Wednesday, August 29, 2012

தாம்பத்யம்


கடைசியில்
நான் அவளை
அறைந்து விட்டேன் !
அதிர்ச்சியில்
அவள்
உறைந்து விட்டாள் !

அதன் பிறகு
மௌனம் !
ஊமையாகக்
கண்ணீர் !
பார்வையில்
ஈட்டி !
சூழலில்
சூனியம் !

ச்சே !
அவளை
அப்படி நான்
அடித்திருக்கக்கூடாது !
அவளும்
வார்த்தையால் என்னை
இடித்திருக்கக்கூடாது !

நடந்தது
நடந்ததுதான் !
கடந்தது
கடந்ததுதான் !

 அவள்
அறைக்குள் சென்று
முடங்கினாள் !
அழுது அழுதே  - கொஞ்சம்
அடங்கினாள்  !

காரணம்
இதுதான் !

உண்ணும் போதே
நறநறத்தது பல் !
காரணம்
பல்லில் இடறிய
ஒரு கல் !

" ஏண்டி இவளே
சமைக்க உனக்குத்
துப்பில்லை !
சாம்பாரில் கூட
உப்பில்லை !  "                 என்றேன்.

அடிபட்டவள் போல
அவள் நிமிர்ந்தாள் !

" ஆமாம் ! ஆமாம் !
சமைக்க எனக்குத்
துப்பே இல்லை !
வேண்டுமானால்
வைத்துக்கொள்ளுங்கள்
வேலைக்காரியை
தப்பே இல்லை !"                  என்றாள்.

சைத்தானை
அத்தோடு விடாமல்
கெத்தோடு சொன்னேன்.

" வைத்துக் கொள்கிறேன்
வேலைக்காரியை
சமையலுக்கு மட்டுமல்ல
யாவற்றிற்கும் !  "

என் பார்வையில்
தாராளமான
வக்கிரம் !
அவள் பார்வையில்
ஏராளமான
உக்கிரம்  !

சொன்னாள்,

" ம்ம் ம்ம்ம்
நானும்
வைத்துக் கொள்ளவா
ஒரு வேலைக்காரனை
யாவற்றி ..............."

பளார் !

கண்ணிமைக்கும்
நேரத்தில்
கை எனும் சாட்டை
அன்னம் போன்றவள்
கன்னம் தொட்டுவிட்டது !

முன்பே
சொன்னது போல்,

அதன் பிறகு
மௌனம் !
ஊமையாகக்
கண்ணீர் !
பார்வையில்
ஈட்டி !
சூழலில்
சூனியம் !

தாம்பத்தியம் எனும்
 பட்டுத் துணியில்
அந்த அறை,
ஆகிவிட்டது
என்றும் அழியாத
கறை !

இப்படிக்
கசந்து விட்டதே
இந்த இரவு !
துன்பத்திற்கு
நானே வைத்தேனே
நல் வரவு !

கவனத்தைத்
திருப்ப எண்ணி ,
தொலைக்காட்சி
போட்டேன் - அங்கே
கலைக்காட்சி
என்ற பெயரில்
கொலைக் காட்சி
காட்டினார்கள் !

இதைப் பார்த்தால்
சத்தியமாய்
ஆறாது சூடு !
கொஞ்சமும்
மாறாது மூடு !

பழுது இல்லாமல்
பொழுது போக்குவதெப்படி ?

சுற்றிலும்
பார்த்ததில்,
கண்ணுக்கு
அகப்பட்டது பரண் !
பழைய புத்தகங்களுக்கு
அது தானே அரண் !

கொஞ்சம்
கிளறிப் பார்த்ததில்
கிட்டியது ஒரு டைரி !

அது
அவளின் டைரி !
என்
மனைவியின் டைரி !

அட
டைரி கூட
எழுதுவாளா என்ன !

புரட்டலாமா ?
இல்லை
படிக்கும் ஆவலை
விரட்டலாமா ?

அவளின்
அந்தரங்கம் தான் !
அவள் மனைவியாக
இருந்தாலும்
அதைப்படிப்பது
அநாகரிகம் தான் !

குற்றமுள்ள நெஞ்சு
குறுகுறுத்தது !
படி படி என்று
ஏதோ உள்ளே
விறுவிறுத்தது !

அனிச்சையாக
கை
ஒரு பக்கம்
திருப்பி விட்டது !

ஆ !

மணியான
கையெழுத்து !

அட !

கவிதை !

அவள் எழுதிய
கவிதை !

படிக்கப் படிக்க

சில இடங்களில்
வியந்தேன் !
சில இடங்களில்
ஆச்சர்யமாய்
அதிர்ந்தேன் !
சில இடங்களில்
சிலிர்த்தேன் !
சில இடங்களில்
நிமிர்ந்தேன் !
சில இடங்களில்
சிரித்தேன் !
 சில இடங்களில்
அழுதேன் !

அவள் அறை
இருந்த திசையை
மரியாதையோடு
திரும்பிப் பார்த்தேன் !

இயல்பாகக்
கண்ணில் நீர்
வழிந்தது !

இவளுக்குள்
இப்படி ஒரு இவளா ?

உலகிலேயே
புனிதமான
ஒரு மலரை
ஏந்துவது போல
அவளின் டைரியை
ஏந்திக் கொண்டு
அவள்,
அறைக்குச் சென்றேன் !

அவள்,
சுருண்டு படுத்திருந்தாள் !
உடம்பு
தன்னிச்சையாக
விசும்பிக் கொண்டிருந்தது !

ஆதரவோடு
அவள் பாதம்
பற்றினேன் !

அவள்
பதறி எழுந்தாள் !

அந்த டைரியின்
நிரப்பப்படாத
பக்கமொன்றை
அவளிடம் காட்டி
சொன்னேன் ,

" அன்பே,
என்னைத் திட்டி
ஒரே ஒரு
கவிதை எழுது
ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்  .........................."


17 comments:

 1. வெறும் வார்தைகலாகா பார்க்க இயலவில்லை

  வாழ்கையின் சித்திரமாக பார்கிறேன்

  ஊடலும் கூடலும் இயல்பு ........சமமாய் கொள்ளாத போது
  அது பிறழ்வு

  உங்களுக்கே உரிய நடையில் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் ஆள் மனதின் உணர்வுகளை

  அருமை நண்பா

  ReplyDelete
  Replies
  1. ஒரு எளிமையான மனோதத்துவம் யாதெனில், ஒரு பெண்ணின் திறமைகள் பாராட்டப் படும்போது அந்தப் பெண் மிகவும் மகிழ்கிறாள் ! பாராட்டுபவர்கள் மீது அன்பு செலுத்துகிறாள் ! பெரும்பான்மையான ஆணுக்கும் இது பொருந்தும் ! இதை உணர்ந்து செயல்பட்டால் தாம்பத்தியம் இனிக்கும் ! கவிதையின் நோக்கைப் புரிந்து கொண்டு, கருத்தும் சொன்னதற்கு நன்றிகள் ஆயிரம் தோழி !

   Delete
 2. பெரியார் கூறியபடி மனைவியை தோழியாக,ந்ட்பாகக் கருதுங்கள். அப்பவும் கவிதை உங்களுக்காகத்தானா? அவள் கருத்தும் உலகடையட்டும்.

  ReplyDelete
  Replies
  1. மனைவியின் திறமையை உணர்ந்து கொண்டதை அந்த சூழலில் வெளிப்படுத்த இதை விட வேறு வழி எதுவும் தோன்றவில்லை !

   Delete
  2. கருத்திற்கு அனேக நன்றிகள்

   Delete
 3. அருமை!... அருமையிலும் அருமையாக சந்தங்கள்
  குறையாமல் ஒரு பெரும் சம்பவத்தையே சொல்லி
  முடித்த விதம் அருமை சகோதரரே மிக்க நன்றி
  அழகிய இக் கவிதைப் பகிர்வுக்கு .மேலும் தொடர வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. நீண்ட கவிதையைப் பொறுமையாக வாசித்து கருத்தும் சொன்னமைக்கு நன்றி சகோதரி !

   Delete
 4. தங்கள் தளத்தின் பதிவுகளை வேறு தளங்களில் இணையுங்கள்
  இதனால் தங்கள் ஆக்கத்தினை பிறரும் படித்து மகிழும் வாய்ப்புக்
  கிட்டும் சகோதரரே இது எனது அன்பான வேண்டுகோள் .பதிவுகளை
  இணைக்க மேலும் தங்கள் தளத்தை மேம்படுத்த http://www.bloggernanban.com/
  இந்த முகவரியில் சென்று பாருங்கள் .இலகுவழியில் அனைவருக்கும்
  புரியும் வகையில் தகவல்களைப் பகிர்ந்துள்ளார் ஓர் சக பதிவர் .

  ReplyDelete
  Replies
  1. ஓ ! கணினி நுட்ப சங்கதிகளில் நான் ஒரு பூஜ்ஜியம் ! நிச்சயம் அந்த தளத்திற்குச் சென்று பார்க்கிறேன் ! தகவலுக்கு மிக்க நன்றி

   Delete
 5. கவிதையில் யதார்த்தம் நிறையவே உள்ளன.

  மிகவும் பிடித்த வரிகள்:

  //இவளுக்குள்
  இப்படி ஒரு இவளா ?

  உலகிலேயே
  புனிதமான
  ஒரு மலரை
  ஏந்துவது போல
  அவளின் டைரியை
  ஏந்திக் கொண்டு
  அவள்,
  அறைக்குச் சென்றேன் !//

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
  Replies
  1. தளத்திற்கு தங்களின் முதல் வருகை ! ஏழ்மையான தன் இல்லம் வந்த ஒரு ராஜாவை எப்படி உபசரிப்பது என்று தெரியாமல் கைபிசைந்து நின்ற ஒரு ஏழையைப் போல என்னை உணர்கிறேன் ! கவிதையை வாசித்து கருத்திட்டதற்கு நன்றி சார் !

   Delete
 6. உங்கள் தளத்தை வலைசரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்
  http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_31.html
  என் தளம்
  http://kovaimusaraladevi.blogspot.in/

  ReplyDelete
  Replies
  1. தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் மிகவும் மிகவும் நன்றி ! தங்களைப் பெருமைப் படுத்தும் வகையில் தொடர்ந்து எழுதுவேனா அல்லது வாழ்க்கைச் சக்கரத்தில் உழன்று அடையாளம் தெரியாமல் போவேனா என்பதை காலம் மட்டுமே அறியும் ! நன்றி தோழி ! ஒத்த அலைவரிசையுடைய உறவுகளின் வட்டத்திற்குள் வந்தது போல உணர்கிறேன். உணர வைத்ததற்கு நன்றி !

   Delete
 7. தேவா உடனிருந்த நாட்களில் எங்கே போனது இத்தனை ரசனைகள், தொலைவில் இருந்தபோதும் அருகில் இருப்பதாய் உணர்கிறேன்.....

  ReplyDelete
  Replies
  1. ஹாய் விஜய் ,
   நலமா ? நான் முதன் முதலில் ஒரு பேருந்துக் கவிதை எழுதி அலைபேசியில் அனுப்பினேனே, அந்தக் கவிதைக்கு நீங்கள், சுரேஷ், ஹரி போன்றவர்கள் பாராட்டி " ரிப்ளை " பண்ணியிருந்தீர்கள். அப்போது நீங்கள் " ரிப்ளை " செய்யாமல் இருந்திருந்தால் இப்போது இந்த வலைப்பூ உருவாகி இருக்காது ! ரசிகர்கள் இல்லாவிட்டால் இங்கு எந்தப் படைப்பாளியும் உருவாவதில்லை ! மிக்க நன்றி !

   Delete
 8. வணக்கம் நண்பரே!

  உங்களுடைய பதிவுகள் இலங்கைத்தமிழர்கள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் நிர்வாகியாவதன் மூலம் இணைக்கலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை rss4sk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து நிர்வாகியாகுங்கள். கூகிள்சிறியில் சேர்க்கப்படும் பதிவுகள் தன்னியக்கமுறையில் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாகி அதிக வாசகர்களை சென்றடையும்.

  தங்கள் மின்னஞ்சலை எதிர்பார்த்து
  யாழ் மஞ்சு

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி நண்பரே ! மின்னஞ்சலை அனுப்பியுள்ளேன் ! தொடர்ந்து தங்கள் கருத்துக்களை எதிர்நோக்கி இருக்கிறேன் படைப்பாளர்களின் உலகத்தில் ஒரு ஏழையான நான் !

   Delete