Monday, October 29, 2012

இரயில் பயணம்

அந்தப் புகைவண்டியின்
உள்ளே
கூட்டமிருந்தது !
ஒவ்வொருவனிடத்தும்
ஏதோவொரு
வாட்டமிருந்தது !
ஓரமாய் ஓரிடத்தில்
இளைஞர்களின்
ஆட்டமிருந்தது !
பெண்களைத்
தேடுவதிலேயே எனது
நாட்டமிருந்தது !

எவளாவது
சிக்குவாளா ?
கண்வழியே
காமத்தைக்
கக்குவாளா ?

முதலில்
சீட்டு !
பிறகுதான்
மன்மதனின்
பாட்டு !

கழுவி வைத்த
பாத்திரத்தில்
பருக்கையைத்
தேடுவது போல
நான் எனக்கான
இருக்கையைத்
தேடினேன் !

அதிர்ந்தேன் !
அடுக்கி வைத்த
ஆசைகளோடு
அப்படியே
உதிர்ந்தேன் !

உழைத்து
உழைத்து
ஓடாய்ப் போன
உழவன் போல
ஒரு கிழவன் !

நெறி பிறழாத
சத்தியன் போல
ஒரு மத்தியன் !

கணவனின்
வசவுகளையெல்லாம்
வெகுமதியாகக் கருதும்
ஒரு திருமதி !

தலை நரைத்த
சீமாட்டியாய்
ஒரு மூதாட்டி !

சீருடையணிந்த
ராணுவன் போல
ஒரு மாணவன் !

சம்பாதிப்பிலேயே
சிந்தை செலுத்தும்
ஒரு தந்தை !

அப்புறம்
ஒரு பாப்பா !

அடங்கொன்னியா !

இளசான ஒரு
பெண்ணைப் பார்த்து
அவளது
எண்ணை வாங்கலாம்
என்ற நினைப்பில்
மண்ணைப் போட்டானே
மகாதேவன் !

மூன்று மணிநேரமும்
போரடிப்பதா ?
இந்த மொக்கைகளைக்
கட்டிக் கொண்டு
மாரடிப்பதா ?

எனக்கு மட்டும்
பெண்களின் சூழலே
வாய்ப்பதில்லை !
என் குரலென்றால்
இந்த இறைவன்
செவியையே
சாய்ப்பதில்லை !

எதிரில்
பெண் இருந்தால்
நானென்ன
தின்றா விடுவேன் ?
கலாச்சாரத்தைக்
கழுத்தை நெரித்துக்
கொன்றா விடுவேன் ?

சில பார்வைகள்
சில புன்னகைகள்
பிறகு
 நல விசாரிப்பு !
அப்புறம் முடிந்தால்
குல விசாரிப்பு !

அவ்வளவுதானே !

அதற்குக் கூட
எனக்குத்
தகுதியில்லையா ?
மன்மதன் நாட்டில்
எனக்கென்று ஒரு
தொகுதியில்லையா ?

வெகுதிடீரென
வீரிட்டழுதது
பக்கத்திலிருந்த
பாப்பா !

தோ தோ
தோ என்றான்
தகப்பன் !

அங்கே இங்கே
என்று
அனைத்தையும்
வேடிக்கை காட்டினான் !

அன்னையின்
நினைப்பு வந்திட்ட
குழந்தைக்கு
அகிலத்தையே
வேடிக்கை காட்டினும்
அழுகையை நிறுத்துமா ?

அது
இன்னும் அழுதது
உரத்து !
அதிகரித்துக் கொண்டே
போனது
கண்ணீரின் வரத்து !

" மாமா பாரு
மாமா பாரு ! "
என
என்னைக் காட்டினான்
அந்தத் தகப்பன் !

இது வேறா ?

நான்
அசடு வழிந்தேன் !

குழந்தை
என்னையே
பார்த்தது
உற்று !
அழுகைக்கு
வைத்தது
அவசரமாய் ஒரு
முற்று !

குழந்தை
பிஞ்சுக் கையால்
தப் பென்று
 என் முகத்தில்
அடித்தது !
தாவி என்னைக்
கட்டிக் கொள்ளத்
துடித்தது !

அனைவரும்
அடியேனையே
பார்த்தனர் !

இப்போது
இக்குழந்தையை
வாங்கத்தான் வேண்டும் !
அதன் கனத்தை
கொஞ்சநேரமாவது
மடியினில்
தாங்கத்தான் வேண்டும் !

வாங்கிக் கொண்டேன் !

குழந்தை
 மடியில்
அமர்ந்து கொண்டது
பாந்தமாக !
அனைவரையும்
வேடிக்கை பார்த்தது
சாந்தமாக !

அதுவரையில்
மனதிலிருந்த வெம்மை
சட்டென்று
ஆறிப் போனது !
சகலமும்
ஒரு நொடியில்
மாறிப் போனது !

தெய்வத்தின்
ஸ்பரிசம்
இப்படித்தான்
இருக்குமோ ?

புகைவண்டியின்
தடதடப்பு !
குழந்தை தந்த
கதகதப்பு !
பரவசத்தின்
மதமதப்பு !

சத்தியமாய்
கிறங்கி விட்டேன் !
என்னையறியாமல்
உறங்கி விட்டேன் !

திடுக்கிட்டு
விழித்தால்
இறங்க வேண்டிய
இடம் வர
இரண்டு நிமிடமிருந்தது !

பக்கத்து
இருக்கை
காலியாக இருந்தது !

விடைபெறாமல்
போய் விட்டேனே
சற்று முன்னர்
என்னைத் தாலாட்டித்
தூங்க வைத்த
அந்த குட்டித் தாயிடம் !!!


7 comments:

 1. Replies
  1. தங்களது வாசிப்பால் அந்த அனுபவம் மேலும் இனிமை பெறுகிறது நண்பரே

   Delete
 2. அருமை நண்பா உணர்வுகளின் கொப்பளிப்பு
  எதிர்பாராத ஸ்பரிசங்களில் மட்டுமே இறைவனை நம்மை வருடி செல்லுகிறான் அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அழகிய வெளிபாடு

  ReplyDelete
  Replies
  1. இறைவன், யாவற்றிலும் இருக்கிறான் ! தங்களைப் போன்ற அன்பு நெஞ்சங்களின் சிறு பாராட்டிலும் இருக்கிறான் தோழி ! நன்றி !

   Delete
 3. சற்று முன்னர்
  என்னைத் தாலாட்டித்
  தூங்க வைத்த
  அந்த குட்டித் தாயிடம் !!!
  அருமையான நெகிழவான வரிகள் குருச்சந்திரன்

  ReplyDelete
  Replies
  1. உண்மையில் அந்தக் கடைசி வரியில் தான் கவிதையின் ஜீவனே இருக்கிறது ! அதை உணர்ந்து குறிப்பிட்டதற்கு நன்றி !

   Delete
 4. அருமை.. அப்படியே அந்த ரயிலில் நானும் இருந்தது போல இருந்தது. அருமை.

  ReplyDelete