Tuesday, November 20, 2012

வேலைஅன்றொருநாள்
காலங்காலையில்
வெயில் கொஞ்சம்
எடுப்பாயிருந்தது  !
எழுவதை நினைத்தாலே
மண்டைக்குள் சற்று
கடுப்பாயிருந்தது !
ஞாயிறு என்பதால்
அன்று அலுவலுக்கு
விடுப்பாயிருந்தது  !
மனமெல்லாம் 
புதிய கதாநாயகியின்
இடுப்பாயிருந்தது !

திடுப்பென்று
ஏதோ பாடலை
அலைபேசி
உளறியது !
வஞ்சகமில்லாமல்
வயிற்றெரிச்சலைக்
கிளறியது !

இந்த நேரத்தில்
எந்த மூதேவி
கூப்பிடுகிறான் ?
 விடுமுறைப் பொழுதை  - ஏன் இப்படி
விவஸ்த்தையில்லாமல்
சாப்பிடுகிறான் ?

எடுத்தால்
எதிர்முனையில்
மேலதிகாரி !

இந்தாள் எதற்கு
இப்போது
அழைக்கிறான் ?
விடுமுறை நாளிலும்
இவன் ஏன்
இப்படி
உழைக்கிறான் ?

" ஐயா "   என்றேன்
வேண்டா வெறுப்பாய்
அவனை வணங்கி !
" சொல்லுங்கள் " என்றேன்
வேலையை நினைத்து
மனதிற்குள் சுணங்கி !

பழுதாகி விட்டதாம்
ஆலையில் ஒரு
கருவி !
கேட்டதும்
சிறகொடிந்தது என்
உற்சாகம் எனும்
குருவி !

இப்போதே போய்ப்
பார்க்க வேண்டுமாம்
அந்தப் பழுதை !
அலைபேசியில்
ஆணையிட்டது
அந்தக் கழுதை !

உடனடியாக

ரத்து செய்தேன்
அந்நாளின்
நிகழ்ச்சிகளை !
புதைத்துக் கொண்டேன்
வாரயிறுதியின்
மகிழ்ச்சிகளை !

மதுவருந்தக்
கூப்பிட்ட நண்பன்
தகாத வார்த்தைகளால்
திட்டினான் !
காத்திருந்த காதலி
அங்கிருந்தே தலையில்
குட்டினாள்  !

அவர்களின்
கோப நோய்க்கு
காரணம் எனும்
சூரணம் தந்து,

ஆலையை
அடைந்தேன் !
கருவியைக் கண்டதும்
உள்ளுக்குள்
உடைந்தேன் !

அங்கே,

ஏற்கனவே
இரண்டு பேர்
வேர்த்திருந்தார்கள் !
பழுது என்னவென்று
அவர்களும் கொஞ்சம்
பார்த்திருந்தார்கள் !

ஒன்றும்
பெயரவில்லை !
ஆனாலும் நான்
அயரவில்லை !

கருவியைப்
பிரித்தேன் !
கடையை
விரித்தேன் !

பகல் முழுக்க
செய்தேன்
ஆய்வை !
ஒரு நிமிடமும்
எடுக்க வில்லை
ஓய்வை !

பிரம்ம
பிரயத்தனப் பட்டு
பிரச்சனையின்
வேரைக் கண்டறிந்தபோது
பளிச்சென்று தெரிந்தது
உலகம் !

அப்புறம்
எளிதாக
கருவியின் பழுது
நீங்கி  விட்டது !
மகிழ்ச்சியில்
இதயம் சற்று,
வீங்கி விட்டது !

கேள்விப் பட்ட
மேலதிகாரி
துள்ளினார் !
பாராட்டுக்களைக்
கைநிறைய
எனக்காக
அள்ளினார் !

வேலை முடித்து
ஆலை விட்டு
வெளியே வந்தால்
உன்னதமாய்த் தெரிந்தது
உலகம் !

எதிரே வந்த
இளம்பெண்
புன்னகைத்தாள்  !

இரண்டு மடங்காய்
தேநீர்
சுவைத்தது !

பிடித்த
திரைப்படத்தை
தொலைகாட்சியில்
போட்டார்கள் !

களிப்பு தந்தது
காதலியின் பேச்சு !

நிறைவாய்
இருந்தது
இரவு உணவு !

அட்டகாசமாய்
வந்தது
ஆழ்ந்த உறக்கம் !

இது நடந்து
இரண்டு நாட்கள்
கழித்து,

ஏதோ நண்பன்
அலைபேசியில்
வேலை பற்றி
வினவினான் !

நான் சொன்னேன்,

" நாய்ப் பொழப்பு
மச்சி  !  "

இக்கவிதையால் அறியப்படும் நீதி :

எவரெவர்
எவ்வேலை செய்யினும்
அவரவர்க்கு
அவ்வேலை கடுப்பே !


8 comments:

 1. உண்மையில் நாம் செய்யும் மிகப்பெரிய பிழை இதுதான் நாம் செய்யும் பணியை முறைபடுத்திக் கொண்டால்தான் அதில் முழுமையான ஈடுபாடு கிடைக்கும் சலிப்பும் சிக்கலும் தோன்றாது

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மாலதி

   Delete
 2. உழைப்பின் பலன் கைமேல் கிடைக்கும் போது
  அதை விட ஆனந்தம் எதுவும் இல்லை
  அது கிடைக்காத போது அதை விட துன்பம் எதுவும் இல்லை

  நல்ல மனநிலை எதார்த்தமாய் சொன்ன விதம் ரசிப்பிற்குரியது உங்களுக்கே உரிய நகை உடன் மின்னுது கவிதை

  ReplyDelete
  Replies
  1. இந்தக் கவிதையின் கடைசி வரிகளை யதார்த்தம் என்று புரிந்து கொண்டு கருத்திட்டதற்கு நன்றி தோழி

   Delete
 3. உழைப்பின் பின் குடிக்கும் டீ கூட இனிமையாய் இருக்கும் அதில் நம் உழைப்பு வியர்வையின் வாசமும் இணைந்ததால். கடுப்பான நிமிடங்கள் கூட உழைப்பினால் உற்சாகமாகிடும் .

  ReplyDelete
  Replies
  1. உழைப்பின் பின் கிடைக்கும் இன்பங்கள் அலாதியானதாக இருந்தாலும் அந்த உழைப்பை நாம் சற்று சலித்துக் கொள்வதுதானே யதார்த்தத்தில் நடக்கிறது தோழி

   Delete
 4. /// " நாய்ப் பொழப்பு
  மச்சி ! " ///

  நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் இந்த வரி தூக்கி சாப்பிட்டு விட்டது...

  ReplyDelete
  Replies
  1. பிடிக்காத வேலை என்றால் இப்படித்தான் நண்பரே சொல்லத்தோன்றுகிறது ! என்ன செய்ய ?

   Delete