இலட்சிய பொம்மை என்னிடம் கொஞ்சம் களிமண் இருந்தது ! ஒரு பொம்மை செய்ய ஆசைப்பட்டேன் ! பொம்மை செய்பவர்களின் உலகத்தில் சில கருத்துக்கள் நிலவிவந்தன ! பொம்மை புன்னகைக்க வேண்டும் என்றொரு கருத்து ! ஆகவே, பொம்மைக்கு புன்னகையை அளித்தேன் ! கண்களில் உயிர்ப்பு கொண்டதுதான் பொம்மை என்றொரு கருத்து ! கொஞ்சம் முயன்றதில் பொம்மையின் கண்கள் உயிர்ப்படைந்தன ! வண்ணமில்லாதது பொம்மையில்லை என்றது ஒரு கருத்து ! சற்றே மெனக்கெட்டதில் வண்ணத்தில் ஜொலித்தது பொம்மை ! கொஞ்சமாவது உடைந்து அழுக்கானால்தான் அது பொம்மை எனுமொரு கருத்து ! அவ்வாறே ஆனது பொம்மையும் ! இப்போது பொம்மை, பொம்மை உலகத்தின் இலட்சிய பொம்மையாக உருவெடுத்திருந்தது ! ஆனால், அது என் பொம்மையாக இருக்கவில்லை !