங்கன்னு நான் நினைக்கல. நீங்க இப்படியே கடைசிவரை என்கிட்டே வெளிப்படையா இருந்திடுங்களேன்......ப்ளீஸ் ........." என்றபோது அவளின் கண்கள் கலங்கின.

"
ஏய் ...........லூசு மாதிரி இப்ப ஏன் கண் கலங்கற " என்றபோது என் கண்களும் கலங்கத்தான் செய்தன.

அதன் பிறகு, நாங்கள் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு அப்படியே தூங்கிப் போனோம் !


மறுநாள் அந்த மாலை வந்தது. அந்த அவள் இப்போதும் என் எதிரே வந்தாள். என்னை ஏறிட்டுப் பார்த்தாள். ஆனால்நான் அவளைப் பார்க்கவில்லை. அடுத்த நாளும் அதற்கடுத்த நாளும்இதே தான் நடந்தது. மறுநாள் அவள் எனக்கு எதிர்படுகையில் அலைபேசியில் சிரித்தபடி பேசிக்கொண்டு வந்தாள். இம்முறை அவள் என்னைப் பார்க்கவில்லை. இனி பார்க்க மாட்டாள். பார்க்கவே மாட்டாள்.  
 
 
 

Comments

  1. யார் தேவா அந்த ரங்கராஜன், கற்பனையா? சிரித்து சிரித்து எனக்கு வயிறே வலிக்கிறது, அருமை

    ReplyDelete
  2. விஜய்,
    எழுத்தாளர் சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன் என்பது ! அவரது எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு , அவரது நடையைப் போலவே டிட்டோவாக நான் எழுதுவதால், எனது கதைகளில் " ரங்கராஜன் " என்ற பாத்திரம் அடிக்கடி இடம் பெறும். நீண்ட கதையைப் பொறுமையாக வாசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ! நன்றி ! நன்றி !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர