Skip to main content

ஒரு சாமானியனின் பிரம்மச்சரிய டைரிக் குறிப்பு

ஒரு சாமானியனின் பிரம்மச்சரிய டைரிக் குறிப்பு

மாமன் மகள்


எனக்கு மொத்தம் ஐந்து தாய் மாமாக்கள். அவர்களில் அநேகமாக அனைவருக்குமே
பெண் பிள்ளைகள் இருந்தாலும் அதில் துரைராஜ் மாமாவின் மகளான பிரியாவின்
மீது எனக்கு ஒரு ஈர்ப்பு. பிரியாவிடம் இதுவரை ஒரு வார்த்தை கூடப்
பேசியதில்லை. ஏனெனில் துரைராஜ் மாமாவின் மனைவி விஜயா அத்தைக்கு
சுற்றத்தாரோடு ஒட்டி வாழ்வது என்பது பிடிக்காமல் இருந்தது. மற்ற நான்கு
மாமாக்கள் வீடுகளுக்கும் சகஜமாகப் போய்வரும் சொந்த பந்தங்கள் இந்த ஒரு
மாமாவின் வீட்டில் கால் எடுத்து வைக்க மட்டும் சற்று அதிகப்படியாகவே
தயக்கம் காட்டுவார்கள். குறிப்பாக என் அம்மாவிற்கும், அத்தைக்கும் ஆகவே
ஆகாது. இரண்டு மனிதர்களுக்கு இடையே இயல்பிலேயே இருக்கும் வெறுப்பையும்
காழ்ப்புணர்ச்சியையும் நான் இவர்கள் விஷயத்தில் கண்கூடாக
உணர்ந்திருக்கிறேன். நடந்த சம்பவங்களின் மூலம் நான் அதனை உணர்ந்து கொண்ட
போது " அட ! இவங்க ரெண்டு பேத்துக்கும் ஆகாது போலவே " என்று ஒரு அற்ப
திருப்தி மனதில் ஏற்பட்டது. திருப்தி ஏனென்றால் நடக்கும் சம்பவங்களை
அடிப்படையாக வைத்து ஒரு உண்மையை உணரும் போது இயல்பிலேயே அந்த உண்மையை
நாம் உணர்ந்து கொண்டோம் என்று ஒரு திருப்தி வருமே அப்படி ஒரு திருப்தி
அது. ஒரு கணக்கை அதன் வழிமுறையிலேயே போட்டு விடையைக் கண்டறியும் போது
ஒரு திருப்தி வருமே அது போல எனவும் வைத்துக் கொள்ளலாம்.

பிரியாவிற்கும் எனக்கும் சம்பவங்களே இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு
நடந்த அந்த ஒரே ஒரு துளி சம்பவத்தைத் தவிர. அதற்கு முன்பு ஒரு சிறிய
ஈஸ்மென்ட் கலர் பிளாஸ்பேக் !

நான் முதுகலை வேதியியல் படிப்பை கோயமுத்தூரில் சென்று படிக்க நேர்ந்தது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மிசன் வித்யாலயா ஹாஸ்டலில் தங்கிப் படிக்க
வேண்டுமென்றால் மாதத்திற்கு ஆயிரத்தி ஐநூறு சொச்சம் தேவைப்படும். அதோடு
முன்பணமாக வருடம் பத்தாயிரம் கட்ட வேண்டும். அதற்கு அப்போது எங்கள்
வீட்டில் வசதி இல்லை. கோயமுத்தூரில் என் சின்னத்தாத்தா இருக்கிறார்.
அப்பாவின் அப்பாவுடைய தம்பி. அவருக்கு இரண்டு வீடுகள் இருந்தன. இரண்டு
வீடுகளில் ஒன்றில் தங்கிக் கொண்டு, மற்றொன்றை வாடகைக்கு விட்டிருந்தார்.
அவர் வாடகைக்கு விட்டிருந்த அந்த வீட்டை ஒட்டினாற்போல ஒரு அறை காலியாக
இருந்தது. அந்த அறையில் நான் தங்கிக் கொள்ளும்படி ஏற்பாடாயிற்று. நான்
இருந்த அறைக்குக் கூப்பிடு தூரத்தில் தான் பிரியாவின் வீடு இருந்தது.
ஆனால் பிரியாவை நான் கோயமுத்தூரில் தங்கி இருந்த இரண்டு வருடங்களில் ஒரே
ஒருமுறைதான் பார்த்திருக்கிறேன்.

பெண்களின் விஷயத்தில் என்னிடம் ஏகக் கடுபிடியாக நடந்து கொள்கிறாரென்று
ஆண்டவன் மீது எனக்குத் தனிப்பட்ட கோபம் உண்டு. ஆனால், இரண்டாவது ஆட்டம்
சினிமாவிற்குப் போகிறேன் என்று சொன்னால், போக வேண்டாம் தூக்கம் கேட்டுப்
போகும் என்று சொல்லும் அம்மாவிடம் நமக்கு முதலில் கோபம் ஏற்பட்டு, பிறகு
நமது நலன் கருதித்தான், நம் மீது இருக்கும் அன்பினால் தான் அதை அவர்கள்
அப்படிச் சொல்கிறார்கள் என்ற ஒரு ஆறுதல் ஏற்படுமே அப்படித்தான் ஆண்டவன்
எனக்குப் பெண்களின் சூழலை ஏற்படுத்தாததையும் உணர்கிறேன்.

கோயமுத்தூரில் அம்மா சில நாட்கள் என்னோடு தங்கியிருந்து எனக்கு சமையல்
கற்றுக் கொடுத்துக் கொண்டும், ஒரு தனிமைக்கு என்னைத் தயார் படுத்தவும்
செய்த கால கட்டங்களில், பக்கத்தில் இருக்கும் தன் அண்ணன் வீட்டிற்கு
அதாவது எனது கண்ணோட்டத்தில் பிரியாவின் வீட்டிற்கு சும்மா பொழுது
போகவில்லையே என்று தொலைகாட்சி பார்ப்பதற்காகச் சென்றிருக்கிறார்கள்.
அப்போது அந்த விஜயா அத்தை என் அம்மாவிடம் நடந்து கொண்ட முறை மிகவும்
மூன்றாந்தரமானது. உறவுகள் வீடு தேடி வரும்போது உபசரித்தால் அந்த உறவுகள்
தம்மிடம் ஒட்டிக் கொண்டு ஏதேனும் உதவி கோரும்படி நேர்ந்து விடலாம்
என்கிற ஜாக்கிரதை உணர்வு அந்த அத்தைக்கு நிரம்பவே உண்டு. ஒருவேளை,
அவர்களின் பால்ய வயதில் உறவுகள் ஒட்டிக்கொண்டு கழுத்தறுத்த சம்பவங்களால்
அவர்கள் பாதிக்கப் பட்டிருக்கலாம். அதனால் உறவு என்றாலே ஒரு நிரந்தரமான
வெறுப்பு அவர்கள் மனதில் ஒரு வடுவாக நிலைகொண்டிருக்கலாம். அன்று அந்த
அத்தை என் எம்மாவிடம் நடந்து கொண்ட விதத்தில் " இனி செத்தாலும் அந்த
வீட்டில் நான் காலடி எடுத்து வைக்க மாட்டேன் " என்று என் அம்மா சபதமே
செய்தார்கள். பிரியாவைப் பற்றி நான் கட்டியிருந்த சிறிய அழகான கற்பனை
மணல் வீடு அப்போதே இடிந்து சரிந்தது.

பிரியாவை அவள் அம்மாவோடு நான் இருந்த தெருவில் ஒரு முறை பார்த்தேன்.
சுமார் இருபது வருடங்களுக்குப் பிறகு அவளை அப்போதுதான் முதன் முறையாகப்
பார்க்கிறேன். நான் மனதிற்குள் கற்பனை செய்து வைத்திருந்த பிரியாவிற்கும்
நேரில் இருந்த பிரியாவிற்கும் அனேக வேறுபாடு. என் கற்பனை பிரியாவோடு
ஒப்பிடும் போது நிஜப் பிரியா அத்தனை அழகாக இல்லை. அவள் கண்ணாடி
அணிந்திருந்தாள். முகத்தில் அம்மைத் தழும்புகள் இருந்தன. முக லட்சணம் கூட
அவ்வளவாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆனாலும் என்னால் பிரியாவைக்
காதலிக்க முடியும் என்று தோன்றியது. காதல் புற அழகுகளுக்கு
அப்பாற்பட்டது என்பதை அப்போது தான் நான் உணர்ந்தேன். பிரியாவின்
முகத்தில் குடி கொண்டிருந்த எதோ ஒரு அறிவுப் பூரவமான சுழி அவள் மீதான
ஈர்ப்பை எனக்கு ஏற்படுத்தி இருக்கலாம். இதெல்லாம் எனக்கு ஏற்பட்ட
உணர்வுகள் தான். ஆனால் பிரியா என்னை அந்தத் தெருவில் ஏறெடுத்தும் பார்க்க
வில்லை. தெருவில் நாம் நடக்கும் போது சோம்பேறித்தனமாக ஒரு சொறி நாய்
நம்மைக் கடந்து சென்றால் அந்த நாயை நாம் அசுவாரசியமாகப் பார்ப்போமே அந்த
அளவுப் பரிச்சயத்தைக் கூட பிரியா எனக்குக் காட்டவில்லை. ஒருவேளை அவள்
தன் தாய் சொல்லைத் தட்டாத பிள்ளையாக இருக்கலாம்.

அதன் பிறகு நான் என் வாழ்க்கையிலேயே மிகவும் மோசமான துன்பங்களை
பிரியாவின் வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த அந்தக் காலகட்டங்களில்
அனுபவித்தேன். நான் தங்கியிருந்த வீட்டிற்கு உரிமையாளரான அந்த
சின்னத்தாத்தா வுக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி ஒத்து வரவில்லை. அவர் என்
அத்தைக்காரியை விட சரியான சைக்கோவாக இருந்தார். அந்த அத்தை ஒரே அடியாகக்
கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் என்றால் இவரோ இன்ச் பை இன்ச்சாக
வெளியே தள்ளுவார். முன்னதில் அவமானம் சடுதியில் நிகழ்ந்து முடிந்து
விடும். பின்னதில் அவமானத்தை அணு அணுவாக அனுபவிக்க வேண்டும். நான்
அவமானப் படுத்தப் பட்டேன். குத்திக் காட்டப் பட்டேன். சபிக்கப் பட்டேன்.
பழிவாங்கப் பட்டேன். ஆனாலும் கல்லூரி முடிந்து அறைக்குத் திரும்பும்
போதெல்லாம் என்னைக் கடக்கும் பேருந்துகளில் அமர்ந்தபடி என் மாமன் மகள்
பிரியா எனக்குத் தெரியாமல் என்னைப் பார்த்திருப்பாளோ என்று நான் கற்பனை
செய்து கொள்வேன்.

இரண்டு வருடங்கள் கல்லூரிப் படிப்பை ஒரு வழியாக முடித்து கோயமுத்தூருக்கு
குட்பை சொல்லி விட்டு வந்தேன். ஆனாலும் பிரியாவின் மீதிருந்த அந்தக்
கவர்ச்சி எனக்கு அப்படியே இருந்தது. பன்னாட்டு நிறுவனத்தில் பணிக்கு
சேர்ந்து கணிப்பொறியும், சமூக வலைத்தளங்களும் எனக்கு அறிமுகமான பிறகு,
அந்த சமூக வலைத்தளங்களில் எல்லாம் நான் பிரியாவைத் தேடிக் கொண்டே
இருந்திருக்கிறேன். அவள் எனக்கு அப்போது போலவே இப்போதும் கிடைக்கவில்லை.
அதன் பிறகு சமீபத்தில் ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு, அம்மாவின் அம்மா
காலமாகி விட்டார்கள் என்று பல்லடம் சென்றிருந்த போது ப்ரியாவைப்
பார்த்தேன். அவளின் புறத்தோற்றம் இப்போது அழகாக மாறியிருக்கும் என்ற என்
எண்ணம் பொய்யானது. முன்பு போலத்தான் இருந்தாள். இந்த முறை அவள் என்னைப்
பார்த்தாள். அவளின் பார்வை ஒருசில வினாடிகள் என் மீது பட்டுவிட்டுத்
திரும்பியது. அந்தத் தருணத்தில் பதிலுக்கு நானும் அவளைப்
பார்த்திருந்தால் எங்கள் பார்வைகள் சங்கமமாகி காந்தர்வமாக எங்களுக்குள்
அப்போதே திருமணம் நடந்திருக்கும். ஆனால் பாட்டி செத்துக் கிடக்கும் போது
மாமன் மகளை சைட் அடிக்க எனக்கு மனம் வராததால், எங்களுக்குள் பார்வைக்
கலப்பு நிகழவே இல்லை. அப்போதும் அவள் மீதான கவர்ச்சி எனக்குக்
குறையவில்லை.

இந்த முறையும் பிரியாவும் நானும் பேசிக் கொள்ளவில்லை. சாதாரணமாக எனக்கு
அமைதியான அழுத்தமான பெண்களைப் பிடிக்காது. பிரியா கூட அமைதியான அழுத்தமான
பெண் தான். எல்லா வகையிலும் எனக்குப் பிடிக்காத பிரியாவின் மீது எனக்கு
எப்படி அந்தக் கவர்ச்சி ஏற்படுகிறது என்பது மட்டும் புரியவே இல்லை.

பிரியா என் மனைவியாக மாட்டாள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்ட
நிலையில், முதன் முறையாக நான் கடத்தூருக்குப் பெண் பார்க்கப் போனேன்.
இவள் வேறு ஒரு பெண். பெண்ணின் புகைப் படத்தை நான் பார்க்கவில்லை. எனது
புகைப்படத்தைப் பெண் பார்க்க வில்லை. அந்தப் பெண்ணைப் பற்றி ஒரு கற்பனை
பிம்பத்தை மனதிற்குள் வைத்திருந்தேன். அந்தப் பெண்ணின் வீட்டிற்கு எனது
உறவினர்கள் பத்து பேர் புடை சூழ நாங்கள் சென்ற போது, பெண் வீட்டார்
வாசலில் நின்று எங்களை வரவேற்க வில்லை. நாங்களாக வீட்டிற்குள் போன
பிறகுதான் " வாங்க " என்ற ஒற்றை வரவேற்பு கிடைத்தது. அந்த வீட்டின்
நடுக் கூடத்தில் நடு நாயகனாக நான் அமர்த்தப் பட்டேன். நடைப் பெறப் போகும்
அந்த நிகழ்ச்சிக்கு நான் தான் நாயகன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
பெண்ணின் தந்தை என்னை சற்றுத் தள்ளி அமர்ந்து இருந்த படி கூர்ந்து
கவனித்துக் கொண்டிருந்தார். எனது மேனரிசங்களை அவர் அங்கிருந்தே எடை
போடுவதை நான் உணர்தேன். அவ்வாறு எடை போடப் படுவது எனக்குச் சுத்தமாகப்
பிடிக்காத ஒன்று. அவ்வாறு எடை போடுபவன்களின் இரண்டு காலையும் பிடித்து
ஒரு வாரு வாரி ஓங்கி துணி துவைக்கும் கல்லில் போட்டுத் தப்பி எடுக்க
வேண்டும் என்ற ஒரு வெறி எனக்கு வரும். இப்போது பெண்ணின் தந்தை என்னை
சரமாரியாகக் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.

நான் அதை ஒரு இன்டெர்வியு போலத்தான் உணர்ந்தேன். முதலில் பெண்ணின் அம்மா
எங்கள் அனைவருக்கும் எலுமிச்சம்பழ சாறு கொடுத்தாள். நான் அந்த அம்மாவின்
கையைப் பார்த்தேன். நல்ல வேலை முடி இல்லாமல் மொழு மொழு வென்று இருந்தது.
இந்த இடத்தில் எனது ஒரு தியரியை நான் உங்களுக்கு விளக்கியாக வேண்டும்.
அந்தத் தியரிப் படி, ஆண்களில் இரண்டு வகை இருக்கிறார்கள். முதல் வகை
உடம்பில் குறிப்பாக மார்பில் முடி இருப்பவர்கள், எடுத்துக் காட்டு நடிகர்
சத்தியராஜ் . இரண்டாவது வகை உடம்பில் முடி இல்லாதவர்கள். எடுத்துக்
காட்டு ரஜினிகாந்த். அதே போல பெண்களிலும் இரண்டு வகை உண்டு. முதல் வகை
பொடிப்பொடியாக உடம்பில் பூனை முடி முளைத்தவர்கள் இவர்களுக்குக் கையில்
காலில் இலேசாக முடி முளைத்திருக்கும், இரண்டாவது வகை உடம்பில் சுத்தமாக
முடியே இல்லாமல் மொழுமொழு வழுவழுவென்று இருப்பவர்கள். இதில் முதல் வகை
ஆண்கள் இரண்டாவது வகைப் பெண்களையும், இரண்டாவது வகை ஆண்கள் முதல் வகைப்
பெண்களையும் இயற்கையாகவே விரும்புவார்கள். அவர்களுக்கு இடையே கெமிஸ்ட்ரி
அற்புதமாக வொர்க் அவுட் ஆகும். ஆக, எனது அந்தத் தியரிப் படி, பெண்ணின்
அம்மாவிற்குக் கையில் முடி இல்லாமல் மொழு மொழு என்று இருந்தது. பெண்ணும்
அவள் அம்மா போலவே இருந்து விட்டால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்.

அரை மணிநேரமாகியும் பெண்ணை
அவர்கள்
கூட்டி வரவில்லை. மறுபடியும் பெண்ணின் அம்மா ஒரு தட்டில் ஸ்வீட் காரம்
வைத்துக் கொண்டு வந்தார்கள். புரோக்கர் என்னிடம், " தம்பி மொதல்ல ஸ்வீட்
எடுத்து சாப்பிடுங்க " என்றார் தரகர். நான் தட்டில் இருந்த ஜிலேபியை
எடுத்துக் கடித்தேன். " சீக்கிரம் பெண்ணைக் காட்டித் தொலையுங்களேண்டா
என்று மனதில் தவித்தேன் . ஒருவழியாக நாங்கள் ஸ்வீட் காரம் தின்று
முடிக்கும் வரை பொறுமை காத்த பெண்ணின் தந்தையார், அதன் பிறகு தன் சக
பத்தினியிடம், " ஏம்மா விஜியைத் தான் கூட்டிட்டு வாவேம்மா .... எவ்வளவு
நேரம் அவங்க வெயிட் பண்ணுவாங்க ! " என்று மெலிதாகக் கடிந்து கொள்வதைப்
போலச் சொன்னார். மனுஷன் பிள்ளையையும் கிள்ளி விட்டு விட்டு,
சூப்புவதற்கு வாயில் தன் விரலையும் வைக்கிறார் . க்க்க்காளி! அவர்
திருவாய் மலர்ந்து சொன்ன அந்த நேரம் பஞ்சாங்கப் படி சரியான ராகு காலம்.
அந்த ராகு காலம் ஆரம்பிப்பதற்கும் நான் பெண்ணைப் பார்ப்பதற்கும் சரியாக
இருக்கும்.

பெண் கறுப்புப் புடைவை அணிந்து வெளிப்பட்டாள். நல்ல சிவப்பு. நல்ல
முகக்களை. சர்வ அங்க லட்சணம். ஆனால் ஆனால் நான் பயந்தது நடந்தது. பெண்ணை
எனக்குப் பிடிக்கவில்லை. அந்தப் பெண் என்னைக் கவர வில்லை. ஒரே வினாடி
தான் அவளைப் பார்த்தேன். அந்த ஒரு வினாடி தந்த ஏமாற்றம் அதற்கு மேல்
அவளைப் பார்க்க விடாமல் தடுத்தது. அவள் பவ்யமாக எனக்குத் தேநீர் கொண்டு
வந்து கொடுத்த போதும் நான் அவளை ஏறிட்டுப் பார்க்க வில்லை. அதற்கு மேல்
பெண் கூடத்தில் அமர்த்தப் பட்டாள். எனது உறவினர்கள், " பெண்ணைப் பார்
...... பெண்ணை நன்றாகப் பார்த்துக் கொள் ....." என்று சந்தையில்
விற்பனைக்கு வரும் ஒரு பொருளைப் பார்க்கச் சொல்வது போலச் சொன்னார்கள்.
நான் மிகவும் பிரயத்தனப் பட்டு தலையை உயர்த்தி அந்தப் பெண்ணைப் பார்க்க
அவளும் என்னைப் பார்க்க எங்கள் பார்வைகள் ஒரு மைக்ரோ வினாடி வெட்டிக்
கொண்டன. ஷிட் ......... அங்கே அவளுக்கும் என்னைப் பிடிக்கவில்லை என்பதை
அவள் பார்வையில் இருந்தே உணர்ந்தேன். " இந்த மசுருக்குத்தான் போட்டாவை
காட்டித் தொலைச்சிருக்கணும் " என்று புலம்பிக் கொண்டேன். அவள் எனக்கு டீ
கொடுக்கும்போது அவளது கையில் பூனை முடிகளைப் பார்த்து விட்டிருந்தேன்.
இவள் முதல் வகை பெண். நானும் முதல் வகை ஆண். ம்ஹூம் ஒத்து வராதே. இது
எப்படியும் தோல்வியில் முடிந்து விட வேண்டும் என்று என் மனது வேண்டாத
கடவுளையெல்லாம் வேண்டிக் கொண்டது. அவ்வாறே நான் பெண் பார்த்து விட்டு
வந்த இரண்டு நாட்கள் கழித்து, மாப்பிள்ளை பையன் சென்னையில் அவ்வளவு
தொலைவில் வேலை செய்வது எங்களுக்கு உசிதமாயில்லை என்று உறவினர்களிடம்
சொல்லி விட்டிருந்தனர் பெண்வீட்டார்.

சரி ! போய்த் தொலைகிறது என்று பழையபடி பிழைப்பைப் பார்க்க என் மனது
ஒப்பவில்லை. இந்த முதல் பெண்ணைப் பார்க்கப் போன தருணங்களில் எல்லாம்
என்னை நான் அவளின் முகம் தெரியாத கணவனாகவே வரித்துக் கொண்டேன். எனக்குத்
திருமணம் அவளோடு ஆகியே விட்டது என்பதாக பாவித்திருந்தேன். ஆனால் அவளை
எனக்குப் பிடிக்காமல் போன அந்த ஏமாற்றம் மனதில் வலித்தது. ஒரு பெண் துணை
வேண்டுமே என்று மனது ஏங்க ஆரம்பித்தது. காதலியோடு குசு குசுவென்று பேசும்
சக ஊழியர்களையும் அறை நண்பர்களையும் பொறாமையோடு பார்த்தேன். எனக்கு
மட்டும் ஏன் இப்படி என்று உள்ளுக்குள் பொருமினேன். ஒரு தரமான நல்ல
மனைவியை அடைவது தான் இப்போதைக்கு என் வாழ்நாள் லட்சியமே !

எப்போதுமே வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே வீட்டிற்குப் போன் செய்து
பேசும் நான், தினம் தினம் போன் பண்ண ஆரம்பித்தேன். வழக்கமான நலன்களை
விசாரித்து விட்டு, " அப்புறம் ........ வேற ஏதாவது பார்த்தீங்களா ? "
என்று நான் கேட்டால் மறுமுனையில் அம்மா, பையன் கல்யாணத்தைப் பற்றித்
தான் கேட்கிறான் என்று புரிந்து கொள்ளும் அளவுக்கு அந்த கேள்வியை
அடிக்கடி பிரயோகித்தேன். வீட்டிலும், தெற்கே ஒரு பெண் இருக்கிறாளாம்,
இரண்டு நாளில் சொல்கிறார்களாம், வடக்கே ஒரு பெண் இருக்கிறாளாம், மூன்று
நாளில் சொல்கிறார்களாம், மேற்கே ஒரு பெண் இருக்கிறாளாம் அமாவாசை
கழித்து சொல்கிறார்களாம், அப்புறம் எது விட்டுப் போயிற்று .?: ஆ கிழக்கு
.......கிழக்கே ஒரு பெண் இருக்கிறாளாம், பொடக்காளிக்குப் போய்விட்டு
வந்து சொல்கிறார்களாம்........... இந்த ரீதியில் பதில் மட்டும் வந்தது.
ஒவ்வொரு முறையும் அவர்கள் சொல்லும்போது அவர்கள் குறிப்பிடும் முகம்
தெரியாத அந்தப் பெண்ணை என் மனைவியாக வரித்து ஒரு குறிப்பிட்ட காலம்
அவளோடு வாழ்ந்து விடுவேன்.

நாளடைவில் நச்சரிக்க ஆரபித்தேன். எனது போன் வந்தாலே அம்மா சில சமயம்
எடுப்பதில்லை. எனக்கு என்னவோ என் பெற்றோர் முழு மூச்சோடு எனக்குப் பெண்
தேடவில்லையோ என்று ஐயமாக இருந்தது. அவர்கள் மேல் கோபம் கோபமாக வந்தது.
இந்நிலையில் பிரியாவின் அலைபேசி எண் தம்புவிடம் கட்டாயம் கிடைக்கும்
என்று உள்ளே பட்சி சொன்னது. தம்பு என் மாமா பையன். பிரியா அவனுக்குத்
ஒன்றுவிட்ட தங்கை முறை. சும்மா ஒரு மெசேஜ் தட்ட, அவனிடம் இருந்து
உடனடியாக நம்பர் வந்தது. பிரியாவின் நம்பர். என் லட்சிய நம்பர். இந்த
நம்பரைப் பெற நான் என் வாழ்நாளில் முப்பது வருடங்கள் காத்திருக்க
வேண்டியிருக்கிறது. பிரியா அவ்வளவு அழகி இல்லை. அவளுக்கு என்று ஆண்
நண்பர்கர்களோ, காதலர்களோ இருந்து தொலைக்க வாய்ப்பு இல்லை. பிரியா
கட்டாயம் எனக்கு ரெஸ்பான்ஸ் பண்ணுவாள் என்று நம்பினேன். அவள் அம்மாவைப்
போல குறுகிய மனப்பான்மை அவளுக்கு இருக்காது என்று தீர்மானித்தேன்.

அவளின் நம்பர் வாங்கியது ஒரு இரவில். அப்போது எனக்கு இரவுப் பணி. அந்த
நம்பர் கிடைத்ததுமே எல்லாம் இனிமையாக மாறிவிட்டதைப் போலக் கற்பனை செய்து
கொண்டேன். சக அலுவலக நண்பர்களிடம் பேசும்போது என் குரல் இனிமையாக
இருந்ததை மகிழ்வோடு மனதில் குறிப்பெடுத்துக் கொண்டேன். இரவு முழுவதும்
என்னைச் சுற்றி இளையராஜாவின் காதல் கீதங்கள் லோ டெசிபலில் மென்மையாக
ஒலித்தன. எனக்கு மிதப்பதைப் போல இருந்தது. பிரியா என் மாமன் மகள்.
அவளுடன் பேச எனக்கு எல்லா உரிமையும் உள்ளது. நாளையோடு என் வாழ்வின்
வறட்சிக்காலம் முடிந்து வசந்த காலம் தொடங்குகிறது. இப்படி ஏகத்துக்கும்
கற்பனை பண்ணிக் கொண்டு இரவுப்பணியில் கிடைத்த கேப்பில் சற்று உறங்கியும்
போனேன். உறக்கம் தெளிந்து விடியற்காலையில் அதே கற்பனையை முடுக்கி விட்ட
போது அந்தக் கற்பனை சற்று சுரத்து குறைந்தே இருந்தது. இருந்தாலும்
காலையில் பிரியாவிற்கு மெசேஜ் தட்டி விடுவது என்று முடிவெடுத்தேன்.


எப்போது அறைக்குப் போவோம் என்று இருந்தது. அலுவலக வண்டியில் பல் கூட
விளக்காமல் மனதிற்குள்ளே காயத்ரி மந்திரங்கள் சொன்னேன். அறைக்கு வந்ததும்
நேரம் காலம் எல்லாம் பார்த்து விட்டு, வெங்கடாஜலபதி படத்துக்கு முன்பு
நின்று அவளுக்கு மெசேஜ் அனுப்பியே விட்டேன். திக் திக் என்று இருந்தது.
மணி அப்போது காலை ஏழரை ! பதில் வரவில்லை. இப்போது அவள் பாத்ரூமில்
இருப்பாள். அரை மணிநேரம் கழித்து வெளியே வந்ததும் என் மெசேஜ் பார்த்து
புளகாங்கிதம் அடைந்து உடனடியாக பதில் அனுப்புவாள் என்று எனக்கு நானே
சமாதானம் சொல்லிக் கொண்டேன். அரை மணி கடந்தது. ஒரு மணிநேரம், ஆகியும்
பதில் வரவில்லை. மணி எட்டரை. இந்த சமயத்தில் அலுவலகம் செல்லும்
பரபரப்பில் இருப்பாள். பதில் அனுப்ப நேரம் இருக்காது என்று நொண்டிச்
சாக்கு சொல்லிக் கொண்டேன். இரவுப் பணியால் உடம்பெல்லாம் அசதியாக
இருந்தது. கண்கள் எரிந்தன. மெசேஜ் வரும்போது வரட்டும் தூங்கலாம் என்று
படுத்தேன்.


பிரியா ஏன் இவ்வளவு நேரமாகியும் பதில் அனுப்ப வில்லை ? புரண்டு புரண்டு
படுத்தேன். தூக்கம் வரவில்லை. உலகிலேயே பாவப்பட்ட ஜென்மமாக அந்த கணத்தில்
என்னை உணர்ந்தேன். எப்படி உறங்கினேன் என்று தெரியவில்லை. டக்கென்று
விழிப்பு வந்து பார்த்த போது மணி பதினொன்று. உடனடியாக அலைபேசியை
எடுத்துப் பார்த்தேன். இன்பாக்ஸில் மெசேஜ் வந்திருந்தது. சடாரென ஒப்பன்
பண்ணிப் பார்த்தால் அது....... அது...... பிரியாவே தான். ஹைத்தலக்கடி !
வாடி என் மாமன் மவளே ! இந்த மெசேஜ் அனுப்ப இவ்வளவு நேரமாடி .....என்று
அவளை உரிமையாகக் கோவித்துக் கொண்டேன். வாழ்வில் முதன் முறையாக நானும்
அவளும் தொடர்பு கொள்கிறோம். நியாயப்படி பட்டாம்பூச்சிகள் பறந்திருக்க
வேண்டும். உறங்காத கண்கள், பாதி உறக்கத்தில் எழுந்த அயர்ச்சி இவைகளால்
ஒன்றையும் காணோம். அவசர அவசரமாக அவளுக்கு பதில் மெசேஜ் அனுப்பும் போது
என் கைகளில் மெலிதான நடுக்கத்தை உணர்ந்தேன். " பிரியா நீ இப்போது வேலையை
பாரு. சாயங்காலம் நீ விரும்பினால் நாம் இருவரும் பேசலாம் " என்பது அந்த
மெசேஜின் சாரம்.


இப்போது அவளிடம் இருந்து உடனடியாக பதில் வந்தது. ஆனால் அந்த பதில் " சரி
" என்பதாக மட்டும் இருந்தது. சாயங்காலம் என்ன பேசுவது எப்படிப் பேசுவது
என மனதிற்குள் ஒரு ஒத்திகைப் போராட்டமே நடந்தது. அதற்கு மேல் உறக்கம்
வரவில்லை. காத்திருந்தேன். ஒரு மணி. இரண்டு மணி. மூன்று மணி. மூணரை மணி
ஆன போது அதற்கு மேல் காத்திருக்க முடியாமல் " பிரியா உன் வேலை எப்போது
முடியும் " என அனுப்பினேன். பதில் இல்லை. வேலையில் பிஸியாக இருப்பாள்.
பார்த்திருக்க மாட்டாள். சமாதானம் ! மணி நாலரை ஆனது. பொறுக்கவே
முடியவில்லை. கால் பண்ணினேன். ரிங் போனது. போய்க்கொண்டிருந்தது.
போய்க்கொண்டு மட்டும் இருந்தது. போய்க் கொண்டே இருந்தது. போய் ஓய்ந்தும்
போனது. கடும் பணி போல. பாவம். இம்முறையும் மனது அவளுக்கு சாதகமாகவே
ஆறுதல் தேடிக் கொண்டது. ஐந்தரை ஆனது. அப்பாடி...... வேலை
முடிந்திருக்கும். என் மெசேஜையும் மிஸ்ட் காலையும் பார்த்து பிரியா
தவித்துப் போய் இதோ இப்போது அழைக்கப் போகிறாள்..... இப்போது என் அலை
பேசி என்னை காதலோடு அழைக்கப் போகிறது..... இதோ இதோ இதோ
..............................
.......ம்ம்ம்ஹூம் ! ஒன்றையும்
காணோம். மறுபடியும் நானே அவளை அழைத்தேன். பதில் இல்லை. நீண்ட பெருமூச்சு
விட்டேன். விட்டத்தை விரக்தியாக வெறித்தேன். எனக்கு மட்டும் என் இப்படி !
அழுகை வந்தது. இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டுமா என்ற எண்ணம் வந்தது.


புறக்கணிப்புகள். புறக்கணிப்புகள். புறக்கணிப்புகள். எத்தனை முறை
அனுபவித்தாலும் இந்த வலி மட்டும் மரத்துப் போக மாட்டேன் என்கிறதே.
பிரியாவைச் சொல்லிக் குற்றமில்லை. அவளுக்குக் கிடைத்த ஏராள ஆண்களின்
சூழலில் எவனாவது அவள் மனதை கவர்ந்திருக்கலாம். அதனால் அவள் நாசுக்காக
என்னை தவிர்க்க முயல்கிறாள். பரவாயில்லை. இருக்கட்டும். இனி அவளைத்
தொந்தரவு செய்யப்போவதில்லை. என் அலைபேசியை எடுத்து அவள் தொடர்பு எண்ணை
அழித்தேன். பிரியாவின் அத்யாயம் என் வாழ்வில் இத்தோடு முடியப் போகிறது.

இரண்டு நாட்களில் மனது சகஜ நிலைக்குத் திரும்பியது. நேற்று இரவுப் பணி
முடிந்து அறைக்குத் திரும்புகையில், இரண்டு கல்லூரிப் பெண்கள் எனக்கு
எதிரே வந்தனர். அதில் ஒருத்தி புன்னகையோடு தலை குனிந்து என்னைக்
கடந்தாள். தொலைவில் இருந்தே என்னைப் பார்த்துவிட்டதில் அவளுக்குள் பூத்த
உற்சாகம் தான் புன்னகையாக மலர்ந்திருக்கிறதோ ? மணி என்ன ? ஏழு இருபத்தி
ஐந்து. நாளை மிகச்சரியாக இதே நேரம் அவளை மறுபடியும் கடக்க வேண்டும்.







--

Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர