Skip to main content
வாழ வைக்கும் காதல்


பண்டிகை நாளொன்றில்
பார்த்துச் சிரித்தவளோடு
பேசுவதெப்படி என
அனுபவப்பட்டவர்களிடம்
ஆலோசனை கேட்டபடிதான்
ஆரம்பித்தேன் நானும் !


ஒரு வெள்ளிக்கிழமையின்
அதிகாலையில்
அலைந்து திரிந்து
அவள் இல்லம் கண்டுபிடித்த போது ,
கோலமிட்டுக் கொண்டிருந்தவள்
நிமிர்ந்து பார்த்து
சிலிர்த்து சிவந்து
சிரித்துவிட்டுச் சென்றாள் !
அவள் இட்டிருந்த
வண்ணக்கோலத்தை விடவும்
அழகாக இருந்தது
பாதவிரலால் அவள் இட்ட
வெட்கக் கோலம் !


இல்லாத கல்லூரிக்கு
வராத பேருந்திற்காய்
நிறுத்தத்தில் நானும்
நின்றிருப்பேன்
அவளுக்கான
பேருந்து வரும்வரை !


அவள் ,
கலந்த கூந்தலை
சரிசெய்யும் சாக்கில்
கடைக்கண்ணால்
எனைப் பார்த்து
குற்றுயிரைக் குதறி எடுப்பாள் !


என் மனதை
ஆனந்தத்தில்
அலைய வைக்கவே
காற்று அவள் கூந்தலை - அடிக்கடி
கலைய வைக்கும் !


ஒரு நாள் ,
கண்களால் என்னைக்
கவனித்துக் கொண்டே - யாரிடமோ
எண்களால் பேசினாள் ! நான் ,
குறிப்பறிந்து குறித்துக்கொண்டதும் - காதல்
பண்களால் நிரம்பியது மனம்
அன்றைய தினம் !


அதன் பிறகு
ஒவ்வொரு பொழுதிற்கும்
ஒவ்வொரு வணக்கம் சொல்லி ,
வாழ்க்கை ,
வணக்கங்களுக்கு
இணக்கமானது !


தினந்தோறும் வருகிற
" தினங்களுக்காக "
திரும்பத் திரும்ப
வாழ்த்துக்கள் கூறிக்கொண்டிருந்தோம் !


ஒருநாள் ,
அவள் கண்களைப் பார்த்து நான்
காதலைச் சொன்ன போது
தலை குனிந்து சென்றுவிட்டாள்
மௌனமாக !
மறுநாளே ,
பச்சை சுடிதாரில் வந்து
பிச்சையாய் நான்கேட்ட காதலை
இச்சையோடு ஈந்து சென்றாள் !


அதன் பிறகு
திரையரங்குகளில் நாங்கள்
ஒளித்திரைகளை
கவனித்ததை விட எங்கள்
விழித்திரைகளை
கவனித்ததே அதிகம் !


எத்தனையோ
இரவுப் பேச்சுக்களில் ,
அவள் அங்கு
உம் கொட்டியபடியே
உறங்கிப் போனதறியாமல்
நானும் இங்கு
உம் கொட்டியபடியே
உறங்கிப் போயிருக்கிறேன் !


அவள்
புன்னகையைப்
பார்த்தவுடனே
பொடிப் பொடியாகின்றன
எனது காத்திருப்பின்
அத்தனை கோபங்களும் !


அவளுக்கும் எனக்கும்
ஒரே அலைநீளம் இருப்பதன்
ஒரே பிரச்சனை ,
அலைபேசியில்
நான் அழைக்கும் அதேசமயம்
அவளும் அழைத்துத் தொலைப்பது தான் !


மேலதிகாரியிடம் நான்
திட்டு வாங்கிய
நாட்கள் எல்லாம் அநேகமாக
அவள் எனக்கு
காலை வணக்கம்
சொல்லாத நாட்களாயிருக்கும் !


பூங்காவில் ஓர்நாள் ,
காதல் கைகூடுமா என
கண்ணீரோடு என்னிடம்
கவலைப் பட்டவளிடம்
நான் சொன்னேன் ,
" நம் உயிரை ஊற்றி
நாம் வளர்த்த காதல்
நம்மை வாழ வைக்காமலா போய்விடும் ! " என்று ...



Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது