Skip to main content
அவசர ஞானம்

பேருந்து
போய்க் கொண்டிருந்தது.

ஓட்டமாக
வந்து ஏறியிருந்தாலும்
உள்ளே ஒரே
கூட்டமாக இருந்தது !

கண்கள்
மேயவிட்டு
உள்ளே இருந்த
பெண்கள் அனைவரையும்
எண்கள் ஆக்கியதில்
ஏழெட்டுத் தேறியது !

சுடிதார்
பட்டாம்பூச்சியாக
ஒருத்தி !

சேலைச் சோலையாக
ஒருத்தி !

உற்றுப் பார்த்தால்
முற்றுந்தெரியும்
முற்போக்கு ஆடையில்
ஒருத்தி !

நூலாடை
என்ற பெயரில்
தோலாடை அணிந்த
' துணிவு' மிக்க
ஒருத்தி !

உடுத்திய உடை
உடலைத்
தழுவி நிற்கிறதா ?
நழுவி நிற்கிறதா ?
என யூகிக்க முடியாத
நாகரிக நிலையில்
ஒருத்தி !

எவனிடமோ
கைபேசியில்
பொய்பேசி வந்த
ஒருத்தி !

கூந்தலின்
பின்னல் விழும்
இடத்தில்
ஜன்னல் வைத்த
ஒருத்தி !

ஜாதகப் படி
சுக்கிரன் இன்று
உச்சமா ?
எங்காவது ரகசியமாய்
எனக்கு முளைத்த
மச்சமா ?

பார்க்கும்
இடத்திலெல்லாம்
பெண் இருக்கிறாளே !

எவளை உரசலாம் ?

அதிகம்
அலட்டிக் கொள்ளாமல்
முற்றும் தெரிபவளை
முழுமனதாகத் தேர்ந்தெடுத்தேன் !

எட்டி இருந்தவன் - அவளை
ஒட்டி நின்று கொண்டேன் !

முதலில்
மூக்கு மட்டும் வியர்த்தது !

வெறி கொண்ட இரத்தம்
தறி கெட்டுப் பாய்ந்தது !

வசை பெற்றவனின்
குமுறல் போல
தசைகள் துடித்தெழுந்தன !

இடிந்து விழுவது போல
இதயம் துடித்தது !

மழை பொய்த்த
நா நிலமாய்
நா உலர்ந்தது !

அங்குல இடைவெளியில்
அங்கங்கள் காத்திருந்தன !

சட்டென்று
ஆசைகள்
அம்மணம் ஆன
மனவெளியில்
சம்மணம் போட்டு
அமர்ந்து கொண்டான்
அரசமர புத்தன் !

ஒரே ஒரு நொடி,
அவள் இடத்தில்
என் மனைவியையும்
என் இடத்தில் 
வேறு ஒருவனையும்
நினைத்துப் பார்த்தேன் !

சட்டென்று
சகலமும்
சுருண்டு போனது !
காமத்தின் உலகம்
கணப்பொழுதில்
இருண்டு போனது !

காதோர வெப்பம்
தணிந்தது !
மனசாட்சியின் முன்
மனம் பணிந்தது !

பிதுங்கிப் பிதுங்கி
முன்னேறியவன்
பதுங்கிப் பதுங்கிப்
பின் வாங்கினேன் !

பேருந்து
நின்ற நிறுத்தத்தில்
நினைவில்லாமல் இறங்கி
நான் பாட்டுக்கு
நடந்து போய்க்கொண்டே இருந்தேன் !!!


Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது