முக்கியமாக ஒன்று
ஆலையில் வைத்து
மாலையில் நேற்று
மேலதிகாரி திட்டிவிட்டார் !
மேலிடம் கொடுத்த
மேலான வேலையை
மேற்கொண்டு முடிக்க
என்னைப் பணித்திருந்தார்,
மேனி வளையவில்லை - சற்றுநேரம்
மேஜையில் படுத்ததில்
மேலும் இழுத்து விட்டது - ஆகவே
மேற்படி திட்டிவிட்டார் !
கத்துக்குட்டிகள் முன்னிலையில்
கத்திவிட்டார் !
அவமானமாகிவிட்டது
ஆத்து ஆத்துப் போனது !
எல்லா வேலையையும்
என் தலையில் கட்டி
குல்லா போட்ட
கல்லா முதலாளியாய்
அல்லா என்றபடி
அவர் அங்கே அமர்ந்திருப்பார்,
இங்கே நான் சற்றுநேரமும்
நில்லாமல்,
வேதனையை வெளியில்
சொல்லாமல்
உண்பதற்கும் நேரம்
இல்லாமல்
பறந்து பறந்து
விரைந்து முடிக்கவேண்டும்
நல்லாயிருக்கிறது கதை !
ச்சே !
இதெல்லாம் ஒரு
உழைப்பா ?
இப்படியும் ஒரு
பிழைப்பா ?
வைத்துக்கொள்கிறேன் !
வஞ்சகத்தை நெஞ்சோடு
தைத்துக் கொள்கிறேன் !
மாலை வந்தது !
ஆலை முடிந்தது !
விதியை நொந்தேன்
வீதியில் நடந்தேன் !
தேநீர் அருந்தியாவது
தேற்றிக்கொள்ளலாமென
கடையை நோக்கி
நடையைப் போட்டேன் !
ஆறு ரூபாய்க்கு
அரைடம்ளர் கொடுத்தான் !
திகட்டுமளவு
தித்திப்பு இருந்தும்
தேநீர் எனக்குத்
தித்திக்கவில்லை !
குடித்துவிட்டு,
காசுகொடுத்து - கணக்கை
முடித்துவிட்டு,
நிறுத்தத்தில்
நின்றபோது
வருத்தம் என்னை
வறுத்தெடுத்தது !
வாட்டத்தைப் போக்க
நோட்டத்தப் போட்டேன் !
மரக்கிளையில்
பட்டுப்போன்ற - இரண்டு
சிட்டுக்குருவிகள் !
கீச்கீச்சென
காதுக்குள் அவை
கிச்சுக்கிச்சு மூட்டின !
தரையைத் துறந்து
இரையை மறந்து,
குருவிகளிரண்டும்
அருவியைப் போலக்
காதல் பொழிந்தன !
அந்தப்பக்கம்
ஒரு அணில்,
விழுந்த பழத்தைக்
கவ்விக்கொண்டு
தவ்விச்சென்றது !
பார்க்கப்பார்க்க
பாரம் எல்லாம்
பனித்துளியாக,
காலம் என்பது
பொன்னில் செய்த
மணித்துளியாக,
ஆஹா !!!
இதுவல்லவோ
இயற்கையின் மகத்துவம் !
இன்னும் சொன்னால்
இறைமையும்
இயற்கையும்
ஒரே சமத்துவம் !
அப்புறம்
முக்கியமாக ஒன்று,
அணிலுக்காகவும்
குருவிக்காகவுமாவது
மரங்களை
விட்டு வையுங்கள் !
முடிந்தால்
வீட்டருகே ஒரு செடியையாவது
நட்டு வையுங்கள் !!!
அருமை. எந்த வரி மிகப் பிடித்த வரி என்று சொல்லத் தெரியவில்லை எனக்கு, அத்தனை வரிகளும் அருமை.
ReplyDeleteபொறுமையாகப் படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி தோழி !
Delete