Skip to main content

குறிப்பு :  இந்தக் கதையைப் படிக்கும் முன்பு சுஜாதா எழுதிய " ஸ்ரீரங்கத்து தேவதைகள் "  சிறுகதைத் தொகுப்பில் இறுதியாக உள்ள " மாஞ்சு " எனும் கதையைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இது அந்தக் கதையின் தொடர்ச்சியோ அல்லது இரண்டாம் பாகமோ அல்ல. ஒரு இடைச்செருகல் அவ்வளவுதான்  !  அதிகாரப்பூர்வமாக வெளியுலகுக்கு  நான் எழுதும் முதல் சிறுகதை இது ! சுஜாதாவின் ஆத்மா இதைப் பொறுத்தருள வேண்டும் !!!



மாஞ்சு    -  சிறுகதை 






ம்மா, அமெரிக்கா போய்விட்ட பிறகு மாஞ்சுவிற்கு அன்று மாலையே தனிமையின் சூனியம் மெல்ல மெல்ல பிடிபடத் தொடங்கியது ! பகலெல்லாம் மளிகைக் கடையில் ஓடியாடி வேலை செய்ததில் நேரம் போனதே தெரியவில்லை. மாலையில் வீடு வந்ததும் வெறிச்சோ என இருந்தது. அம்மா இருந்தால் வாசலிலேயே அமர்ந்திருப்பாள். வந்ததும் உள்ளே வந்து முன்பே பண்ணி வைத்திருந்த வாழைக்காய் பஜ்ஜியும் காபியும் கொடுப்பாள். பஜ்ஜி அதிக சூடாகவும் இராது, ஆறிப்போயும் இராது, வெதுவெதுப்பாக நாக்கிற்கு இதமாக இருக்கும். இப்படி செய்ய அம்மாவால் தான்  முடியும் ! தெருமுக்கு மலையாளத்தான் டீக்கடையில் போடுகிறானே பஜ்ஜி, அது ஸ்ரீரங்கத்து மேல சித்திரை வீதி முழுக்கப் பிரசித்தம் ! பஜ்ஜி போட்டே அவன் கடையை விஸ்தரித்து விட்டான். ஆனால், அம்மா சமைத்த இந்த பஜ்ஜிக்கு அது ஈடாகுமா ?

மாஞ்சு என்கிற ராமானுஜத்திற்கு சட்டென்று தன் மீதே கோபமாக வந்தது. ச்சே ! எப்போது பார்த்தாலும் தின்பதைப் பற்றியே நினைப்பு ! தனக்கு நா ருசி அதிகம். நன்றாகத் திங்க வேண்டும், காலாட்டிக் கொண்டு திண்ணையில் வேடிக்கை பார்க்க வேண்டும், எப்போதும் சுகமாகவே இருக்கவேண்டும், இதனால் தானே தான் மட்டும் இப்படி, முப்பத்தி நான்கு வயதாகியும் திருமணம் ஆகாமல், ஒரு அர்த்தம் இல்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டு .......... தம்பி பாச்சுவைப் பார்த்தாவது படித்திருக்கலாம். அந்த வயதில் வாலிபத்தின் மிடுக்கில் படிக்க வளையாமல் தான்தோன்றித்தனத்தை அனுபவிக்கும் ஒரு போதையில், இப்போது வாழ்க்கையே குட்டிச்சுவராகி விட்டது ! பாச்சு அமெரிக்காவையே ஆட்டிப் படைக்கிறான் ! அவன் என்னத்தையோ கண்டு பிடித்து அதை உலகமே பயன்படுத்துகிறது  !  மனிதனாகப் பிறந்தால் பாச்சுவைப் போலல்லவா பெயர்சொல்லும்படி, ஊர் மெச்சும்படி வாழ வேண்டும் ! எப்படி வாழ வேண்டும் என்பதற்கு அவன் உதாரணம், எப்படி வாழக் கூடாது என்பதற்கு நான் உதாரணம் !

ஒரு பெண் துணையின் தேவை எவ்வளவு அவசியம் என்பது இப்போது புரிகிறது. நிச்சயமெல்லாம் ஆகி, இவன் தான் புருஷன் என்று முடிவு செய்த பிறகு அந்த அலமேலு அமெரிக்காவில் இருந்து எவனோ பச்சை பச்சையாக ஷேவ் செய்துகொண்டு, வாட்டசாட்டமாக ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு, காரில் வந்து இறங்கியதும் அவள் மனது மாறிவிட்டது ! அவ்வளவு காலம் தன்னைப் புருஷனாக, ஆம்படையானாக மனதில் வரித்திருந்தவள், அந்த அமெரிக்கக் காரனைப் பார்த்ததும், அப்படியே மாறிவிட்டாளே ! அவள் மட்டுமா ? அவள் குடும்பமே அல்லவா மாறிவிட்டது. ஒருவிதத்தில் அவர்களை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது. தன்னால் எல்லாம் அப்படி மாற முடியாது. அவர்கள் வாழ்வின் நெளிவு சுழிவு தெரிந்தவர்கள். தனக்கு அந்த நெளிவு சுளிவுகள் பிடிபடுவதில்லை, பிடிக்கவும் செய்வதில்லை ! பாச்சு, சிறுவயதில் இருந்தே காரியக்காரன் ! இன்ன இன்னது செய்தால் இன்ன இன்ன நிலையை அடைய முடியும் என்பதை அவன் அப்போதே தெரிந்து வைத்திருந்தான்.

தனக்கு அதுபோலெல்லாம் மிகவும் லௌகிகமாக சிந்திக்க இயலவில்லை. வந்தோமா, போனோமா, சாப்பிட்டோமா, தூங்கினோமா என்ற வாழ்க்கைதான் இலகுவாக இருக்கிறது. இதுதான் இயல்பு ! இதை இப்படியே விட்டுவிடத்தான் வேண்டும். தனிமையின் தான் ஒரு மனிதன் சிந்திப்பதற்கு அருமையான களம் ! ஒவ்வொரு மனிதனும், எதோ ஒரு தருணத்தில், எதோ ஒரு தனிமையில் சிந்தித்து சிந்தித்தே தன் வாழ்க்கையை முழுமையாக்கிக் கொள்கிறான். தன் வாழ்வும் முழுமையாகி விட்டதா ? திருமணம் ஆகியிருந்தால் கமா, ஆகவில்லையானால் முற்றுப்புள்ளி. சிந்தித்ததின் விளைவாக மாஞ்சுவிற்குப் பசித்தது. சமையல் அறைக்குச் சென்று பார்த்தான். அமெரிக்கா போவதற்கு அம்மா ஒருவாரத்தில் இருந்தே ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள். லட்டு, முறுக்கு, அதிரசம், பருப்புப் போடி, கருவேப்பிலைப் பொடி, குழம்புப் பொடி, தட்டு முறுக்கு, தேன்குழல், என்று சமையல் அறையிலேயே பழியாகக் கிடந்தாள்.

என்ன இருந்தாலும் பாச்சுவின் மீதும் அம்மாவிற்குப் பிரியம் இல்லாமல் இல்லை. கண் காணாத தேசத்தில் அவன் அநாதை போல அங்கு போய் இருப்பதாக அடிக்கடி சொல்லிப் புலம்புவாள். அதனால் தான் அவனைப் பார்க்கப் போகும் போது தன் பிரியத்தையும் அன்பையும் இது போன்ற பட்ணசங்களின் வடிவில் தன் மகனுக்கு எடுத்துப் போகிறாள். மாஞ்சு சமையல் அறைக்குள் நுழைந்தான். அம்மாவின் வாசனை மீதமிருந்தது. பாத்திரங்களைத் திறந்து பார்த்தான். லட்டு, அதிரசம், முறுக்கு, என அம்மா அமெரிக்கா எடுத்துப் போன அனைத்தும் இங்கே இவனுக்கும் வைக்கப் பட்டிருந்தது. மாஞ்சுவிற்குக் கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது. அம்மா, அம்மாதான் !

போகும்போது அம்மாவின் முகத்தை இன்னும் கொஞ்சம் நன்றாகப் பார்த்திருக்கலாம். எதற்காக அப்படி அழுதாள் ? தனக்குத் தான் அப்போது அழுகை வரவில்லை ! இப்போது உறைக்கிறது ! மாஞ்சு தொண்டையை அடைப்பதைப் போல உணர்ந்தான். அம்மா செய்து வைத்திருந்த எதையும் சாப்பிடத் தோன்றவில்லை. அம்மா மட்டும் இருந்தால் போதும் போல இருந்தது. அம்மா, இனி உன்னை எப்போது பார்ப்பேன், பார்ப்பேனா அல்லது  பார்க்காமலேயே .................மாஞ்சு சட்டென்று அந்த நினைப்பைத் துரத்தினான். அவன் கண்களில் மாலை மாலையாகக் கண்ணீர் வந்தது. சமையல் அறைக்குள்ளேயே குத்துக்காலிட்டு அமர்ந்து கேவி கேவி அழுதான். வெளியே இடிசத்தம் கேட்டது ! தொடர்ந்து தடதடவென மழை ! தான் அழுவதால் தான் மழை பொழிகிறதா ? மழை பொழிந்து ஊர் சுபிட்சமாக இருக்க என் போன்றவர்கள் அழுதுதான் தீர வேண்டுமா ? அழுது முடித்து பசித்தது ! மாஞ்சு ஒரு தட்டு எடுத்து, அம்மா செய்து வைத்திருந்த புளியோதரையைப் போட்டுக் கொண்டான். கூடவே இரண்டுதட்டு முறுக்குகளை " எடுத்துக் கொண்டான். சமையல் அறையிலே அமர்ந்து சாப்பிட்டான். தட்டைத் தானே அலம்பினான். கூடத்திற்கு வந்து பாயில் படுத்தான். கண்ணை மூடினால் அம்மாவின் நினைவு மீண்டும். அதன் பிறகு அந்த அலமேலுவின் நினைவு !

அலமேலு உண்மையிலேயே அழகு தான் ! அதனால் தான் அமெரிக்காவில் இருந்து வந்து கொத்திக் கொண்டு போயிருக்கிறார்கள். ஆனாலும் அந்த அமெரிக்காகாரனுக்குப் பெண்ணா கிடைக்காது !  தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண் தானா அவனுக்கு அகப்பட்டாள் ? அலமேலுவை நிச்சயம் செய்த காலங்களில் மனம் பட்டாம்பூச்சி போல எப்படியெல்லாம் சிறகடித்தது ! அவளைப் பார்க்கும்போதெல்லாம் அடிவயிற்றில் ஒரு பந்து இன்பமாய் உருளுமே ! அவளும் கள்ளப் பார்வை பார்த்து, உதட்டோரத்தில் சிரித்து, வெட்கத்தில் கொஞ்சம் சிவந்து ............அதையெல்லாம் அவளால் எப்படி மறக்க முடிந்தது ? கடைசியில் எல்லாமே பணத்திற்காகவும் பகட்டுக்காகவும் தானா ? தனக்கு இனியும் யார் பெண் கொடுக்க வருவார்கள் ? இனி வாழ்க்கை இப்படித்தானா ? இந்தத் தனிமை தான் நிரந்தரமா ? இப்படி இருப்பதற்குப் பேசாமல் செத்து விடலாமே !  சட் ! மாஞ்சு மீண்டும் மனதிற்குள் வந்த அந்த நினைப்பைத் துரத்தினான்.



ந்த ஸ்ரீரங்கத்து மேலசித்திரை வீதி பொழுது புலர்ந்ததில் பளிச்சென மங்கள குறியீடுகளோடு ஐயங்கார்களின் வாசனையோடு மிளிர்ந்தது. எங்கிருந்தோ ஆண்டாள் பாசுரம் கேட்கத்தொடங்கியது. காலை, ஒவ்வொரு ஜீவனையும் புதுப்பிக்கிறது, புத்துயிராக்குகிறது. ஆனால் மாஞ்சுவிற்கு மட்டும் அது நிகழவில்லை. அவன் நேற்றிரவு எந்த துக்கத்தோடு படுத்தானோ, அப்படியே தான் எழுந்தான். அம்மா அமெரிக்கா சென்று விட்ட தனிமை இன்னமும் உறுத்தியது. இன்று கடைக்கு விடுமுறை சொல்லிவிட்டு மீண்டும் சற்று நேரம் படுத்துக் கொள்ளலாமா என்று நினைத்தான். வேண்டாம், படுத்தால் இந்தத் தனிமை இன்னும் வீரியம் பெற்றுவிடும். வெளியில் போக வேண்டும், வெளி ஆட்களுடன் பேச வேண்டும், முடிந்தவரை வெளியிலேயே இருக்கவேண்டும்.

மாஞ்சு தயாராகி வெளியில் வந்து தெருவில் நடந்த போது, எதிரில் சீனிவாச ஐயங்கார் வந்தார். சாதாரண நாட்களில் மாஞ்சு அவரைக் கண்டு கொள்ளமாட்டான். அந்தக் கிழவர் அவன் முகத்தை வாஞ்சையோடு பார்த்து எதோ சொல்ல அல்லது கேட்க முற்படுவார். இவனுக்குக் கடுப்பாக வரும், அதோடு அந்நாட்களில் அவனுக்குக் காரியங்கள் இருந்தன. இந்நேரத்துக்கு தேர்முட்டித் தெருவில் ஆண்டாள் அடிபைப்பில் தண்ணீர் பிடிக்க வருவாள், பார்க்க வேண்டும், சிரிக்க வேண்டும், அப்புறம் மளிகைக் கடைக்கு நேரமே  போகவேண்டும், சாயங்காலம் சீக்கிரமே  முதலாளியிடம் சொல்லிவிட்டு வந்து பூ பழம் வாங்கி ஆண்டாள் வீட்டுக்கு ஒரு நடை போய்வந்தாலும்  வரலாம், ........இப்படிப்பட்ட காரியங்களால் அவனுக்கு அந்தக் கிழவரை கவனிக்க நேரம் இருந்ததில்லை. ஆனால் இப்போது அவனைக் கடக்கும் போதும் அவர் அதே கரிசனத்துடன் பார்த்தார்.

"
ஷேமமா இருக்கேளா ? " என்று ஒரு வார்த்தை விசாரித்தான். " அம்மா, அமெரிக்கா போயிட்டாளா .....ஆத்துல தனியா இருக்கியா ? நீயும் உன்தம்பி மாதிரி பேஷா வந்திருக்க வேண்டியவன்.......எதோ உன் போறாத வேளை...... விடு .....அப்புறம் நீ என்ன லக்னம் ? " என்றார். " தெரியல மாமா..... மீன ராசி....அது மட்டும் தெரியும் " என்றான். " ம்ம் மீன ராசிக்கு சுக்கிரன் அஷ்டமாதிபதி .....அதான் திருமணம் தகையலை.... நீ அரங்கநாதனுக்கு வைரமுடி சாத்தறதா வேண்டிண்டியா  ......... வெள்ளிகிழமை வெள்ளிக்கிழமை தாயாருக்கு நெய் விளக்கேத்து .....ரெண்டு மாசத்துல உனக்கு ஜாம் ஜாம்னு கல்யாணம் ஆகும் " என்றார்..... " சரி மாமா, கண்டிப்பா செய்யறேன்... நீங்க உடம்பப் பார்த்துக்கோங்கோ .."  என்று மாஞ்சு அவரிடம் விடைபெற்றுக்கொண்டான்.

ஸ்ரீரங்கத்திலேயே இருந்து கொண்டு ரங்கநாதர் சன்னதிக்கு அவன் போய் கிட்டத்தட்ட ஒரு வருடமே இருக்கும். அலமேலு முடிவான வுடனேயே ஒருநடை போயிருக்கலாம். இனி போவோம். அந்த அரங்கன் மீன ராசிக்குக் கண் திறக்க மாட்டானா என்ன ? அதன் பின் மாஞ்சு தன் தினப்படி அலுவல்களில் ஆழ்ந்தான். மாலை வரை ஒன்றும் தெரியவில்லை. அந்தி சாய்ந்ததும் வீட்டுக்குப் போக பயமாக இருந்தது. ஸ்ரீரங்கம் பட்டணம் போனால், படம் பார்க்கலாம்....பார்த்து விட்டு வந்து சாப்பிட்டுப் படுத்தால் தூக்கம் வந்து விடும்... அந்த தனிமைப் பேயிடம் இருந்து ஓரளவு தப்பிக்கலாம். ஸ்ரீரங்கப் பட்டினத்தில் மாஞ்சு படம் பார்த்தான். ஏதோ ஒரு ஜெயஷங்கர் படம். டூ பீஸில் நாயகிகள் நடனம் ஆடினார்கள், அருவியில் ட்ரான்ஸ்பெரென்ட் சேலையில் குளித்தார்கள்...... வில்லனுக்கு ஒரு அட்டகாசமான ரேப் இருந்தது. அப்புறம் ஒரு முதலிரவுப் பாடல் ....துப்பாக்கி ....தொப்பி ........சுபம் !

மாஞ்சு வீட்டிற்கு வந்தான். நேற்றிருந்த தனிமையின் உணர்வு இப்போது இல்லை. அதன் நிறம் மாறியிருந்தது. உடம்பெல்லாம் சூடாகி இருந்தது. படத்தின் எபக்ட் ! சாப்பிட்டான், புளியோதரையும் தயிர்சாதமும் அன்றோடு காலியாகி விட்டது. படுக்கையில் சாய்ந்தான், என்னென்னவோ நினைவுகள், கண்ணை மூடினால், எவளோ விரலளவு மார்புக்கச்சையில் தளுக்கி மினுக்கி ஆடினாள். புரண்டு புரண்டு படுத்தான். உறக்கம் வரவில்லை. மாஞ்சு பொடக்காளிக்குப் போய் வந்தான். இப்போது தூக்கம் வரும்போலத் தெரிந்தது. எப்போது தூங்கினோம் என்று தெரியாமல் தூங்கிப் போனான்.

அடுத்த நாள் மாலையும் அவன் ஸ்ரீரங்கப் பட்டணம் போனான். அதே படம் ! தனிமையைக் கொல்ல வேண்டும். நன்றாகத் தூங்க வேண்டும். மாஞ்சு ஒருமனதாகத் தீர்மானித்தான்.  யாரும் தன்னைப் பார்க்கிறார்களா என்று பார்த்து பம்மி பம்மி " அதை " வாங்கினான். வீடு வந்தும் படபடப்புக் குறைய வில்லை. கதவைச் சாத்தி, வங்கி வந்த அதை எடுத்தான். கண்ணாடிப்புட்டிகுள் பளபளப்பாக கவர்ச்சி காட்டியது அது. சமையல் அறைக்குள் புகுந்து ஒரு தட்டு நிறைய முறுக்கு எடுத்துக் கொண்டான். புட்டியைத் திறந்தான். " பெருமாளே " என்று சொல்லிக் கொண்டு, ஒரு மடக்கு கண்ணை மூடிக் கொண்டு குடித்தான். கசப்பு ! எரிச்சல் ! குமட்டல் !  முறுக்கை வேகமாக எடுத்துக் கடித்துக் கொண்டான். அடுத்த மடக்கு குடிக்கும் போது ஓரளவு தேவலாம் என்றிருந்தது. அதற்கு அடுத்து, அதற்கு அடுத்து அடுத்து ......மாஞ்சு ஒரு புதிய உலகத்தைக் கண்டான். இப்படியே எழுந்து தேர்முட்டிக்குப் போய் அலமேலுவை கதறக் கதற ரேப் செய்து விடலாமா என்ற வெறி வந்தது. வீடெல்லாம் சுற்றியது. புத்துணர்ச்சியாக இருந்தது. மனதில் உள்ளதை எல்லாம் யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

எப்பேர்பட்ட மருந்து இது ! இதை பிராமணர்கள் தொடக் கூடாதாம் ! இது என்ன பிற உயிரை வதைத்தா வருகிறது ! குடும்பம், பிள்ளை குட்டி என்று இருப்பவன் வேண்டுமானால் இதைத் தொடக் கூடாது ! நான் தொடலாம். எனக்கு யார் ? என் மீது அக்கறைப் பட்ட ஒரே புண்ணியவதி, அக்கரைச் சீமைக்குப் போய் விட்டாள். அந்த அலமேலு...............ம்ஹ்ம் ....அந்தப் பெயரிற்கு அவள் அருகதை இல்லாதவள். ஒருவனைப் புருஷனாக நினைத்துப் பழகி, காசுக்காக, பணத்துக்காக, அழகுக்காக வேறு ஒருவனைப் புருஷனாக நினைக்கிறாள் என்றால் வேசிக்கும் அவளுக்கும் என்ன வேறுபாடு ! இதுவும் வேசித்தனம் தான் ! ஆனால் அனுமதிக்கப்பட்டசுற்றங்களால் ஒத்துக் கொள்ளப்பட்ட வேசித்தனம் ! இதுக்கு அதுவே மேல் ! இவர்கள் பண்ணிய அந்த வேசித்தனத்தில் ஒருவனின் மனது துடித்து துடித்து செத்துப் போகிறது என்பதை யார் நினைத்துப் பார்க்கிறார்கள். எல்லாரும் தம்பி பாச்சு போல காரியக்காரர்கள் ! உலகத்தின் பார்வையில் கெட்டிக்காரர்கள் !

"
அவ பொண்ணு அமெரிக்கால பேஷா இருக்காலாம்  கேட்டேளா ? " என்று தன் மகள்களை யாராவது பேசி பொறாமையில் வயிறெரிந்தால் இவர்களுக்குப் பெருமையோ பெருமை ! எவன் எக்கேடு கேட்டால் என்ன ! என்னைக் குடிக்க வேண்டாம் என்று சொல்ல அம்மாவைத் தவிர எந்த பிராமணனுக்கும் தகுதி இல்லை. மனத்தைக் கொலை செய்வதற்கு, எந்த கோர்ட்டும் இல்லை எந்த தண்டனையும் இல்லை ! மேலும் மனது செத்துப் போனால் வெளியே தெரியவா போகிறது. ஆனால் மனது செத்துப் போனவன் தன் புலன்கள் அனைத்தும் சிறிது சிறிதாக ஒடுங்கி, தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து கொஞ்சம் கொஞ்சமாக உடம்பாலும் அதி சீக்கிரத்திலேயே செத்துப் போவான் என்று..............சட்...சட்....சட்  ! மாஞ்சு மீண்டும் அந்த நினைப்பை மனதில் இருந்து துரத்தினான். பாட்டிலை ஓங்கித் தரையில் எறிந்தான். அப்படியே தூங்கிப் போனான்.

அடுத்தநாள் அமெரிக்காவில் இருந்து அம்மா பேசப்போவதாக ஆராமுது மாமா மாஞ்சுவைக் கூப்பிட்டனுப்பினார். மாஞ்சு ஓடிப் போய், " அம்மா " என்ற போது அவன் குரல் தழுதழுத்தது !   " ஏண்டா , நன்னா சாப்பிடறியா ? சந்த்ரா லாட்ஜ் சாப்பாடு உனக்கு ஒத்துக்கறதா ? பட்சணமெல்லாம் சாப்டியோல்லியோ ? சனிகிழமை எண்ணை தேய்ச்சுக் குளிடா. வெளிக்கிழமை அரங்கநாதர் சன்னதில நெய் விளக்கேத்து. நீ அங்கே என்ன பண்றியோ, ஏது பண்றியோன்னு எனக்கு இங்க பக்கு பக்குன்னு அடிச்சுக்கறது. நன்னா இருக்க தானே. ...." என்று அம்மா  பேசிக்கொண்டே போனாள். தன் திருமணம் குறித்து ஏதும் தகவல் வருமா என்று மாஞ்சு மிகவும் எதிர்பார்த்தான். அம்மா அது குறித்து ஏதும் பேசவில்லை. மாஞ்சு, இறுதியில் " வேறே ஏதாவது விஷயம் ......" என்று கேட்டான். " வேற என்ன ! ஒண்ணுமில்ல. உடம்பப் பார்த்துக்கோ " என்றாள் அம்மா. அவ்வளவுதான். மாஞ்சு ஒரு பெருமூச்சோடு போனை வைத்தான்.

அன்றிரவு மீண்டும் குடித்தான். நேற்றை விட அதிகமாக ! விடியற்காலை பத்து மணிவரை தூங்கி, அன்று வேலைக்குப் போகவில்லை. வேறு எங்கும் வெளியில் போக வில்லை. சுருண்டு படுத்து அழுதான். இந்த வாழ்க்கை அவனுக்குப் பிடிக்கவில்லை. இதிலிருந்து விடுதலை கிடைத்தால் தேவலாம் என்றிருந்தது. மாஞ்சு தலையை உலுக்கிக் கொண்டான். வேண்டாம், இந்த நினைப்பு மீண்டும் வரக்கூடாது. அவனுக்கு உயிர்வாழ ஆசை இருந்தது.

காலச் சக்கரம் உருண்டது.ஆறு மாதங்களாகியும் அம்மா வரவில்லை. மது ஒன்றே அவனுக்குத் தனிமை மருந்தாக இருந்தது. ஒரு நாள், காலை மாஞ்சுவிற்கு அடிவயிறு வலித்தது. சட்டென்று, நேற்று மூத்திரம் போனோமா என்று யோசித்தான். யோசித்துப் பார்த்ததில் நேற்று முழுவதும், ஏன் முந்தாநாள் இரவு கூட போகவில்லையே ! முதுகுத்தண்டில் ஜிலீர் என்றது ! நெஞ்சு படபடவென்று வந்தது. இடுப்புக்குப் பின்புறத்தில் ஏதோ ஒரு வலி இருந்து கொண்டே இருந்தது. " ஒன்றுமில்லை ! ஒன்றுமில்லை ! ஏதோ சூடு ! வெக்கை ! திருவெள்ளறையில் போய் சூரணம் வாங்கிச் சாப்பிட்டால் சரியாகப் போகிறது. இனி குடிப்பதைக் குறைத்துக் கொள்வோம். மாஞ்சு எழுந்தான். தலை கிறுகிறுத்தது. பூச்சி பூச்சியாகத் தெரிந்தது. அடிவயிற்றில் பாறையை வைத்தது போல கனத்தது. மாஞ்சு மயங்கி விழுந்தான்.

மீண்டும் நினைவு வந்து எழுந்த போது, அவன் கால்கள் வீங்கி இருந்தன. நடக்க முடியவில்லை. குமட்டுவது போல இருந்தது. எழுந்திருக்க முடியவில்லை. மாஞ்சு அப்படியே வாந்தி எடுத்தான். வாந்தி கொழ கொழவென்று சிவப்பாக இருந்தது. மாஞ்சுவின் உடம்பு வெலவெலத்தது. மீண்டும் குமட்ட, மீண்டும் வாந்தி எடுத்தான். ரத்தவாந்தி ! மாஞ்சு அதைக் கையில் எடுத்துப் பார்த்தான். ரத்தம் தான். சந்தேகத்தோடு மீண்டும் எடுத்துப் பார்த்தான். " அம்மா " என்று அழுதான். தலையில் அடித்துக் கொண்டான். தான் சாகக் கூடாது ! தனக்கு ஒன்றும் இல்லை ! இதோ இப்போதே ஆராமுது மாமாவைக் கூப்பிட்டனுப்பி, ஆஸ்பத்திரி போகவேண்டும்....... இரண்டு நாள் பெட்டில் இருந்தால் அனைத்தும் சரியாகிவிடும்.....விஷயம் கேள்விப்பட்டு அம்மா ஓடிவந்து விடுவாள். அதன் பிறகு தனக்கு தைரியம் வந்துவிடும். உடம்பு குணமாகும். அம்மாவிடம் வெல்லக்கொழுக்கட்டை செய்து தரச்சொல்லி சாப்பிட வேண்டும். அதன் பிறகு குடிக்கவே கூடாது ! அதன் பிறகு அம்மா தனக்கு ஜீயபுரத்திலோ, திருவெள்ளரையிலோ பெண் பார்ப்பாள்...தனக்குத் திருமணம் நடக்கும் ....அப்புறம் பொண்டாட்டியோடு வெள்ளிக்கிழமை அரங்கநாதர் சன்னதியில் நெய்விளக்கு ஏற்றினால் போயிற்று !  .

மாஞ்சு தன் சக்தியெல்லாம் ஒன்றுகூட்டி எப்படியோ எழ முயன்றான். முடியவில்லை. எப்படியாவது எழ வேண்டும் ! அம்மாவை நினைத்துக்கொண்டான். இங்கேயிருக்கும்போதே அவளுக்கு சதா என் நினைப்புதான், இப்போது அமெரிக்காவில் எனக்கு என்னமோ ஏதோ என்று பதறிக் கொண்டிருப்பாளே ! கூடாது ! அவளுக்கு என்னைக் குறித்த எந்தக் கெட்ட சேதியும் போகக்கூடாது. பிரம்மபிரயத்தனப் பட்டு மாஞ்சு எழுந்து விட்டான். " அம்மா " என்று அரற்றியபடியே தள்ளாடி வெளியே போனான். மனதில் ஒருகணம் அந்த அலமேலுவின் முகம் மங்கலாகத் தெரிந்தது. இவள் நினைவு ஏன் வருகிறது என்று அந்த சூழலிலும் மாஞ்சு குழம்பினான். என்ன இருந்தாலும் அவளை ஒருகாலத்தில் தன் மனைவியாக வரித்திருந்தானே அதனால்தான் அவள் முகம் மனதில் தோன்றியதா ?    
கதவு திறந்து வெளியே வந்த மாஞ்சுவின் கண்ணில், வாசல் தெளித்துக் கொண்டிருந்த சீனிவாச ஐயங்காரின் பேத்தி கோமளா தென்பட்டாள். அனிச்சையாகத் திரும்பிப்பார்த்தவள் இவன் கோலத்தைக் கண்டு " பெருமாளே " என்று தண்ணீர் பாத்திரத்தைக் கீழே போட்டு விட்டு, தன் தாத்தாவைக் கூப்பிட வீட்டுக்குள் ஓடினாள்.  தன் உயிரின் சக்தியையெல்லாம் தொண்டைக்குழியில் கொண்டுவந்து  :" அம்மா " என அலறியபடி வாசலிலேயே விழுந்தான். இனி அவன் தன் அம்மாவின் முகத்தையோ மீண்டும் ஸ்ரீரங்கநாதரையோ பார்க்கவே போவதில்லை என்று அப்போது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.








Comments

  1. // மீண்டும் ஸ்ரீரங்கநாதரையோ பார்க்கவே போவதில்லை என்று அப்போது அவனுக்குத் தெரிந்திருக்கவில்// சுஜாதாவின் இந்தக் கதையை படித்தது இல்லை. அதனால் இரண்டாவது பாகம் போல் தெரியவில்லை. நன்றாக கதை சொல்லி உள்ளீர்கள்

    படித்துப் பாருங்கள்

    தலைவன் இருக்கிறான்

    http://seenuguru.blogspot.com/2012/07/blog-post_09.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர