Skip to main content

Posts

இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது
எங்கள் ஞாயிற்றுக் கிழமை மதிய பசியிருட்டுக்கு வெள்ளாட்டுக்கறிக்குழம்பு என்றொரு  விளக்கு நாட்டுகோழி வறுவல் என்றொரு விளக்கு ரத்தப் பொரியல் என்றொரு விளக்கு முட்டைப் பொடிமாஸ் என்றொரு விளக்கு என அம்மா ஏற்றிவைத்திருந்த அத்தனை  விளக்குகளையும் நொடிப்பொழுதில் ஊதியணைத்தது குழம்பில் உப்புக்குறைவு என்று தட்டை விசிறியடித்த அப்பாவின் கோபம் 
ஏதோவொரு தருணத்தில் நான் நீர்த்துப் போய்விடுகிறேன் ! ஏதோவொரு தருணத்தில் நான் கெட்டவனாகி  விடுகிறேன் ! ஏதோவொரு தருணத்தில் நான் தோல்வியடைந்து விடுகிறேன் ! நான் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பதால்  .......... ஏதோவொரு தருணத்தில் நான் வீரியம் பெற்றுவிடுகிறேன் ! ஏதோவொரு தருணத்தில் நான் நல்லவனாகி விடுகிறேன் ! ஏதோவொரு தருணத்தில் நான் வெற்றி பெற்றுவிடுகிறேன் ! நான் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பதால் ..........
இதைப் போலவே இருக்கும் இன்னோர் உலகத்தில் மனிதச்சிலை வீற்றிருக்கும் ஒரு கோவிலில் கடவுளின் பிரார்த்தனை இப்படித்தொடங்குகிறது ......... " எல்லாம் வல்ல மனிதா ............. தயவுசெய்து தயவுசெய்து சகமனிதன் துயர் துடை ! "
நியூட்டனின் மூன்றாம் விதி நமது போராட்டங்கள் கேயாஸ் தியரிப்படி இப்பிரபஞ்சத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் அவர்களுக்குப் புறக்கணிக்கத்தக்கவை ! இஃது இன்னோர் விடுமுறை என்றுதான் அவர்கள் கடந்துபோகிறார்கள் நமது கடையடைப்புக்களை ! மூன்று நாட்களுக்கு மேல் பேருந்துகளை முடக்கி வைத்தால் அது நமக்கே பதிப்பு என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும் ! உண்ணாவிரதங்கள் நமது வயிற்றினில் ஏற்படுத்தும் நீர்த்த அமிலங்களில் அவர்கள் நீச்சல் பழகுகிறார்கள் ! நாம் நாளெல்லாம் நின்று கத்திச்செய்யும் ஆர்ப்பாட்டங்களால் அதிகப்பட்சம் அன்று மாலை மழை வரலாம் ......... அவ்வளவே ! நமது மொட்டை போடுதல்களையும் தீச்சட்டி ஏந்துதல்களையும் சத்ரு சம்ஹார யாகங்களையும் முன்னெப்போதும் போலவே இப்போதும் அசுவாரசியமாய்ப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார் கடவுள் ! நமக்கான தியாகிப்பட்டம் சுமந்துவரும் செய்தித்தாள்களின் தற்கொலைப் பெட்டிச் செய்திகள் காலப்பெருநெருப்பில் அழிந்து போகலாம் நம்மைப் போலவே .........! அப்போதும் இப்போதும் எப்போதும் .......... கைகட்டி வேடிக்கை பார்க்கவும...
ஓர் எளிய கவிதை " ச்சீ இவ்வளவு எளிய கவிதையா ? " என்று ஓர் எளிய கவிதையைப் புறக்கணிக்கிறேன் ! " ச்சீ இவ்வளவு கடின மனிதனா ? " என்று அக்கவிதை புறக்கணிக்கிறது என்னையும் .........!
புன்னகைக்காதவர்கள்  எதிரே வருகிற ஒரு தெரிந்தவன் புன்னகைப்பான் என எதிர்பார்க்கிறேன்...... ஏமாற்றிவிட்டுக் கடந்துபோகிறான் ! எதிரே வருகிற ஒரு தெரிந்தவனான நான் புன்னகைப்பேன் என எதிர்பார்த்திருக்கக் கூடும் அவனும் .......... ஏமாற்றிவிட்டுக் கடந்துபோகிறேன் ! எதிரே வருகிற நாங்கள் புன்னகைத்துக் கொள்வோம் என எதிர்ப்பார்க்கிறது புன்னகை ............ ஏமாற்றிவிட்டுக் கடந்து போகிறோம் ! ====================== ====================== ======================
ஒரு கரண்டி அன்பு எழுதி முடித்ததில் செத்துப் போனது ஒரு கவிதை ! ========================= பூட்டிய கதவுக்குள் எரிந்து கொண்டிருக்கும் மின்விளக்கும் கத்திக்கொண்டிருக்கும் தொலைக்காட்சியும் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறியும் கொண்டாடித் தீர்க்கின்றன ஒரு மறதியை ! =========================== எடுக்க வேண்டும் எடுக்க  வேண்டும் என்று நினைக்கும் முடிவுகளையே நாம் எடுத்து விடுகிறோம் என்றாவது ! =========================== இந்திரியத்தின் கடைசித் துளி வெளியேறுகிறது ! ஞானத்தின் முதல் துளி உள் நுழைகிறது ! =========================== வேலை என்பது கடல் ! வாழ்க்கை என்பது தீவு ! இங்கேயும் தீவு, கடலில் தான் இருக்கிறது ! =========================== நம்முடைய இறுக்கமெல்லாம் ஒரு கண்ணாடியைப் போலத்தான் ! அன்பின் சிறுகல் பட்டாலும் அது உடைந்து விடும் ! =========================== அலைபேசிக்குள் ஆயிரம் ரகசியம் புதைத்திருக்கும் பெண்ணே ........ நீயல்ல பாரதி கண்ட புதுமைப் பெண் ! =========================== இறைச்சியை மட்டும் ஒதுக்கி விட்டு மேலாக்க எடுத்துப் போடும் குஸ்காவுக்கு அசைவ தோஷமில்லையாம் ! பின்ன...
மழைக் கலைஞன் பரபரப்புக்கு மட்டுமே  பஞ்சமே வராத  அந்தப் பெருநகரத்துச்  சாலையில்  வான் பூக்களென  பெய்து கொண்டிருந்தது  மழை !  சாலையோரத்தில்  அவன்  சுருண்டு கிடந்தான்  தன்  ஒற்றைக் கையை  மழையில்  ஏந்தியபடி !  ஒரு  நவீன மழை ஓவியம்  போன்றுதான்  அந்தக்காட்சி  முதலில்  மண்டைக்குள் பதிந்தது !  கொஞ்சமிருந்த  சில்லறைகளில்  துன்பச்சங்கீதம்  இசைத்துக் கொண்டிருந்த  அந்த  ஒற்றைக் கையும்  மழைக்குளிரில்  நடுங்கிக்கொண்டிருந்த  ' என்புதோல் போர்த்த '  அந்த உடம்பும்  அவனொரு  ரத்தமும் சதையுமான  இல்லையில்லை ............  ரத்தமும் எலும்புமான  ஒரு உயிர் என்பதை  புத்தியில் அறைந்தன !  பரிதாபப்பார்வையும்  மிரட்சி நடையுமாகப்  பெண்கள் அவனைக்  கடந்து போயினர் !  குடைபிடித்து  வந்த ஒருவன்  அந்த  ஒற்றைக் கைக்கு  காசு போட்டுப்போனான்  ஏற்கனவே  அந்தக் கை  ...
சிறுவயதில் நூல்கட்டி விளையாடியதற்காய் மன்னிப்புக்கேட்க வேண்டும் ! ஊசித்தட்டானே நீ எங்கிருக்கிறாய் ? ============================= ஊரில் பல்லாங்குழிச் சிறுமிகளையும் கில்லித்தட்டு சிறுவர்களையும் காணவில்லை ! திரும்பிப்பார்க்கிறேன் ....... என்னுடனே வந்துகொண்டிருந்த என் பால்யத்தையும் காணவில்லை ! ============================= எங்களூரின் தாவணிக்கனவுகள் எல்லாம் இப்போது சுடிதார்க் கனவுகளாக ! அந்தக்கனவில் வண்ணம் இருந்தது ! இந்தக் கனவில் சாயம் மட்டுமே இருக்கிறது ! ============================= கட்டிப்பிடித்துக் கதற வேண்டும் போலிருந்தது ! பாலித்தீன் பைகளை மேய்ந்து கொண்டிருந்த எங்களூர் பசுமாட்டை ! ============================= ஒரு நோயுற்ற முதியவளைப் போல குற்றுயிராக சுருண்டு கிடந்தாள் காவிரி ! முடிந்தமட்டும் கண்ணீர் வார்த்துத் திரும்பிவந்தேன் ! ============================= இரட்டை மாட்டுவண்டியில் கோவணங்கட்டிய ஒரேயொரு விவசாயி தென்பட்டான் ! கடவுளையே பார்த்தது போலிருந்தது ! ============================= வீட்டில் இரவு உணவுக்கு இட்டிலி ! ம்ம்ம்.......... அரிசீம்பருப்புச் சோறை அம்மாவே மற...
கண்ணில் தட்டுப்பட்ட பட்டாம்பூச்சி   காற்றெனும் சமுத்திரத்தில் வாழும் மீன்களென மீன்கள் நம்மை நினைத்துக் கொண்டிருக்கலாம் ! ஆனால் எந்த மீனும் இங்கே வந்து மீன் பிடிப்பதில்லை ! =============================== உங்கள் முன்பு தென்படும் நம்பிக்கை என்ற கூட்டில் எந்தப் பறவையாவது வாழ்ந்து கொண்டிருக்கலாம் ! உண்மை என்ற கல்லெறிந்து விடாதீர்கள் ! =============================== அழகாயிருந்தது  என்றாலும் வந்து தொலைக்காமலேயே இருந்திருக்கலாம் , ஏற்கனவே யாரோ எழுதிவிட்டது போலத் தோன்றிய நானெழுதிய அந்தக் கவிதை ! =============================== சுவையாக இருப்பது போன்ற பிரமையைத் தருகின்றன சூடாக இருக்கும் உணவுகள் ! =============================== மருத்துவனாவேன் என்றான் ஒருவன் ! பொறியாளனாவேன் என்றான் ஒருவன் ! விஞ்ஞானியாவேன் என்றான் ஒருவன் ! விவசாயியாவேன் என்றான் ஒருவன் ! நான் ஓடிச்சென்று அந்த வருகால விவசாயியைக் கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்தினேன் ! நாளையவன் வளர்க்கப் போகும் நெற்கதிருக்கு என் கண்ணீர் உரமாகட்டும் ! ================================ ஒற்றை பிராமணனும் ஒரு விதவையும் எதிரெதிரே கடந்து போனார்க...
அது எதோவொரு நாளில் அது எனக்கு அறிமுகமானது ! அன்றிலிருந்து அது எனக்கு உற்ற நண்பன் ! யாராவது அதைச் சீண்டினால் எனக்கு பொல்லாத கோபம் வரும் ! திடீரென்று ஒருநாள் அது என்னைத் தாண்டி வளர்ந்து நின்றது ! அது சொல்வதையெல்லாம் கேட்க ஆரம்பித்தேன் ! எனக்கே தெரியாமல் நானதன் அடிமையானேன் ! தனக்கான பெருந்தீனியை கொண்டா கொண்டா என நாலாப்புறமும் அது என்னை விரட்டியது ! அதைத் திருப்திப்படுத்துவதே என் வாழ்நாள் இலக்கானது ! சில தனிமைகளில் அது பூதாகரமாக என்னைப் பார்த்துச் சிரிக்கும் ! பயமாக இருக்கும் ! என் நண்பர்கள் அதைக் கொன்றுவிடும்படி சொன்னார்கள் ! ஆகவே, நானதைப் பட்டினி போட ஆரம்பித்தேன் ! பசியால் அது துடித்தது ! சிறுகச்சிறுக அதைக் கொன்று விட்டதாய் நண்பர்களிடம் சொன்னேன் ! ஒருநாள் என் மனதின் பாதாள அறைதிறந்து உள்ளே சென்றேன் ! அங்கே, சாதுவாய் அது அமர்ந்திருந்தது ! அதற்கான உணவை அளித்துவிட்டு " பயப்படாதே நானிருக்கிறேன் " என்றேன். ! அது புன்னகைக்க ......... நானும், அதுவாகிய நானும் கைகுலுக்கிக் கொண்டோம் !
   இலட்சிய பொம்மை என்னிடம் கொஞ்சம்  களிமண் இருந்தது ! ஒரு பொம்மை செய்ய  ஆசைப்பட்டேன் ! பொம்மை செய்பவர்களின்  உலகத்தில்  சில கருத்துக்கள்  நிலவிவந்தன ! பொம்மை  புன்னகைக்க வேண்டும்  என்றொரு கருத்து ! ஆகவே,  பொம்மைக்கு  புன்னகையை அளித்தேன் ! கண்களில்  உயிர்ப்பு கொண்டதுதான்  பொம்மை  என்றொரு கருத்து ! கொஞ்சம் முயன்றதில்  பொம்மையின்  கண்கள்  உயிர்ப்படைந்தன ! வண்ணமில்லாதது  பொம்மையில்லை  என்றது  ஒரு கருத்து ! சற்றே  மெனக்கெட்டதில் வண்ணத்தில்  ஜொலித்தது  பொம்மை ! கொஞ்சமாவது  உடைந்து  அழுக்கானால்தான்  அது பொம்மை  எனுமொரு கருத்து ! அவ்வாறே  ஆனது பொம்மையும் !  இப்போது  பொம்மை,   பொம்மை உலகத்தின் இலட்சிய பொம்மையாக  உருவெடுத்திருந்தது !  ஆனால், அது  என் பொம்மையாக  இருக்கவில்லை !
    மழை வீடு   வெளியே மழை பெய்துகொண்டிருந்தது ! அறையில் இரவுப்பணியின் உறக்கத்திலிருந்த நான் திடுக்கிட்டு விழித்து கதவைத் திறந்து மழை பார்த்தேன் ! முன்பெல்லாம் மழை பெய்தால் வீட்டில் பஜ்ஜி சுடுவாள் அம்மா ! தொண்டையைச் செருமிக்கொண்டு கதை சொல்லத்தொடங்குவார் அப்பா ! பஜ்ஜி வாசமும் கதை வாசமும் சேர்ந்து இனிதே வீட்டை நிறைக்கும் ! இந்த நினைவுகளை மனதில் சுமந்தபடி நான் பெய்த மழையை வெறித்துக் கொண்டிருந்தேன் ! பஜ்ஜியையும் கதைகளையும் நினைவுகளில் சுமந்தபடி ஊரில் அம்மாவும் அப்பாவும்கூட இதேபோல் மழையை வெறித்துக்கொண்டிருக்கலாம் !  
இயற்கையின் குட்டி நாக்குகள் வெளியே காய்ந்த  ஆடைகளில்  வெயிலின் வாசம் !  ======================================  யாரோவின்  சாயலிலிருக்கும் என்னை  யாரோவென நினைத்து  யாரோ  கடந்து போனார்கள்  நானும் ..........  ======================================  அவரவர்  அவரவர் உலகத்தில்  வாழ்ந்து கொண்டு  அனைவரும்  ஒரே உலகத்தில் தானிருக்கிறோம் !  ======================================  இரவை  இருட்டு என்கிறார்கள்  சிலபேர் !  நிலவு என்கிறார்கள்  சிலபேர் !  நீங்கள்,  இருட்டா ?  நிலவா ?  ======================================  தன்னந்தனியாய்  இனிப்பை  உருட்டிக்கொண்டிருந்த  ஒரு எறும்பை  யாரோ தெரியாமல்  மிதித்தார்கள் !  ======================================  எந்த விளக்குகளாலும்  அணைக்க முடியவில்லை  தனிமை என்ற  இருட்டை !  ======================================  சந்தர்ப்பத்தோடு  புணர்ந்ததில்  நிஜத்தைப் பிர...
இப்படிக்கு இல்லத்தரசி எங்கள் வீட்டில் என் கணவரின் டாபர் மேன் வள் என்கிறது ! மகனின் அல்சேஷன் லொள் என்கிறது ! மகளின் பொமரேனியன் கீச் என்கிறது ! எனது வெறுமை மியாவ் என்கிறது ! ====================================== என் கணவர் தொலைகாட்சியில் மூழ்கிக்கொண்டு ! மகன் இணையத்தில் மூழ்கிக்கொண்டு ! மகள் அலைபேசியில் மூழ்கிக்கொண்டு ! நான் பாத்திரங்களில் மூழ்கிக்கொண்டு ! ====================================== என் கணவர் வீட்டிலிருந்து வங்கிக்குச் செல்கிறார் ! மகன் வீட்டிலிருந்து நிறுவனத்திற்குச் செல்கிறான் ! மகள் வீட்டிலிருந்து கல்லூரிக்குச் செல்கிறாள் ! நான் வீட்டிலிருந்து வீட்டிற்குச் செல்கிறேன் ! ====================================== தன்னுடைய வேஷ்டியை என் கணவர் வாங்கி விடுகிறார் ! தன்னுடைய ஜீன்ஸை என் மகன் வாங்கி விடுகிறான் ! தன்னுடைய சுடிதாரை என் மகள் வாங்கி விடுகிறாள் ! என்னுடைய சேலையை மூவரும் வாங்கி விடுகின்றனர் ! ====================================== வீட்டில் என் கணவருக்கென்று தனியறை ! மகனுக்கென்று தனியறை ! மகளுக்கென்று தனியறை ! எ...
  நாம் சந்தித்துக்கொள்ளும் போதெல்லாம் எனக்கு நீங்கள் கொடுத்த முகமூடியை நானும் உங்களுக்கு நான் கொடுத்த முகமூடியை நீங்களும் அணிந்து கொண்டபிறகே நம் உரையாடல் தொடங்குகிறது !
  என் அறையில் என்னுடன் ஒருவன் இருக்கிறான் ! சில சமயங்களில் அவன் மகத்தான நண்பன் ! சில சமயங்களில் அவன் மாபெரும் எதிரி ! அவன் பெயர் தனிமை ! 
அப்பா   ஒரு சூரியனைப் போன்றதுதான் அப்பாவின் கோபமும் ! பொழுதானால் மறைந்துவிடும் ! =============================================== பாசங்காட்டும் போது அவர் அப்பா ! அறிவுரை சொல்லும்போது அவர் தந்தை ! ============================================== காயத்திற்கு மயிலிறகு போன்றவள் அம்மா ! மருந்தைப் போன்றவர் அப்பா ! மயிலிறகு காயத்தின் வலியைக்குறைக்கும் ! மருந்துதான் காயத்தை ஆற்றும் ! =============================================== நாம் ஆயிரம் திட்டினாலும் பிறர் அப்பாவைத் திட்டும்போது இயல்பாக எழும் கோபத்தின் பெயர்தான் ரத்தம் ! =============================================== அப்பாவுக்காக மகன் தலை குனியலாம் ! மகனுக்காக  அப்பா தலைகுனியக் கூடாது ! ============================================== இந்த உலகத்திலேயே உன்னைக் கைநீட்டித்திட்டும் உரிமை உன் அப்பனுக்குத்தானிருக்கிறது ! எவனுக்குமில்லை ! =============================================== உன் பொருட்டு உன் அப்பாவின் கண்களில் நீர் வருவது நான்கு  பேர் உன்னைப் பாராட்டும் போதுமட்டும் இருக்கட்டும் ! ======================================...