Skip to main content
பித்தன்ஊருக்குத்தான்
அவன் பித்தன் !
உள்ளுக்குள்ளே
அவன் சித்தன் !

ஊரார்,
அவன் உடம்பெல்லாம்
ஒரே
அழுக்கு என்றார்கள் !
அவன் இருப்பது
அந்த வீதிக்கே
இழுக்கு என்றார்கள் !

அவனிடமிருந்தது
ஒரேயொரு
கிழிந்த வேட்டி !
தெருநாய்கள்தான்
அவனுக்கிருக்கும்
ஒரே போட்டி !

அவனுக்கு
எப்போதும்
கண்ணில் ஒரு
கிறக்கமிருக்கும்  !
பகல் பொழுதிலும்
மரத்தடியில்
உறக்கமிருக்கும் !

எண்ணையே
காணாதிருந்தது
அவன் தலை !
பரிகசிக்கக்கூடியது தான்
அவன் நிலை !

இப்போதுதான்
அவன் தாழ்ந்தவனாம் !
ஒருகாலத்தில்
நன்றாக வாழ்ந்தவனாம் !

வருவோர்க்கெல்லாம்
வாரி வாரிக்
கொடுத்தவனாம் !
அந்த மட்டில்
அவன்
தன்னைத்தானே
கெடுத்தவனாம் !

சில
குறும்புக்காரர்கள்
அவனை
கல்லால் அடித்தார்கள் !
சில
" குடும்பக்காரர்கள் "
அவனை
சொல்லால் அடித்தார்கள் !

தெருக்கோடியில்
இருக்கிறது
ஒரு
தேநீர் கடை !
மிகவும் பிரசித்தம்
அதன்
மாலை நேரத்து வடை !
எப்போதுமிருக்கும்
அங்கு
வாடிக்கையாளர்களின் படை !
கடையையே
சுற்றிச்சுற்றி வரும்
இந்தப் பித்தனின் நடை !

கடைக்காரன்
அவனுக்குக்
கொடுப்பான்
மீந்ததையெல்லாம் !
இவனும்
வாங்கியுண்பான்
அவன்
ஈந்ததையெல்லாம் !

நானும்
அவ்வப்போது
அவனைப்
பார்த்திருக்கிறேன் !
நெருங்கும்போதெல்லாம்
பயந்து போய்
வேர்த்திருக்கிறேன் !

ஒரு நாள்,
ஒரு முக்கியப் பணி !

போய்க்கொண்டிருந்தேன் !

எதிரே இவன் !

வந்தவன்
என்னைப் பார்த்து
நகைத்தான் !
நான்
வந்த எரிச்சலைக்
காது வழியாகப்
புகைத்தேன் !

ஆனாலும்,

போன காரியம்
இனிதே
முடிந்து விட்டது !
வாழ்வில்
ஒரு பொழுது
நல்லபடியாய்
விடிந்து விட்டது !

திரும்பி வரும்போது
அந்தப் பித்தனுக்கு
கடையில்
வடை வாங்கித்தர
நினைத்திருந்தேன் !

அதிசயமாய்
அவனைக் காணவில்லை !

மறுநாள்
எதிர்பார்த்தேன்  !
 
அவன் வரவில்லை !
தன தரிசனத்தை
எனக்குத் தரவில்லை !

மறுநாளுக்கு
மறுநாள் .........

ம்ஹூம் !

எங்கு போனான் ?
என்ன ஆனான் ?

சட்டென்று
ஏதோ ஒன்று
மண்டைக்குள்
வெட்டியது !
ஏனோ தெரியவில்லை
என் மனதே
என்னைத் திட்டியது !

பித்தனவன்
தன் இருப்பிடத்தையே
மறந்து விட்டானோ ?
இல்லை,
வாழ்ந்தது போதும் என
ஒட்டு மொத்தமாய்
இவ்வுலகையே
துறந்து விட்டானோ ?

அவன்
இருக்கும்போதே
ஏதாவது கொஞ்சம்
கொடுத்திருக்கலாமோ ??? 
Comments

 1. உங்கள் கவிதைகளையும் ஓர் நாள் தமிழ் பேசும்
  நல்லுலகம் தேடி அலையும் நிலை வரும் :(
  மிகவும் அருமையான கவிதை நடை யாரும்
  கவனிப்பார் அற்றுக் கிடக்கிறதே!!!!........பிற
  தளங்களிலும் இணைத்துப் பகிருங்கள் சகோதரரே
  அருமையான இந்தக் கவிதை வரிகள் அனைவரையும்
  சென்றடைய .என் இனிய வாழ்த்துக்கள் சகோதரரே
  உங்கள் கவிதைகளுக்கு .மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
  Replies
  1. ஒரு எளிமையான குடில் போல இருக்கும் எனது வலைப்பூ விற்கு தங்களின் முதல் வருகை ! எப்படி வரவேற்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு நிற்கிறேன். அருமையான தங்களின் கருத்துக்கும், வழிகாட்டுதலுக்கும் நன்றிகள் தோழி !

   Delete
 2. இனிதே காரியம் முடிந்து விட்டபடியால் பித்தனை நினைக்க வைத்ததும், முடிவில் வருத்தப்பட்டதும் என பலவற்றை சிந்திக்க வைக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் தொடர்ந்த வாசிப்புக்கு மிகவும் நன்றி நண்பரே

   Delete
 3. எதுகை மோனைகள்
  மாறி மாறி பதம் பார்த்து செல்கிறது
  கண்கள் வழியாக மனதை .

  சமுகத்தின் சாடல்
  உயிர்ப்பின் நிலையாமை

  இருக்கும் போது தோன்றுவதில்லை
  தோன்றும் போது இருப்பு இல்லை

  வாழ்வின் தத்துவம் அழகிய தனித்துவ நடையில் அருமை நண்பா

  ReplyDelete
  Replies
  1. கவிதையை விட அதற்குக் கவிதையாக தாங்கள் இட்டுள்ள பின்னூட்டம் கவிதையை இன்னும் அழகுபடுத்துகிறது தோழி ! நன்றிகள் ஆயிரம் !

   Delete
 4. அருமையாக கையாள்கிறீர்கள் வார்த்தைகளை. வாழ்த்துக்கள்.
  ஒரு நல்லது செய்ய வேண்டுமென்ற நினைப்பு வந்தால் உடனே செய்து விட வேண்டும் .அதற்கான சந்தர்ப்பம் நமக்கு கிடைக்காமலேயே போய் விடலாம்.

  ReplyDelete
 5. கவிதையின் நோக்கைப் புரிந்து கொண்டு பின்னூட்ட மிட்டதற்கு மிகவும் நன்றிகள் தோழி !

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

திருமணம் 2013 


' சொல்லியனுப்புகிறோம் '
என்ற சொல்லை
காலம் என்ற
விலை கொடுத்து
பெண் வீட்டார்
வாங்கி விட்டனர் !
--------------------------------------------

இன்ஜினியர் பெண்ணும்
இன்ஜினியர் ஆணும்
தம்பதியாவது
காலத்தின் கட்டாயம் !
டாக்டருக்கும் இது
டிட்டோ !
--------------------------------------------

திருமணம்
கல்லூரியில்
நிச்சயிக்கப்படுகிறது !
--------------------------------------------

மாப்பிள்ளையின்
சம்பளமும்
மறைமுக
வரதட்சணைதான் !
கொண்டுவாருங்கள்
இதற்கொரு
இ. பி. கோ !
--------------------------------------------

குவித்துத்தான்
வைக்கிறார்கள்
ஆண் ஜாதகத்தை !
பொறுக்கித்தான்
எடுக்கிறார்கள்
பெண் ஜாதகத்தை !
--------------------------------------------

ஒவொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு !
ஆணினமே
அனுபவி !
--------------------------------------------

காலஸ்த்ரி,
திருநாகேஸ்வரம்,
திருவிடந்தை,
திருமணஞ்சேரி .......................
அடுத்து என்ன
ஜோசியரே ?
--------------------------------------------

தந்தை மகற்காற்றும் உதவி திருமணத்திற்கு
சாதி பார்க்காச் செயல் !
------------------…
பிரிந்த காதலி

அவளை
அந்தப் பேருந்தில்
பார்ப்பேனென்று
நான் நினைக்கவில்லை !

அவள்
அப்படியே தானிருந்தாள் !

காதோரத்தில்
அதே
சுருண்ட முடி !

தலைகுளித்த
அதே
ஒற்றைப் பின்னல் !

சூடப்பட்ட
அதே
ஒற்றை ரோஜா !

அந்த
பச்சை நிற
சுடிதாரை
எனக்குப்
பரிச்சையமிருக்கிறது !

மெட்டியில்லா
அவள்
பாதங்களைக் கண்டு
நான் ஏன்
ஆறுதல் அடைகிறேன் ?

மனதுக்குள்
மீண்டும்
மழை பெய்ய
ஆரம்பித்தது !

வருஷங்கள்
கடந்தும்
என்னைச் சுற்றி
மீண்டும் ஒரு
வசந்தம் குட்டியாய் !

அவள்
இன்னும் என்னைப்
பார்க்கவில்லை !

திறந்திருந்த
ஜன்னலில்
வெளியை
வெறித்துக் கொண்டிருந்தாள் !

இப்போதெல்லாம்
அவள்
இசை கேட்பதில்லை
போலும் !

இறுதியாக
நிகழ்ந்த
அந்த கடைசிச்சந்திப்பு
ஆயுளுக்கும்
மறக்காது !

என்னருகே
ஒட்டிநின்ற
அந்த பருவப்பெண்ணை
உரசாமல்
எவ்வளவு முடியுமோ
அவ்வளவு
விலகி நின்றேன் !

ஏதோ
எங்கள்
பழைய காதலுக்கு
நான் செலுத்தும்
என்னால் இயன்ற
மரியாதை !

சுற்றிலுமிருந்த
ஆண்களிடமிருந்து
தன் காதலியை
அடைகாத்துக் கொண்டிருந்தான்
ஒரு காதலன் !

சட்டென்று
அவனுக்காக
என் கண்கள்
ஈரமாயின !

ஒருகாலத்தில்
நானும்
என் காதலியை
அப்படி
அடைகாத்தவன் தான் !

பிரிந்த
காரணங்களைப்
பட்டியல் போட
விருப…
ரயில் சினேகிதி 
சட்டென்று
எனக்குள்
சகலமும்
வெளிச்சமாகி
விடுகின்றன,
எதற்கோ புன்னகைத்தபடி
எதிரே வந்தமர்ந்த
அவளைப் பார்த்ததும் !

கோழிக்குஞ்சை
உள்ளங்கையில்
பொத்திக் கொண்டால்
எப்படியிருக்குமோ
அப்படியிருக்கிறது
என் காதுகளுக்கு
யாருடனோ பேசியபடி
அவள் சிரிப்பது !

வேடிக்கை பார்த்தபடி
பூ விரல்களால்
அவள் கழுத்தை
அவளே
வருடிக் கொள்கிறாள் !
இங்கே எனக்கு
சொக்குகிறது !

எப்படியும்
நிமிர்ந்து என்னைப்
பார்த்து விடுவாள்
என்ற நம்பிக்கையில் தான்
எழுந்து போய்
காசு போடுகிறேன்
அந்த
குருட்டுப் பிச்சைக்காரனுக்கு !

இளஞ்சிவப்பு
நெயில் பாசிஷ்
தடவிய
அவள் பாதங்களைப்
பார்த்துக் கொண்டிருக்கறேன்,
சட்டென்று
கதை பேச
ஆரம்பிக்கின்றன
அந்தப் பாதங்கள்
என்னோடு !

நீர் குடிப்பதற்காக
அந்த வாட்டர் பாட்டிலின்
மூடியை
மென்மையாக
மிக மென்மையாக
அவள் திருகுகிறாள்,
தேவராகம்
கேட்டது போல
இன்பமாக அதிர்கிறது
என் பின்னங்கழுத்து !

பற்ற வைத்த
அணுகுண்டு
எப்போது வெடிக்குமென
பதைப்போடு
பார்ப்பது போலப்
பார்க்கிறேன்
உறக்கத்தில்
இமை மூடிய
அவள் விழிகளை !

அவளை விட
அழகான ஒருத்தி
அங்கே வந்து நின்றாலும்
அந்த அழக…