Skip to main content
தேடல் -  சிறுகதை 




அந்த இடம் மிக அமைதியாக இருந்தது. ம்கும் என்று தொண்டையை இலேசாக செருமினால் ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் இருப்பவன் திருபிப்பார்க்கிறான் என்றால் அந்த அமைதி என்னவென்று கணித்துக் கொள்ளுங்கள். நான் அவ்விடத்தில் என்னை அந்நியனாக உணர்ந்தேன். வந்திருக்க வேண்டாமோ ? எனக்கு முன்னால் தோட்டம் துரவுமாக இருந்தது. ஒருவன், காவி அணிந்து குடுமி வைத்துக் கொண்டு செடிகளுக்கு நீர் பாய்ச்சினான். ஒருவன் ! இங்கேயும் ஆண் ! எங்கேயும் ஆண் ! கொல்ல வேண்டும் அவனை, அவர்களை, ஆண்களை ! பின் குறிப்பு : நானும் ஒரு ஆண் !

 அதில் பாருங்கள் ஒரு ஆணாக இருந்து கொண்டு ஆண்களை வெறுப்பதற்குக் காரணங்கள் மிக எளியவை. முதலில் எனக்குத் திருமணம் ஆகவில்லை, காதலி என்று எந்த எவளும் கிடைக்கவில்லை, பணிபுரியும் இடத்தில் பெண்கள் இல்லை, பக்கத்து வீட்டில் பல் போன ஆயா மட்டுமே, தெருவில் நடந்தால் எதிரே தென்படுபவர்கள் ஆண்கள் தான் ,அவர்களும்  காறித் துப்புகிறார்கள். பெண்களே இல்லாத திரையரங்குகள், பேருந்துகள், பூங்காக்கள், இவைகள் சென்னையில் அநேகம் உண்டு ! சட்டென்று ஆண்கள் மட்டுமேயான உலகத்தில் வசிக்கிறோமா என்று சந்தேகம் வந்து விடுகிறது ! இப்போதெல்லாம், எதிரே தென்படும் ஆண்களை மானசிகமாகக் கொல்கிறேன். அதற்கென்று லேசர் துப்பாக்கி என்னிடம் இருக்கிறது. அதை வைத்து  எதிர்படுபவனை எல்லாம் பொடுக் பொடுக் என்று போட்டுத் தள்ளுகிறேன். கற்பனையில் தான் ஐயா !

ஒரு நாள், வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கும் கத்தியைக் கூட எடுத்து பாக்கெட்டில் சொருகிக் கொண்டு கடைசி நிமிடத்தில் மனது மாறி கத்தியை வைத்து விட்டு வெளியில் கிளம்பிய போது தான் உறைத்தது. நான் கொஞ்சம் சைக்கோவாக மாறி வருகிறேன் என்று ! எந்த ஆணிபுடுங்கி மனனநல மருத்துவனையாவது போய்ப் பார்க்க வேண்டும் ! மருத்துவன் வேண்டாம் மருத்துவி  .கே ! எவ்வளவு முயன்றும் டாக்டர் ஷாலினியின் தொடர்புகள் கிடைக்கவில்லை ! அப்போது தான், அந்த சிறுவன் ஓடிவந்து அந்த நோட்டீஸ் கொடுத்தான். இங்கேயும் சிறுவன், சிறுவி இல்லை ! நான் அந்த சிறுவனுக்கு மானசிகமாய் கொட்டுக்காய் வைத்து விட்டு அந்த நோட்டிஸைப் படித்தேன். " வாழும் கலை " என்று எப்படி வாழ்வது என்று சொல்லித் தருகிறார்களாம் ! பஜ்ஜி வாங்கித் தின்று கைதுடைக்க உதவும் என்று அதைப் பாக்கெட்டில் செருகும் முன்பு அதில் அந்தப் பெயரைப் பார்த்தேன்.  " ஈஸ்வர குமாரி செல்வி. ஸ்படிகா  உங்களின் துயர்களைத் துடைக்கிறார் ....."  

ஸ்படிகா ! என்ன ஒரு பெயர் பாருங்கள் ! ஸ்படிகம் போல அவ்வளவு தூய்மையாக இருப்பாளோ ? செல்வி என்று வேறு போட்டிருக்கிறார்கள். நிச்சயம் இது போன்ற பெயர்கள் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி என்பத்தி ஐந்துக்குப் பிறகே உருவாகியிருக்க வாய்ப்புக்கள் உண்டு ! நிச்சயம் அவள், குமாரியாகத் தான் இருப்பாள். ஆஸ்ரமத்தில் நெய்யும் பருப்புமாகத் தின்று ஓரளவு ஊட்டமாகவே இருப்பாள். கட்டணம் தொள்ளாயிரம் ரூபாய் என்று போட்டிருந்தார்கள். மதியக் கொள்ளை ! போய்த் தொலைகிறது ! போனவாரம், ஜெகனும் நானும் வைத்தி பார்க்கில் அமர்ந்து ஆளுக்கு ஆயிரம் ரூபாயை வெட்டியாக செலவு செய்து ஆண்ட்ரோஜென்களை எல்லாம் அழித்துக் கொண்டோம் ! அப்படி அழுவதற்கு இப்படி அழுதுவிட்டுப் போகலாம். நான் தீர்மானித்தேன் ! அந்த நோட்டீஸில் இருந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டேன். ( வைத்தி பார்க் என்பது ஒருபார்’)

இடம் எங்கோ கே கே நகரில், மரங்கள் சூழ பங்களாக்களாக இருக்கும் பிரதேசத்தில் கொஞ்சம் ஷோக்காகவே இருந்தது. அங்கேதான் அந்த காவி , குடுமி செடிகளுக்கு நீர்ப்பாயச்சிக் கொண்டிருந்தான். வேறு வழியில்லை. அவனைத் தான் அணுகியாக வேண்டும். நான் அவனருகே சென்றதுமே என் சராசரித்தனமான அதிர்வலைகளால் தன் மூச்சின் லயமோ கியமோ பாதிக்கப் பட்டு அவன் நிமிர்ந்தான். புன்னகைத்தான். " வாருங்கள் ........... " என்றான். நான், " ஈஸ்வர குமாரி.......ரி ரி ரி ......." என்று இழுத்தேன். "  நேராகப் போய் இடது புறம் திரும்புங்கள். அங்கே ஒரு குடில் வரும் அங்கே தொகை செலுத்தி விட்டு தங்களுக்கான முறை வரும் வரை வரிசையில் காத்திருங்கள்..... தங்களுக்கு எல்லாம் இனிமையாகவே நடக்கும் இனி " என்று புன்னகைத்தான். எனக்கு அவன் ஹோமோவாக இருப்பானோ என்ற சந்தேகம் வந்தது. தூய தமிழ் வேறு !

அவன் சொன்னபடி போனேன். அவர்கள் காத்திருந்தார்கள். என்னைப் போலவே அவர்கள் அனைவரும் ஆண்களாக, இருக்கும் பட்சத்தில் வந்த வழியே உடனே திரும்பி விடுவது என்று தீர்மானித்திருந்தேன். ஆனால்  அங்கே கிழவர்களும், கிழவிகளும் ஜோடி ஜோடியாக வந்திருந்தார்கள். ஒரே ஒரு இளம் தம்பதியர் வந்திருந்தனர். நான் மட்டும் தான் தனியாள். அங்கே பணம் செலுத்தும் இடத்தில் ஒரு பெண் இருந்தாள். அவளை அணுகிய போது இதயம் கொஞ்சம் போலத்  திக்கியது ! " இங்க வர மேரேஜ் ஆகியிருக்கணுமா என்ன ! " என்றேன் அவளிடம். " அதெல்லாம் தேவையில்ல. நீங்க வெயிட் பண்ணுங்க. உங்க டோக்கன் நம்பர் வரும்போது கூப்டறேன் " என்று புன்னகைத்தாள். நான் அவளைக் கொஞ்சம் சைட் அடித்ததை அவள் உணர்ந்தே இருந்தாள். செல்லமாக உதட்டைச் சுழித்துப் புன்னகைத்தாள். இதயம் தொண்டைக்கு வந்து அடைத்துக் கொண்டது. இதற்கு மேல் பார்த்தால் டூ பாத்ரூம் வந்துவிடும் என்று அவளைத் தவிர்த்தபடி கிழவர்களுக்கு மத்தியில் போய் அமர்ந்து கொண்டேன்.
அந்த இடத்தில், உடலில் கொஞ்சம் டோபமைன் அதிகமாக சுரந்தது. பக்கத்தில் இருப்பவர்களின் மிக மெல்லிய அசைவுகள் தாலாட்டுவது போல ஒரு நுட்பமான வருடல் உணர்வை ஏற்படுத்தின. விட்டால் தூங்கி விடுவேன் போல இருந்தேன். இப்படியே எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் எனத் தோன்றியது. சுகமாகக் காத்திருந்தேன். கிட்டத்தட்ட ஒன்னரை மணிநேரம் கழித்து என் முறை வந்த போது, " அட ! அதுக்குள்ளயா  " என ஆச்சர்யப்பட்டபடி எழுந்து உள்ளே சென்றேன். ஸ்படிகாவைப் பார்க்கப் போகிறேன் ! ஒரு பிகரைப் பார்க்கப் போகிறேன். வாழ்வில் முதன் முறையாக ஒரு பிகருடன் பேசப் போகிறேன். ஐயா ஐயா ஐயா !!! 
 
உள்ளே, நல்ல விஸ்தாரமாக இருந்தது. கண்களை உறுத்தாத ஒளி இருந்தது. சுவற்றில் மூணு போல ஒரு குறியீட்டில் ஓம் என எழுதிருந்தார்கள். அந்த ஹாலின் மையத்தில் ஸ்படிகா தரையில் சம்மணம் இட்டு அமர்ந்திருந்தாள். கண்களை மூடி தியானத்தில் இருந்தாள். இளைஞி தான் ! அவள் தோல் கண்ணாடி போல இருந்தது. பச்சை நரம்புகளும், உள்ளே ஓடும் உதிரமும் தெரிந்தன. மிக மிக மிக மென்மையாக இருந்தாள். அவ்வளவு அழகாக இருந்தும், அவள் மீது காமமான எந்த உணர்ச்சியும் எனக்கு ஏற்படவில்லைநான் அவள் எதிரே விரிக்கப் பட்ட ஆசனத்தில் போய் அமர்ந்தேன். அவள் இன்னும் கண்களை மூடி இருந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தேன். தலையை பரக் என்று சொறிந்தேன். ம்கும் என்று கனைத்தேன். அவள் கண்களைத் திறந்தாள். பச்சைக் கண்கள் ! புன்னகைத்தாள்.  " நீங்கள் வந்தது தெரியும் திரு. ரங்கராஜன் , நீங்கள் எவ்வளவு தூரம் பொறுமையாக இருக்கிறீர்கள் என்று அறியவே  அவ்வாறு செய்தேன். " என்றாள். தூய தமிழ் ! பெயரை வேறு சொல்கிறாள்.  
 
எனக்குக் கொஞ்சம் எகிறி விட்டது. " தபாருங்க மேடம் ...... நான் ஒண்ணும் ஞானி, கீனி, சூனி, லாம்  கிடையாது பொறுமையா இருக்க. என்னோட எதிர்பார்ப்புக்கள் ரொம்ப மூனாந்தரமானதுங்கஒரு சாதாரண அடிபட்ட மனுஷன் கிட்ட எப்படி அணுகுவிங்களோ அப்படி அணுகுங்க. இந்த டெஸ்ட் வைக்கறது கிஸ்ட் வைக்கறது எல்லாம் வேணாம். " என்றேன். அவள், அப்போதும் புன்னகைத்தாள். " அப்படி என்ன வாழ்வில் அடிபட்டீர்கள் என்று தான் சொல்லுங்களேன் " என்றாள். குரல் சொர்கத்தின் குரல் !   " இங்க பாருங்க மேடம், நான் என் கவலையைச் சொல்லப் போக, நீங்க பாட்டுக்கு கை கால் போனவனைக் கூட்டியாந்து  ' இவன் சந்தோஷமாக இல்லையா ! இவனைப் போலவே நீங்களும் சந்தோஷமாக இருங்கள் ' ன்னு சொல்லிறாதிங்க. என் கேள்விகளுக்கு நேரடியான பதில்கள் தேவை. " என்றேன். " ம்ம் சொல்லுங்கள் ரங்கராஜன்என்றாள் அதே புன்னகை மாறாமல்
  
" எனக்குக் கொஞ்சம் வினோதமான பிரச்சனை மேடம். நான் போற இடங்கள்ள எல்லாம் லேடிஸ்ங்களே  இருக்கறது இல்ல. நான் படிச்சது ஆண்கள் பள்ளி. அப்புறம், சாமியார் மடம் போல ஒரு பாடாவதி காலேஜ்இப்ப வேலை செய்யற இடத்துல பாத்ரூம் கழுவறது கூட ஆண்கள் தான். பக்கத்து வீடுங்கள்ல எல்லாம் ஆயாங்க, ரோட்ல போனா எதிர்ல வரதெல்லாம் ஆண்கள் தான். பஸ்ல, ட்ரைன்ல, தியேட்டர்ல, எங்க பார்த்தாலும் ஆண்கள் ஆண்கள் ஆண்கள் .......எல்லாவனையும் கொல்லணும் , துப்பாக்கில சுடணும் , காலவாரித் தப்பணும்.................சாரி  மேடம் , கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டுட்டேன் " என்று கர்சீப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டேன்.  
 
அவள் இப்போது புன்னகைக்கவில்லை. " உங்கள் பிரச்சனை புரிகிறது " என்றாள். அப்பாடா ! புரிந்து கொண்டு விட்டாள். சற்று ஆசுவாசமாக இருந்தது. " லைப்ல ஒரு பிகர் கிட்ட கூட பேசினது இல்ல மேடம்...... என் ரூம் மேட்லாம் லவ் பண்ணறாங்க.... மொபைல்ல சிரிச்சு சிரிச்சு பேசறாங்க ...... பொறாமையா இருக்கு மேடம்...... வவுறு வாயெல்லாம் எரியுது. வீட்ல சொல்லி பொண்ணு கூட பார்க்கப் போனேன் மேடம். எவளுக்கும் என்னைப் புடிக்கல. சாப்ட் வேர் இஞ்சினியர் தான் நொட்டணுமாம் அவளுங்களுக்கு ! சூர்யா, விஜய் மாதிரிக் கேக்கறாளுங்க....... " என்று நாக்கைக் கடித்தேன். முஷ்டியை முறுக்கினேன்.  
 
" அமைதியாகுங்கள் ரங்கராஜன் .........உங்கள் ஆதங்கம் நன்றாகப் புரிகிறது. " என்று என் தோளைத் தடவிக் கொடுத்தாள். " மேடம் ....நீ ....நீங்க ...... " என்றேன். " ஒரு குழந்தையாகத் தான் உங்களை பாவிக்கிறேன். நாட்டில் தற்போது பெண்களின் விகிதம் குறைந்து விட்டது தான். தங்கள் பிரச்னைக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மற்றபடி உங்களை ஒன்று கேட்கட்டுமா ? " என்றாள். " கேளுங்க மேடம் " என்றேன்.  " உங்கள் சூழல்களில் பெண் இருக்கிறாள் என்றால் என்ன செய்வீர்கள் ...... உதாரணத்திற்கு நீங்கள் புகை வண்டியில் போகும்போது எதிரில் அழகான இளம் பெண் இருக்கிறாள்....நீங்களும் அவளும் மட்டும் தான். என்ன செய்வீர்கள் ? " என்றாள். " அவளை ஆசை தீரப் பார்ப்பேன். பேச முயற்சி செய்வேன். நம்பர் குடுப்பேன். அப்புறம் மெசேஜ், அப்புறம் பேச்சு ....... அப்புறம் லவ் .......அப்புறம்  மேரேஜ் ! " என்றேன். எனக்கே கொஞ்சம் அபத்தமாக இருந்தது.  
 
" சரி , உங்கள் விருப்பப்படி அப்படி ஒரு பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள் ......... இப்போது மீண்டும் புகை வண்டியில் போகிறீர்கள் , மீண்டும் ஒரு அழகி  உங்களோடு பயணிக்கிறாள் ...அப்போது என்ன செய்வீர்கள் ? " என்றாள். நான் கொஞ்சம் சுதாரித்து விட்டேன் ! " மேடம், முன்ன சொன்னத வாபஸ் வாங்கிக்கறேன். எனக்கு பெண்களின் சூழல் வேணும் அவ்வளவுதான். இப்ப நான் ரோட்ல போறேன்னா நாலு பெண்கள் சிரிச்சுகிட்டே என்னைக் கடக்கணும். சினிமா போனா, பக்கத்துல பெண்கள் இருக்கணும், நான் ஒண்ணும் பண்ண மாட்டேன் , என் விரல் நகம் கூட அவங்க மேல படாது .......ஆனா எனக்கு பெண்களின் சூழல் வேணும் .......... அது ஒரு மாதிரி கதகதப்பா இருக்கும். அந்தக் கதகதப்பான போதை உணர்வுக்குத் தான் நான் அலையறேன் ....கிடைக்க மாட்டேங்குது மேடம் .....கிடைக்க மாட்டேங்குது ......." என்றேன். இப்போது எப்படி மடக்குவாள் பார்ப்போம்.  
 
" ரங்கராஜன், உங்களுக்குப் பெண்களின் சூழல் வேண்டுமானால், நீங்கள் தான் அது போன்ற இடங்களைத் தேடித் போகவேண்டும். சில நேரங்களில் காத்திருக்க வேண்டும், ஆனால் அப்படியெல்லாம் செய்வதற்கு உங்கள் ஈகோ இடம் கொடுப்பதில்லை. எல்லாமே உங்களைத் தேடி வரவேண்டும் என்று ஆசைப் படுகிறீர்கள் .....சரியா ? " என்றாள். நான் " அப்கோர்ஸ்  மேடம் ! நான் அப்படி எதிர்பார்க்கறதுல என்ன தப்பு இருக்குது ? " என்றேன். " உங்கள் எதிர்பார்ப்புக்கள் தவறு என்று சொல்லவில்லை. காலகட்டத்துக்கு ஏற்ப நீங்கள் உங்கள் அணுகுமுறையை சற்று மாற்றிக் கொள்ளுங்கள்...... " என்றாள்.          " மேடம், நான் என்ன மன நல கவுன்சிலிங்குக்கா வந்திருக்கறேன் ? இந்த சுத்தி வளைச்சு மாவாட்டற பிசினஸ் லாம் எங்கிட்ட வேணாம் ! நேரடியான பதில் தேவைதாயத்து கீயத்து இருந்தா கொடுங்க ....... அல்லது இதுக்கு எதுனா பரிகாரம் பண்ணனுமா ? ஹோம குண்டம் வளக்கணுமா ? " என்றேன்
 
அவள் புன்னகைத்தாள். என் கண்களைப் பார்த்துப் பேச ஆரம்பித்தாள். " ரங்கராஜன், மனிதனின் தேடல்களும் எதிர்பார்ப்புகளும் ஒரு நாள் பூர்த்தி அடைந்தே தீரும் ! அது எப்போது என்றால், அவனது தேடல் ஒரு முடிவுக்கு வரும்போதுஎதிர்பார்ப்புக்கள் முற்றுப் பெறும் போதுஅதுவரை நாம் காத்திருப்பதைத் தவிர வேறு வழி இல்லை ! நீங்கள் இவ்வளவு காலம் காத்திருந்தீர்கள் ! இன்னும் கொஞ்ச காலம் தான்அப்போது, உங்கள் எதிர்பார்ப்புக்கள் ஈடேறும் போது ' இதற்காகவா இப்படி அலைந்தோம் ! ' என்று தான் எண்ணுவீர்கள். நீங்கள் மட்டுமல்ல மனித மனநிலையே அதுதான் ! போரடிக்கிறேனா ? உண்மை எப்போதும் போரடிக்கத்தான் செய்யும் ரங்கராஜன் ! கவர்ச்சியான பொய் தான் கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கும். நீங்கள் என்ன எதிர்பார்த்து இங்கே வந்திருந்தாலும் என்னால் உங்களுக்குத் தர முடிந்தது இது தான்  ! உலகத்தைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள், பெண்களின் சூழல் அகப்படாத உங்களுக்கென்று கடவுள் ஸ்பெஷலாக எதையாவது வைத்திருப்பார். உங்களுக்காக எனது பிரார்த்தனைகளைக் கடவுளின் முன்பு வைக்கிறேன்.நன்றி ! நீங்கள் போய் வரலாம் " என்று ஸ்படிகா மீண்டும் தன கண்களை மூடிக் கொண்டாள்.  
 
தொள்ளாயிரம் ரூபாய் வேஸ்ட் ! தொலைகிறது ! என்று எழுந்தேன். ஸ்படிகாவைக் கொஞ்சம் முறைத்தேன் ! அவள் புன்னகை மாறாமல் கண்களை மூடி தியானத்தில் இருந்தாள். முறைத்ததற்குக் கொஞ்சம் குற்ற உணர்ச்சி ஏற்பட்டது ! விருட் என்று கிளம்பி வெளியே வந்து விட்டேன். அடுத்து இரண்டு கிழங்கள் உள்ளே பய பக்தியோடு சென்று அவளை நமஸ்கரித்தன. அவள், அவ்வளவு பெரிய ஆளா என்ன ? நான் சற்று மரியாதைக் குறைவாக நடந்து கொண்டேனோ ? இருந்து விட்டுப் போகட்டும் ! தொள்ளாயிரம் வேஸ்ட் அல்லவா  ! சரக்காவது அடித்திருக்கலாம் !  
 
வெளியே வந்த போது அந்தக் குடுமி என்னை அணுகினான். " ஐயா , உங்கள் பணத்தை உங்களிடமே அம்மா கொடுக்கச் சொல்லி விட்டார்கள் .... இந்தாருங்கள் " என்றான். எனக்கு அதை மீண்டும் வாங்கிக் கொள்ள சங்கோஜமாக இருந்தது. ஆனாலும் கை ஞம ஞம என்றது. வாங்கிக் கொண்டேன். மானசிகமாக ஒரு கும்பிடு போட்டு விட்டு வெளியே வந்தேன். பணத்தை வாங்கியதும் ஸ்படிகா கடைசியில் சொன்ன வாக்கியங்கள் ஒவ்வொன்றும் முக்கியத்துவம் பெற்று என் காதுகளில் மீண்டும் ஒலித்தன. அதே உலகம் ! அதே ஆண்கள் ! ஒரு புண்ணாக்கும் மாறவில்லை. நிறுத்தத்தில் நின்று அந்தப் பேருந்தில் ஏறினேன். நல்ல வேளை இருக்கை காலியாக இருந்தது ! போய் அமர்ந்ததும் பக்கத்தில் ஒருவன் குழந்தையை வைத்தபடி அமர்ந்திருந்தான்.  
 
அந்தக் குழந்தை கியூட்டாக இருந்தது. என்னைப் பார்த்து சிரித்தது ! நான் பதிலுக்கு அசடு வழிந்தபடி இளித்தேன். எனக்கு இப்படித்தான் பொதுவிடத்தில் எந்தக் குழந்தையாவது  பார்த்து சிரித்தால் எனக்கு ரியாக்ட் பண்ணத் தெரியாது ! நான் இளித்தது, அந்தக் குழந்தைக்கு குதூகலமாக இருந்திருக்க வேண்டும், தையா தையா எனக் குதித்தது ! அதன் தகப்பன் என்னைப் பார்த்துப் புன்னகைத்தான். குழந்தை தன் பிஞ்சுக் கையால் என் சட்டைக் காலரைப் பற்றி இழுத்தது ! முகத்தைத் தொட்டுப் பார்த்தது ! தப் என்று அடித்ததுநான் மீண்டும் இளித்தேன் ! குழந்தை என்னிடம் தாவி வரத் துடித்தது. " இது வேறு ஓவராகப் பண்ணுகிறதே " என்று நினைத்துக் கொண்டேன். தன் தகப்பன் மடியில் இருப்புக் கொள்ளாமல் அது சிணுங்க, அவன் " சார் , உங்க கிட்டதத்தான் வர அழறான் " என்றபடி குழந்தையை என்னிடம் கொடுத்தான். " ஒன்னுக்கு கின்னுக்கு இருந்துவிடப் போகிறது " என்று மனதுக்குள் பயந்து கொண்டே  அந்தக் குழந்தையை வாங்கி மடியில் வைத்துக் கொண்டேன். கடவுளின் கதகதப்பு
 
அந்தக்குழந்தை மீண்டும் என்னைப் பார்த்து சிரித்து என் வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டதுஅதன் ஆஸ்தான சிம்மாசனம் போல என் மடியில் அமர்ந்து கொண்டு குதூகலமாக மழலை மொழியில் எதையோ பேசிக்கொண்டு அது பாட்டுக்கு இருந்தது ! சட்டென்று, ஸ்படிகாவின் அந்தக் கடைசி வாக்கியம் என் காதுகளில் மீண்டும் ஒலித்தது ! " கடவுள் உங்களுக்குனு ஸ்பெஷலா எதையாவது வைச்சிருப்பார் ! " என் உடம்பு ஒருமுறை சிலிர்த்தது ! களுக் என்று கண்ணில் நீர் ததும்பி விட, தூசி விழுந்தது போல பாவனை பண்ணி நீரைத் துடைத்துக் கொண்டேன். எனக்கான நிறுத்தம் வந்ததும் குழந்தையை அதன் தகப்பனிடம் ஒப்படைத்து, செல்லமாக அதன் கன்னத்தில் ஒரு கிள்ளு கிள்ளி விட்டு இறங்கும் போது தான் கவனித்தேன், அதுவரை எனக்குப் பக்கத்திலேயே  இரண்டு அழகான கல்லூரிப் பெண்கள் நின்று கொண்டு வந்திருப்பதை நான் கவனிக்காமலேயே இருந்திருக்கிறேன் என்பதை !!! 
 
 
 
 

Comments

  1. நண்பா .........

    உணர்வுகளில் கோர்த்து கொடுக்கப்பட்ட வாழ்வின் வரைபடங்கள்

    வண்ணப்படத்தை போல காட்சிகள் கண்களை அகல விரிய வைகிறது

    மனிதனின் தேடல் நிறைபெறாத ஓன்று ......

    * தேடல் வேண்டாம் என்று அவன் நினைக்கும் போது வாழ்வு முற்றுபெறுகிறது .........

    * பெண் இல்லா உலகம் வெறும் பிண்டம்

    * கிடைப்பது எப்போதும் எப்படியும் நம் கைகளுக்குள் வந்துவிடும்
    கிடைக்காதது எத்தனை முயன்று கைகளில் சிறைபடுதினாலும் உருகி வழிந்து செல்லும் நம்மை விட்டு

    * வாழ்வின் தத்துவார்தங்களை எளிய நடையில் ஒரு சுவாரசியமான நடையில் பல கோணங்களில்
    சித்தரித்து எங்களை அதன் போக்கில் பயணிக்க வைத்து இருக்கிறீர்கள்
    * பெரும் பான்மையான இளைஞர்களின் மனநிலை இப்படிதான் இருக்கிறது .
    இன்னும் பல நல்ல விடயங்களை உங்கள் எழுத்துகளின் மூலம் எதிர்பார்கிறேன்

    குறிப்பு : வார்த்தை சரிபார்பை நீங்கினால் பின்னூட்டமிட ஏதுவாக இருக்கு எல்லோருக்கும்

    ReplyDelete
  2. நல்ல சமூகச் செய்தி.நம்மைச் சுற்றி இருக்கும் பல நல்லவைகள் நமக்கு புலப்படுவதே இல்லை ஏனெனில் நம் கவனம் முழுதும் அர்த்தம் இல்லாத இடங்களில் இருப்பதால்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர