Skip to main content
கல்லூரிக் கன்னியும்

வாகனக் கணவனும் !



அன்று ,

அதிகாலையில் எழும்போதே

அவளை நினைத்து

ஆவலாய் எழுந்தேன் !


அவள் ?


காலை வேளையில்

கடந்து போகும்

கல்லூரிக் கன்னி !


குனிந்தே வருபவள்

அருகே வந்ததும்

நிமிர்ந்து பார்த்து

நகர்ந்து போவாள் !


எனக்கு மட்டும்

மழை பொழியும் !


இன்று எப்படியும்

இனிதாய் சிரித்து ,

இளங்கிளியை இன்பமாய்

இம்சித்து விடவேண்டும் !

என்ற தீர்மானத்தில்

இருந்த போதும் ,

இந்தக் கவிதை

அதைப் பற்றி மட்டுமல்ல !


வண்டி சாவியை

வைத்த இடம் தெரியவில்லை !


தொலைந்த சாவியால்

தேகத்தின் தினவும்

தொலைந்து போனது

அன்றைய தினத்தின்

கனவும் கலைந்துபோனது !


வண்டி ,

தேடி வாங்கிய

தவணை வண்டி !

அதனால் தான்

சாவியும்

தவணை முறையில்

தினமும் தொலைகிறது !


ஒருமுறை ,

தொலைந்ததைத் தேடி

தவித்த போது

தொலைக்காட்சிப் பெட்டியின்

தலையில் இருந்ததென

தங்கை வந்து தலையில் குட்டி

திட்டிக் கொடுத்தாள் !


இன்னொரு முறை

படுக்கை விரிப்பில்

பார்த்த அன்னை ,

பொறுப்பே இல்லையென்று

பொருமிப் போனாள் !


மற்றொருமுறை ,

குளியலறையில்

கண்டெடுத்த தந்தை

கண்டித்து விட்டே

கொடுத்துச் சென்றார் !


இப்போது

வியூகம் அமைத்துத்

தேடினாலும் ,

வாகனக் கணவன்

ஒளிந்து கொண்டு

வித்தை காட்டினான் !


வாகனக் கணவன் ?

வாகனத்தின் பூட்டைப் புனர்பவன் !


வலைவீசித் தேடினாலும்

வகையாய் மாட்ட - அது என்ன

விலாங்கு மீனா ?


சல்லடை கொண்டு

சலித்தாலும்

சடுதியில் சிக்க - அது என்ன

சில்லறைக் காசா ?


இன்றைக்குப் பார்த்து

அலுவலகத்தில்

அவசியப் பணியொன்றை

அவசரமாய் முடிக்க வேண்டும் !


நேற்று

பாதியில் விட்ட

புள்ளிவிபரத்தை - இன்று

பத்து மணிக்குள்

பதிந்து கொடுக்க வேண்டும் !


தவறினால் ,

மேலதிகாரியின்

நாராசப் பேச்சிற்கு

நாய் கூட நாணிச் சாகும் !


இன்று

என்ன தவறு செய்தேன் ?

அல்லது

செய்ய இருந்தேன் ?


இது

சாவு தண்டனை அல்ல

சாவி தண்டனை !


யோசித்துப் பார்த்ததில் ,

இளங்கிளி தான்

இடறி வந்தாள் !

இன்று

கல்லூரிக் கன்னியை

கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை என

கடவுளிடம்

கற்பூரம் அடித்தேன் !


மறுநொடியே ,

" வண்டில பார்த்தியா "

என்றொரு அசீரிரி !

அம்மாதான் சொன்னாள் .

ஆண்டவனே சொன்னது போல

விரைந்து ஓடி

வெளியே வந்தேன் !


சொருகிய சாவியைக்

கண்டவுடன்

உறைந்த உயிர்

உருகி வந்தது !


வேகமாய் ஏறி

விரட்டி ஓட்டினேன் !


என் காலை நேர தேவதை

எதிரே வந்தாள் !

என்னையே பார்த்தாள் !

எதோ சொல்லவும் வந்தாள் !


நான் ,

சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு ,

சாலையை மட்டும் பார்த்தபடி

சென்று விட்டேன் !


அடுத்த நாள்

அவள் வரவில்லை !

அதற்கும் அடுத்த நாளும்

அவள் வரவில்லை !

வழியை அவள் மாற்றினாளா ?

அல்லது

விதி மாற்றியதா ?

தெரியவில்லை !


இரண்டு மாதங்களாகி விட்டன

இளங்கிளி கண்ணில் பட்டு !


இப்போதெல்லாம் நான்

எவளையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை !!!






Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...