Skip to main content
தோற்றுப் போனவன்


அவன்
அறியப்பட்டான்
உரிமை இழந்த
குடிமை என்று !
உற்றுப் பார்த்தால்
தெரியும்
உண்மையில் அவன்
அடிமை என்று !

அரசைப்
பொறுத்தவரை
அவன் ஒரு
அகதி !
அண்டை நாட்டு
நட்புக் கொடியில்
தெறித்து விட்ட
சகதி !

ஆம்,
அவன்
வேற்று நாட்டு
மண்ணில்
நேற்று நடந்த
போரில்
தோற்றுப் போனவன் !

அவன்
தாய்மொழி கூட
தமிழ் தான் !
அவன் வாழ்வு
நிலையில்லா
நீர்க்குமிழ் தான் !

அவன்
தாய் தந்தையர்
இறந்து விட்டனர்
போரில் !
உறவென்று
யாருமில்லை
அவனுக்குப்
பாரில் !

அவனுக்கு
அடைக்கலம்
கொடுத்தது
சென்னை !
அந்த வகையில்
அதுதான்
அவனது
அன்னை !

அது,
நண்பனொருவனின்
தூரத்து
உறவு !
அதுவும்
மறுக்கப் பட்டிருந்தால்
அடுத்து
அவன் இலக்கு
துறவு !

அவனுக்கென
மாடியில்
ஒதுக்கப்பட்டிருந்தது
ஒரு அறை !
தனிமையை
உணர்த்துவதில்
அது கூட
ஒரு சிறை !

அவனுக்கு
மூன்று வேளையும்
தவறாது
உணவு வரும் !
உண்டுவிட்டுப்
படுத்தால்
உறக்கத்தை
முந்திக்கொண்டு
கனவு வரும் !

அந்தக் கனவுகளில்
முழுக்க முழுக்க
சத்தம் தான் !
ரத்தம் தான் !
யுத்தம் தான் !

ஆனால்
அனைத்தும்
நாளடைவில்
குறைந்து விட்டன !
மனதின் அடியாழத்தில்
அவையாவும்
உறைந்து விட்டன !

அவனிடத்தினின்று
பத்து கல்
தொலைவில் இருந்தது
ஒரு ஆலை !
அங்கு
அவனுக்கும்
கிடைத்தது
ஒரு வேலை !

பணியிடத்தில்
பக்கத்திலேயே
பருவ மொட்டு
ஒருத்தி !
பார்த்துப் பார்த்து
சிரித்தாள்
அவன் மனசையெல்லாம்
இன்பமாய்
வருத்தி !

இவனுக்கும்
காதல்
அரும்பியது !
வேறுதிசை நோக்கி
வாழ்க்கை
திரும்பியது !

ஒரு நாள்
மாலை,

கதவு திறந்ததில்
காலடியில்
கிடந்தது
ஒரு உறை !
பிரித்துப் பார்த்ததில்
உள்ளே
சிவப்பு சிவப்பாய்க்
கறை !

ஆம்,
எவனோ
தன் உதிரத்தை
எழுத்தாக்கியிருந்தான் !

" தோழர் ............."
என்று ஆரம்பித்த
அக்கடிதத்தின்
இறுதி வரி
இப்படியிருந்தது,

" மரம் வீழ்ந்தாலும்
அது விட்டுச்சென்ற
விதைகள்
வீரியம் பெறட்டும்
வீரம் தொடரட்டும்   "

மறுபடியும்
ஒரு போரா ?

நினைத்தாலே
மனதுக்குள்
மூண்டு எழுகிறது
ஆயாசம் !
இப்போதிருக்கும்
வாழ்க்கையோ
தித்திக்கின்ற
பாயாசம் !

" அப்படியானால்
வீழ்ந்தோர்களின்
தியாகமெல்லாம்
வீணாய்ப் போவதா ? "

யாரோ கேட்டார்கள் !

வீழ்ந்தார்கள்
வீழ்ந்தார்கள் என்று
இங்கே
இருப்பவர்களும்
இன்னும் இன்னும்
வீழ்ந்து கொண்டிருந்தால்
நாளை
வாழ்வதற்கு
யாரிருப்பார்கள் ???

அரைநொடி
ஆகவில்லை
அவன்
அக்கடிதத்தைக்
கிழிக்க !
அப்புறம் அவன்
குளியலறை சென்றான்
தன்
நீண்டநாள் தாடியை
மழிக்க !


Comments

 1. முடிவில் சிந்திக்க வைக்கும் கேள்வி...

  ReplyDelete
 2. இக்கவிதை சர்ச்சையை உண்டாக்கும் என்று எதிர்பார்த்தேன். அப்படி எதிர்பார்க்கும் அளவுக்கு நான் பெரிய இவன் இல்லை, ஒரு சாதாரண அவன் ! ஆனாலும் இக்கவிதையின் வீச்சை உணர்ந்து கருத்து தெரிவித்தமைக்கு நண்பர் தனபாலனுக்கு நன்றிகள் ஆயிரம் !

  ReplyDelete
 3. வீழ்ந்தார்கள்
  வீழ்ந்தார்கள் என்று
  இங்கே
  இருப்பவர்களும்
  இன்னும் இன்னும்
  வீழ்ந்து கொண்டிருந்தால்
  நாளை
  வாழ்வதற்கு
  யாரிருப்பார்கள் ???

  என் பார்வையும் இதுதான் நண்பா. நாம் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்பதால் ஏற்படும் எண்ணமாகக் கூட இருக்கலாம். சூழ் நிலையின் வட்டத்துள் இருப்பவர்கள் பார்வை வேறாகத்தானே இருக்கும்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

திருமணம் 2013 


' சொல்லியனுப்புகிறோம் '
என்ற சொல்லை
காலம் என்ற
விலை கொடுத்து
பெண் வீட்டார்
வாங்கி விட்டனர் !
--------------------------------------------

இன்ஜினியர் பெண்ணும்
இன்ஜினியர் ஆணும்
தம்பதியாவது
காலத்தின் கட்டாயம் !
டாக்டருக்கும் இது
டிட்டோ !
--------------------------------------------

திருமணம்
கல்லூரியில்
நிச்சயிக்கப்படுகிறது !
--------------------------------------------

மாப்பிள்ளையின்
சம்பளமும்
மறைமுக
வரதட்சணைதான் !
கொண்டுவாருங்கள்
இதற்கொரு
இ. பி. கோ !
--------------------------------------------

குவித்துத்தான்
வைக்கிறார்கள்
ஆண் ஜாதகத்தை !
பொறுக்கித்தான்
எடுக்கிறார்கள்
பெண் ஜாதகத்தை !
--------------------------------------------

ஒவொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு !
ஆணினமே
அனுபவி !
--------------------------------------------

காலஸ்த்ரி,
திருநாகேஸ்வரம்,
திருவிடந்தை,
திருமணஞ்சேரி .......................
அடுத்து என்ன
ஜோசியரே ?
--------------------------------------------

தந்தை மகற்காற்றும் உதவி திருமணத்திற்கு
சாதி பார்க்காச் செயல் !
------------------…
பிரிந்த காதலி

அவளை
அந்தப் பேருந்தில்
பார்ப்பேனென்று
நான் நினைக்கவில்லை !

அவள்
அப்படியே தானிருந்தாள் !

காதோரத்தில்
அதே
சுருண்ட முடி !

தலைகுளித்த
அதே
ஒற்றைப் பின்னல் !

சூடப்பட்ட
அதே
ஒற்றை ரோஜா !

அந்த
பச்சை நிற
சுடிதாரை
எனக்குப்
பரிச்சையமிருக்கிறது !

மெட்டியில்லா
அவள்
பாதங்களைக் கண்டு
நான் ஏன்
ஆறுதல் அடைகிறேன் ?

மனதுக்குள்
மீண்டும்
மழை பெய்ய
ஆரம்பித்தது !

வருஷங்கள்
கடந்தும்
என்னைச் சுற்றி
மீண்டும் ஒரு
வசந்தம் குட்டியாய் !

அவள்
இன்னும் என்னைப்
பார்க்கவில்லை !

திறந்திருந்த
ஜன்னலில்
வெளியை
வெறித்துக் கொண்டிருந்தாள் !

இப்போதெல்லாம்
அவள்
இசை கேட்பதில்லை
போலும் !

இறுதியாக
நிகழ்ந்த
அந்த கடைசிச்சந்திப்பு
ஆயுளுக்கும்
மறக்காது !

என்னருகே
ஒட்டிநின்ற
அந்த பருவப்பெண்ணை
உரசாமல்
எவ்வளவு முடியுமோ
அவ்வளவு
விலகி நின்றேன் !

ஏதோ
எங்கள்
பழைய காதலுக்கு
நான் செலுத்தும்
என்னால் இயன்ற
மரியாதை !

சுற்றிலுமிருந்த
ஆண்களிடமிருந்து
தன் காதலியை
அடைகாத்துக் கொண்டிருந்தான்
ஒரு காதலன் !

சட்டென்று
அவனுக்காக
என் கண்கள்
ஈரமாயின !

ஒருகாலத்தில்
நானும்
என் காதலியை
அப்படி
அடைகாத்தவன் தான் !

பிரிந்த
காரணங்களைப்
பட்டியல் போட
விருப…
ரயில் சினேகிதி 
சட்டென்று
எனக்குள்
சகலமும்
வெளிச்சமாகி
விடுகின்றன,
எதற்கோ புன்னகைத்தபடி
எதிரே வந்தமர்ந்த
அவளைப் பார்த்ததும் !

கோழிக்குஞ்சை
உள்ளங்கையில்
பொத்திக் கொண்டால்
எப்படியிருக்குமோ
அப்படியிருக்கிறது
என் காதுகளுக்கு
யாருடனோ பேசியபடி
அவள் சிரிப்பது !

வேடிக்கை பார்த்தபடி
பூ விரல்களால்
அவள் கழுத்தை
அவளே
வருடிக் கொள்கிறாள் !
இங்கே எனக்கு
சொக்குகிறது !

எப்படியும்
நிமிர்ந்து என்னைப்
பார்த்து விடுவாள்
என்ற நம்பிக்கையில் தான்
எழுந்து போய்
காசு போடுகிறேன்
அந்த
குருட்டுப் பிச்சைக்காரனுக்கு !

இளஞ்சிவப்பு
நெயில் பாசிஷ்
தடவிய
அவள் பாதங்களைப்
பார்த்துக் கொண்டிருக்கறேன்,
சட்டென்று
கதை பேச
ஆரம்பிக்கின்றன
அந்தப் பாதங்கள்
என்னோடு !

நீர் குடிப்பதற்காக
அந்த வாட்டர் பாட்டிலின்
மூடியை
மென்மையாக
மிக மென்மையாக
அவள் திருகுகிறாள்,
தேவராகம்
கேட்டது போல
இன்பமாக அதிர்கிறது
என் பின்னங்கழுத்து !

பற்ற வைத்த
அணுகுண்டு
எப்போது வெடிக்குமென
பதைப்போடு
பார்ப்பது போலப்
பார்க்கிறேன்
உறக்கத்தில்
இமை மூடிய
அவள் விழிகளை !

அவளை விட
அழகான ஒருத்தி
அங்கே வந்து நின்றாலும்
அந்த அழக…