Skip to main content
காயத்ரிக்கு லவ் லெட்டர்  (சிறுகதை ) 





நான் ஒரு இளைஞன். எனக்கென்று சில காரியங்கள் இருக்கின்றன. நானொன்றும் வெட்டியாய் இல்லை. கல்லூரி பயில்கிறேன், அது போதாதா ? சமுதாயத்திற்குக் கடமையாற்றுவதை வயதாகிப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம். அப்படியே  வயதானாலும் கடமை ஆற்றித் தான் ஆகவேண்டுமா என்ன ? நீங்கள் ஓஷோ படித்திருக்கிறீர்களா ? படித்துப் பாருங்கள், இந்தக் கடமை, ஒழுக்கம், விழுப்பம், நன்மை, கின்மை யாவும் ஒரு மாயையே என்பது புரியும். அரிக்கிறது, சொறிகிறோம், சுகமாக இருக்கிறது அவ்வளவுதான். அந்த கணத்தில் அந்த அரிப்பும். சொறிதலும், சுகமும் அதன் பின்னான எரிச்சலும் உண்மையானவைகள். அதை விடுத்து இந்தக் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதெல்லாம் ஏமாற்று வார்த்தைகள்.
 
நான் இன்று காயத்ரிக்கு  லட்டர் கொடுத்தே ஆகவேண்டும். நான் மூன்றாமாண்டு ! அவள் முதலாமாண்டு ! காயத்ரி ! என்ன ஒரு பெயர் பாருங்கள் ! இந்தப் பெயரில் சத்தியமாக காந்தமான ஒரு மின்சார உணர்ச்சி இருக்கவே செய்கிறது. அவளது நண்பிகள் அவளை " காயு ......காயு  ......." என்று கூப்பிடுகிறார்கள். அது எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது. எதற்கு ஒரு பெயரைச் சுருக்கவேண்டும் ! நான் அவளை வாய் நிறைய காயத்ரி என்று தான் கூப்பிடுகிறேன். அவளைப் பார்த்தாலே அடிவயிற்றில் ஏதோ ஒரு அழுத்தம் உருவாகி கக்கா வருவது போல இருக்கிறது. ஒருவித அவஸ்த்தை என்று கூட வைத்துக் கொள்ளலாம். நெஞ்செல்லாம் திக்கு திக்கு என்று அடிக்கிறது. கூடவே .................வேண்டாம் விடுங்கள் !

 
காயத்ரி, என் வகுப்பில்  எல்லாரையும் பிரதர்...... பிரதர்  என்று அழைப்பவள், என்னை மட்டும் ' ங்க.....ங்க.......ங்க  ........' என்கிறாள். ஏன் ? எங்காவது எதிரெதிரே நாங்கள் பார்த்துக் கொள்ள நேரும்போது கண்களைக் கலக்க விட்டு புன்னகை சிந்துகிறாள். ஏன் ? என்னோடு பேசும்போது, வேண்டுமென்றே தன் உடைகளை சரிசெய்து கொள்கிறாள். ஏன் ? என்னோடு தோழைமை கொண்ட மற்ற பெண்களோடு காயத்ரி பேசுவதில்லை, அவள்களைக் கண்டாலே முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள். ஏன் ? அவள் பிறந்த நாளுக்கு முதன்முதலில் எனக்கு இனிப்பு கொடுத்து வெட்கப்பட்டாள். ஏன் ? .................. இப்படி ஆயிரக்கணக்கான ஏன் களைச் சொல்லலாம். காயத்ரியை முதன் முதலாக நான் சந்தித்தது பேருந்தில். சொல்கிறேன்.

அன்று காலையில் கிளம்பும்போதே தாமதமாகி விட்டது. வெறிகொண்டு மிதிவண்டியை மிதித்தேன். ஒரு தினுஷாகத் தான் போய்க்கொண்டிருந்தது. திடீரென்று கட்டக் என்று ஒரு சத்தம் ! டர்ர்ர் என்று டயர் சாலையில் தேய்ந்தது. நின்று விட்டது. இறங்கிப் பார்த்தால் சைக்கிள் செயின் துண்டாகி இருந்தது. முதல் வகுப்பே அந்த ஹெச்..டி பஞ்சு மிட்டாய்த் தலையன் ! பத்து நிமிடம் தாமதமாகப் போனால்அவன் கேட்கும் முதல் கேள்வியே " நீயெல்லாம் எதுக்கு படிக்க வரே ? " அதுவும் பெண்களுக்கு முன்பு வைத்து மானத்தை வாங்குவான். சைக்கோ ! வேக வேகமாக சைக்கிளைத் தள்ளிக் கொண்டு போய் பழுது பார்க்கக் கொடுத்து விட்டுமூன்றாம் எண் பேருந்தைப் பிடிக்க ஓடினேன். அடித்துப் பிடித்து ஏறிவிட்டேன். நல்லவேளை கூட்டமில்லை.

முன்பக்கம் பார்வையை ஓட்டினேன். அவள், காயத்ரி தன் தோழியொருத்தியுடன் பேசிக் கொண்டிருந்தவள் ஒரு வினாடி என்னைப் பார்த்தாள். பார்வைகள் வெட்டிக் கொண்டன. வாவ் ! அந்த உணர்வை என்னவென்று வர்ணிப்பது ! மெல்ல மீண்டும் அவளைப் பார்த்தேன். மீண்டும் அவள் எதேச்சையாகப் பார்க்க, இன்னொரு வெட்டு ! கொஞ்சம் ஆழமான வெட்டு ! தேகம் சூடானது. அதுகாறும் பொங்கி வழிந்து கொண்டிருந்த வியர்வைகள் யாவும் விரைவாக உலர்ந்து கொண்டிருந்தன. பேருந்தில் " வளையோசை கலகலவென ...." பாட்டு ! இப்போது அவள் தன் தோழியுடனான பேச்சை நிறுத்தி இருந்தாள். அவள் கண்கள் கவிழ்ந்து இருந்தன. நான் மீண்டும் அவளைப் பார்த்தேன். என் பார்வையை அவள் உணர்கிறாள்......தெரிகிறது. ஆனாலும் பார்வை கவிழ்ந்தே இருக்கிறது. பாரடி பாரடி பார்டி ............. பளிச்சென்று பார்த்தாள். குப் என்று இருந்தது. வாய் உலர்ந்து விட்டது. எங்கள் பார்வைகள் கோர்த்துக் கொண்டன. ஒரு முழு நிமிடம் நாங்கள் பார்த்துக் கொண்டே இருந்தோம். சட்டென்று அவள் பார்வையை விலக்கிக் கொண்டாள். அவள் நெஞ்சு ஏறி ஏறி இறங்கியது. எனக்கிருக்கும் அதே டென்ஷன் அவளுக்கும் போல. ஆக, காயத்ரியுடனான எனது முதல் சந்திப்பு இவ்விதமாத் தான் இருந்தது.

அவளுக்குத் தான் லட்டர் கொடுக்க வேண்டும். அது ஒன்று பிரமாதமான காரியம் அல்ல. பேப்பரும் பேனாவும் எடுத்துக் கொண்டு ஒரு அரை மணிநேரம் சன் மியுசிக் பார்த்தேன். கவிதை சொட்ட சொட்ட ஒரு காதல் கடிதம் தயாராகிவிட்டது. அதைப் படித்து விட்டு காயத்ரி என்ன செய்வாள் ? முதலில் புன்னகைப்பாள். " இதக் குடுக்க இவ்வ்ளோ நாளா ? " என்பாள்.

அவள் " இவ்ளோசொல்லிக் கேட்க வேண்டுமே ! " இவ்வ்வ்ளோ " என்று அந்த வ் வை அழுத்தி, கீழுதட்டைச் சுழித்து, மேலுதட்டை ஒருமாதிரி வளைத்து, சொல்வதை நான் வாயில் ஜொள் வடியப் பார்த்துக் கொண்டிருப்பேன். அப்புறம்  அந்த " ச்சோ ச்வீட்அதைச் சொல்லும்போது அவளே ஸ்வீட் ஆகிவிடுவது அல்லாமல் சுற்றுப்புறத்தையும் அல்லவா ஸ்வீட் ஆக்குகிறாள். அவளிடம் என்னவோ வசியம் இருக்கிறது. அவள் சம்பந்தப்பட்ட யாவுமே மகா புனிதம் அடைந்து விடுகின்றன. அவளருகே இருக்கும் போது ஒருவிதமான கிறக்கத்திலேயே இருக்கிறேன். உலகத்திலேயே மிக விலை உயர்ந்த மது கூட அவ்வளவு கிறக்கத்தைத் தருமா என்பது சந்தேகம் ! அவளது பேச்சு ஒரு இனிமையான சங்கீதம் போல என் காதுகளில் நுழைந்து அதன் நரம்புகளைத் தடவி, மண்டைக்குள் கதகதப்பை உண்டாக்கி, தேகம் முழுவதும் அந்த சுகமான கதகதப்பு பரவி, அப்படியே நான் எடை இழந்து, காற்றில் மிதக்க ஆரம்பித்து, ஆரம்பித்து மிதந்து கொண்டே இருக்கிறேன்.

அவள் அமர்ந்து சென்ற பிறகு அந்த இடத்தில் நான் அமர்ந்து பார்க்கிறேன். அந்த வெப்பம் அவள் தேகத்தின் சூடு, அதில் கொஞ்சம் கொஞ்சமாய்க் கரைகிறேன். அவளுக்கு விஷ் பண்ணாத நாட்களில் வாத்தியார் என்னை வண்டை வண்டையாக வைகிறார் ! எனக்கு அவள் ரொம்ப ரொம்ப லக்கியாக இருக்கிறாள்.

சொல்ல வந்ததை விட்டு எங்கேயோ போய் விட்டேன். எதில் விட்டேன் .....ஆங் ,...... " இவ்ளோ " வில் விட்டேன். அவள்,  " இதக் குடுக்க இவ்ளோ நாளா ? " என்பாள், லட்டரைப் படிப்பாள், வெட்கத்தில் துடிப்பாள், அழகாக உதடு கடிப்பாள்பொய்க்கோபம் காட்டி நடிப்பாள், செல்லமாக அடிப்பாள். இப்படி என்ன என்னவோ ? அதன் பிறகு நாங்கள் உலகின் மிகச்சிறந்த காதலர்களாவோம். ஆகாயத்தில் பறப்போம், குட்டி குட்டியாய் அவ்வப்போது இறப்போம், புறவுலகை மொத்தமாய் மறப்போம், கவலை மறந்து காதலைக் கறப்போம், உன்னத காதலர்களாய் அவனிதனில் சிறப்போம்..............”சுள்என்று யாரோ தோளில் அடித்தார்கள். அம்மா !  " எத்தனவாட்டி சொல்றது .....சீக்கிரம் எந்திரி....கொஞ்சம் கடைக்குப் போகணும்என்றாள்நல்லாயிருக்கிறது கதை ! கடைக்குப் போகணுமா ? அதுவும் நானா ? இப்போதெல்லாம் கடைக்குப் போய் மளிகை சாமானங்கள் வாங்குவது என்றாலே கொஞ்சம் கேவலமாக இருக்கிறது. இருந்தாலும் பத்து இருவது என்று தேற்றலாம். ஞாயிறு, நூன் ஷோ போவதற்கு கொஞ்சம் உதவும் ! எங்கள் ஊர் ராஜம் தியேட்டரில் பென்ச் டிக்கட் முப்பது ரூபாய்நான் விறுவிறுவென்று எழுந்தேன்.

மளிகை லிஸ்ட் கொஞ்சம் பெரிதாய் இருந்ததுரவை, சர்க்கரை, குலோப்ஜாமூன் பவ்டர், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பஜ்ஜி பவ்டர்வாழைக்காய்இத்யாதிகள். " என்ன விசேஷம் ? ஒரே பலகார ஐட்டமா இருக்கே " என்றேன். " ம்ம்ம் .....இன்னைக்கு ராஜியைப் பொண்ணு பார்க்க வராங்க....சும்ம்மா நை நை ன்னு கேட்டுட்டு இருக்காம சட்டுனு  போய் வாங்கிட்டு வா " என்றாள் அம்மா. ராஜி என் தங்கை. ப்ளஸ் டூ முடித்து விட்டு வீட்டில் தான் இருக்கிறாள். ஒரு அண்ணனாக பொறுப்பாக நான் இல்லாமல், காயத்ரிக்கு லவ் லட்டர் கொடுப்பது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேனே ! என்று ஒரு ஓரத்தில் உறுத்தினாலும் அதையெல்லாம் துடைத்துப் போட்டுவிட்டு கடைக்கு ஓடினேன்.

கடையில் ஒரு சொங்கி மூதேவி சாமானங்கள் கட்ட தாமதப் படுத்தி விட்டான். மீதி முப்பது ரூபாயை அம்மா கேட்கவில்லை. லவட்டிக் கொண்டேன். வேகவேகமாகத் தயாரானேன். உப்புமாவை கொதிக்கக் கொதிக்க விழுங்கிய போது, அம்மா " ஏன் இப்படி பறக்கற ........ மெதுவா தின்னு " என்றாள். நான் அதைக் காதில் வாங்காமல் அள்ளி விழுங்கி விட்டுப் புயலெனக் கிளம்பும் போது தங்கை எதற்கோ " அண்ணா " என்றாள்.  " ஏய் ....ராஜி ....கூஜி....... எதா இருந்தாலும் சாயந்திரம் சொல்லு ....எனக்கு லேட் ஆவுது ...வர்ட்டா " என்று ஓடினேன். அப்பா எதிரில் வந்து மேலும் கீழும் பார்த்தார். இந்தாள் பார்வையே இப்படித்தான். போயா போ ! காயத்ரியின் அப்பன் பெரிய ரைஸ் மண்டி வைத்திருக்கிறானாம். ஏக்கரா கணக்கில் சொத்தாம். காயத்ரியோ ஒரே பெண். எல்லா சொத்தும் ஐயாவுக்குத் தான். அப்புறம் நான் உன்னை மேலும் கீழும் பார்க்கிறேன் என்று கறுவிக் கொண்டேன்.

காயத்ரிக்கு லவ்லெட்டர் கொடுக்கும் எனது திட்டத்தை சற்று சொல்கிறேன். எங்கள் கல்லூரிக்குச்  செல்லும் வழியில் பைபாஸ் சாலையில் ஒரு வேப்ப மரம் இருக்கிறது. கொஞ்சம் தனியான இடம். மிகச்சரியாக ஒன்பது முப்பதுக்கு அந்த இடத்தை அடைய வேண்டும். காத்திருக்க வேண்டும். ஐந்து நிமிடத்தில் காயத்ரி அந்த வழியாக ஸ்கூட்டியில் வருவாள். அங்கேயே அவளை நிறுத்தி லட்டரைக் கொடுத்து விட வேண்டும். ஒன்பது முப்பதுக்கு நான் அந்த வேப்பமரத்தினை அடையசரியாக ஒன்பதேகால் வண்டியைப் பிடித்தாக வேண்டும். இப்போதே மணி ஒன்பது பனிரெண்டு ! ஓடு ஓடு ஓடு ! இப்போதெல்லாம் நான் மிதிவண்டியில் கல்லூரி போவதில்லை. சற்று கேவலமாக இருக்கிறது. பின்னே, பெரிய இடத்தில் மருமகனாகப் போகிறேன் அல்லவா ! ஒரு ஸ்டேடஸ் மெயின்டைன் பண்ண வேண்டாமா ? எனக்கும், நிறுத்தத்திற்கும்  சில மீட்டர்கள் இடைவெளி இருக்கும் போது அந்த ஒன்பதேகால் பேருந்து வந்து நின்றது. நான் பாய்ந்து பிடிப்பதற்குள் டிரைவர் பேமானி  எடுத்துவிட்டான். கண்ணெதிரே அது என்னைக் கடந்தது. அட சட் !

எல்லாம் இந்த அம்மாவால் வந்தது. கடைக்கு நானே தான் போகவேண்டுமா ? அப்புறம் அந்த உப்புமா அவ்வளவு சூடு ! அதை ஊதி ஊதித் தின்றதிலேயே ஐந்து நிமிடங்கள் கூடுதலாகி விட்டன. இந்த ராஜி ! இவளுக்கு எதற்கு இப்போது கல்யாணம் ! போகும்போதே அப்பன்காரன் எதிரே வந்து மேலும் கீழும் பார்த்தான் ! விளங்கிவிட்டதுஎங்கிருந்துதான் எனக்கென்று வந்து சேர்ந்தார்களோ ? ச்சை !

நான் பரபரத்தேன். கிட்டத்தட்ட நடு ரோட்டில் போய் நின்று இருசக்கர வாகனம் ஒன்றிற்குக்  கை போட்டேன். நல்லவேளை நிறுத்தி விட்டான். வாசவி காலேஜ் என்றேன். " நான் பாதிலேயே லெப்ட்ல கட் பண்ணிடுவேனே பிரதர் " என்றான் அவன். " பரவாலை " என்று ஏறிக்கொண்டேன். போ ! போ ! போ !
விர்ரென்று அவன் விரைந்தான். அந்த லெப்ட் கட் வந்ததும் இறங்கி அவனுக்கு சலாம் போட்டு விட்டு, அந்த வேப்ப மரத்தை நோக்கி ஓடினேன். காயத்ரி கடந்திருப்பாளா ? மாட்டாள் ! மாட்டாள் ! அந்த வேப்பமரம் கண்ணுக்குத் தென்பட்டது. பாக்கெட்டில் லட்டரைத் தொட்டுப் பார்த்துக் கொண்டே ஓடினேன். அப்போது விஷ்க் என்று ஒரு லாரி என்னைக் கடந்தது. நான் பார்க்கும் போதே, சாலையிலிருந்து அது விலகி அந்த வேப்பமரம் நோக்கிப் பாய்ந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் மரத்திற்கு அருகே இருந்த ஒரு " திட்டில் " மோதி............டொம்ம்ம்ம் என்று  திட்டை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் விழுந்தது. கடந்து கொண்டிருந்த வாகனங்கள் சட் சட் என்று நின்றன. சில வினாடிகளில் அங்கு பெரும் கூட்டம் கூடி விட, இதற்குத் துளியும் சம்மந்தமில்லாத நான் ஒரு பாமரனாக எட்டிப் பார்த்தேன். டிரைவர் அநேகமாக செத்திருப்பான். கொஞ்சம் பதட்டமாக இருந்தது.

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் ! இன்று எல்லாமே சரியாக நிகழ்ந்து நானும் மிகச்சரியாக ஒன்பது முப்பதுக்கு வந்து அந்த வேப்பமரத்தின் திட்டில் அமர்ந்து காயத்ரிக்காகக் காத்துக் கொண்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் ? நினைக்கும்போதே சிலிர்த்தது. இருந்தாலும் இருந்தாலும் நாளையாவது லட்டரை காயத்ரியிடம் கொடுத்து விட வேண்டும் என்று, பாக்கெட்டில் இருந்த அந்த கடிதத்தை மீண்டுமொருமுறை தொட்டுப் பார்த்துக் கொண்டேன். கை அனிச்சையாக நடுங்கிக் கொண்டிருந்தது. அதன் பிறகு கல்லூரியில் காயத்ரியை ஒரு தடியனுடன் பார்த்தேன். அவன் ஆஜானுபாகனாக ஜிம் மாஸ்டர் போல இருந்தான். காயத்ரி அவனுடன் கிட்டத்தட்ட ஒட்டிக் கொண்டிருந்தாள். அவ்வளவு அன்னியோன்யம் ! அடிப்ப்ப்பாவி அவனுடன் என்னைக் கடந்த போது காயத்ரி என்னைக் கண்டு கொள்ளவே இல்லை ! அன்று முதன்முதலாக பேருந்தில் வைத்து அப்படி நாம் பார்த்துக் கொண்டோமே ! அதற்கு என்னடி அர்த்தம் ? அதன் பிறகும் பார்க்கும் போதெல்லாம் புன்னகைத்தாயே அதற்கு என்ன அர்த்தம் ? ஒரு பெண் ஒரு ஆணின் கண்ணோடு கண் பார்த்து  வெட்கமாகப் புன்னகைத்தால் அதற்கு என்னதான் அர்த்தம் ! நீங்களே சொல்லுங்கள். அது காதல் இல்லையா ? என் கோட்டைகள் அனைத்தும் துகள் துகளாய் இடிந்து சரிந்தன.

அதன் பிறகு விசாரித்ததில் அந்த தடியன் உள்ளூர் அரசியல் பெரிய புள்ளியின் பையனாம். அவன் அப்பனுக்கும் , காயத்ரியின் அப்பனுக்கும் நட்பாம். அநேகமாக அவள் அவனைத்தான் திருமணம் செய்து கொள்வாள் என்று சொன்னார்கள். அந்த தடியன் ஆர்ப்பாட்டமாக புடு புடு பைக்கில் காயத்ரியைக் கொண்டு வந்து விட்டான். கூட்டிக் கொண்டு போனான். மதியம் லஞ்சிற்கு எங்கேயோ வெளியே போனார்கள். காயத்ரி அவன் முதுகோடு பின்னிப் பிணைந்து கொண்டு போவதைப் பார்த்தால் எரிகிறது. நாசமாப் போடி இவளே ! ஒன்று சொல்கிறேன். இந்தக்காலத்தில் " காதல் " என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்களே ............அதெல்லாம் காதலே இல்லை. காதல் என்ற ஒன்றே உலகத்தில் இல்லை. அது இருப்பதாக நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம் ! கடவுளை எப்படி நம்புகிறோமோ அது போல ! வெறும் நம்பிக்கை. மூட நம்பிக்கை. மூமூமூமூட நம்பிக்கை

காயத்ரி சம்பந்தப் பட்ட புனிதங்கள் யாவும் அவளை இன்னொரு ஆணோடு பார்த்த மாத்திரத்திலேயே காற்றோடு கலந்து விட்டன. ஆனாலும், யதார்த்தம் என்று  ஒன்று இருக்கிறதல்லவா ! அவள், தினேஷிடம், சுரேஷிடம், ரமேஷிடம் எப்படிப் பழகினாளோ அது போலவே என்னிடமும் பழகி இருக்கலாம். நான் தான் அதீதமாக எடுத்துக் கொண்டேனோஅவளை ஒரேடியாக கடைசியில் கெட்டவளாக சித்தரிக்கவும் கூடாது தான். இப்போது அவளுடன் சுத்துகிற தடியன் அவளது அந்தஸ்துக்கு மிக மிக ஏற்றவன். பிக்கல் பிடுங்கல் இல்லாமல் அவள் அப்பனே பார்த்து அவளைக் காதலிக்க அவனை அனுப்பி வைத்திருக்கும் போது என்னைப் போன்ற குப்புசாமி, அப்புசாமிகளைக் காதலிக்க அவளுக்கு என்ன தலையெழுத்தா ?
அப்புறம் காலையில் நடந்த அந்த லாரி விபத்து ! அநேகமாக நான் செத்திருக்க வேண்டியவன். தடுத்து நிறுத்தப் பட்டேன். ராஜியைப்  பெண் பார்க்க வராமல் இருந்திருந்தால், அம்மா கடைக்கு அனுப்பாமல் இருந்திருந்தால், அந்த ஒன்பதேகால் பேருந்தைத் தவற விடாமல் இருந்திருந்தால், ........................... நடப்பது யாவும் நன்மைக்கே என்பது எவ்வளவு சாஸ்வதமான உண்மை ! இதோ, இந்த காயத்ரி எனக்குக் கிடைக்காமல் போனதில் கூட ஒரு நன்மை இருக்கலாம் அல்லவா !

மாலையில் வீட்டுக்குப் போன போது ராஜி வாசலிலேயே அமர்ந்து இருந்தாள். என்னைக் கண்டதும், " அம்மா அண்ணன் வந்திருச்சு " என்று உள்ளே போனாள். முகம் கழுவிவிட்டு வந்தேன். ஒரு தட்டில் கேசரி, பஜ்ஜி, குலோப் ஜாமூன் இத்யாதிகளை எடுத்து " நீ வந்தா சேர்ந்து சாப்டலாம்னு  வெயிட் பண்ணினேன் ணா  " என்றாள். ஏனோ தெரியவில்லைகுபுக் என்று கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது ! கண்ணை சிமிட்டி சிமிட்டி அதை மறைத்தேன். சாப்பிடும் போது,    " பொண்ணு பார்க்க வந்தாங்களே .....என்னாச்சு " என்றேன்.  " ம்ம் வந்தாங்க வந்தாங்க .....வந்து வழக்கம் போல சொல்லி அனுப்பறேன்னு சொல்லிட்டுப் போய்ட்டாங்க....எனக்கு லக் அவ்வளவு தான். ஏன்னா ? நான் அவ்வளவு கருப்பவா இருக்கேன். நான் பார்க்க நல்லா இல்ல தானே ! " என்று ராஜி கண் கலங்கக் கேட்ட போது எனக்கு உள்ளே பதறியது.  " ஏய் ....... இப்ப என்னாச்சு .....இந்த மாப்பிள்ளை இல்லைனா இன்னொருத்தன். இன்னும் ஆறு மாசத்துல நான் படிச்சு, வேலைக்குப் போய் இதை விட நல்ல மாப்பிள்ளையாப் பார்த்து நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் உனக்கு ....நீ  அழாதே ! " என்று நான் நா தழுதழுக்க ராஜியிடம் சொன்னதை அம்மா கன்னத்தில் கை வைத்துக் கொண்டு ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  

Comments

  1. நம் வேதனையில் தான் அடுத்தவரின் வேதனை புரியும்.
    பெண் சிரித்து பேசினாலே காதல் என்ற புரிதலோடு வளர்க்கப்படுவதால் வரும் பிரச்சனை. அதே போல் பெண்களும் எதிர்காலம் குறித்த நல்ல புரிதலோடு இருக்கும் நிதர்சனங்களை கதை காட்டுகிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஓ ! இந்தக் கதையைப் படித்து விட்டீர்களா ? தலைப்பைப் பார்த்து விட்டு படிக்க மாட்டீர்கள் என்று நினைத்தேன் தோழி ! பாலை மட்டும் பருகும் அன்னம் போல, இக்கதையில் இருக்கும் நல்லதுகளின் சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கருத்திட்டிருக்கிறீர்கள் ! நன்றிங்க !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர