Skip to main content
விளையாடிப் பார்க்கலாம் வா




வாலிபா கேள் !


நீ குருடனல்ல

இருட்டில் இருக்கிறாய்

அவ்வளவு தான் !




நீ முடவனல்ல

காயம் பட்டவன் - அதை

காலம் ஆற்றி விடும்

கவலைப்படாதே !




கதவு சாத்தியிருக்கிறது என

கைகட்டி நிற்காதே !

ஒரு முறை தட்டிப் பார் !

அது பூட்டப்படாமல்

கூட இருக்கலாம் !




இரண்டு அடிகளை மட்டும்

நீயாக எடுத்து வை !

மூன்றாவது அடிக்கு

முயற்சி இல்லாமல்

முன்னேறி இருப்பாய் !




வெற்றிக்கான படிகட்டுகள்

மொத்தமே நூறு !

ஒரே ஒரு எட்டு வை !

நீ நின்றிருப்பது

தொண்ணூற்றி ஒன்பதாவது

படிகட்டாகக் கூட இருக்கலாம் !




உனது

சோகத்தின் ஈரங்கள்

தாமரைத் தண்ணீர் போல

தொலையட்டும் !

அவை தந்த

பாடத்தின் சுவடுகள்

பசுமரத்து ஆணிபோல

பதியட்டும் !




மரத்தடிகள்

இளைப்பாற மட்டுமே !

தங்குவதற்கு அல்ல .

முன்னேறி நடந்து பார்

மாளிகைக்கே மன்னனாவாய் !




காதல் என்பது

இளமையின் போதை மாத்திரை !

அதன் விலையும் அதிகம் !

விளைவுகளும் அதிகம் !

எச்சரிக்கையாய் இரு !




வெளிச்சத்தில் இருக்கும்போதே

விளக்கையும் தேடிக்கொள் !

இனிமேலும் இரவே இல்லையென்று

இயம்ப இயலாது அல்லவா !




விதி என்பது வீணர்களின் வார்த்தை !

சதி என்பது சோம்பேறியின் சாக்கு !




அறிவுரைகளை

அவ்வப்போது ஏற்றுக்கொள்

அவை அனுபவித்தவனின்

ஆசிர்வாதங்களாக இருக்கலாம் !




முயற்சியிடம் தோற்றுப்போகும்

முதல் எதிரி யார் தெரியுமா ?

விதிதான் !

வருந்தாதே !




தோள்களின் தினவில்

தரணியையே ஆளும்

தகுதி பெற்றவன் நீ !

தயங்காதே !




நீ

நெட்டி முறித்தால்

சோம்பலின் சாரம்

வெளிறிப்போகும் !




நீ

எட்டி உதைத்தால்

ஏழு உலகமும்

எகிறிப்போகும் !




உலகம் ஒரு

விளையாட்டு மைதானம் !

சோம்பேறிகள்

விதியின் பக்கம் !

சாதனையாளர்கள்

முயற்சியின் பக்கம் !

அதிர்ஷ்டமும் , அவநம்பிக்கையும்

அவர்களின் அணி !

நேர்மையும் , நம்பிக்கையும்

நமது அணி !

விளையாடிப் பார்க்கலாம் வா !!!








Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
தாம்பத்யம் கடைசியில் நான் அவளை அறைந்து விட்டேன் ! அதிர்ச்சியில் அவள் உறைந்து விட்டாள் ! அதன் பிறகு மௌனம் ! ஊமையாகக் கண்ணீர் ! பார்வையில் ஈட்டி ! சூழலில் சூனியம் ! ச்சே ! அவளை அப்படி நான் அடித்திருக்கக்கூடாது ! அவளும் வார்த்தையால் என்னை இடித்திருக்கக்கூடாது ! நடந்தது நடந்ததுதான் ! கடந்தது கடந்ததுதான் !  அவள் அறைக்குள் சென்று முடங்கினாள் ! அழுது அழுதே  - கொஞ்சம் அடங்கினாள்  ! காரணம் இதுதான் ! உண்ணும் போதே நறநறத்தது பல் ! காரணம் பல்லில் இடறிய ஒரு கல் ! " ஏண்டி இவளே சமைக்க உனக்குத் துப்பில்லை ! சாம்பாரில் கூட உப்பில்லை !  "                 என்றேன். அடிபட்டவள் போல அவள் நிமிர்ந்தாள் ! " ஆமாம் ! ஆமாம் ! சமைக்க எனக்குத் துப்பே இல்லை ! வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள் வேலைக்காரியை தப்பே இல்லை !"                  என்றாள். சைத்தானை அத்தோடு விட...