Sunday, November 25, 2012

பிச்சைக்காரர்கள் 

பலரிடமும்
கெஞ்சிக் கேட்டு
ஒரு பத்துரூபாய்
தேற்றிவிட்டுப்
போய் அமர்ந்த
அந்தப் பிச்சைக்காரனிடம்
தெரிகிறது
ஒரு
அரசனின் கம்பீரம் !

ஒரு ரூபாய்
கொடுத்தாலும்
அதைக் கண்ணில் ஒற்றி
வாங்கிக் கொள்கிறவனே
உண்மையான
பிச்சைக்காரன் !

கால்கள் இழந்த
அந்தப்
பிச்சைக்காரனுக்கு
தற்காலிகமாக
சிறகுகள்
தர நினைக்கிறீர்களா ?
ஒரு ஐந்துரூபாய்
கொடுங்களேன் !

அந்தப்
பேருந்து நிறுத்தத்தில்
அந்தச் சிறுமி
தினமும்
வருபவர்களிடம்
பிச்சை கேட்பதில்லை !
பிச்சை தர்மம் !

அந்த
திரையரங்கு வாசலில்
எப்போதும்
அமர்ந்திருக்கும்
அந்த
பிச்சைக்காரக் கிழவியை
வெகு நாட்களாகக்
காணவில்லை !
ச்சே !
பத்து ரூபாயாவது
கொடுத்திருக்கலாம் !

எவ்வளவு
பாவமாகத்
தெரிந்தாலும்
சாப்பிடும் போது
தந்திரமாக வந்து
பிச்சை கேட்பவன்மீது
கோபம்
வரத்தான் வருகிறது !

பிச்சைக்காரன்
வரும் போது
சில்லறை
இருப்பதில்லை !
சில்லறை
இருக்கும்போது
பிச்சைக்காரன்
வருவதில்லை !

இங்கு
பெரும்பாலான
பிச்சை போடுதல்கள்
இரக்கப்பட்டு
நிகழ்வதில்லை !
தொல்லை
விட்டால் போதும் என்றே
நிகழ்கின்றன !

ஒருவகையில்
உலகிலேயே
மிகக் கடினமான வேலை
பிச்சையெடுத்தல் தான் !

நீங்கள்
உணவு வாங்கித்
தரும்போது
அந்தப் பிச்சைக்காரனுக்கு
பசியில்லாமல் 
இருக்கலாம் !
அவனுக்குப்
பசியெடுக்கும் போது
உங்கள் உணவு
கெட்டுப் போயிருக்கலாம் !
ஆகவே,
முடிந்தவரை
காசாகவே
கொடுத்து விடுங்கள் !

சாமி
கும்பிடுவதை விட
பிச்சைக்காரர்களுக்கு
காசு போடுவதற்காகவே
கோவிலுக்குப்
போய்ப் பாருங்கள் !
வரம்,
சீக்கிரம் கிடைக்கும் !

இந்தியா
பிச்சைக்காரர்கள்
மலிந்த நாடு
என்பதற்காக
நாம்
தலைகுனிய
வேண்டியதில்லை !
திருடர்களை விட
பிச்சைக்காரர்கள்
எவ்வளவோ மேல் !

ஏங்கிக்கிடப்பதும்
காத்திருத்தலும்
கெஞ்சிக் கேட்பதும்தான்
பிச்சை என்றால்
நாமும்
ஒருவகையில்
பிச்சைக்காரர்கள்தான் ! 

10 comments:

 1. முடிவில் சாட்டையடி வரிகள்...

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி தனபாலன்

   Delete
 2. //ஏங்கிக்கிடப்பதும்
  காத்திருத்தலும்
  கெஞ்சிக் கேட்பதும்தான்
  பிச்சை என்றால்
  நாமும்
  ஒருவகையில்
  பிச்சைக்காரர்கள்தான் ! //

  என்னாச்சு நண்பா ஆரம்பம் வெகு அமர்க்களம் முடிவு பெரும் அசத்தல் ஆனால் வலி மிகுந்த உண்மையான வார்த்தைகள் நாம் எல்லோரும் எதையாவது யாசித்து கொண்டுதான் இருக்றோம் சரியாக சொன்னீர்கள் //

  ReplyDelete
  Replies
  1. தோழி, சிலர் அன்புக்கு ஏங்குகிறார்கள், சிலர் காதலுக்கு ஏங்குகிறார்கள், சிலர் பாசத்துக்கு ஏங்குகிறார்கள், சிலர் வசதியாக வாழவேண்டும் என்று ஏங்குகிறார்கள், ....... இப்படி ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் ஒருவகையில் பிச்சைக்காரர்கள் தான். அதைப் புரிந்து எனது கவிதை எனும் யாசகத்திற்கு கருத்து எனும் பிச்சை இட்ட தங்களுக்கு நன்றிகள் ஆயிரம்

   Delete
 3. பாத்திரமறிந்து பிச்சை இடு என்பது போல் வயதானவர்கள் எந்த விதத்திலும் வருமானம் ஈட்ட முடியாதோர் போன்றோர்க்கு உதவலாம். அதுகூட உங்களுக்கு மனமும் நேரமும் அமைந்தால் அவர்களை ஏதேனும் இல்லங்களில் சேர்த்து விடலாம் அதைவிடுத்து பரிதாபம் என்றோ ,கருணை என்றோ வரம் என்றோ கருதி பிச்சை பெறுபவர்களை நாம் வளர்த்தி விட்டோமோ என்ற எண்ணம் எனக்குண்டு. அதன் மூலம் குழந்தைகளை திருடி பிச்சை எடுப்பவர், குழந்தைகளை பிச்சைக்கு பயன்படுத்துவோர் என சமூக அவலங்களுக்கு காரணியாகிறோம். தன் உழைப்பால் உண்ணும் எண்ணத்தை நாம் அவர்களுக்கு உருவாக்குவதை விடுத்து.. இது எளிதான தொழில் என்ற எண்ணம் மேலோங்க, சோம்பேறித்தனம் வளர நாமும் காரணமாகிறோம். ஆனால் கடைசி வரிகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தோழி, பிச்சை எடுத்தலின், பிச்சை போடுதலின் யதார்த்தத்தை வெளிப்படுத்தும் நோக்கில் இக்கவிதை எழுதப் பட்டுள்ளது. மற்றபடி பிச்சை எடுப்பதற்காக சிறுவர்களைக் கொடுமைப்படுத்துவது வன்மையாக கண்டிக்கத் தக்கது. இதை நான் கடவுள் படத்தில் பாலா அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருப்பார். தங்களைப் போன்றவர்களின் கருத்துக்களிலும் வழிகாட்டுதலிலும் என்னை செம்மைப்படுத்திக் கொள்கிறேன்.நன்றி

   Delete
 4. // பிச்சை போடுதல்கள்
  இரக்கப்பட்டு
  நிகழ்வதில்லை !
  தொல்லை
  விட்டால் போதும் என்றே
  நிகழ்கின்றன !// பஸ் ஸ்டாப்ல ஒரு இடத்துல நிக்க விடமாட்டாங்க. சிறுவர்கள் தொட்டு தொட்டு கெஞ்சுவார்கள்.

  கடைசி பத்தி நிஜம்தான்!

  ReplyDelete
  Replies
  1. சிலர் சாட்டையால் தன்னை அடித்துக் கொள்வது போல பிச்சை கேட்பார்கள், அதுவும் மிகச்சரியாக எவன் ஈ வாயன் என்று பார்த்து அவனிடமே வந்து வம்பு செய்வார்கள். இந்தப் பிச்சைக்காரர்களுக்கு எந்த அரசாங்கமும் எந்தத் திட்டமும் தீட்டுவதில்லை. கருத்துக்கு நன்றி

   Delete
 5. தேவா எவன் ஈ வாயன் என்றல்ல, இவன் ஈவான் என்று தெரிபவர்களிடம் பிச்சை கேட்கிறார்கள். அவர்களுக்கென்ன தெரியும் இடம் பொருள் ஏவல் எல்லாம். கவிதை மிக அருமை.

  எல்லோரும் தேவா சொன்னது போல ஒரு 5 ருபாய் கொடுங்களேன், ஒரு நாள் நீங்களும் மகராசன இருங்களேன்.

  ReplyDelete
 6. ஈவாயன் - ஈவான் என்ற சொற் பிரயோகம் மிக அருமை விஜய் ! தமிழ் புலவர் போல யோசித்திருக்கிறீர்கள் ! கருத்துக்கு மிக்க நன்றி

  ReplyDelete