Thursday, April 26, 2012

சில நிராகரிப்புகளும் ஒரு தெளிவும்

கடைசியில்
அவளும் என்னை
நிராகரித்து விட்டாள் !

மெலிந்த தேகம்
மாநிறம்
சராசரித் தோற்றம்
நடுத்தர வர்க்கம் !

பட்டம் ஒன்று
படித்திருந்தாள் !
கட்டம் கட்டிய
புகைப்படத்தில்
விட்டம் பார்த்து
சிரித்திருந்தாள் !

மூன்று நாட்களாய்
மனதளவில் அவளை
மனைவியாய்
வரித்திருந்தேன் !

இவள் தான்
இவள் தானென்று
இருநூறு முறையாவது
இதயத்திடம்
இறுமாந்திருப்பேன் !

நிறத்தைக் காரணங்காட்டி
நிராகரித்து விட்டாள் !

வாழ்த்துக்களோடு
விடை பெற்றுக் கொண்டாள் !

வாழ்த்துதல்
நிராகரிப்பின்
நாசுக்கான மொழி !

திருமணச் சந்தையில்
விலை போகாததென்
தலையெழுத்து தானென
அலை பாயும் மனதைத்
தேற்ற  முயன்று
தோற்றுக் கொண்டிருந்தேன் !

மாலை வந்ததும்
ஆலையில் இருந்து
வேலை முடிந்து
சாலையில் நடந்தேன் !

சில காட்சிகள்
கண்ணில் தட்டுப்பட்டதும்
மனக்கவலை
சற்றே மட்டுப் பட்டது !

அவையாவன,

ஊன்று கோல் பற்றி
சாலை கடக்கக்
காத்திருந்தான்
ஊனமுற்ற ஒருவன் !

எப்போது வீடு போய்ச் சேர்வானோ ?

வாங்குவோர்கள்
வாங்குவார்களென
காய்கறிகளைக்
கூறு கட்டி வைத்திருக்கிறாள்
நூறு தொடும் கிழவியொருத்தி !

யாராவது வாங்குவார்களா ?

குப்பையை ஓயாமல்
கிளறிக் கிளறி
அலும்பு பண்ணுகிறது
அந்தத் தெருநாய்
எலும்புத் துண்டாவது கிடைக்குமென !

கிடைத்திருக்கிறதா ?

ஒவ்வொருவராக
மறுத்த பின்னும்
ஒவ்வொருவரிடமும்
மறுபடி மறுபடி
கையேந்துகிறான் அந்தக்
கிழட்டுப் பிச்சைக் காரன் !

இன்றிரவு சாப்பிடுவானா ?

அன்றாடம்
மேஜைக்கு மேஜை
மன்றாடுகிறான்
நடுத்தர உணவகமொன்றில் - அந்த
நடுத்தர வயதுக்காரன் !

அவன் மாதச் சம்பளம் எவ்வளவு ?

கக்கத்து வியர்வையோடு
கடந்து போகிறான்
பக்கத்து மாநிலத்தான் !

அவனுக்கும் குடும்பம் இருக்குமோ ?

இல்லம் வந்ததும்
உள்ளம் தெளிந்தது !
மனப் பள்ளம் ஒன்று
மண் மூடிப் போனது !

எதாவது செய்ய வேண்டும் !
எனக்கிருக்கும் நம்பிக்கை !
என்னால் இயன்ற சிரத்தை !

பேப்பரும்
பேனாவும் எடுத்து
பேசாமல் அமர்ந்து
ஸ்ரீ ராமஜயம் எழுத ஆரம்பித்தேன் !

என்னை
எனக்குக் காட்டிய
அவர்களுக்காகவும் !
அவர்களை
எனக்குக் காட்டிய
அவளுக்காகவும் !!!

4 comments:

 1. your creation is Simply awesome and fantabulous

  ReplyDelete
  Replies
  1. மனம் திறந்த தங்கள் பாராட்டிற்கு நன்றிகள் தோழி ! விரைவில் தமிழில் தாங்களும் படைப்புகள் வழங்க வேண்டுகிறேன். வருகைக்கு நன்றி !

   Delete
 2. பிரமாதம்! என்னை எனக்குக் காட்டிய அவர்களுககாகவும், அவர்களை எனக்குக் காட்டிய அவளுககாகவும்! இந்தக் கடைசி வரிகளில் மனதைத் திருடி விட்டது கவிதை! மனத்தை விட நிறமா பெரியது? சிந்திக்க வைத்த அருமையான கவிதை!

  ReplyDelete
 3. உயிரற்றது என்று அறியாமல்
  நிழலை நேசித்து நிஜத்தில் தொலைந்துபோகிறார்கள் பலர்
  நிதர்சனம் அறிகையில் வெறுத்துப்போகும் நிழலும் வாழும் வாழ்க்கையும்!
  அருமையான பதிவு!
  மனதின் உணர்வுகளை அழகாய் பதித்திருக்கிறீர்கள் சார்!

  ReplyDelete