பிழைப்பு அலாரம் அடித்தது ! திடுக்கிட்டெழுந்தேன் ! சமையலறையில் அம்மா ! உறக்கத்தில் அப்பா ! ஏழுமணிக்கு எக்ஸ்பிரஸ் ! இரவல் வாங்கிய இரவுப்பணி, இன்றைக்கு மட்டும் ! கொதித்த வெந்நீர் அளவாயச்சுட்டது ! எனக்குப்பிடித்த எழுமிச்சம்பழ சாதம் மணத்தது, மதியத்திற்கு ! இரண்டு இட்டிலிக்கு மேல் இறங்கவில்லை ! அம்மா கொடுத்த தேநீரில் கூடுதலாக சீனி ! அப்பாவை எழுப்ப வேண்டாம் என்றுவிட்டேன் ! என் அடுத்த வருகை அநேகமாக தீபாவளிக்கு ! காசு ஏதும் வேண்டுமா என்றாள் அம்மா ! இருக்கிறது என்றேன் ! பேருந்துநிறுத்தம் வரை பயணப்பையைப் பிடிவாதமாய் வாங்கிக்கொண்டு கூடவே வந்தாள் ! கோயமுத்தூரில் இருந்து ஜாதகம் வந்துள்ளதாம் ! பார்க்கவேண்டுமாம் ! கேட்டுக்கொண்டேன் ! அடுத்தமுறை வரும்போது கூடுதலாக விடுப்பு எடுத்து வருபடி கூறினாள் ! சரியென்றேன் ! பேருந்து வந்தது ! விடைபெற்றுக்கொண்டேன் ! பேருந்துக்குள் எனக்கொரு இருக்கை உறுதியானதை உறுதிசெய்த அம்மாவின் முகத்தில் சின்னதாய்த் திருப்தி ! ரயிலேறியதும் போன் வரும் !