Friday, November 23, 2012

 குறிப்பு : இந்தக் கவிதை இந்தக் கால இளைஞர்களுக்கானது அல்லகல்லூரித்தோழி 
திருமணம் அறிவித்த
நண்பனிடம்
எதேச்சையாகத்தான்
அந்த
அலைபேசி எண்
கிடைத்தது !

திருமணம்
ஆகிவிட்டதாம்
அவளுக்கு !

அழைக்கக் கூட
இல்லை !

அவளைச் சொல்லியும்
குற்றமில்லை !

அலைபேசி
அவ்வளவாக
அறிமுகம்
ஆகாத காலத்தில்
கல்லூரி பயின்றவர்கள்
நாங்கள் !

தேடித்தேடித்தான்
தொடர்புகளை
புதுப்பிக்க
வேண்டியதிருக்கிறது !

கன்னமெல்லாம்
சதைபோட்டு
கண்ணாடி போட்ட
குண்டான பெண்ணாக
அவளை
நினைத்துப் பார்த்தேன் !
சிரிப்பு வந்தது !

இழந்து விட்ட
பிள்ளைப்பருவ
மகிழ்ச்சிகளை 
நாங்கள் மீட்டெடுத்த
அந்தத் தருணங்கள்
எவ்வளவு உன்னதமானவை !

ஆண் பெண்
பேதமின்றி
நாங்கள்
அடித்து விளையாடிக் கொண்ட 
அந்த நாட்கள்
எவ்வளவு அழகானவை !

ஒவ்வொரு
தோழியிலும்
ஒரு
சகோதரியைக் கண்ட
புனிதமான
காலமல்லவா அது !

இப்படி ஒருநாள்
தொடர்பற்றுத்
தொலைந்து போவோம்
என்றுதான்
அந்தக் கடைசிநாளில்
அவள்
அதிகம் அழுதாளோ ?

அவள்
மதிய உணவைப்
பிடுங்கித் தின்னும்
அந்த பாக்கியம்
இனிமேலும் கிட்டுமா ?

அழைத்து விட்டு
எதிர்முனை
எடுக்கக்
காத்திருந்த போது
பதட்டமாக இருந்தது !

எடுத்தது
அவளே தான் !

அலைபேசி வழியே
ஒலித்த போதும்
அப்படியொன்றும்
அதிகம்
மாறிவிடவில்லை
அந்தக் குரல் !

யார் வேணும் ?  என்றாள்
குழப்பமாக !

கல்லூரியைச் சொல்லி
பெயரைச் சொன்னேன் !

சட்டென்று
உற்சாகமாகித்
தீப்பற்றிக் கொண்டது
எதிர்முனை !

என் பெயரை
அவள் அங்கே
கூவிய போது
இங்கே
எட்டிப் பார்த்த
இரண்டு
கண்ணீர்த்துளிகள்
எங்கள்
நட்பின் அடையாளம் !

திருமணத்திற்கு
அழைக்காதது குறித்து
வருத்தப் பட்டேன் !

பதிவுத் திருமணம்
என்பதால் 
அழைக்க முடியவில்லையென 
அங்கலாய்த்தாள்   !

அவள்
காதலித்ததை
என்னால்
நம்ப முடியவில்லை !

" நீயா நீயா " என்று
நூறுமுறை கேட்டேன் !

" ஆமாண்டா
மரமண்டை ! " என்று
அங்கிருந்தே
கொட்டு  வைத்தாள் !

சட்டென்று,
என் திருமணம்
குறித்துக் கேட்டாள்
தாயின் பரிவோடு !

ஒரு பெண்
பார்க்கச்சொல்லி
அவளிடமே சொன்னேன் !

வருங்காலத்தில்
அவள் பையனுக்கும்
என் பெண்ணுக்கும்
திருமணம்
செய்து வைப்பது என
விளையாட்டாய்ப்
பேசிக் கொண்டோம் !

தொடர்ந்து நாங்கள்
பேசிக் கொண்டிருந்ததில்
எப்படிப் போனதோ
அந்த
அரைமணிநேரம் !

இழந்து விட்ட
ஒரு வசந்தம்
தற்காலிகமாகத்
திரும்பக் கிடைத்தது
போலிருந்தது !

அந்த நண்பனின்
திருமணத்திற்கு
குடும்பத்தோடு 
வருவதாகச் சொல்லி
விடை பெற்றபோது
ஏனோ
அவள் குரல்
கரகரத்தது !

தொலைத்து விட்ட
ஒரு நண்பனையோ
ஒரு தோழியையோ
எந்தத் திருமணத்திலாவது 
பார்த்துவிட மாட்டோமா
எனக் காத்திருக்கும்
சில கோடிப்பேரில்
ஒருவனாக 
நானும் காத்திருக்கிறேன்
அந்த
நண்பனின் திருமணத்திற்கு !!!14 comments:

 1. அட்டகாசம்! நானும் இப்படி சிலரை தேடிக்கொண்டு இருக்கிறேன்! உணர்வுகள் புரிகிறது! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. கவிதையை உணர்ந்து கருத்திட்டதற்கு நன்றி நண்பரே

   Delete
 2. இனிய நினைவு என்றும் சந்தோசம்...

  நீங்கள் காத்துக் கொண்டுள்ளீர்கள்... நான் அனுபவித்து விட்டேன்...

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் அனுபவித்த அந்த இனிய நிகழ்வைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே

   Delete
 3. இது போன்றதொரு இனிய வாய்ப்பு கிடைப்பது மிகவும் அருமையான உணர்வு குரு. தனபாலன் சார் சொன்னதுபோல் நானும் முக நூல்மூலமாக என் 20 வருடத்திற்கு முந்தைய கல்லூரித் தோழனை கண்டுபிடித்து நட்பு பறிமாறியதில் அடைந்த மகிழ்ச்சியை திருப்பிச் சொல்வதுபோல் இருந்தது கவிதை .இங்கு ஒரு வித்தியாசம் திருமணத்திற்கு பின் அவன் தான் என் தொடர்பிலிருந்து சென்று திரும்பி அவ்னே என்னை கண்டறிந்தான். அப்போது இந்த அளவு தொலைத்தொடர்பு வசதி இல்லாததே காரணம்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் உணர்வுகளை ஓரளவு இந்தக் கவிதை பிரதிபலித்தது மகிழ்வாக இருக்கிறது தோழி

   Delete
 4. தூய்மையான இந்த நட்பு ஓர் இனிய தொடர்கதைபோல்
  என்றும் தொடர என் வாழ்த்துக்கள் சகோதரரே .அருமையான
  பகிர்வு !...

  ReplyDelete
  Replies
  1. தூய்மையான நட்பு தொடர வாழ்த்தியதற்கு நன்றி தோழி

   Delete
 5. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/6_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு மிக்க நன்றி தனபாலன்

   Delete
 6. அன்புடையீர்,

  வணக்கம்.

  தங்களின் வலைத்தளம் பற்றியும்
  தங்களின் ஓர் பதிவு பற்றியும் இன்று
  நம் “யுவராணி தமிழரசன்” அவர்களால்
  வலைச்சரத்தில் பெரிதும் பாராட்டிப்
  பேசப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது.

  இணைப்பு இதோ:

  http://blogintamil.blogspot.in/2012/11/6_23.html

  இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

  தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும்
  அன்பான வாழ்த்துகளும்.

  அன்புடன்
  வை.கோபாலகிருஷ்ணன்
  gopu1949.blogspot.in .

  ReplyDelete
  Replies
  1. மிகவும் ஆச்சர்யமாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது சார் ! தகவலுக்கு நன்றி !

   Delete
 7. அருமையான கவிதை! கல்லூரி நாட்கள் என்றுமே பசுமையானவை.

  ReplyDelete
  Replies
  1. பசுமையான கல்லூரி நாட்கள் திரும்பக் கிடைக்காத ஏக்கத்தைத் தான் இந்தக் கவிதை பிரதிபலிக்கிறது ! உணர்ந்து கருத்திட்டதற்கு நன்றி தோழி !

   Delete