Skip to main content
அம்மா .............






அறியாத வயதில்


அம்மா அம்மாவென்று


நாய்குட்டி போல


உன் காலடியைச்


சுற்றிச் சுற்றி வருவேனாம் .


பக்கத்து வீட்டுக் கிழவி


அடிக்கடி சொல்லிச் சிரிக்கும் !


அம்மா ,


அப்போது மட்டுமல்ல , எப்போதும்


உன் காலைச் சுற்றி வரும்


நாயாகவே நானிருக்க விழைகிறேன் !




முதல் வகுப்பு முடியும் வரை


பள்ளி செல்லமாட்டேனென்று


புழுதியில் புரண்டழுவேன் !


அந்தப் புழுதிகளை எல்லாம்


உன் கண்ணீரால் கழுவி விட்டு


என்னை அனுப்பி வைப்பாய் !


மாலையில் ,


பள்ளிவாசலிலேயே


காத்திருக்கும் உன்னை


அம்மாவென்று கத்தியபடி


ஓடிவந்து கட்டிக் கொள்வேன்


பாசத்தில் உன் நெஞ்சோடு


என்னை ஒட்டிக் கொள்வாய் !




திங்கட்கிழமை சந்தையில்


தின்பண்டம் வாங்கி வந்து


அன்போடு நீ கொடுக்கும் போதெல்லாம் ,


தினமும் திங்கட்கிழமையாகவே


இருக்கக் கூடாதா என்று


தவித்துத் திரிந்தவன் நான் !




வளரும் பிராயத்தில்


தவறு செய்தேனென்று


தந்தை என்னை


அடிக்கும் அத்துணை அடிகளும்


எனக்கு விழுந்ததை விட


உன் முதுகில் தான்


அதிகம் விழுந்திருக்கின்றன !




ஒருமுறை ,


முரட்டுத் தனமாய்


மிதிவண்டி ஓட்டியதில் ,


கம்பியொன்று ஆழமாய்க்


காலைக் கிழித்தது !


அதை உன்னிடம் மறைத்து


மருந்திட்டு வந்தேன் !


புண் புரையோடிப் போனது


ஒரு நாள் எப்படியோ


அதனைக் கண்டுபிடித்து


தலையில் அடித்துக் கொண்டு


நீ அழுதாய் !


எந்த மருந்திட்டும்


ஆறாத அந்த ரணம்


உன் கண்ணீர் பட்டு ஆறிப்போனது !




அம்மா ,


என் நலம் பேணியே


நாற்பது வயதில்


நரைத்துப் போனவள் நீ !


நீ மட்டும் இல்லையென்றால்


ஏதாவது ஒரு நோயில்


எப்போதோ இறந்திருப்பேன் !


எனக்காக


ஒருமுறை மட்டுமல்ல


ஒவ்வொரு முறையும்


உயிர் கொடுத்துக் கொண்டிருப்பவள் நீ !




பணி நிமித்தம்


நான் உன்னைப்


பிரிந்து செல்ல நேர்ந்தது !


போகும் வரை பொறுமையாய் இருந்து ,


போன பின்பு


புலம்பி அழுதாய் என


தங்கை ஒருநாள்


தனியே சொன்னாள் !




நாளும் கிழமையுமாய்


நல்லது பொல்லது செய்து ,


சுற்றத்தோடு கூடியிருக்கையிலும்


அங்கே தொலைவில்


தனித்திருக்கும் நான்


என்ன உண்டேனோ ?


எவ்வாறு உறங்கினேனோ ?


என்று நினைத்து நினைத்து


கண்ணீர் உகுக்க


அம்மா


உன்னை விட்டால் எனக்கு


உலகத்தில் நாதியில்லை !




ஒவ்வொரு முறையும்


நான் ஊருக்கு வரும்போது


பாசம் பிழிந்து


முறுக்கு செய்து கொடுப்பாய் !


அன்பை உருட்டி


லட்டு செய்து கொடுப்பாய் !


போகும் பொது


உயிரை உருக்கி


கண்ணீர் உகுப்பாய் !


இதற்கெல்லாம் கைம்மாறு செய்ய - எனக்கு


இந்த ஜென்மம் போதாதம்மா !




அடுத்த ஜென்மம்


என்று ஒன்றிருந்தால் ,


நான் பெண்ணாகப் பிறக்க வேண்டும் !


பத்து மாதம் சுமந்து


உன்னைப் பெற்றெடுக்க வேண்டும் !


இதற்காகவே அம்மா ,


நான் உனக்கு முந்தி சாக வேண்டும் !


நான் உனக்கு முந்தி சாக வேண்டும் !






Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது