Skip to main content
 ஒரு விபத்து










வெகு சீக்கிரமாய்
வீடு போகவேண்டும் !

ஊரிலிருந்து
வந்திருக்கிறாள்
மனைவியின் தங்கை !
வற்றாத பேச்சில்
அவள் ஒரு கங்கை !

இன்றைக்கென்று அந்த
சொட்டைத்தலையன்
எதற்கெடுத்தாலும்
நொட்டை சொல்கிறான் !

( குறிப்பு :  மேலதிகாரிக்கு முன்மண்டையில் முடி இல்லை )

அதொன்றுமில்லை
அவசரமென்று
அழுதுகொண்டே
செய்த பணியல்லவா !
பழுது இருக்கத்தான் செய்யும் !

புள்ளிவிவரத்தில்
புள்ளி ஒன்று பிசகிவிட்டது !
பத்து
நூறாகிவிட்டது !
கண்டறிவதற்குள்
மூளை உருகி
ஆறாகிவிட்டது !

அப்பாடா !

அப்புறம்,
ஒருவழியாய்
மணி அடித்தது !
பணி முடிந்தது !

போதுமடா இந்த
ஆலைக்காட்சி !
இனி போகவேண்டும்
குடும்பத்தோடு
மாலைக்காட்சி !

வாகனத்தில்
விரைந்தேன் !
வழிநெடுக
ஒலிப்பானால்
இரைந்தேன் !

திடீரென்று,
சாலையில் ஓர் கூட்டம் !
ஒவ்வொருத்தன் முகத்திலும்
இனம் புரியாத வாட்டம் !

குறுக்கே வந்தவனைத்
திட்டினேன் !
தலையைக் கொஞ்சம்
எட்டினேன் !
பார்த்தேன் !

அவன்
இவ்வுலகை
மறந்திருந்தான் !
ஏறத்தாழ
இறந்திருந்தான் !

ச்சே !
என்ன ஒரு
இரக்கமில்லாத விபத்து !
இங்கிருந்து கிளம்புவதுதான்
இப்போதைக்கு ' சமத்து ' !

அதற்கப்புறம்
நெரிசலில்
நொண்டி,
நெண்டி,
பிளந்து ,
அளந்து .........

வீடு வருவதற்குள்
ஓடு கழன்றுவிட்டது !

வந்தவுடன்
குடும்பம் பறந்தது !
தாமதம் ஏனென்று
கேள்வியால்
என்னைக் கறந்தது !

விளங்கச் சொல்ல
வேளை இதுவல்லவென்று ,
 
உடனடியாகப்
போய்க் குளித்தேன் !
அந்த விபத்தை
என் மனத்தினின்று கழித்தேன் !

அப்புறம் நாங்கள்
சினிமா போனோம் !
சீட்டி அடித்தோம் !
கொண்டாடினோம் !
உயர்தர உணவகத்தில்
எதைத் தின்பதென்று
திண்டாடினோம் !

எல்லாம் முடிந்து
உற்சாகங்கள் வடிந்து,
உறங்கும் சமயம்
அது தோன்றியது !

சற்றுநேரமாவது
அங்கே
நின்றுவிட்டு
வந்திருக்கலாமோ ?



Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது