Skip to main content

 சுஜி வந்திருக்கிறாள் ( சிறுகதை )
சுஜித்ரா, முன்னைக்கு இப்போது கொஞ்சம் பொலிவோடு இருந்தாள். தோலில் மினுமினுப்பு ஏறியிருந்தது. ஆரம்பத்தில் அவள் மாநிறமாய் இருந்தவள் என்பதே மறந்து போய், அவள் இயல்பான நிறமே சிவப்பு தான் என்பது போல இப்போது ஆகிவிட்டிருந்தாள். எல்லாம் கர்ணாவைக் கைபிடித்த பிறகு வந்த தேஜஸ். திக்குத் தெரியாத காட்டில், கரடுமுரடு பாதையில் பயணித்துக் கொண்டிருந்தவளை, சட்டென்று யாரோ கைப்பிடித்து இழுத்து வந்து சொர்க்கத்தில் போட்டது போல இருந்தது. கர்ணாவைத் திருமணம் செய்து கொண்ட போது, சுஜித்ராவுக்கு வயது இருபத்தி ஐந்து. சுஜி, தன் மூக்குக்கண்ணாடியை நன்றாகப் பொருத்திக் கொண்டாள். இப்போதெல்லாம் இது இல்லாமல் நன்றாகக் கண் தெரிவதில்லை. வயது நாற்பதை நெருங்குகிறதல்லவா ! ஆனாலும், அவளைக் கடக்கும் ஆண்கள் ஒருகணம் அவளை உற்றுப் பார்த்துவிட்டே கடப்பதில் அவளுக்கு உள்ளூரப் பெருமிதம் தான். பெருமிதமில்லை என்று உண்மையைப் பூசி மெழுகுவானேன் ? கர்ணாவுக்கு இதுபோன்ற அபத்தங்கள் பிடிப்பதில்லை. அவன் அவளை மிக மிக சுதந்திரமாக வைத்திருக்கிறான்.

சுஜி, கர்ணா, அப்புறம் அவர்களின் அழகான தாம்பத்தியத்திற்குப் பரிசாக அபர்ணா ! அப்படியே கர்ணாவை உரித்துக் கொண்டு ! பிளஸ் ஓன் படிக்கிறாள். சுஜி, பேருந்தில் இருந்து இறங்கினாள். " குப்பிச்சி பாளையம் " என்று மஞ்சள் போர்டில் கருப்பு மையில் எழுதப்பட்ட, சிதிலமடைந்த எழுத்துக்கள் அவளை வரவேற்றன. குப்பிச்சி பாளையம் இன்னும் அப்படியே தானிருக்கிறது. அதோ, அந்த வடக்கே தென்னந்தோப்பை ஒட்டி இருக்கும் அந்த முனியப்பன் கோவில், கிழக்கே, சலசல வென்று ஓடும் வாய்க்கால், அந்த அரச மரம், எதுவுமே எதுவுமே மாறவில்லை, ஒரேயொரு செல்போன் டவர் மட்டும் புதிதாக இருந்தது. அப்புறம் தார் சாலை, தெருவிளக்குகளோடு கூடிய மின் கம்பங்கள்........... ம்ம்ம்ம் அந்த சிறிய கிராமம், முன்னைக்கு இப்போது எவ்வளவோ பொலிவடைந்து இருக்கிறது தன்னைப் போலவே ! சுஜி , ஒரு ஆழமான பெருமூச்சை விட்டாள். மெல்ல நடந்தாள்.

ஒருகாலத்தில் அவள் ஓடியாடிய இடம் ! அவளது அம்மா, அப்பா, அண்ணன், பெரியப்பா, என அனைத்து சொந்தங்களும் அங்குதானிருந்தன. அம்மா அப்பா பெரியப்பா என அனைவரும் காலமாகி விட்டார்கள் என்று ரங்கசாமி  மாமா மூலம் " சேதி " அறிந்து கொண்டதோடு சரி ! சாவுக்கு வரவில்லை. " நாஞ் செத்தாலும் வராத " என்று மண்ணை வாரித் தூற்றியடித்தவள் தானே அவள் தாய் ! ஆனாலும், அவள் சபித்தது போல தன் வாழ்வு ஒன்று அப்படி சீர்கெட்டுப் போய் விடவில்லையே ! சொல்லப்போனால், தான் நன்றாகவே இருக்கிறோமே ! என்று இறுமாப்பாக சுஜி நினைத்துக் கொண்டு வைராக்கியமாக பெத்தவள் சாவுக்குப் போகாமல் இருந்தாலும், அன்றிரவு அவளுக்கு தாயின் நினைவு வந்து விட்டது.  " பொழுது போன நேரத்துல வெளிய சுத்தாதடி  " என்ற அம்மாவெள்ளிக்கிழமையானால் சீகக்காய்  அரைத்து பரக் பரக் என்று தலைக்குத் தேய்த்துக் குளிப்பாட்டி விட்ட அம்மா, கவிச்சி சமைத்த நேரங்களில் எல்லாம் " மாவுக் கறி ன்னா மவளுக்கு அம்புட்டு இஷ்டம் " என்று சொல்லி சொல்லி பரிமாறிய அம்மா, கர்ணாவோடு ஒடிப்போவதை உணர்ந்து, தடாலென்று காலில் விழுந்து " வேணாண்டி மவளே " என்று கதறிய அம்...................... !  விம்மி வெடித்துக் கொண்டு அழுகை வந்தது சுஜிக்கு !

பெத்த மகள் காலில் தான் விழுந்த பிறகும், கர்ணாவோடு ஓடிப்போய் மாலையும் கழுத்துமாக வந்து நின்ற போதுதான் அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.வாரித் தூற்றினாள். அதன் பிறகு கர்ணாவும் அவளும் கோயமுத்தூர் வந்து விட்டார்கள். ஆனால், அப்படித் தூற்றிய பிறகும், தானிட்ட சாபம் தன் மகளுக்குப் பழிக்கக் கூடாதென்று எத்தனை தெய்வங்களிடம் முறையிட்டிருப்பாளோசுஜி பனித்த தன் கண்களை இப்போது நாசுக்காக கைகுட்டையில் ஒத்திக் கொண்டாள். அம்மா போய்ச் சேர்ந்த இரண்டு மாதங்களில் அப்பா படுக்கையில் விழுந்து, கவனிக்க ஆளின்றி , முதுகெல்லாம் புண் வந்து, சீழ் பிடித்து .............அப்புறம் இந்த அண்ணன், குடித்துக் குடித்தே வயிறு வெந்து அவனும் செத்துப் போனான், அவனைப் போலவே ............அவன்அவன் ? அவர் ? ..............சுஜிக்கு படபடவென்று வந்தது. கைகால்கள் மெலிதாக நடுங்க ஆரம்பித்தன.

அந்த ' அவன் ' அல்லது ' அவர்சுஜியின் முதல் கணவன் வேல்முருகன் ! வெயிட் ................பிடிக்காதவர்கள் இப்போதே விலகிக் கொள்ளலாம். வேல்முருகன் சுஜியின் தாய்மாமன். அவளுக்கும் அவனுக்கும் பத்து வயது வித்தியாசம் ! சுஜி பிறந்ததில் இருந்தே அவள் அவனுக்குத்தான் என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டுயாருமே எதிர்பார்க்காமல் சுஜி பத்தாம் வகுப்புத் தேர்வில் மாவட்டத்திலேயே முதலாவதாக வந்து, கலெக்டர் கையில் அவள் பரிசு வாங்கி, " மேலே படி " என்று ஆசிரியர்களால் அறிவுறுத்தப் பட்டு, பிளஸ் டூ விலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து கல்லூரி போவேன் என்று சொன்ன போது தான் வீடு " விழித்துக் " கொண்டது !  " அடியே, நீ படிச்சுக் கிழிச்சது போதும் .......... வீட்டோட அடுப்பங்கரையில சமையல் கத்துக்க....... இன்னும் ஒரு பூண்டு தட்டிப் போட்டு ரசம் வைக்கத் தெரியாது. எந்தம்பி வாய்க்கு வக்கணையா மூணு வேளையும் திங்கறவன் ........ நாளைக்கு அவன் மனசு கோணாம நடந்துக்கணும் " என்று அம்மா சொன்ன போது, சுஜிக்கு தன் தாய்மாமன் வேல்முருகன் மீது காரணமேயில்லாமல் கோபம் வந்தது.

 வேல்முருகன் அப்போது அந்த ஊர்  பஞ்சாயத்துத் தலைவர் வீட்டில் கொஞ்சம் அடியாள் போல வேலை செய்து கொண்டிருந்தான். அவன்,  " சுசி.........." என்று சுஜியின் கிட்டே வரும்போதெல்லாம் குப் என்ற சாராய நாற்றம். " மாமா, எத்தன வாட்டி சொல்லிட்டேன் என்ன அப்படிக் கூப்டாதிங்கன்னு ....." என்று அவள் எரிந்து விழுவது பற்றிய சொரணையே இல்லாமல், " இந்தாம்மா வாங்கிக்க " என்று வாழை இலையில் மடித்துக் கட்டிய மீன் வறுவலை நீட்டுவான். இவளுக்கு குமட்டிக் கொண்டு வரும். உள் அறைக்குப் போய் கதவை அறைந்து சாத்தி விடுவாள். இவனும் விடாப்பிடியாக நடுவீட்டில் சம்மணம் போட்டு அமர்ந்து அவள் அம்மா போடும் வெள்ளாட்டுக்கறி சோறை அள்ளி அள்ளி விழுங்கி விட்டு பெரிதாய் ஏப்பம் விட்டுப் போவான். அவனோடு கல்யாணமா ? சுஜிக்கு கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது !

ஆனாலும், திருமணம் நடந்து விட்டது. அம்மா, " அரளிக்கொட்டைய அரைச்சுக் குடுச்சுப் பிடுவேண்டி " என்றிருந்தாள். அப்பா " நாண்டுகிட்டு தொங்கிப் போடுவேன் கண்ணு " என்றிருந்தார். அண்ணா, " ஒரே வெட்டா வெட்டிட்டு ஜெயிலுக்குப் போயிருவேன் " என்றிருந்தான். சுஜி இறுகிய மனதோடு, அவர்களோடு பேசிப் பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்து மௌனமாக இருந்தாள். அந்த மௌனத்தை அவர்கள் சம்மதமாக எடுத்துக் கொண்டு காரியங்கள்  நடந்து ...............

 கடைசியில் சுஜி எனும் சுஜித்ரா பால் சொம்போடு முதலிரவு அறைக்குள் நுழைக்கப் பட்டாள். இங்கு கூட நான் வலுக்கட்டாயமாக நுழைக்கப் படுகிறேன். கற்பழிப்புக்கும் இதற்கும் என்ன பெரிய வேறுபாடு ? சொல்லப் போனால் அதுவே மேல். அதாவது ஒருமுறை நிகழ்ந்து முடித்து விடும். இது தினம் தினம் தொடர அல்லவா செய்யும் ! கடவுளே ! சுஜிக்கு மிகவும் களைப்பாக இருந்தது. வேல்முருகன் அன்று குடிக்க வில்லை. பொம்மை மாதிரி நின்று கொண்டிருந்த சுஜியைத் தொட்டு அவன் கட்டிலில் அமர்த்தினான். சுஜிக்கு களைப்பாக இருந்தது. அவள் அவனை ஒரு அயர்ச்சியோடு பார்த்தாள். " என்ன புள்ள ....... தூக்கம் வருதா ........ தா .....செத்த நேரம் தான் " என்றபடி அவளை அணைத்துக் கொண்டான். அதன் பிறகு சுஜி வெறும் உடலாக  மாறிப் போனாள். வெறும் உடல் ! தான் என்ற சுயம் அழிந்துபுலன் இன்பங்களின் புதுமையைத் தேடும் வெறும் உடல்! வேல்முருகன் சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டான்.

அடுத்த நாள் முதல் வேல்முருகன் குடித்து விட்டு வர ஆரம்பித்தான். சுஜிக்கு தாம்பத்தியமே கசந்து விட்டது. உடம்பும் மனதும் மரத்துப் போய் வாழக் கற்றுக் கொண்டாள். அவள் வயிற்றில் " புழுப் பூச்சி " உண்டானது. குமரேசன் பிறந்தான். வெயிட் .............பிடிக்காதவர்கள் விலகிக் கொள்ளலாம் ! குமரேசன், அப்படியே வேல்முருகனை உரித்துக் கொண்டு பிறந்திருந்தான். அம்மா முனியப்பனுக்கு பொங்க வைத்து கெடா வெட்டினாள். வேல்முருகன் அனைவருக்கும் கற்கண்டு விநியோகித்தான். தன் சந்தோஷங்களை எல்லாம் மொத்தமாகக் காவு வாங்கி விட்டுதன் சுற்றத்தார் மட்டும் கொண்டாடுவது சுஜிக்குள் வன்ம உணர்ச்சியைத் தூண்டியது. குழந்தை வேல்முருகனைப் போல இருப்பதாகச் சொன்னதுமே சுஜிக்கு ஏனோ குழந்தையைப் பிடிக்காமல் போய் விட்டது. இதுவும் அவன் ரத்தம் தான் ! இதுவும் அவன் எச்சம் தான் !

குழந்தையை சுஜி சீண்டுவதே இல்லை என்று தெரிந்த அவள் தாய், குழந்தை பராமரிப்பை தான் ஏற்றுக் கொண்டு விட்டாள். குழந்தை பெரும்பாலும் " அவர்கள் " வீட்டிலேயே இருந்தான். தாய்ப்பால் கூட சரியாக இல்லை. சுஜி ஒரு இயந்திரம் போல நடமாடிக் கொண்டு இருந்தாள். இந்த சமயத்தில் தான் கர்ணா ஒரு புயல் போல வந்து சேர்ந்தான். கர்ணா, ஒரு இளங்கலை வரலாற்று மாணவன். இறுதியாண்டில் இருந்தான். துருதுரு இளைஞன். அந்த கிராமத்தில் இருந்த கோவில் கல்வெட்டுக்களைப் பற்றி ஆராய அங்கிருந்த தன் பெரியம்மா வீட்டில் வந்து தங்கியிருந்தான். சுஜிக்குப் பக்கத்து வீடு ! சுஜியைப் பார்த்து சுலபமாகப் புன்னகைத்தான். அந்தப் புன்னகை அவளுக்கு இதமாக இருந்தது. அவனைப் பார்த்தாலே ஆசுவாசமாக இருந்தது. சுஜியும் பதிலுக்கு சிரிக்க ஆரமபித்து இருவரும் பேச ஆரம்பித்தார்கள்.

வேல்முருகன் பகல் நேரங்களில் பெரும்பாலும் வீட்டிலேயே இருப்பதில்லை. அந்த சமயத்தில் வயலில் " அறுப்பு " வேலை இருந்ததால் கர்ணாவின் பெரியப்பாவும் பெரியாம்மாவும் வயல் வேலையை கவனிக்கப் போய்விடுவார்கள். அவர்களுக்கு ஏக்கரா கணக்கில் புஞ்சையும், நஞ்சையும் இருந்தன. சந்தர்ப்பம் சரியாக அமைந்து சுஜியையும், கர்ணாவையும் தனியாக பழக அனுமதித்தன. ரொம்ப வருடங்கள் கழித்து சுஜி மனம் விட்டு சிரிக்க ஆரம்பித்தாள். அப்போதுதான் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் சுஜிக்கு கர்ணாவால் ஏற்படுத்தப்பட்டது. எவ்வளவு எழுத்தாளர்கள் ! ஜெயகாந்தன், அசோகமித்திரன், பிரபஞ்சன், ராஜநாராயணன், மௌனி, அப்புறம் இந்த சுஜாதா ! சுஜிக்கு ஒரு புதிய உலகம் அறிமுகமானது. அவளது மனம் என்னும் பறவை அங்கு சுதந்திரமாக சிறகடித்துப் பிறந்தது. அனைத்துக்கும் வடிகாலாக புத்தகங்கள் அமைந்தன. கர்ணா அமைந்தான். கர்ணாயு  ஆர் கிரேட் !

கர்ணா " அடுத்த செமஸ்டருக்கு வர்றேன் " என்று சொல்லி விட்டுக் கிளம்பிய அன்று சுஜி காரணமே இல்லாமல் அன்றிரவு அழுதாள். ஆனால்,அவன் வரும் வரை படிக்க அவன் ஏராளமான புத்தகங்களை கொடுத்துப் போயிருந்தான். இரவுகளில் எல்லாம் சுஜி அந்தப் புத்தகங்களைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டே தூங்குவாள். வேல்முருகனைக் கிட்டே நெருங்கவே விடுவதில்லை. அவன் இன்னும் அதிகமாகக் குடிக்க ஆரம்பித்தான். குழந்தை அம்மா வீட்டிலேயே இருந்தது. அடுத்த முறை கர்ணாவைப் பார்க்கும் போது இருவருமே மிக மிக மகிழ்ந்தார்கள். ஓடிப் போய் அவனை அப்படியே கட்டிக் கொள்ள வேண்டும் போலிருந்தது சுஜிக்கு. அந்த எண்ணம் தவறு என்றே அவளுக்குத் தோன்றவில்லை. அவளைப் பொருந்தவரைநடந்து முடிந்த திருமணமும், பிள்ளைப்பேறும் ஒரு விபத்து.

சுஜி, தனிமையான பல சந்தர்ப்பங்களில் கர்ணாவையும், வேல்முருகனையும் ஒப்பிட ஆரம்பித்தாள். கர்ணாவோடு இருக்கும்போது நேரம் போவதே தெரிவதில்லை. உரிமையாக அவனோடு பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது. அவன் அருகில் இருந்தாலே சூழல் வெளிச்சம் பெற்று விடுகிறது. திருமணமாகிக் குழந்தையும் பெற்ற அவள் இம்மாதிரி யோசிப்பதில் ஆரம்பத்தில் சிறிது தயக்கம் கண்டாலும், நாளாக நாளாக அது இயல்பான ஒரு விஷயம் போல அவள் மனதை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. கர்ணா, மீண்டும் ஒரு விடுமுறையில் அந்த ஊருக்கு வந்த பொது, சுஜி அவனிடம் வெளிப்படையாகவே கேட்டு விட்டாள். " என்னால இங்க இருக்க முடியல. பேசாம என்னை உங்களோடவே கூட்டிட்டுப் போயிடுங்களேன் கர்ணா "  கர்ணா, அதைக் கேட்டு அமைதியாக சொன்னான், " உங்கள இங்கிருந்து என்னோட மனைவியா கூட்டிட்டுப் போக நான் விரும்பறேன். நீங்க என்ன சொல்றீங்க ? " என்றான். அதைக் கேட்டு சுஜி அதிரவில்லை. " அப்படி நீங்க கூட்டிட்டுப் போனா அது என் பாக்கியம் " என்றாள்.

அதன் பிறகு எல்லாமே திட்டமிட்டு நடந்தன. சுஜி, பக்கத்து டவுனில் வேலைக்குப் போக ஆரம்பித்தாள். ஒரு தட்டச்சு நிறுவனத்தில் மாதம் அவளுக்குத் தேவையான வருமானம் வந்தது. வேல்முருகன் குடித்து விட்டு அடிக்கிறான் என்று சொல்லி அந்த டவுனிலேயே வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்துத் தங்க ஆரம்பித்தாள். வேல்முருகன் இரண்டு நாட்கள் குடித்து விட்டு வந்து வண்டை வண்டையாக வைதான். அங்கிருந்த மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததும் அவன் பொட்டிப் பாம்பாக அடங்கி அடுத்த நாளில் இருந்து வரவில்லை. அம்மா, குழந்தையோடு வந்து ஒப்பாரி வைத்தாள். குழந்தை திரு திருவென்று விழித்தது. அதற்கு அதன் அம்மாவை அடையாளம் கண்டு கொள்ளத் தெரியவில்லை. சுஜி வேண்டுமென்றே அந்தக் குழந்தையைத் தொடாமல் இருந்தாள். அது அப்படியே வேல்முருகனின் அச்சு அசல் பிரதியாக இருந்ததால் ஒருவேளை அதன் மீது அவளுக்கு இயல்பாகவே ஒரு வெறுப்பு இருந்திருக்கலாம். அம்மா, கடைசியாக " ஆனாலும் உனக்கு இவ்வளவு வைராக்கியம் ஆகாதுடி " என்று மூக்கை சிந்திவிட்டுப் போகும் போது, குழந்தை ஒருமுறை சுஜியைப் பார்த்து அழகாக " ம்மா " என்று புன்னகைத்தது. குபுக் என்று சுஜியின் கண்ணில் நீர் துளிர்க்க, அதை அப்படியே வாரி எடுத்துத் தன் மார்போடு அணைத்துக் கொள்ள  வேண்டும் என்ற வேட்கையை சுஜி சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டாள். அம்மா குழந்தையை எடுத்துக் கொண்டு போய் விட்டாள்.


சுஜி , சுயமாக வாழ ஆரம்பித்தாள்.  கர்ணா அடிக்கடி அவளை வந்து பார்த்தான். வேல்முருகனுக்கு  விவாகரத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவன் மிதமிஞ்சிய போதையில் அதை அலட்சியப் படுத்தினான். ஒரு வருடம்  போனதே தெரியவில்லை. கோர்ட் இருவருக்கும் விவாகரத்து கொடுத்தது. கோர்ட் வாசலிலேயே சுஜி தன் தாலியைக் கழட்டி வேல்முருகன்  முகத்தில் அடித்தாள். குழந்தை தன் ரத்தம், தன்னிடம் தான் இருக்க வேண்டும் என வேல்முருகன் முரண்டு பிடித்தான். சுஜி எளிதாக சம்மதித்து விட்டாள். குழந்தை எதற்கோ வீறிட்டு அழுதது. சுஜிக்கு மனசைப் பிசைவது போல இருந்தது. வயிற்றில் சுமந்த பத்து மாத பந்தம் அவ்வளவுதான் எனும் போது சுஜிக்கு பொசுக்கென்று எதையோ இழந்தது போல இருந்தது. கர்ணாதான் அன்றிரவு சுஜியைத் தேற்றினான். " இங்க பாரு சுஜி, நம்ம சமூகத்துல தேவையில்லாம தாய்மை அது இதுன்னு சொல்லி ஓவரா புனிதப்படுதிட்டாங்க. இது ஒருவகையில பெண்ணை அடிமைப்படுத்த அவர்கள் எடுத்த ஆயுதம். ரெண்டு நாள்ல எல்லாம் மறந்துரும் பாரு..... " என்றபடியே சுஜியை அணைத்துக் கொண்டான். இதமாக இருந்தது. 

மெல்ல மெல்ல அவன் கைகள் அத்துமீற ஆரம்பித்ததை சுஜி தடுக்கவில்லை. அவன் அணு அணுவாக அவளைக் கொண்டாடினான். பெண்ணாகப் பிறந்ததன் பயனை சுஜி உடல்ரீதியாக அன்றுதான் முழுமையாக அனுபவித்தாள். அடுத்த நாளே, இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள். சுஜி மாலையும் கழுத்துமாக அந்த ஊரில் காலடி எடுத்து வைத்தாள். ஒரு புரட்சிப் பெண்ணாகத்   தன்னை நினைத்துக் கொண்டாள். அப்போதுதான் அம்மா வாரித் தூற்றினாள். அந்தக் கோலத்தில் அங்கு போயிருக்க வேண்டாம் தான். ஆனால், ஒருவிதத்தில் அப்படிப் போனால் தான் எல்லாரையும் பழி வாங்கியதாக இருக்கும் என்று அவள் நினைத்திருந்தாள். குழந்தை சுஜியை நோக்கி ஆசை ஆசையாகத் தவழ்ந்து வந்தது. கர்ணா, அதற்கு மேல் அங்கிருக்காமல் சுஜியை இழுத்துக் கொண்டு போய் விட்டான். அதன் பிறகு சுஜியின் வாழ்க்கைமுறை அடியோடு மாறி விட்டது. கர்ணாவுடனான தாம்பத்தியம் திகட்டத் திகட்டத் தித்தித்தது. அவன் என்னவோ பரீட்சை எழுதி அரசு அதிகாரியானான். சுஜி மீண்டும் கர்ப்பமானாள். பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள். மேற்கொண்டு  படித்தாள். அவளும் பரீட்சை எழுதி அரசாங்கத்தில் ஆசிரயர் பணி கிடைத்தது.


இவ்வளவு வருடங்கள் கழித்து சுஜிக்கு அவள் பிறந்த ஊரிலேயே " டூட்டி " போட்டிருந்தார்கள். எதோ அரசுத் தேர்வில் " கண்காணிப்பாளராக " அவள் அந்த ஊர் பள்ளிக்கூடத்திற்கு வர வேண்டிய நிர்பந்தம். நினைத்தால் மறுத்திருக்கலாம். ஆனாலும், பிறந்த ஊர் எப்படித்தான் இருக்கிறது என்று பார்க்க உள்ளூர ஒரு ஆசை. வேல்முருகன் தான் இறந்து விட்டானே !. எதிரே, ரங்கசாமி மாமாவின் மகள் அம்சவல்லி இவளைக் கடந்த போது தயங்கி நின்று மீண்டும் உற்றுப் பார்த்து " சுஜி ......." என்று ஓடிவந்து இவள் கையைப் பற்றிக் கொண்டாள். ஊரார் சிலர் சூழ்ந்து சுஜியை நலம் விசாரித்தார்கள். அண்ணன் மகள், திவ்யா " அத்தை " என்று ஓடிவந்து கட்டிக் கொண்டாள். பதினைந்து வயதில் நன்றாக வளர்ந்து விட்டிருந்தாள். இவ்வளவு வருடங்கள் கழித்தும் அனைவரும் தன்னை ஞாபகம் வைத்திருந்தது சுஜிக்கு சற்று பெருமிதமாக இருந்தது. ஆனால் ........

சுஜி, முதலில் யாருடைய வீட்டுக்கும் போகக்கூடாது என்றுதான் நினைத்திருந்தாள். ஆனால்,அவள் எதிர்பார்த்த எதிர்ப்பு அவளுக்கு அங்கு இல்லை. அவளை அடையாளம் கண்டு கொண்டவர்கள் எல்லாம் வாஞ்சையோடு விசாரிக்கவே செய்தார்கள். மதினி கூட அவளை வீட்டுக்கு அழைத்து காபி கொடுத்தாள். சுஜிக்கு கொஞ்சம் மனது நிறைவாக இருந்தது. ஆனால் ..............தேர்வுக் கூடத்தில் கண்காணிப்பு செய்யும் போதுகூட அவள் கண்கள் யாரையோ தேடின.

குமரேசன் சாராயக்கடையில் இருந்தான். வயது பதினாறுதான். சாராயம் அவனுக்குத் தேவையாக இருந்தது. அதன் போதை அவனுக்கு அதுவரை கிடைக்காத எதையோ ஈடு செய்வதைப் போல இருந்தது. அவன், ரைஸ் மில்லில் வேலை செய்கிறான். படிப்பு கிடையாது. அவன் தகப்பன் வேல்முருகன் குடித்துக் குடித்தே செத்தான். குமரேசன் வேல்முருகன் போலவே அச்சு அசலாக இருந்தான். யாரோ அவனை நோக்கி ஓடிவருவது போல இருந்தது. குமரேசன் கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தான். அது அவன் சிநேகிதன் பழனிசாமி ! "  டே ! குமரேசா, உங்கம்மா வந்திருக்காங்கடா .........உங்கத்த வூட்டுக்கு வந்தாங்க டா ............ கண்ணாடி எல்லாம் போட்டுட்டு டீச்சராட்டம் ............"  பழனிசாமி முடிக்கவில்லை. குமரேசனுக்கு போதை மொத்தமும் இறங்கியது போல இருந்தது. " என்னடா சொல்ற ..."  கேட்கும் போதே அவன் கண்ணில் நீர் வழிந்தது. " அம்மா " என்று தன்னிச்சையாக சொல்லிக் கொண்டான். சிறு வயதிலேயே தன்னை விட்டுப் போன அந்த அம்மாவின்மீது அவனுக்கு ஏனோ கோபமே வரவில்லை. அவளுடைய பழைய போட்டோ ஒன்று எப்போதும் அவன் பாக்கெட்டில் இருக்கும்.

குமரேசன் தள்ளாடி எழுந்தான். அம்மாவைப் பார்த்து விட வேண்டும். என்னைத் தேடிக் கொண்டு தான் வந்திருக்கிறாள். ஐயோ ! அவள் வரும் சமயம் பார்த்து தான் இப்படி சாராயம் குடித்துக் கொண்டு ............ குமரேசன் மடேர் மடேர் என்று தலையில் அடித்துக் கொண்டான். எழுந்து தன் ஆடைகளில் இருந்த அழுக்கைத் தட்டி விட்டுக் கொண்டான். கையாலேயே தலையை வாரிக் கொண்டான். முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டான். அம்மாவைப் பார்க்க ஓடினான்.

சுஜி, யாவரிடமும் இனிதே விடைபெற்றுக் கொண்டாள். மதினி ஏதாவது சொல்லுவாள் என்று எதிர்பார்த்தாள். மதினி இவள் ஏதாவது கேட்பாள் என்று எதிர்பார்த்தாள். இந்த வயதிலேயே அப்பன் காரனைப் போலவே குடிகாரனாக மாறிவிட்ட குமரேசனைப் பற்றி சுஜியிடம் சொல்லாமல் இருப்பதே நல்லது என்று அவள் நினைத்திருந்தாள். சுஜிக்கும் அவர்களாக ஏதும் சொல்லாதவரை எதையும் கேட்காமல் இருப்பதே நல்லது எனப்பட்டது. ஆனாலும் நெஞ்சைப் பிசைவது போல இருந்தது. அவள் கிளம்பி விடடாள். யாராவது உடன் வந்து வழியனுப்புவார்கள் என்று பார்த்தாள். யாரும் வரவில்லை. வந்து, வழியில் குடிகார குமரேசனைப் பார்க்க நேர்ந்து " இது தான் உன் மகன் " என்று அறிமுகப்படுத்த வேண்டிய சங்கடத்தில் மாட்டிக் கொள்ள யாரும் தயாராக இல்லை. சுஜி சாலையில் நடக்க ஆரம்பித்தாள். சாலை வெறிச்சோ என்று இருந்தது அவள் மனது போலவே.  பொதுவாக அந்த ஊர் சாலைகளில் ஆள் நடமாட்டம் என்பது அரிதுதான். அவள் அங்கிருந்த  பேருந்து நிறுத்தத்தில் போய் நின்று கொண்டாள். காத்திருந்தாள்.

குமரேசன், தன் அத்தையின் வீட்டுக்கு ஓடோடி வந்தான். அம்மாவைக் காணவில்லை. அவள் என்னைப் பார்க்க வரவில்லையா ? அப்பாவை வெறுத்தது போல என்னையும் வெறுத்து விட்டாளா ? இந்த அப்பன் மூஞ்சி எனக்கெதற்கு வந்து தொலைத்தது. அவனுக்கு அடக்க மாட்டாத அழுகை வந்தது. " அத்த, அம்மா எங்கத்தே " என்று அவன் தேம்பி தேம்பி அழுது கொண்டே கேட்டதைப்பார்த்து அத்தை பதறிப் போய், " ஐயோ , உன்னைப் பத்தி ஒருவார்த்தை உங்கம்மா கிட்ட சொல்லாத பாவி ஆகிட்டனே ......... போடா சீக்கிரமா போ ......... உங்கம்மா பஸ் ஸ்டாப்புக்கு போய்ட்டாங்க ....." என்றாள். குமரேசன் ஓடினான்.

சுஜி பேருந்திற்குக் காத்திருந்தாள். அவள் மனதுக்கு எதுவோ தப்பாகப் பட்டது. கர்ணாவை அலைபேசியில் கூப்பிட்டு " என்னங்க ....எல்லாரையும் பார்த்தேங்க .....நல்ல ரெஸ்பான்ஸ் ...ஆனா ......"  என்றாள். கர்ணாவிற்குப் புரிந்தது. " விடு சுஜி, உன் பழைய வாழ்க்கையின் எந்த அடையாளமும் உனக்கு வேண்டாம். சில விஷயங்களை நீ பார்க்காம, ஏன் அதைப் பத்தி யோசிக்காம கூட இருக்கறது தான் உனக்கு நல்லது. " என்றான். சுஜிக்கு ஓரளவு தெளிவாக இருப்பது போல இருந்தது. அப்போதுதான் அவள் அவனைப் பார்த்தாள். பாவம் வெகுதூரம் ஓடி வந்திருப்பான்போல. மூச்சு வாங்கியது. அவனைப் பார்த்தால் இளம்வயது வேல்முருகனைப் போலவே இருந்தது.

குமரேசன் அம்மாவைப் பார்த்து விட்டான். அம்மாவா இது ! இந்த வயதிலும் அழகாக நாகரிகமாக, எவ்வளவு நேர்த்தியாக இருக்கிறாள் ஏன் அம்மா ! அவளை நெருங்கி " நான் தான் உன் மகன் " என்று சொல்ல அவனுக்கே கேவலமாக இருந்தது. கிட்டே போனால் சாராய நாற்றம் அடிக்கும். வேண்டாம்... நான் தூர நின்றே அம்மாவைப் பார்த்துக் கொள்கிறேன். அது போதும். குமரேசன் அப்படியே மரத்தடியில் குந்தி அமர்ந்து தன் உடம்பைக் குறுக்கிக் கொண்டான். அம்மா, அவனைப் பார்த்து விடடாள். அது போதும். இவனுக்கு கண்ணில் நீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.

தாயின் கருவறையில் இருக்கும் குழந்தை போல தன் உடம்பைக் குறுக்கி, அமர்ந்து கொண்டு தன்னைப் பார்க்காமல் தேம்பி தேம்பி அழும் அவனையே சுஜி பார்த்தாள். அவள் உள்ளுணர்வு சொல்லிவிட்டது. அவன் ஏன் அருகே வரமாட்டேன் என்கிறான் ? என்னைப் பார்க்க மாட்டேன் என்கிறான் ? ஐயோ எப்படி தேம்பித் தேம்பி அழுகிறான் ! சுஜி தன் மார்பைப் பிடித்துக் கொண்டாள். அவன், அவன்தான். சந்தேகமேயில்லை. நான் ஏன் இப்படி மரம் மாதிரி நிற்கிறேன் ? என் கைகாலெல்லாம் ஏன் இப்படி நடுங்குகிறது ? " தாய்மை என்பது கற்பிக்கப் பட்ட போலியான புனிதம் " என்ற கர்ணாவின் வார்த்தைகள் எவ்வளவு அர்த்தமற்றுப் போய்க் கொண்டிருக்கின்றனதன்னிச்சையாக சுஜியின் கண்ணில் நீர் வழிந்தது.

குமரேசனுக்கு நிறைவாக இருந்தது. போதும் ! அம்மாவைப் பார்த்தாயிற்று. அவன் எழுந்தான். கண்ணைத் துடைத்துக் கொண்டு சாலையைக் கடந்த போது, பேய்த்தனமாக தன்னை நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்ததை அவன் கவனிக்க வில்லை. கண்ணிமைக்கும் நேரம், குமரேசன் தூக்கி எறியப்பட்டான். லாரி நிற்காமல் தலை தெறிக்க ஓடியது. சுஜிக்கு முதலில் அந்தக் காட்சி மண்டைக்குள் பதியவில்லை.             " ஐயோ " என்று அடிவயிற்றில் இருந்து அவளை அறியாமலேயே ஒரு அலறல் புறப்பட்டு வந்தது. சாலைக்கு ஓடினாள். அங்கே இரத்த வெள்ளத்தில் குமரேசன் இழுத்துக் கொண்டு கிடந்தான். அவன் உதடுகள் " அம்மா அம்மா " என்று ஓயாமல் முணுமுணுத்தன. சுஜி சுற்றும் முற்றும் பார்த்தாள் " யாராவது வாங்களேன் " என்று கத்தினாள். சீக்கிரம் கொண்டு போனால் ஒருவேளை பிழைக்க வாய்ப்பிருக்கிறது. யாரும் வருவதாக இல்லை. திடீரென்று சுஜிக்கு எங்கிருந்து அவ்வளவு பலம் வந்தது எனத் தெரியவில்லை. அவள் குமரேசனைத் தூக்கிக் கொண்டு வெறிபிடித்தவள் போல ஓட ஆரம்பித்தாள். தூரத்தில் ஒரு பேருந்தின் ஒலி கேட்டது.
 Comments

  1. கதையை படிக்கும் போதே அடுத்து நகர்ந்து செல்வது சுலபமாகிவிட்டது ......நடப்புகளின் எதார்த்தம் போலிகள் தொலைத்த அசலை பாத்திரங்கள் வழியாக புகுத்துவதில் தேர்ந்த ஒரு கலைஞனின் கைங்கர்யம் தெரிந்தது ஆழ்ந்த கருத்துமிக்க ஒரு படைப்பு நாகரிகம் மாறினாலும் அம்மா ஒரு போதும் வேறு ஒரு உறவாகிவிட முடிவதில்லை தாய்மை என்னும் பரிணாமம் கடவுளின் உருவம் சூழல் அதை மாற்ற முயன்றாலும் அது முகமூடி அணிந்தது போலதான் உள்ளுக்குள் சுயம் அழிவதில்லை ...........

    கதையின் போக்கு சுவாரசியத்தை தருகிறது இன்னும் நிறைய எழுதுங்கள் உங்கள் திறமைகளை உலகம் அறியட்டும் பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. மிக மிக நன்றி தோழி ! நீண்ட கதையைப் பொறுமையாகப் படித்து பின்னூட்டமும் இட்டதற்கு ஸ்பெஷல் ஸ்பெஷல் நன்றிகள் ! இந்தக் கதையை எழுதி ஒரு பின்னூட்டமும் வராதது கண்டு, ஒன்றுமே எழுதத் தோன்றவில்லை. மண்டை முழுக்க வெறுமையாகக் கிடந்தது. ஒரு எழுத்தாளனை உருவாக்குவது வாசகர்களும் அவர்களது விமர்சனமும் என்பது இந்த விஷயத்தில் நிதர்சனமாகிப் போனது தோழி !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

திருமணம் 2013 


' சொல்லியனுப்புகிறோம் '
என்ற சொல்லை
காலம் என்ற
விலை கொடுத்து
பெண் வீட்டார்
வாங்கி விட்டனர் !
--------------------------------------------

இன்ஜினியர் பெண்ணும்
இன்ஜினியர் ஆணும்
தம்பதியாவது
காலத்தின் கட்டாயம் !
டாக்டருக்கும் இது
டிட்டோ !
--------------------------------------------

திருமணம்
கல்லூரியில்
நிச்சயிக்கப்படுகிறது !
--------------------------------------------

மாப்பிள்ளையின்
சம்பளமும்
மறைமுக
வரதட்சணைதான் !
கொண்டுவாருங்கள்
இதற்கொரு
இ. பி. கோ !
--------------------------------------------

குவித்துத்தான்
வைக்கிறார்கள்
ஆண் ஜாதகத்தை !
பொறுக்கித்தான்
எடுக்கிறார்கள்
பெண் ஜாதகத்தை !
--------------------------------------------

ஒவொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு !
ஆணினமே
அனுபவி !
--------------------------------------------

காலஸ்த்ரி,
திருநாகேஸ்வரம்,
திருவிடந்தை,
திருமணஞ்சேரி .......................
அடுத்து என்ன
ஜோசியரே ?
--------------------------------------------

தந்தை மகற்காற்றும் உதவி திருமணத்திற்கு
சாதி பார்க்காச் செயல் !
------------------…
பிரிந்த காதலி

அவளை
அந்தப் பேருந்தில்
பார்ப்பேனென்று
நான் நினைக்கவில்லை !

அவள்
அப்படியே தானிருந்தாள் !

காதோரத்தில்
அதே
சுருண்ட முடி !

தலைகுளித்த
அதே
ஒற்றைப் பின்னல் !

சூடப்பட்ட
அதே
ஒற்றை ரோஜா !

அந்த
பச்சை நிற
சுடிதாரை
எனக்குப்
பரிச்சையமிருக்கிறது !

மெட்டியில்லா
அவள்
பாதங்களைக் கண்டு
நான் ஏன்
ஆறுதல் அடைகிறேன் ?

மனதுக்குள்
மீண்டும்
மழை பெய்ய
ஆரம்பித்தது !

வருஷங்கள்
கடந்தும்
என்னைச் சுற்றி
மீண்டும் ஒரு
வசந்தம் குட்டியாய் !

அவள்
இன்னும் என்னைப்
பார்க்கவில்லை !

திறந்திருந்த
ஜன்னலில்
வெளியை
வெறித்துக் கொண்டிருந்தாள் !

இப்போதெல்லாம்
அவள்
இசை கேட்பதில்லை
போலும் !

இறுதியாக
நிகழ்ந்த
அந்த கடைசிச்சந்திப்பு
ஆயுளுக்கும்
மறக்காது !

என்னருகே
ஒட்டிநின்ற
அந்த பருவப்பெண்ணை
உரசாமல்
எவ்வளவு முடியுமோ
அவ்வளவு
விலகி நின்றேன் !

ஏதோ
எங்கள்
பழைய காதலுக்கு
நான் செலுத்தும்
என்னால் இயன்ற
மரியாதை !

சுற்றிலுமிருந்த
ஆண்களிடமிருந்து
தன் காதலியை
அடைகாத்துக் கொண்டிருந்தான்
ஒரு காதலன் !

சட்டென்று
அவனுக்காக
என் கண்கள்
ஈரமாயின !

ஒருகாலத்தில்
நானும்
என் காதலியை
அப்படி
அடைகாத்தவன் தான் !

பிரிந்த
காரணங்களைப்
பட்டியல் போட
விருப…
ரயில் சினேகிதி 
சட்டென்று
எனக்குள்
சகலமும்
வெளிச்சமாகி
விடுகின்றன,
எதற்கோ புன்னகைத்தபடி
எதிரே வந்தமர்ந்த
அவளைப் பார்த்ததும் !

கோழிக்குஞ்சை
உள்ளங்கையில்
பொத்திக் கொண்டால்
எப்படியிருக்குமோ
அப்படியிருக்கிறது
என் காதுகளுக்கு
யாருடனோ பேசியபடி
அவள் சிரிப்பது !

வேடிக்கை பார்த்தபடி
பூ விரல்களால்
அவள் கழுத்தை
அவளே
வருடிக் கொள்கிறாள் !
இங்கே எனக்கு
சொக்குகிறது !

எப்படியும்
நிமிர்ந்து என்னைப்
பார்த்து விடுவாள்
என்ற நம்பிக்கையில் தான்
எழுந்து போய்
காசு போடுகிறேன்
அந்த
குருட்டுப் பிச்சைக்காரனுக்கு !

இளஞ்சிவப்பு
நெயில் பாசிஷ்
தடவிய
அவள் பாதங்களைப்
பார்த்துக் கொண்டிருக்கறேன்,
சட்டென்று
கதை பேச
ஆரம்பிக்கின்றன
அந்தப் பாதங்கள்
என்னோடு !

நீர் குடிப்பதற்காக
அந்த வாட்டர் பாட்டிலின்
மூடியை
மென்மையாக
மிக மென்மையாக
அவள் திருகுகிறாள்,
தேவராகம்
கேட்டது போல
இன்பமாக அதிர்கிறது
என் பின்னங்கழுத்து !

பற்ற வைத்த
அணுகுண்டு
எப்போது வெடிக்குமென
பதைப்போடு
பார்ப்பது போலப்
பார்க்கிறேன்
உறக்கத்தில்
இமை மூடிய
அவள் விழிகளை !

அவளை விட
அழகான ஒருத்தி
அங்கே வந்து நின்றாலும்
அந்த அழக…