Thursday, November 8, 2012

 பயணம்




இந்த தீபாவளிக்கு
ஊருக்குப் போகத்தான்
வேண்டுமா ?

மூன்று மாதங்களுக்கு
முன்னரே
முடிந்து விட்டன
புகைவண்டி
முன் பதிவுகள் !

சென்ற வாரத்தின்
ஒரு நாளில்
ஒரே மணிநேரத்தில்
விற்றுத் தீர்ந்தனவாம்
பேருந்துகளின்
அனைத்து இருக்கைகளும் !

ஒற்றைக் காலில்
நின்று கொண்டே
எட்டு  மணிநேரப்
பயணம்தான்
இனி சாத்தியம் !

அப்படிப்
போய்த்தான்
என்ன
ஆகப் போகிறது ?

மூன்று நாள்
விடுமுறையில்
பயணக்களைப்பிற்கு
முதல் நாள் !
பயணத் தயாரிப்பிற்கு
மூன்றாம் நாள் !
நடுவேயுள்ள
இரண்டாம் நாளில்தான்
தொலைக்காட்சி
பார்த்தலும்,
பலகாரம் ருசித்தலும்  !

பலகாரம்தான்
பண்டிகை என்றால்
இருக்கவே
இருக்கிறது
இங்கே
அர்ச்சனா பேக்கிரி !

கொஞ்சம்
மளிகைப் பொருட்களை
முன்கூட்டியே
வாங்கி வைத்தால்
உணவு விடுதிகளின்
ஒருவார விடுமுறையை
ஓரளவு சமாளிக்கலாம் !

கேஸ்
தீராமல் இருக்க வேண்டும் !

அறை
காலியாகத்தான்
இருக்கும் !

பீட்டரிடம்
கேட்டால்
பலான சிடிக்கள்
தருவான் !

ஏகபோகமாக
ஏகாந்தத்தை
அனுபவிக்கலாம் !

நான் ஒருவன்
ஊருக்குப் போகாததால்
உலகம்
அழிந்து  விடுமா
என்ன !

பால்ய நண்பர்களில்
பலருக்குத்
திருமணம் ஆகிவிட்டது !

அக்கா மகளோ
அத்தை மகளோ
எதிர்வீட்டு தேவைதையோ
யாரும் இல்லை !

இப்போதெல்லாம்
ஊருக்குப் போவதில்
மிஞ்சுவது
உடல் வலியும் 
உறக்கமிமையும் தான் !

எளிதாக
அப்பாவை
சமாளித்து விடலாம் !

ஆனால் .........

என்ன பலகாரம்
செய்வது என
ஒருவாரமாக
அலைபேசியில்
கேட்டுக் கொண்டேயிருக்கும்
அம்மாவை,

வாசலிலேயே
அமர்ந்து
வருகையை
எதிர்நோக்கியிருக்கும்
அம்மாவை,

இரண்டு மாத
கவனிப்பை
இரண்டே நாளில்
நடத்தி விடத்துடிக்கும்
அம்மாவை ,

இன்னமும்
புத்தாடை
அணிந்து நின்றால்
நெட்டி முறித்து
திருஷ்டி கழிக்கும்
அம்மாவை ,

பாசப்பசிக்கு
பதார்த்தங்களின்
வடிவில்
அன்பைப் பரிமாறும்
அம்மாவை,

எப்படி
சமாளிப்பது ?

பண்டிகை நாளில்
ஓடி ஓடி
பிள்ளைகளை
கவனிப்பதில் தானே
தன் வாழ்வை
அர்த்தப் படுத்திக்
கொள்கிறாள்
இங்கே
ஒவ்வொரு அம்மாவும் !

உண்மையில்
பண்டிகைகள்
ஏற்படுத்தப் பட்டது
கொண்டாட்டங்களுக்காக
அல்ல !
அம்மாக்களுக்காக !

அந்த நாளை
முழுமையாக
ஆள்பவர்கள்
அவர்கள்தான் !

எந்தப்
பேருந்தையாவது
பிடித்து
எப்படியும்
தன்மகன்
வந்து விடுவான் என
எங்கேயும் ஒருதாய்
எப்போதும்
காத்துக் கொண்டே
இருக்கிறாள் !

கடைசித் தருணத்தில்
மனது மாறி
நம்பிக்கையில்லாமல் தான்
இணையத்தில்
முயன்று பார்த்தேன் !
ஏதோ ஒரு
பேருந்தில்
ஏதோ ஒரு இருக்கை
காலியாக இருந்தது !  

 

9 comments:

 1. உண்மையான கருத்து! அம்மா என்றும் அம்மா தான்! அருமை!

  ReplyDelete
  Replies
  1. அம்மாவின் அருமை உணர்ந்து கருத்து சொன்ன நண்பருக்கு நன்றி

   Delete
 2. மனதில் நினைக்கும் நினைவுகளை அப்படியே வரிகளில் படித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. பணி நிமித்தம் அம்மாவைப் பிரிந்து எங்கோ அயலூரில் வாழும் ஒவ்வொருவனுடைய மனதிலும் இதுதான் இருக்கிறது நண்பரே ! நன்றி

   Delete
 3. அந்த உறவுப் பிணைப்புதான் இன்னமும் கொஞ்சம் வாழ் நாட்களை வாழ வைக்கிறது. இயல்பான நடைமுறைக் கவிதை

  ReplyDelete
  Replies
  1. எதுகை மோனை என்று எந்த அலங்காரமும் இல்லாத இந்தக் கவிதை அம்மாவைப் பற்றி எழுதியதாலேயே அழகாக மாறிவிட்டது தோழி ! நன்றி

   Delete
 4. \\அக்கா மகளோ
  அத்தை மகளோ
  எதிர்வீட்டு தேவைதையோ
  யாரும் இல்லை !// - ஆஹா..! இது ரொம்ப இண்ட்ரெஸ்ட்தான்!
  // இரண்டு மாத
  கவனிப்பை
  இரண்டே நாளில்
  நடத்தி விடத்துடிக்கும்
  அம்மாவை//- தாயின் அன்பை உணர்ந்து எழுதிய கவிதை! பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தோழி , முதல் வருகைக்கு ஒரு வரவேற்பு வளையம் ! கவிதைக்கு கருத்திட்டதற்கு தலைவணங்கி ஒரு நன்றி !

   Delete
 5. வணக்கம்,


  24,11,2012இன்று உங்களின் கவிதை ஒன்றுவலைச்சரம் கதம்பத்தில் அறிமுகமாகியுள்ளது மனதைவருடிய கவிவரிகள் அருமை வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete